Friday, May 9, 2014

சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1) !!

சங்க காலங்களில் நிலங்களை ஐந்து வகையாக பிரிக்கின்றனர்..... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று.

 • காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
 • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை - சூச்சிபாரா அருவி !!
 • பாழ் நிலம் பாலை எனப்பட்டது - டெசெர்ட் சபாரி !!
 • வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
 • கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் - தனி தீவில் ஒரு நாள் !

 • இதில் ஒவ்வொரு வகை நிலத்திலும் தங்கி வர வேண்டும் என்பது எனது ஆவல், அந்த வரிசையில் இதுவரை குறிஞ்சி, பாலை, நெய்தல் நில வகைகளில் தங்கி இருந்து இருக்கிறேன், ஆனால் முல்லை திணையில் ஒரு முறை மயிர் கூச்செறியும் வகையில் தங்க வேண்டும் என்று ஆவல் இருந்தாலும் நேரம் அமையவில்லை. இந்த முறை சுமார் ஏழு பேர் சேர்ந்து ஒரு நடுக்காட்டில் டென்ட் போட்டு தங்க வேண்டும் என்று எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மையிலேயே அது ஒரு த்ரில் அனுபவம்தான் !





  இதை ஏற்பாடு செய்வதற்குள் நான் பட்ட பாடு என்பது ரொம்பவே ஜாஸ்தி ! வெளிநாடுகளில் எல்லாம் இப்படி நீங்கள் காட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் உங்களுக்கு மெயிலில் எங்கு தங்க வேண்டும், எவ்வளவு கட்ட வேண்டும், என்ன செய்யலாம், செய்யகூடாது என்று எல்லாம் வந்துவிடும், நீங்கள் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. ஆனால் இங்கோ நீங்கள் வன அலுவலகம் சென்று அனுமதி வாங்க வேண்டும், அவர்கள் சொல்லும் இடத்தில் தங்க வேண்டும், டென்ட் எடுக்க வேண்டும் என்று ஆயிரம் முறை அலைய வேண்டி இருக்கிறது, இதில் சில நேரங்களில் காலையில் இருந்தே அலுவலர்களுக்கு காத்திருக்க வேண்டும் ! இப்படி எல்லா தடைகளையும் தாண்டி ஊட்டியில் இருக்கும் அவலாஞ்சி என்னும் இடத்தில் டென்ட் போடுவதற்கு அனுமதி கிடைத்தது.

  வழி நெடுகிலும் தேயிலை தோட்டங்கள்..... ஆனாலும் வளைவுகள் ஜாஸ்தி !

  ஊட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம்தான் அவலாஞ்சி. இங்கு இருக்கும் ஒரு டேம் மிகவும் புகழ் பெற்றது. குன்னூரில் இருந்தும் இங்கு செல்லலாம்..... ஆனால் புல் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு மட்டும் கிளம்பி விடாதீர்கள், வளைவுகள் அதிகம் அதனால் வாந்தி மயக்கம் ஏற்ப்படும்.

  முது எலும்பு இங்கதான இருந்துச்சி.... வன பகுதி ஜீப் பயணம் !



  வளைந்து... வளைந்து.... வளைந்து..... முடிவில் அவலாஞ்சி சென்று சேர, அங்கு இருந்து வன பகுதி ஜீப் ஒன்றில் அரை மணி நேரம் அலுங்கி குலுங்கி காட்டின் ஒரு இடத்தில் இறக்கி விட்டனர். பின்னர் அங்கு இருந்து மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு ஒரு நடை பயணம். நாங்கள் இப்படி நடக்க வேண்டி வரும் என்று சொல்லி இருந்ததால் கொஞ்சம் கம்மியாகவே மூட்டைகளை எடுத்துக்கொண்டு இருந்தோம் !

  இங்க இருந்து ஸ்பெஷல் சர்வீஸ்.... நடராஜா சர்வீஸ் !!

  தண்ணி எல்லாம் ரெடி........ நான் குடிக்கிற தண்ணியை சொன்னேன் !

  பாதி தூரம் வந்தாச்சு..... ஒத்தையடி பாதை, இளையராஜா இசை......

  மலை ஏறுதல் என்பது ஒரு கலை. காலை அழுத்தி அழுத்தி சிரமப்பட்டு ஒரு ஒத்தை அடி பாதையில் நீங்கள் செல்ல செல்ல பாதி வழியிலேயே மயக்கம் வரும், இது அங்கு இருக்கும் பிராணவாயுவினால். நீங்கள் மலை ஏறும்போது அதிகம் பிராணவாயு சுவாசிப்பீர்கள், ஆனால் அங்கு அது கம்மி, இதனால் உங்களுக்கு வேர்த்து வடியும், மயக்கம் வரும். ஒரு வழியாக வழியில் காட்டு முயல், எருது என்று பார்த்துக்கொண்டே அந்த இடத்திற்கு சென்றோம்........ பூக்கள் எங்களை வரவேற்று அது முடிந்தவுடன் தூரத்தில் அன்று இரவு நாங்கள் தங்க போகும் டென்ட் கண்ணில் பட்டது !!
  காட்டு பூக்கள் அடர்ந்த பாதை... இயற்க்கை எங்களை வரவேற்கிறது !

  பாதை குறுகலாக ஆரம்பிக்கிறது...... அரை மணி நேர நடை !

  அதோ தெரியுது எங்களின் இன்றைய தாங்கும் இடம் !

  இப்படியே இங்கேயே இருந்திடலாமா ? என்ன ஒரு இடம் !

  அந்த இடத்தை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை...... ஆழ்ந்த அமைதி, சில்லென்ற காற்று, நடுக்காடு, சுற்றிலும் மலைகள், தண்ணீர் தேக்கம் என்று அருமையாக இருந்தது. நகரத்தில் இருக்கும்போது மனிதன் கட்டி வைத்திருக்கும் கட்டிடத்தை நினைத்து மலைப்பு இருந்தாலும், இங்கே வந்து பார்த்தால்தான் தெரியும் இயற்க்கை கட்டி வைத்து இருக்கும் இந்த அழகை பார்க்க பார்க்க வரும் பிரமிப்பு. இன்றைய இரவு எதுவும்  கிடைக்காத இந்த காட்டில், நெருப்பு கூத்தாட, நட்சத்திரங்கள் எங்களை கண் சிமிட்டி பார்க்க ஒரு இரவு !! நைட் அப்படியே ஒரு ரவுண்டு போகலாம் என்று நாங்கள் பேசி கொள்ள, எங்களது கூட வந்தவர், நைட் டென்ட் வெளியே சத்தம் கேட்டால் அமைதியாகவே இருங்கள், மிருகங்கள் தண்ணீர் குடிக்க வெளியே வரும் என்றபோது அப்படியே திரும்பி விடலாமா என்று யோசித்தோம் !!

  இங்கதான் தங்க போறேன்..... வந்தாச்சு டோய் !

  இதுதான் டினோசர் எலும்பு கூடு, நம்புங்க சார் !!
  Labels : Suresh, Kadalpayanangal, Saagasa Payanam, Adventure trip, Forest, Tent, Ooty, Avalanche

  7 comments:

  1. வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொண்டு அதை விவரிக்கப் போகிறீர்கள் என்பது புரிக்றது. ஆவலுடன் தொட்ர்கிறேன். படங்கள் அனைத்தும் தெளிவாக அருமையாக வந்திருக்கின்றன. டென்ட் நீங்கள் போய் அடிக்கவில்லையா...? விவரிப்பிலிருந்தும் படங்களிலிருந்தும் யாரோ உங்களுக்காக டென்ட்டை தயார் பண்ணி வெச்சிருந்த மாதிரி தெரிகிறதே...? (அவலாஞ்சியில நிலா பார்த்தீங்களா?)

   ReplyDelete
  2. ஆகா...! இளையராஜா இசையோடு...

   படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம்...!

   ReplyDelete
  3. அட்டகாசமான பயணம் மற்றும் அனுபவம். தொடர்கிறேன்.

   ReplyDelete
  4. சுரேஷ். உங்கள். கடல். பயணங்கள். அருமை

   ReplyDelete
  5. வித்தியாசமாய் எதாவது செய்து கொண்டே இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

   ReplyDelete
  6. நல்ல சுவாரசியமான பதிவு. நான் நண்பர்களுடன் சென்ற வருடம் ஜூன் மாதம் அவலாஞ்சி சென்றிருந்தேன். நாங்கள் உங்களையோ போல தைரியமாக ரிஸ்க் எடுக்காமல், டெஸ்டினி என்ற பண்ணை ரிஸார்ட் (Farm Stay ) ஒன்றில் தங்கினோம். கொஞ்சம் செலவு அதிகம் என்றாலும் மிக மிக அருமையான இடம். லிங்க் கொடுத்துள்ளேன்: http://littlearth.in/destiny/experience.php

   ReplyDelete