Monday, May 12, 2014

அறுசுவை (சமஸ்) - மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை

சமஸ் அவர்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் இந்த பதிவுகளை விரும்பி வாசிப்பது கண்டு வியக்கிறேன் ! ஒரு சுவையான பயணம், இதில் நீங்களும் பயணிப்பது கண்டு மகிழ்ச்சி ! வாருங்கள் இந்த முறை மன்னார்குடியில் இருக்கும் ஒரு பலகார கடை. அதுவும் அந்த கடை பக்கோடா பற்றி சொல்லியே ஆக வேண்டும் ! ஸ்வீட்ஸ் ஸ்டால் என்று சொல்லும்போது இல்லாத அந்த கவர்ச்சி, மிட்டாய் கடை என்று சொல்லும்போது இருக்கும் கவனித்து இருக்கிறீர்களா ?! பாரம்பரியம் மிக்க  கடையை பார்த்தாலே உங்களுக்கு அந்த காலத்திற்கு சென்ற உணர்வு ஏற்ப்படும், அதுவும் இங்கு வைத்து இருக்கும் மிட்டாய்களை பார்த்தால் நீங்கள் குழந்தையாவது உறுதி !




இன்று ஸ்வீட்ஸ் ஸ்டால் என்று வைத்து இருக்கும் இடத்திற்கு சென்றால் கண்ணாடி கூண்டின் உள்ளே தட்டுக்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்வீட்ஸ் நமக்கு அன்னியமாக தெரியும் அல்லவா. நமக்கு பிடித்த ஸ்வீட்ஸ் ஒரு கண்ணாடி தடுப்பின் உள்ளே என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. சிறு வயதில் தெரு கோடியில் ஒரு ஸ்வீட்ஸ் ஸ்டால் உண்டு, அங்கே செல்லும்போது கடையின் முன்னே ஒரு தட்டின் முன்னே பூந்தி, பக்கோடா, மைசூர் பாகு என்று விதம் விதமாக இருக்கும். எனது அப்பா என்னை அங்கே கூட்டி செல்லும்போது கடைகாரருக்கு தெரியாது என்று பூந்தியை கொஞ்சமாக எடுத்து வாயில் வைப்பேன், அது கரைந்தவுடன் மனது இன்னும் இன்னும் என்று கேட்க்கும், பயத்தோடு கடைக்காரரை பார்க்கும்போது எனது அப்பா பொட்டலம் வாங்கி கொண்டு முடித்திருப்பார், கடைகாரரும் அந்த பூந்தியை ஒரு கை அள்ளி என் கையில் திணிப்பார், அப்போது எல்லாம் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய பூரிப்பு அல்லவா கிடைக்கும் ! என்னதான் ஈ மொய்க்கிறது, சுத்தம் வேண்டும் என்றெல்லாம் சொன்னாலும் அந்த பலகார கடை இன்றும் நமது நினைவில் இருக்கிறது அல்லவா..... அந்த வகை கடைதான் இந்த குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை !
 

மன்னார்குடியில் சென்று இறங்கி, இந்த கடைக்கு வழி கேட்க ரொம்பவே சங்கோஜமாக இருந்தது. யாரிடமாவது கேட்டு சப்பென்று அறைந்து விட்டால் !! முதலில் இது போன்று ஒரு கடை இன்றும் இருக்கிறதா என்றே தெரியவில்லையே.... சமஸ் அவர்கள் எழுதியது என்றோ, அது இன்றும் இருக்குமா என்று சந்தேகம் வேறு, ஆனால் சுவையுடன் கொடுக்கும் இது போன்ற கடைகள் காலத்தை கடந்து இருக்கும், மக்களிடம் பிரபலமாக இருக்கும் என்று கண்கூடாக தெரிந்தது. குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை எங்கு இருக்கிறது என்று கேட்டவுடனே வழி சொல்கின்றனர். கீழப்பாலயம் பகுதியில், பெரிய கடை தெருவில் இருக்கும் இந்த கடைக்கு கண்கள் தேவை இல்லை, மூக்கே போதும் !! முதலில் இந்த கடையை பார்த்தவுடன் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது, இவ்வளவு பிரபலமாக இருக்கும் கடை என்பது விளக்குகள் மின்ன, எடுப்பான உடையுடன், பள பளவென இருக்கும் என்று எதிர் பார்த்தால், ஒரு சின்ன பெட்டி கடை போல இருக்கும் கடையில் கைலியுடன் உட்கார்ந்து அண்ணனுக்கு என்ன வேண்டும் என்று பொட்டலம் கட்டி தந்தால் அதிர்ச்சி வராமல் எப்படி இருக்கும் !!



கடையின் முன்னே இருக்கும் கும்பலில் கலந்து முன்னாடி செல்லும்போதே பலகார வாசனை ஆளை மயக்குகிறது, நாக்கிலும் நீர் வடிகிறது ! சிறு சிறு தட்டுகளில் அளவாக பலகாரங்கள் நிறம் நிறமாக கண்ணை கவர்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி செல்லும்போதே என்ன வாங்க வேண்டும் என்று பார்த்து முடிவு செய்து வைத்து இருந்தாலும், என்ன வேண்டும் என்று கேட்க்கும்போது அங்கு இருப்பதை பார்த்து மனம் ஒரு நிமிடம் குழம்புவது உண்மை. அவர்களின் ஸ்பெஷல் பலகாரமான பக்கோடாவும், மைசூர் பாக்கும் வாங்கி கொண்டு, அப்படியே காராசேவு, வடை இன்ன பிற ஸ்வீட்டும் வாங்கிக்கொண்டும் வெளியே வந்தோம்.






