Tuesday, May 20, 2014

ஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 1) !!

பதிவை படிப்பபவர்களில் பெரும்பாலும் கேட்க்கும் கேள்வி என்பது அந்த ஊரில் என்ன சாப்பிட நல்லா இருக்கும் என்பது. எந்த ஒரு ஊருக்கும் ஒரு பண்டம் இருக்கும், அதன் சுவை என்பது மண்ணும், மக்களையும் சார்ந்தது. உதாரணமாக மணப்பாறை சென்றால் அரிசி முறுக்கு சாப்பிடாமல் வரக்கூடாது,  அந்த அளவுக்கு அந்த ஊரும் முறுக்கும் கலாசாரத்தில் பின்னி பிணைந்து உள்ளது ! சிரமம் என்னவென்றால் சில ஊர்களில் கிடைக்கும் பண்டம் அந்த ஊர்காரர்களுக்கே தெரிவதில்லை என்பதுதான் சோகமே. இப்படி ஊரையும் அந்த உணவுகளை சுவைத்து உங்களுக்கும் சொல்லுவதே இந்த கட்டுரையின் நோக்கம்……. அதை எந்த ஊரில் இருந்து ஆரம்பிப்பது என்று மிக பெரிய கேள்வி இருந்தது. சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் என்று எந்த ஊரை நினைத்தாலும் அந்த ஊரின் ஒரு பண்டம் மட்டுமே யாபகம் வந்தது, ஆனால் மதுரையை நினைத்தவுடன் ஏகப்பட்டது நினைவுக்கு வந்தது. இரவு ஆனாலும் சூடாக இட்லி எடுத்துப்போடும் ஊர் ஆயிற்றே, அங்கிருந்தே இந்த பயணத்தை ஆரம்பிப்போமே !!


மதுரைகாரங்க என்று சொல்லும்போதே அவர்களின் பாசமும், அந்த ஊரின் சுவையும்தான் யாபகம் வரும். தல்லாகுளம் பக்கம் சென்றால் அம்மா மெஸ், குமார் மெஸ், சந்திரன் மெஸ் என்று அசைவ உணவு ராஜ்ஜியம், பெரியார் நிலையம் சென்றால் கொத்து பரோட்டாவும் மட்டன் சுக்காவும் மூக்கை துளைக்கும், விளக்கு தூண் பக்கம் ஜிகர்த்தண்டா என்று ரகளையாக இருக்கும். இந்த பகுதியில் உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும் என்று கலவையாக பார்க்கலாம் வாங்க…..


தென்னங்குருத்து :

தென்னை மரத்தில் குருத்து விடும்போதே வீடுகளில் அமர்க்களம் ஆரம்பமாகிவிடும், அதுவும் அந்த குருத்து வெடித்து வெள்ளையாய் பூக்கள் வந்து அது இளநீர் ஆகும் அந்த இயற்க்கை வித்தையை என்ன சொல்வது. மதுரையில் எந்த பக்கங்களிலும் ஒரு சைக்கிளில் வெள்ளையாய் தென்னங்குருத்தை வைத்து சுற்றிக்கொண்டு இருப்பார்கள். பத்து ரூபாய்க்கு ஒரு பேப்பரில் கை நிறைய சின்ன சின்னதாக கொடுப்பார்கள். இன்று எதை சாப்பிட்டாலும் சால்ட், பெப்பர், பொடி என்று தூவி எக்ஸ்ட்ரா சுவை தேடும் நாம் இயற்க்கை சுவை என்ன என்பதை இந்த தென்னங்குருத்து சாப்பிட்டு தெரிந்துக்கொள்ளலாம். முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த சுவை உங்களுக்கு புதிதாக இருக்கும் !! எல்லா இடத்திலும் இது கிடைத்தாலும் வண்டியூர் தெப்பக்குளம் பக்கம் மாலைகளில் கிடைக்கும் இது ! வித்தியாசமான உணவை தேடி சுவைத்து எழுதும்போது எல்லாம் திரு. ரமணி ஐயா அவர்கள் இப்படி மதுரை வரும்போது தன்னை அழைக்கும்படி சொல்லி இருந்தார், எப்படி நான்  பகுதிகளை எழுதுகிறேன் என்று பார்க்க வேண்டும் என்று பிரியபட்டார், ஆகவே மதுரையின் நாயகனுடன் இந்த வார பவனி !!


அவிச்ச டீ :

நம்ம ஊர் டீ கடைகளில் ஒரு பெரிய தாமிர பாய்லர் இருக்குமே, யாபகம் இருக்கா…. இன்று அதெல்லாம் பழங்கதை ஆயிற்று. பொதுவாக அந்த பாய்லரில் இருந்து சுட சுட நீர் எடுத்து அதை வைத்துதான் டீ தூள் போட்டு நம்ம டேஸ்டுக்கு டீ போடுவார் மாஸ்டர். ஆனால் மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் அவிச்ச டீ என்று கிடைக்கிறது. அதே தாமிர பாய்லர், ஆனால் ஷேப் வித்தியாசமாக இருக்கிறது !! அதில் தண்ணீருடன் டீ தூளும் போட்டு நன்கு கொதிக்க வைக்கிறார்கள், இதனால் டீ தூளின் சுவை அந்த தண்ணீரில் இறங்கி இருக்க, கேட்டவுடன் நன்கு கொதிக்க வைத்த பாலில் கொஞ்சம் கொஞ்சமாக டீ தண்ணீரை இறக்கி……. அதை ஒரு வாய் வைக்க அந்த ருசி சற்று புதிதாகத்தான் இருக்கிறது !!முள் முருங்கை வடை :

மதுரையில் பெரியார் நிலையம் அருகே இருக்கும் கூடல் அழகர் கோவில் பக்கம் சென்றால் ரோட்டின் ஓரத்தில் ஒரு வடை கடை இருக்கும். வடை, பஜ்ஜி, போண்டா என்று எல்லாமும் சூடாக கிடைக்கும். எல்லாமும் தக தகவென்று ஜொலிக்கும்போது நடுவில் பச்சை கலரில் ஒன்று எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கும்..... அதுதான் முள் முருங்கை வடை !! வித்யாசமாக இருக்கிறதே என்று ஒன்றை வாங்கி சுவைதுப்பார்த்தால் தெரியும் என்ன வித்யாசம் என்று. முள் முருங்கை என்ற மூலிகை செடியின் இலையை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் பொறிக்க உப்பலாக கிடைக்கும் ஒன்றுதான் இந்த வடை. இதன் மேலே பருப்பு பொடி தூவி, ஒவ்வொரு கடியிலும் பஜ்ஜியின் சுவையுடன் சாப்பிட அருமையாக இருக்கிறது. கூடல் அழகர் கோவில் தாண்டி சென்றால் எல்லா பஜ்ஜி கடைகளிலும் சிறியதும் பெரியதுமாக கிடைக்கிறது இந்த வடிகள் !!


விளக்குத்தூண் ஜிகர்த்தண்டா :

மதுரையில் எங்கு திரும்பினாலும் ஜிகர்தண்டா கிடைக்கும், ஆனால் விளக்குத்தூண் பக்கம் கிடைக்கும் ஜிகர்தண்டா சாப்பிட்டால்தான் உண்மையான ஜிகர்தண்டா என்றால் என்னவென்று தெரியும். கடல்பாசி, பால், ஐஸ், ஐஸ் கிரீம் என்று எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்க ஒரு வாய் வைத்தாலே ஜிவ்வென்று இருக்கும் இங்கு. நான் மதுரை செல்லும்போது தல்லாக்குளம் பகுதியிலும், அண்ணா பேருந்து நிலையத்திலும் இதை குடித்தபோது ஜிகர்தண்டாவின் சுவை அவ்வளவாக கவரவில்லை, ஆனால் இந்த விளக்குத்தூண் பகுதியில் கிடைக்கும் ஜிகர்தண்டா சுவைத்தால் நீங்கள் அதற்க்கு அடிமையாகாமல் இருக்கமாட்டீர்கள் !


இந்த வாரம் இது போதும்.... உங்களுக்கு இப்போதே ஏப்பம் வந்து இருக்கும், அடுத்த வாரம் இன்னும் நிறைய மதுரை ஸ்பெஷல் பார்க்கலாமே !

Labels : Suresh, Kadalpayanangal, Oorum Rusiyum, Special foods, Madurai, Mouth watering, Thennanguruthu, Jigarthanda, mulmurungai vadai, Avicha tea

13 comments:

 1. வித்தியாசமான சுவைகள் இந்தப் பதிவில்! இதே கடையில் ஒருமுறை ஜிகர்தண்டா குடிச்சுருக்கேன்.

  ஆமாம்..... வண்டியூர் தெப்பக்குளம்தானே அது? சொட்டுத் தண்ணி இல்லை:( அட ராமா

  ReplyDelete
 2. அவிச்ச டீ புதுசா இருக்கு...!

  எல்லாமே ஸ்பெஷல்...!

  ReplyDelete
 3. உங்களுடனேயே இரண்டு முறை
  நான்வந்து தாங்கள் தகவல் சேகரிக்கிற
  திறனையும் புகைப்படம் எடுக்கும் லாவகத்தையும்
  பார்த்தாலும் ....

  அந்த வேகமும் எவரையும் மிகச் சுலபமாகக்
  கவரும் வித்தையும் அதை மிகச் சிறப்பான
  பதிவாக்கித் திறனும் இன்னும்
  பிரமிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது

  நிச்சயம் தங்கள் பதிவுகளில் அறிமுகம் செய்யும்
  விஷயங்கள் அனைத்தும் அந்த அந்த ஊர்காரர்களுகே
  உங்களின் பதிவின் மூலமே அறிமுகமாகும் என நினைக்கிறேன்

  நான் பிறந்தது முதல் மதுரையில் இருந்தாலும்
  சில விஷயங்களைத் தங்கள் தொடர்பின் மூலமே
  அறிந்தேன்.

  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அனைத்துமே புதிய சுவை.... திருச்சியில் ஒரு முறை ஜிகிர்தண்டா குடித்தேன் - மதுரை அளவுக்கு சுவை இல்லை!

  ReplyDelete
 5. அம்பட் பாத் சாப்பிட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன் ..அந்த புளியோதரையின் சுவையை அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன் !
  த ம 3

  ReplyDelete
 6. தெப்பக்குளம் அருகே உங்கள் புகைப்படம். என் தெப்பக்குள நினைவுகளைத் தூண்டியது!

  மதுரையில் இருந்திருந்தாலும் ஜிகர்தண்டா சுவைத்ததே இல்லை. அடுத்தமுறையாவது முயற்சிக்க வேண்டும். மதுரையில் சாப்பிட்ட பரோட்டா போல நான் சென்னையில் சாப்பிடவில்லை. தனிச்சுவை! ரோட்டோர இட்லிக் கடைகளில் நாலு இட்லிக்கு அவர்கள் தரும் சைட் டிஷ் நான்கைந்து வகைகளில் இருக்கும். ரோட்டோர ஆயா வார்த்துத் தரும் தோசை இருக்கிறதே... ஆஹா...! முன்பு கோரிப்பாளையத்தில்... இப்போது அந்த ஆயாக் கடை அங்கு இருக்கோ இல்லையோ...

  அப்புறம் விசாலம் காபி ரொம்ப ஃபேமஸ்!

  ReplyDelete
 7. Just have a look @ www.nativespecial.com

  ReplyDelete
 8. ஜிகர் தண்டா குடித்தது இல்லை! ஒரு முறை சுவைத்து பார்க்க வேண்டும் தென்னங்குருத்து ஒரு முறை எங்கள் ஊரில் சாப்பிட்டு இருக்கிறேன்! அவிச்ச டீ! முள் முருங்கை வடை புதியவை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. உங்களை சந்திக்க முடியவில்லை... அடுத்த முறை கண்டிப்பாக சிந்திப்போம்...
  மதுரை பெருமைகளை நானும் அறிந்து கொண்டேன்...

  இன்னும் பேமஸ் ஜிகர்தண்டா குடிச்சது இல்லை... நியாபகப்படுத்திங்க...

  ReplyDelete
 10. sivam theatre pakkadhila dhavalai vadai nalla irukkum
  central thetre opposite jilabi soooda irukkum
  reegal thtre near alva kadai
  vilakkudhdhoon poli

  ReplyDelete
 11. பதிவர் சந்துப்பு அன்று இதெல்லாம் பிரகாஷ் செலவுல ஒரு கை பார்த்துடனும்.

  ReplyDelete
 12. அம்மாடியோவ்...

  ReplyDelete