Tuesday, May 27, 2014

அறுசுவை - வீணா ஸ்டோர் இட்லி, பெங்களுரு

அறுசுவை என்ற இந்த பகுதியில் நான் எழுதியதை படித்து, நிறைய பேர் சென்று வந்து சொல்லும்போது சந்தோசமாக இருக்கிறது, இந்த வாரம் ஒரு மிக  சிறிய கடை, ஆனால் கூட்டம்  அள்ளும் இடம் !! பெங்களுருவில் இட்லிக்கு புகழ் பெற்றது "பிராமின்ஸ்  காபி  பார்" என்னும் இடம், இதை பற்றி எனது முந்தைய பதிவுகளில் எழுதி  இருந்தேன், அதற்க்கு அடுத்து இட்லிக்கு புகழ் பெற்றது என்பது இந்த "வீணா  ஸ்டோர் இட்லி" !! மல்லேஸ்வரம் பகுதியில் பன்னிரெண்டாவது தெருவில் இருக்கும் மிக சிறிய கடை, ஆனால் மிக சுவையான இட்லி !! சுவை என்று வந்துவிட்டால் நடிகர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் வரும் இடம் என்று இதை சொல்லலாம். சுவை சரியாக இருந்தால் ஒரு சிறிய கடையாயினும் எவ்வளவு வியாபாரமும் நடக்கும் என்பதற்கு இது உதாரணம் ! மிகவும் சிறிய மெனு, ஆனால் எல்லோரும் முதலில் சொல்வது இட்லிதான் !

 


இந்த கடையை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை, யாரை கேட்டாலும் வழி சொல்கிறார்கள். மெயின் ரோட்டில் கடை, பிளாட்பாரத்தில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லாமல் கியூவில் நின்று சாப்பிடுகிறார்கள். என்ன வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டே அடுத்தவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் எல்லாரது கையிலும் இட்லி இருக்கிறது, அப்போதே மனது என்ன நினைத்தாலும், வாய் உங்களது முறை வந்தவுடன் இட்லி என்று சொல்லிவிடும் ! கேட்டவுடன் வாழை மட்டையில் செய்த தட்டில் இரண்டு இட்லி வைத்து அதன் மேலே தேங்காய் சட்னி வைத்து தந்து விடுகிறார்கள், சாம்பார் எங்கே என்று யாரும் கேட்பதில்லை !

 


பொதுவாக நமது ஹோடேல்களில் எல்லாம் இட்லிக்கு சாம்பாரை மேலே ஊற்றிவிட்டு, கொஞ்சம் கெட்டியாக சட்னியை ஓரத்தில் வைப்பார்கள். சாம்பாரில் ஊறிய இட்லி என்னதான் சுவை என்றாலும், தண்ணீராய் வைத்த தேங்காய் சட்னியை இட்லி மேலே ஊற்றி அதன் சுவையை பார்த்து இருக்கிறீர்களா ? தேங்காய் சட்னியை இட்லியின் மேலே ஊற்றியவுடன் காரம் இருக்கும் அந்த தண்ணீரை அந்த இட்லி உறிஞ்சிவிட, இப்போது மேலே வெள்ளையாய் தேங்காயும், அங்கங்கே பச்சையாய் தெரியும் அரைத்த கார மிளகாயும் இட்லிக்கு இப்போது ஆடையை போர்த்தி இருக்கும். ஒரு வாய் பியித்து வைக்க, சாம்பாரில் ஊற வைத்து தின்றால்தான் இட்லி சுவைக்கும் என்று சொன்னவன் பொய்யன் என்று தோன்றும் ! முதலில் இட்லியின் மேல் இருக்கும் தேங்காயும், மிளகாயும் ஒரு சுவையை கொடுக்கும், அடுத்த கடிக்கு இட்லி இவ்வளவு சாப்ட் ஆக இருக்குமா என்னும் அளவு அளவான காரத்துடன் ஒவ்வொரு முறை மெல்லும்போதும் சுவையை அள்ளி கொடுக்கும், மதுரையிலும் இது போலவே ஆவி பறக்க தண்ணி சட்னியை ஊற்றி கொடுப்பார்கள். அதிகாலையில் உடம்பை குறைக்க வாக்கிங் செல்பவர்கள் இங்கு வந்து இரண்டு ப்ளேட் இட்லி வாங்கி சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம்...... வாக்கிங் உடம்பிற்கு, இட்லி மனதிற்கு !

 

 

இதை தவிர காரா பாத், கேசரி பாத், அவலக்கி பாத், பிசிபேளா பாத், பொங்கல் என்று வகை வகையாகவும் இருக்கிறது. இந்த சட்னியை தொட்டு இட்லி தின்பவர்கள் இட்லியை விட்டு விட்டு சட்னியை மட்டும் குடிப்பவர்களாக இருகின்றார்கள், அவர்களுக்காகவே ஒரு ஆளை வெளியில் உட்கார வைத்து சட்னி ஊற்றுகிறார்கள், அப்படியென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!



பஞ்ச் லைன் :

சுவை - ஒரு நல்ல இட்லி சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் இங்கு தாரளமாக செல்லலாம் !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி இல்லை ! நின்றுக்கொண்டேதான் சாப்பிடவேண்டும் !
பணம் - எல்லாம் கம்மிதான் என்றே தோன்றியது, சுவைக்கு கொடுக்கலாம் சார் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் !

அட்ரஸ் :




 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Veena store, Bangalore, Bengaluru, Best idli, Best Idly, Malleshwaram

5 comments:

  1. ஆகா...!

    நாலு இட்லி அதிகம் உள்ளே தள்ளி விட்டு, வாக்கிங் நேரத்தை அதிகப்படுத்த வேண்டியது தான்... ஹிஹி...

    ReplyDelete
  2. சுவை பெங்களூருக்கு இழுத்து விடும் என்று சொல்லுங்கள்! :)))

    ReplyDelete
  3. எங்க வீட்டில் இட்லிக்கு சாம்பார் வச்சுட்டா பசங்க என்னை காய்ச்சு எடுத்துடுவாங்க. இட்லிக்கு விதம் விதமான சட்னிதான் வைக்கனும்.

    ReplyDelete
  4. இது நம்ம ஏரியாவாச்சே...

    ReplyDelete