Thursday, May 22, 2014

ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ! (பகுதி - 2)

சென்ற வாரம் சேலம் மாம்பழம் (பகுதி - 1)-இல் மாம்பழம் பற்றி நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டீர்களா, அதை பற்றி வந்த கருத்துக்கள் எல்லாம் என்னை உற்சாகம் கொள்ள செய்தன ! அந்த மாங்காய்கள் தோட்டத்தில் காய்ந்தவுடன் என்ன ஆகின்றன என்று  இந்த பகுதியில் பார்ப்போமே. மாந்தோட்டம் என்பது கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் காணலாம். சிறு தோட்டங்களை வைத்து இருப்பவர்கள் இந்த மாங்காய்களை டன் கணக்கில் வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர், அல்லது அவர்கள் அந்த தோட்டத்தை குத்தகைக்கு விட்டு விடுகின்றனர். பொதுவாக இந்த மாம்பழம் சீசன் வந்தவுடன் அந்த தோட்டத்தை ஒருவர் குத்தகைக்கு எடுத்துக்கொள்வார், அந்த குத்தகை சீசன் முடியும்வரை அந்த தோட்டத்தில் விளைவது எல்லாம் அவருக்கே ! குத்தகை எடுக்க வருபவர் கண்களால் பார்த்தே அந்த தோட்டத்தில் எத்தனை டன் மாம்பழங்கள் கிடைக்கும் என்று கணக்கு போட்டு விடுவார் !!

நாக்கில் எச்சில் இப்போவே ஊறுது.....!!
 

மாங்காய் ஊறுகாய்..... இந்த வாரம் !!
 
தோட்டத்தில் மே முதல் வாரத்தில் இருந்து மாங்காய் உருவாகிறது, அதை பறித்து ஒரு லாரியில் போட்டு அனுப்புகின்றனர். இதை ஊறுகாய் போடவும், பழ கூழ் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணகிரி, தருமபுரி சுற்றிலும் புட் ப்ராசசிங் தொழிற்சாலைகள் நிறைய இருக்கின்றன. சீசன் வரும்போது இந்த தொழிற்சாலைகளை ஊறுகாய் கம்பனிகளும், பெரிய கம்பனிகளும் குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன, எத்தனை டன் ப்ராசஸ் செய்கிறார்களோ அத்தனைக்கு இவ்வளவு பணம் என்று இந்த புட் ப்ராசசிங் தொழிற்சாலைக்கு கிடைக்கும் ! மாங்காய் தோட்டம் பார்க்க வேண்டும் என்றபோது அதை நான் சென்ற வருடமே பார்த்துவிட்டேன், ஆனால் இந்த மாங்காய் / மாம்பழங்களை என்ன செய்கிறார்கள் என்று பார்க்க ஒரு வருடமாக அலைந்துக்கொண்டு இருந்தேன். இந்த புட் ப்ராசசிங் தொழிற்சாலைகள் அது செய்யும் முறைகளை எல்லோருக்கும் காட்டுவதில்லை, என்னதான் முயன்றும் சென்ற வருடம் முடியாமல் போனது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்தே முயற்சியை ஆரம்பித்தேன், எந்த தொழிற்சாலையும் ஆமாம் என்று சொல்லவில்லை, கடைசியில் ஒரே ஒரு தொழிற்சாலையில் மாங்காய் அல்லது மாம்பழம் பிராசஸ் செய்வதை பார்க்க முடியாது, ஆனால் காலையில் வந்தால் அது தயாராகும் முன் பார்க்க முடியும் என்றனர்..... ஜாக்பாட் !!

இப்படிதான் மாங்காய் தொழிற்சாலைகளுக்கு வரும்....!!


ஒரு கூடை என்பது சுமார் 25 கிலோ !! அப்போ இங்க எவ்வளவு இருக்கும் ?!
 

பெங்களுருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஐந்து மணிக்கு புறப்பட்டேன், காலை எட்டு மணி அளவில் அங்கு உண்டுவிட்டு அவரையும் பிக் அப் செய்துக்கொண்டு குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்து ஒரு புட் ப்ராசசிங் தொழிற்சாலை ஒன்றை அடைந்தோம். அங்கு ஒரு பெரிய லாரியில் மாங்காய்கள் இறங்கி கொண்டு இருந்தது. ஒரு பிளாஸ்டிக் கூடையில் அள்ளி அள்ளி அடுக்கி கொண்டு இருந்தனர், இந்த கூடையில் சுமார் 25 கிலோ மாம்பழங்கள் வரை இருக்கும். ஊறுகாய் போடுவதாக இருந்தால் அப்படியே அடுத்த கட்டத்திற்கு செல்லும், மாம்பழ கூழ் செய்வதாக இருந்தால் அது பழுக்க வைக்கும் இடத்திற்கு செல்லும் ! இப்போது ஊறுகாய் போடுவதை பார்க்கலாமா ?!

சுத்தம் என்பது இங்கே முக்கியம்..... யாராய் இருந்தாலும் கால், கைகளை கழுவி, பிளாஸ்டிக் கையுறை, தலையுரையை மாட்ட வேண்டும் !!

உள்ளே நுழையும் முன் உங்களது கால்களில் இருக்கும் கடைசி அழுக்கையும் எடுக்க வேண்டும் !!

 இந்த அறைக்கு நுழையும் முன்பு நீங்கள் கால் கைகளை நன்கு கழுவ வேண்டும்,  அதன் பின்னர் ஒரு சிறு குழியில் நல்ல தண்ணீர் இருக்கும் அதில் உங்களது கால்களை நனைத்து உள்ளே செல்ல வேண்டும்.... அவ்வளவு சுத்தம் !! உள்ளே நுழையும்போது வெளியில் இறக்கி வைத்த மாங்காய்களை இப்போது கன்வேயரில் போட்டு இரு பக்கத்தில் இருந்தும் ஆட்கள் கூடை மாங்காய்களை தண்ணீர் கொண்டு நன்கு கழுவி ஒரு கன்வேயரில் கொட்டுகின்றனர், அங்கு பழங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன. பழ ஈக்களை நீக்கவும், பூஞ்சைப் புள்ளிகள் இல்லாதிருக்கவும் சுடுநீர் மற்றும் சுடுகாற்றினால் பதப்படுத்தப்பட்டு, 12 பாகை C க்கு அதிகமான வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன. இதற்கு குறைவான வெப்பநிலையில், மாம்பழத்தோல் கறுத்து அழுகத் துவங்கிவிடும். இப்படி சுத்தபடுதப்பட்ட மாங்காய்களை ஒரு பெரிய அரிவாள் மனையில் சரசரவென்று பெரிய பெரிய துண்டுகளாக போட்டு, மாங்கொட்டைகளை மட்டும் தனியாக எடுக்கின்றனர். அதன் பின்னர் இந்த அறுத்த மாங்காய்களை மெசினில் போட்டு சிறு சிறு துண்டுகளாக ஆக்குகின்றனர் !

கூடையில் இருக்கும் மாங்காயை இங்கே கொட்ட வேண்டும், இது சுத்தபடுதப்படும்.
 
இந்த கன்வேயரில் வரும் மாங்காயை இரண்டு பக்கங்களில் இருந்தும் ஆட்கள் காம்பு, கழிசல் நீக்குவார்கள் !

 

மாங்காயை பின்னர் இந்த அரிவாள் மனையில் பெரிய துண்டுகளாக வெட்டுகின்றனர்.... பயங்கர ஷார்ப் சார் !

சிறு சிறு துண்டுகளாக மெசினில் வெட்டப்படும் மாங்காயை இந்த டிரம்மில் ஊற வைக்கின்றனர்.

இது நடக்கும்போதே இன்னொரு இடத்தில் மிளகாய் போடி, உப்பு என்று மிக்ஸ் செய்கின்றனர். அந்த ரூம் போய் பார்த்தால் எங்குமே உப்பும், மிளகாய் பொடியும் சரசரவென்று கலக்கபடுகின்றது. அதன் கலவை ரகசியத்தை பகிர்வதற்கு அங்கு யாரும் ரெடியாய் இல்லை ! அதை ரூ பெரிய பிளாஸ்டிக் டிரம்மினில் சரியான விகிதத்தில் ஊற்றுகின்றனர், அதை மாங்காய் அறுக்கும் இடத்திற்கு கொண்டு வந்து அந்த மாங்காய்களை உள்ளே போட்டு, மூடி அதை உருட்டி விடும்போது உப்பும் மிளகாய்த்தூளும் மாங்காயும் கலந்து விடும், அதை 36 முதல் 48 மணி நேரம் வரை ஊற வைத்து லாரியில் ஏற்றி விடுகின்றனர், அது பாக்கிங் இடத்திற்கு சென்று பாக்கெட்களிலும், பாட்டிலிலும் வந்து..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று சுவையாய் உங்களது நாக்கை சப்புக்கொட்ட வைக்கிறது !!

உப்பும், மிளகாய் தூளும் மூட்டைகளில் !!

உப்பும், மிளகாய்த்தூளும் கலக்கும் மெசின்.......

இதுதான் ஊறுகாய் ஊற வைக்கும் டிரம்...... இது போதுமா உங்களுக்கு ?! :-)
 
இந்த வாரத்தில் நீங்கள் பார்த்தது என்பது ஊறுகாய், அடுத்த வாரம் வாருங்கள் இனிப்பாக மாம்பழ கூழ் பற்றி பார்க்கலாம். இன்னும் நிறைய மாம்பழ அதிசயம் இருக்கிறது !!

Labels : Suresh, Kadalpayanangal, Mango, Pickles, How mango pickles are made, factory, oor special, District special

 

4 comments:

  1. வணக்கம்

    பதிவைப்பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுகிறது....மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் ஊறுகாய் செய்யும் கம்பனி பற்றி இன்றுதான் பார்த்துளேன் வாழ்த்துக்கள் அண்ணா

    எனதுபக்கம் கவிதையாக-சிறகடிக்கும் நினைவலைகள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையாக அருகில் இருந்து பார்த்தது போல இருந்தது பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் விதம் பற்றி விவரமாகச் சொன்னதற்கு நன்றி. படங்கள் பார்க்கும்போதே நாக்கில் நீர்! :)

    ReplyDelete
  4. ஸ்ஸ்ஸ்... வேறு என்னத்த சொல்ல...?

    ReplyDelete