Wednesday, May 7, 2014

ஓடி ஓடி ஒரு ஹாலிடே !!

நானும் எனது குடும்பமும் சமீபத்தில் கேரளா சென்று இருந்தோம். நாங்கள் தங்கி இருந்த ரிசார்ட் பீச் ஓரமாக இருந்தது. ஒரு மதிய நேரத்தில் அங்கு மரங்களுக்கு இடையில் கட்டி இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தோம். பழங்கதைகளை சிரித்து பேசிக்கொண்டு இருந்தபோது எனது ஆபீசில் இருந்து நண்பர் ஒருவர் பேசினார், அப்போது அவர் "என்ன செய்ஜிகிட்டு இருக்கீங்க ?"என்று கேட்ட போது சும்மாதான் இருக்கேன் என்றேன். எங்க இருக்கீங்க என்று கேட்டபோது இருக்கும் இடத்தை சொன்னேன், உடனே அந்த ஊரில் இருக்கும் அரண்மனை போனீங்களா, அங்க கிடைக்கும் அந்த பொருளை வாங்கினீர்களா, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஹோட்டல் பேரை சொல்லி அங்க பரோட்டா நல்லா இருக்கும் சாப்பிடுங்க, அப்புறம் அங்க போட்டிங் போனீங்களா என்று கேட்க ஆரம்பித்தார். நான் இல்லை எங்குமே செல்லவில்லை, இனியும் செல்லும் ஐடியா இல்லை என்றவுடன் அந்த பக்கத்தில் மனதில் பைத்தியக்காரன் என்று மனதில் நினைப்பது கேட்டது. ஒரு புது ஊருக்கு போய் இருக்கீங்க, அங்க இருக்கிற இடத்தை சுற்றி பார்க்காம சும்மா இருக்கீங்களா என்று அவர் கேட்க, நான் என்ன சொல்லி அவருக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் முழித்தேன். ஊட்டிக்கு என்று குடும்பத்தை கூட்டி சென்று ஒரு காரினுள் எல்லோரையும் அடைத்து ஒவ்வொரு இடத்திற்கும் போய் ஆடாமல் அசையாமல் உங்களை காமெராவினுள் சிறைபிடிப்பவரா நீங்கள்……. எப்போதேனும் யோசித்து இருக்கிறீர்களா ஹாலிடே என்றால் என்னவென்று ? ரிலாக்ஸ் என்ற பொருளுக்கு அர்த்தம் தெரிந்துதான் எங்கும் செல்கிறோமா ?


 

 


இப்போது சம்மர் ஹாலிடே தொடங்கி விட்டது, எங்கு பார்த்தாலும் கூட்டம்தான். அந்த கூட்டத்தை கவனித்து பார்த்து இருக்கிறீர்களா ? ஊட்டி சென்று இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் அதிகாலையில் எழுந்து சுகமாய் ஒரு காபி குடித்துவிட்டு, பனியை சுவாசிக்கும் போது, மற்ற அனைவரும் குளிச்சிட்டியா, அதை எடுத்து வைச்சியா, கண்ணாடி எங்க, கேமரா சார்ஜ் போட்டாச்சா, மொபைல் எங்க வைச்சேன், ஸ்வட்டர் போட்டுக்கோ, நேரம் ஆச்சு, இந்த பை எதுக்கு என்றெல்லாம் கேள்வி கேட்டு டென்ஷன் ஆக்கி விடுவதை கவனித்து இருக்கிறீர்களா ? அங்கு இருக்கும் பனியை பார்த்தவுடன், ரசிப்பதை விட்டு விட்டு அங்க போய் நில்லுங்க, ஆடாதீங்க, இங்க பாரு என்று ஒரு போட்டோ எடுப்பார்கள், பின்னர் அவசரம் அவசரமாக கிளம்பி ஒரு காரின் உள்ளே அனைவரையும் திணித்து சீக்கிரம் போப்பா என்று டிரைவரை விரட்ட வேண்டியது. ஊட்டி கார்டன் சென்று அங்கு பெரிய கியூவில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றவுடன், மனைவியும் மகனும் விளையாடும்போது அங்க போகாதே, இங்க வாங்க, போட்டோ எடுக்கணும் என்று டார்ச்சர் செய்ய வேண்டியது. அவ்வளவு நல்ல இடமாயிற்றே இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமே என்று கெஞ்சும்போது, இன்னும் நிறைய இடம் போகணும் என்று கண்டிப்புடன் கூட்டி செல்வார்கள், அந்த இடத்தினை ரசிப்பதை மறந்து !! மேலே நான் சொன்ன காட்சிகள் எல்லாம் நீங்கள் இப்போது எல்லா இடத்திலும் பார்ப்பதுதான் !!