பக்கோடாவை சற்று பிரித்து கையில் எடுக்கும்போதே இதுதான் உண்மையான பக்கோடா என்று தோன்றும். பொதுவாக இன்று வெங்காய பக்கொடாதான் எங்கும் போடுகின்றனர். பக்கோடா என்பது வெளியே மொறு மொறுவென்று இருந்தாலும் ஒரு கடி கடிக்கும்போது உள்ளே கொஞ்சம்  மாவாக பொசுக்கென்று போக வேண்டும், ஒரு கடிக்கு மொறு மொறு, அடுத்த கடிக்கு இதம் என்று சாப்பிடுவதுதான் பக்கோடா, இங்கு போட்ட பக்கோடா அந்த ரகம். அதுவும் பக்கோடாவில் அவ்வப்போது சிக்கும் அந்த பச்சை மிளகாய் வேறு இருக்க வேண்டும், அது எல்லாம் அருமையான அளவில் இருந்தது. அடுத்து மைசூர் பாகு..... இப்போது கிடைக்கும் மைசூர் பாகு  எல்லாம் மாவு போல ஸ்வீட் ஆக இருக்கிறது. நான் சிறு வயதில் சாப்பிட்ட மைசூர் பாகு எல்லாம் மேலேயும், கீழேயும் மாவு போலவும், நடுவில் சிறு சிறு துளைகளுடன் பிரவுன் நிறத்தில் இருக்கும்.  ஒரு கடி கடிக்கும்போதே கர கர மொரு மொறுவென்று நாக்கில் கரையும், இங்கே அந்த வகை மைசூர் பாகு இருந்தது, அதை சிறு வயது நினைவுடன் சாப்பிட்டேன் !!



மன்னார்குடியில் பஸ் ஸ்டான்ட் வெளியே வந்து இடது பக்கம் திரும்பி சிறிது தூரம் நடந்து உங்களது வலது பக்கம் திரும்பினால் பெரிய கடை தெரு, அதில் கொஞ்ச தூரம் நடந்தால் உங்களது இடது பக்கம் கடை ! பந்தலடி என்று சொன்னால் யாரும் வழி காட்டுவார்கள் !


 
Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Samas, Writer Samas, Sappaattuppuraanam, Best foods, Amazing, tasty, Kunjaan Chettiyaar, Mittai, Sweet stall
 

12 comments:

  1. /// அடுத்த கடிக்கு இதம் என்று சாப்பிடுவதுதான் பக்கோடா... /// ஆகா... இதுவல்லவோ ரசனை...

    கடையும் எளிமை தான் பலம் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. சிறு வயதில் சாப்பிட்ட மைசூர் பாகு எல்லாம் மேலேயும், கீழேயும் மாவு போலவும், நடுவில் சிறு சிறு துளைகளுடன் பிரவுன் நிறத்தில் இருக்கும். ஒரு கடி கடிக்கும்போதே கர கர மொரு மொறுவென்று நாக்கில் கரையும்
    >>
    இந்த வகை மைசூர் பாகிற்கு எங்க வீட்டில் பேரு செங்கல். என் அப்பாவும், தூயாவும் விரும்பி சாப்பிடுவாங்க.

    ReplyDelete
  3. //பக்கோடா என்பது வெளியே மொறு மொறுவென்று இருந்தாலும் ஒரு கடி கடிக்கும்போது உள்ளே கொஞ்சம் மாவாக பொசுக்கென்று போக வேண்டும்// அட அட அட! என்ன ஒரு ரசனையா உமக்கு! வார்த்தைகளால் மணம் பரப்பி வயிறு ரொப்பும் வித்தை உங்கள் எழுத்தில் இருக்கிறது! உங்களுடைய எல்லா சைவப் பதிவுகளையும் விடாமல் ரசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  4. என்னமா ரசிச்சு சாப்பிட்டிருக்கீங்க... சூப்பர்...

    ReplyDelete
  5. எங்க ஊர்(சிவகாசி) தட்டு கடை (வேலாயுத நாடார் கடை) பக்கோடா சாப்பிட்ட உணர்வு

    ReplyDelete
  6. ஒரு புத்தகத்த வாங்கி வச்சிக்கிட்டு நீங்க நடத்துற தேடல் சூப்பர் சார்.. ஆனா என்னையதான் கூப்பிட மாட்டேன்ட்றீங்க :-)

    ReplyDelete
  7. ஆமா எப்போ டாட் காம்கு மாறுனீங்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தேடித் தேடி நீங்கள் எடுத்து போடும் இந்த வகை பகிர்வுகள் மிகச்சிறப்பு! படிக்கும் போதே ஆசையை கிளப்பி விடுகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அட இதற்காகவே மன்னை போக வேண்டும் போல இருக்கிறதே.....

    ReplyDelete
  10. name board la irukkura "chettiyar" enpathu oru jaathiyai kurikkirathu....

    Etho oorla "brahmnaal cafe" nu pottathukku kodi pidichcha naala aathmaakkal inga poi kodi pidikarathukku yen pogala...

    Intha topic ku sampantham illama pesaren nu nenaikathenga, yaraiyum intha kelvi kaaya paduththiruntha "VERY SORRY"

    --- Santhosh

    ReplyDelete
  11. arpudhaman rasanai.........vaazhthukkal thalaivaa....

    ReplyDelete