Wednesday, May 14, 2014

உலக பயணம் - பெங்குயின் பரேடு, ஆஸ்திரேலியா

 ஆஸ்திரேலியா.....  இந்த நாடு எல்லோருக்கும் நிரம்ப தெரியாத ஒன்று என்பதே எனது அனுமானம். டூர் போக வேண்டும் என்று கிளம்புபவர்கள் எல்லாம் சிங்கப்பூர், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா என்று கிளம்புவார்கள், ஆனால் ஆஸ்திரேலியாவில் இதை விட அழகான இடங்கள் எல்லாம் இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு மறந்து போகிறது. மெல்போர்ன் நகரம் என்பது கிட்டத்தட்ட இந்த உலகத்தின் கடைசி எனலாம், அங்கிருந்து கூப்பிடு தொலைவில் அண்டார்டிகாதான் இருக்கிறது ! ஐஸ் நிரம்பிய இடம் என்று நினைத்தாலே நமக்கு பெங்குயின் தானே நமக்கு நினைவுக்கு வரும் !! சிறிய, கருப்பு - வெளுப்பு நிறத்தில் அது தத்தி தத்தி நடந்து வரும்போது எவ்வளவு அழகாக இருக்கும், அதை நமது ஊரில் பார்க்க வேண்டும் என்றால் ஜூவில்தான் பார்க்க முடியும்.  ஒரு முறையாவது அதை இயற்கையாய் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மெல்போர்ன் நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிலிப் தீவு. இங்கு கடற்கரையின் ஓரத்தில் தினமும் மாலையில் தனது கூடுகளுக்கு திரும்பும் சிறிய பெங்குயின் வகைகளை காணலாம் !!பிலிப் தீவு பற்றி நிறைய எழுதலாம், எங்கும் இயற்கைதான். கடல் அலைகளும் இயற்கையும் கைகோர்த்து விளையாடும் இடம். பனி பிரதேசங்களில் மட்டும் காணப்படுவது பெங்குயின். பறவை இனத்தை சேர்ந்ததுதான். ஆனாலும், பறக்க முடியாது. கூட்டம் கூட்டமாக செல்லும் பெங்குயின்கள் கைகளை அசைத்து செல்லும் அழகே அலாதி.  அவற்றில் இந்த வகை சுமார் 13 முதல் 17 இன்ச் வரை மட்டுமே வளரும், இதைதான் லிட்டில் பெங்குயின் என்கின்றனர் இங்கு. காலையில் இரையை தேடி செல்லும் இந்த இனம், மாலை மயங்கும்போது கூட்டம் கூட்டமாக கடற்கரையில் இருந்து தத்தி தத்தி நடந்து தனது கூடுகளுக்கு செல்லும் அழகே தனி !! ஒரு ராணுவம் தாளம் தப்பாமல் நடப்பது போல, கூட்டம் கூட்டமாக அது மாலை மயங்கும் வேளையில் கடற்கரையில் இருந்து நடந்து வருவது என்பது அருமையான காட்சி ! 
1920-இல் இதை கண்டுபிடித்த மக்கள், இதை காண தினமும் வருவார்களாம். ஆனால் இது ஒரு தீவு, இதை கடக்க அன்று படகுகளை மக்கள் பயன்படுத்தினர். 1939-இல் இந்த தீவை இணைத்து பாலம் கட்டப்பட்டது. 1984 முதல் அங்கு இதை காண ஒரு சிறிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்றும் அந்த இடத்தில் இந்த  ஒரு கட்டிடம் மட்டுமே, அதுவும் மாலையில் மட்டும் ஆட்களுடன், மற்ற பொழுதுகளில் ஒருவரும் இருக்க மாட்டார்கள். பெங்குயின் பார்க்கலாமா என்று நாங்கள் சென்றபோது அது மதிய பொழுது, ஒருவருமே இல்லை, இன்று விடுமுறையோ என்று நினைத்தோம். அங்கிருந்து நகருக்கு திரும்பி சுற்றும்போது விசாரித்தோம், அப்போதுதான் அங்கு மாலையில் மட்டுமே கூட்டம் கூடும் என்று தெரிந்துக்கொண்டோம். ஒரு ஆளுக்கு சுமார் 1300 ரூபாய் டிக்கெட், உள்ளே நுழைந்து கடற்க்கரை ஓரம் சென்றால் ஒரு தடுப்பு இருந்தது, அதை தாண்டி செல்ல முடியவில்லை. பெங்குயின் வரும்போது நீங்கள் அதை இந்த தடுப்பினில் இருந்து பார்க்கலாம் அவ்வளவுதான், அடுத்த அதிர்ச்சி என்பது போட்டோ எடுக்க கூடாது !!

பெங்குயின் மிக சிறியது, அதை நமது கூச்சலும், போட்டோ வெளிச்சமும் கலவரப்படுத்தும் என்பதால் இப்படி. அடேய்..... 1300 ரூபாய் கொடுத்துட்டு சும்மா பார்த்துட்டு மட்டும் போ அப்படின்னா எங்க ஊருல நம்ப மாட்டாங்களே என்று நினைத்து பார்த்தாலும், அவர்கள் அந்த பெங்குயின் இனங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை கண்டு ஓகே என்று சொல்லிவிட்டோம் (வேற என்ன செய்யறது !!). மெதுவாக சூரியன் மறைய ஆரம்பிக்கும்போது அதுவரை அலைகள் மட்டுமே இருந்து வந்த அந்த கடற்கரையில் சின்ன சின்னதாக கூட்டம் கூட்டமாக தத்தி தத்தி நடந்து வந்தது அந்த பெங்குயின் இனம் !! ஒரு சிறு குழந்தை நடை பழகும்போது தடுமாறி நடப்பது போல, நம்மை ஸ்டைல் ஆக ஒரு பார்வை பார்த்துக்கொண்டு தனது கூட்டுக்கு நடந்து செல்வதை பார்ப்பது கண்கொள்ளா காட்சி ! ஆயிரம் ஆயிரம் வருடங்களாக தினமும் இப்படி ஒரே இடத்தை அது கண்டுபிடித்து வருவது கண்டு அதிசயிப்பீர்கள். இயற்க்கை இந்த உலகில் எத்தனையோ அதிசயத்தை வைத்திருக்கிறது, அதில் இதுவும் ஒன்று !!

  
 


அந்த பெங்குயின் நடந்து வரும் கடற்க்கரை இதுதான் !
 Labels : Suresh, Kadalpayanangal, Australia, Penguin, Parade, Amazing, must see, Melbourne attractions

4 comments:

 1. மக்கள் "சும்மா" இருக்க மாட்டார்களே... பெங்குயின்களை பாதுகாக்க செய்த நடவடிக்கை சரி தான்...

  ReplyDelete
 2. அருமை!

  நம்மூர் பெங்குவின் இங்கே.

  http://thulasidhalam.blogspot.com/2005/05/blog-post_11.html

  ReplyDelete
 3. பென்குயின்கள் நம்ம ஊரில் இருந்திருந்தால் கறியாக்கித் தின்றிருப்பார்கள்... அவற்றைப் பாதுகாப்பது சரியே, நீங்களும் படங்கள் எடுக்காமல் வந்ததும் சரியே.... கடற்கரை கொள்ளை அழகு...

  ReplyDelete
 4. பெங்குயின்களை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கிறது..... இங்கே இதற்கும் தனியாக ஏதாவது “ப்ளான்” செய்துவிடுவார்கள்!

  ReplyDelete