மகாபலிபுரம், கோவளம், கோவா பீச் சென்று பார்த்தீர்கள் என்றால் கடலுக்கு அருகினில் ஒரு சிறு கட்டில் போன்று போட்டு ஒரு குடையின் அடியில் வெயிலில் காய்ந்து கொண்டு இருக்கும் வெளிநாட்டவர்களை பார்த்து இருக்கிறீர்களா ? இல்லை அங்கு இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டல் உள்ளே சென்று நீச்சல் குளத்தில் பார்த்தால், அங்கும் அந்த நீச்சல் குளத்தை சுற்றி அதே போல் படுத்து இருப்பார்கள், அதுவும் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் இல்லை, அந்த நாள் முழுவதும் கூட ! இதை அவர்கள் அவர்களின் நாட்டிலேயே செய்யலாம் அல்லவா, ஏன் என்று நினைத்து பார்ப்பதுண்டா ? அவர்களை பொறுத்த வரை வீடு, கவலைகள், போன் பில் கட்ட வேண்டும், கேஸ் மூடினோமா, பால்காரனிடம் சொல்லியாச்சா, வேலைக்காரியிடம் சொல்லியாச்சா, செடிக்கு யார் தண்ணி ஊற்றுவா, டைகருக்கு யார் வத்தகுழம்பு போட்டு சோறு வைப்பா, டிவி ஆப் பண்ணியாச்சா, பின் கதவை மூடினோமா, வண்டியை எடுத்து உள்ளே வைத்தோமா, குழாயை மூடினோமா என்றெல்லாம் எதுவும் நினைக்காமல் சும்மா இருக்க வேண்டும்..... ஆம் சும்மா இருக்க வேண்டும். மேலே சொன்ன அனைத்தும் நீங்கள் தினமும் மூளையை போட்டு குழப்பி நினைத்து நினைத்து நொந்து போவது, அதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இந்த உலகத்தை ஒரு புது பார்வை பார்க்க வைப்பதுதான் ஒரு ஹாலிடேயின் நோக்கம் !!





நினைத்து பாருங்கள், ஒரு இடத்திற்கு சென்று காலையில் மெதுவாக எழுந்து ஒரு காபி குடித்து அந்த இடத்தை ரசித்து, பின்னர் நீங்கள் நினைத்ததை சாப்பிட்டு, மனைவியுடன் வாக் போய், தூங்கி எழுந்து, மீண்டும் காபி குடித்து என்று இருப்பதை. நீங்கள் செல்லும் இடம் எங்கும் ஓடி போக போவதில்லை, நீங்கள் மீண்டும் அங்கு வந்து உங்களது போட்டோவை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அந்த தருணம்.... உங்களது டென்ஷன் எல்லாம் எடுத்து வைத்து விட்டு, குழந்தையுடன் விளையாடும் அந்த தருணம், அது எல்லாவற்றையும் விட பெரிதல்லவா. எல்லோரது சின்ன வயதிலும் நீங்கள் ஹாலிடே சென்ற அந்த பொழுதில் உங்களை விரட்டி விரட்டி ஒரு புது இடத்தை காட்டிய உங்களது பெற்றோருக்கு வேண்டுமானால் ரிலாக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்து இருக்கலாம், ஆனால் உங்களுக்கு...... ?! இனி இந்த விடுமுறையை எங்கும் ஓடாமல், நின்று நிதானித்து ரசித்து பாருங்களேன்....... சும்மா இருப்பது எவ்வளவு சுகம் என்று தெரியும், அது அடுத்த விடுமுறை வரை நினைவில் கண்டிப்பாக இருக்கும் !!


 
Labels : Suresh, Kadalpayanangal, Holiday, meaning of holiday, relax, crowded holiday, roaming on holiday, vacation

15 comments:

  1. அனுபவிக்க வாய்ப்புக் கிடைத்தாலும்
    அனுபவிக்கத் தெரிந்திருக்கவேண்டும்
    இல்லையெனில் வீண்தான்
    சொல்லிப்போனவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னோட அறிவுக்கண்ண திறந்து வைச்சிட்டிங்க ...

    ReplyDelete
  3. வணக்கம்

    விடுமுறைக்காலத்தை பயனுள்ள வகையில் பயன் படுத்தய விதத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் மிக அழகு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சூப்பர். இதை நான் சொன்னா சோம்பேறினு சொல்லுறாங்க சார்................

    ReplyDelete
  6. சூப்பர்.போன மாதம் 4 நாட்கள் ஊட்டியை அடுத்த கோத்தகிரியில் ஒன்றுமே செய்யாமல் இருந்துட்டு வந்தோம்.

    ReplyDelete
  7. Very True Suresh, it is like you are not using as much as your mobile while it is charging

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகளில் இது ஒரு வைரக்கல்! ஒரு ஊருக்கு வெகேஷன் போகும்போது, அங்கு பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் லிஸ்ட் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அரை மணி என்று கணக்குப் போட்டு டிக் செய்யும் வகை வேகேஷனா என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  9. இதுவல்லவோ (சந்தோசம்) கொடுப்பினை...

    ReplyDelete
  10. ஒரு புதிய கண்ணோட்டம். எல்லோருக்கும் வராது.

    ReplyDelete
  11. இந்த மாதிரி சில சமயங்களில் ஒன்றுமே செய்யாது மலையையும், நதியையும் பார்த்தபடி படுத்துக் கிடந்ததுண்டு..... சென்ற இடம் ரிஷிகேஷ். மூன்று நாட்கள் - நான் சென்ற பயணங்களிலேயே மிகச் சிறப்பான பயணம் என்றால் இதைத் தான் சொல்லுவேன்.....

    ReplyDelete
  12. Wherever we are going we used to relax lot in hotel and minimize 3 to4 hours for roaming and make ourselves free from tiredness. Tajmahalai paarthuytu enna ivlo nadakka vaikkirangannu salichukittanga en wife and daughter.

    ReplyDelete
  13. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete