Tuesday, May 6, 2014

அறுசுவை - இளநீர் சர்பத், மதுரை !

மதுரை என்றாலே இரவில் ஆவி பறக்கும் இட்லிதான் நினைவுக்கு வரும் ! ஆனால் அடிக்கும்  வெயிலுக்கு இதமாய் சாப்பிட என்ன கிடைக்கும் என்று தேடினால் கம்மங் கூழ், நன்னாரி சர்பத், இளநீர், ஐஸ் மோர், பாதாம் பால், டொரினோ, பவண்டோ என்று வரிசையாக கிடைக்கும். இப்படி அடிக்கும் வெயிலுக்கு தலையை சுற்றும்போது, விதம் விதமாக இப்படி குடிக்க கிடைத்து அதில் எதை தேர்ந்து எடுப்பது என்று குழம்புவது வேறு நடக்கும். என்னதான் நாம சாப்பிட்டாலும், வித்யாசமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடினால் எல்லோரும் கேட்டது "இளநீர் சர்பத் சாப்பிட்டு இருக்கீங்களா ?!" என்று. நன்னாரி சர்பத்தே உச்சி வரை இனிப்பை கொடுக்கும்போது, இந்த இளநீர் சர்பத் எப்படி இருக்குமோ என்று யோசித்தோம் !!தமிழ் சங்கம் சாலையில், பெயர் பலகையே இல்லாத ஒரு கடை, மிக மிக சிறிய கடை, கடையின் உள்ளே முழுவதும் இளநீர் நிரப்பி இருக்கின்றது. கடையின் வெளியே ஒரு சின்ன கீற்று கொட்டகை. அதன் கீழே ஒரு சிறிய டேபிள் போட்டு ஒருவர் உட்கார்ந்து இளநீர் கொத்தி கொண்டு இருக்கிறார். அவரது சட்டை மற்றும் கைலி எல்லாம் இளநீர் கொட்டி இருக்கிறது, ஆனால் அசராமல் இளநீர் கொத்தி கொத்தி எடுக்கிறார். இந்த வெயிலுக்கு ஒரு இளநீர் குடிக்கும்போது, அது நெஞ்சினில் இறங்க இறங்க ஒரு இதம் தெரியுமே அதுவே சுகம், அதை குடித்த பின்னர் அதில் இருக்கும் வழுக்கையை தோண்டி எடுத்து சாப்பிடும்போது அது களுக் மொளுக் என்று உள்ளே இறங்குமே அது இன்னமும் சுகம் !


 

 முதலில் ஒரு இளநீர் கொத்தி எடுக்கிறார், அதில் இருக்கும் தண்ணீரை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றுகிறார். பின்னர் அந்த இளநீரை கொத்தி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதே பாத்திரத்தில் போடுகிறார். இது போல நான்கு அல்லது ஐந்து இளநீர் கொத்தி முடித்தவுடன், அந்த பாத்திரத்தை எடுத்து அந்த இளம் வழுக்கையை நன்கு சிறியதாக கொத்தி எடுக்கிறார். அதை ஒரு கிளாசில் ஊற்றிவிட்டு அதன் மேல் நல்ல சுவையான நன்னாரியை இரண்டு கரண்டி ஊற்றுகிறார், பின்னர் அதில் குளுமைக்காக ஐஸ் கொஞ்சம் போடுகிறார். இதை பார்க்கும்போதே இங்கே நாக்கு ஊற ஆரம்பிக்கிறது, திரும்பவும் இளநீரை கொத்தி என்று ஆரம்பித்து மீதி கிளாசையும் புல் செய்து கையில் தரும்போது அது தளும்பி வழிகிறது.... நமது மனதும்தான் !

 


முதல் வாய் வைத்தவுடன் உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த சுவை சுர்ரென்று ஏறுவது உங்களுக்கே தெரியும். இளநீரின் அந்த ருசியும், நன்னாரியின் அந்த தனியான ருசியும் கொஞ்சம் கொஞ்சமாக சில்லென்று உள்ளே இறங்க கண்ணை அந்த மதிய உச்சி வெயிலில் மூடி பார்த்தால், உள்ளே இறங்கும் சில்லிப்பு நீங்கள் ஊட்டியின் தொட்டபேட்டாவில் இருப்பது போல தோன்ற செய்கிறது !! ஒரு இளநீர் குடித்து முடித்தவுடன் நமது வயிற்றில் ஒரு குளிர்ச்சியை உணர செய்யும், இந்த இளநீர் சர்பத் குடிக்கும்போது வயிற்றில் மட்டும் இல்லை, மனதும் சுவையுடன் குளிர்ச்சியை அனுபவிப்பது உண்மை.... மதுரை சென்றால் ஒரு முறை சென்று வாருங்களேன் ! 


 
பஞ்ச் லைன் :

சுவை - குளிர்ச்சி மற்றும் ஸ்வீட் என்று வித்யாசமாக இருக்கிறது..... நன்னாரி சர்பத் மற்றும் இளநீர் இரண்டும் கலந்த அந்த வித்யாசமான சுவையை அனுபவியுங்களேன் !

அமைப்பு - மெயின் ரோட்டில் கடை, பெயர் பலகை எதுவும் கிடையாது, கார் பார்க் செய்ய முடியாது !
 
பணம் - முப்பது ரூபாய் ஒரு கிளாஸ் ! இளநீர் விலை ஏறினால் இங்கும் சற்று ஏறுமாம் !

சர்வீஸ் - நன்கு கவனிக்கிறார், கூட்டம் அதிகம் இருந்தாலும் முதலில் வந்தவர் யார் என்பது நன்கு அவருக்கு தெரிகிறது !


அட்ரஸ் :

இந்த கடைக்கு முகவரி எதுவும் இல்லை என்பதால், இதன் பக்கத்து கடை அட்ரஸ் குறித்துக்கொள்ளுங்கள் ! 

 Labels : Suresh, Kadalpayanangal, Blog, Arusuvai, Ilaneer sarbath, Coconut water, tasty, nannaari

7 comments:

 1. அடடா...! நானும் ரமணி ஐயாவும் வர முடியவில்லையே...!

  ReplyDelete
 2. ஜீ கடல் பயணங்கள் என்று பெயர் வைத்துவிட்டு அறுசுவையைப் பற்றி பிரமாதப்படுத்தி இருக்கிறீங்க. இளநீரை இப்படி ஒரு மாடுலேசனில் கொடுக்க குடிக்க முடியுமா, பார்த்தால் இளநீர் வியாபாரிக்கு வேலை அதிகம் வைக்கும் போல் தெரிகிறதே. கூட்டத்தை எப்படி சமாளிக்கிறார்.

  ReplyDelete
 3. இளநீர் சர்பத் பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது! பதிவர் சந்திப்புக்கு வந்தால் ஒரு ரவுண்ட் கட்டிட வேண்டியதுதான்! நன்றி!

  ReplyDelete
 4. இளநீர் சர்பத் ...கேட்கும் போதே இனிக்குதே !மதுரையில் இருந்துட்டே மிஸ் பண்ணி இருக்கேனே ,டேஸ்ட் பண்ணிற வேண்டியதுதான் !
  த ம 2

  ReplyDelete
 5. கேரளாவிலும் இதே போன்று இளநீர் சர்பத்தும், நுங்கு சர்பத்தும் கிடைக்கும். நுங்கு சர்பத் அருந்தியதுண்டு....

  இளநீர் சர்பத் குடிப்பதற்கே மதுரை வரவேண்டும் போல!

  ReplyDelete
 6. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete