Monday, May 19, 2014

அறுசுவை - CTR மசாலா தோசை, பெங்களுரு

பெங்களுரு உணவகத்தை பற்றி எழுதி நிறைய நாள் ஆகிவிட்டது என்று இங்கு இருந்த நண்பர்கள் குறைபட்டு கொண்டனர். பெங்களுருவில் புகழ் பெற்றது என்று சொல்லப்படும் பிராமின்ஸ் காபி இட்லி, MTR மசாலா தோசை, வித்யார்தி பவன் மசாலா தோசை எல்லாம் எழுதி ஆகிவிட்டது, இனி என்ன கடையை விட்டு வைத்து இருக்கிறோம் என்று தேடினால் CTR எனப்படும் சென்ட்ரல் டிபன் ரூம் என்னும் கடையின் மசாலா தோசையை பற்றி உருகி உருகி எழுதி இருந்தனர். ஒரு ஞாயிறு காலையில் இது யாபகம் வர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாகி விட்டது !! எல்லாம் உங்களுக்காகத்தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா ?!


இந்த கடையை கண்டு பிடிப்பது மிகவும் எளிது, மல்லேஸ்வரத்தில் மார்கோசா ரோட்டில், ஏழாவது கிராஸ் ரோட்டில் இருக்கிறது இந்த உணவகம். நெருங்கும்போதே ரோட்டின் இரண்டு பக்கத்திலும் கார் நின்று கொண்டு இருப்பதை பார்த்தால்,  நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம் ! இன்னும் சற்று நெருங்கி செல்லும்போது பைக் அதிகம் நின்று கொண்டு இருந்தாலோ, அல்லது ஒரு இடத்தில் அதிகம் ஆட்கள் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தாலோ அதுதான் CTR எனப்படும் சென்ட்ரல் டிபன் ரூம் !! சில உணவகங்களுக்கு செல்லும்போது இடம் கிடைப்பது என்பது கடினம், நீங்கள் கால் கடுக்க நின்று கொண்டு இருக்க வேண்டும், அப்படி நிற்கும்போது உள்ளே இருந்து வரும் மணம் ஒரு வெறியை தூண்டக்கூடியது, அதுவும் பசியோடு இருக்கும் பட்சத்தில் கொலைவெறியை தூண்டும் என்பது எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.முடிவில் ஒரு இடம் கிடைத்து நானும் எனது மனைவியும் அமர்ந்த பின்னர் பக்கத்து டேபிளுக்கு கண்கள் செல்ல, அங்கு மொறு மொறுவென்று தோசை வந்து அதனை சுவைத்துக்கொண்டு இருக்க, வாசனை வேறு மூக்கை துளைக்கவும், ரெண்டு மசாலா தோசை என்று ஆர்டர் செய்து விட்டோம். அப்புறம் என்று சர்வர் கேட்க முதலில் அதை கொண்டு வாங்க என்று சொன்னோம், அவர் ஏன் அப்புறம் என்று கேட்டார் என்பது அங்கு மசாலா தோசை விறு விறுவென்று வந்தாலும் அடுத்த டேபிளுக்கு போவதை பார்த்து தெரிந்தது. எங்களுக்கு பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை, பின்னர் ஏக்கத்துடனும், பசியுடனும் இட்லி மற்றும் கேசரி ஆர்டர் செய்து அதை உண்டு முடித்தபின்தான் வந்தது !! இட்லியை சாம்பார் தொட்டு சாப்பிடும்போதுதான் தெரிந்தது நான் கேசரியை ஆர்டர் செய்து இருக்க வேண்டாம் என்று, அவ்வளவு இனிப்பு...... சாம்பாரில் !

தோசை வந்தபோது அதன் மேலே ஒரு கரண்டி வெண்ணை வழுக்கி கொண்டு இருந்தது. சும்மா இருந்த தோசையில் இப்போது பாலீஷ் ஏறி போய் தகதகவென்று இருந்தது. பொன்னிறத்தில் தோசை முறுகலாக இருக்கவும் அதை ஒரு கை பியிக்க ஏதோ அட்டையை பியிப்பது போல வந்தது. நம்மூரில் இருக்கும் தோசை எல்லாம் பியித்து கையில் வைத்தால் பூமி நோக்கி விழும், இங்கு மானஸ்தன் போல நிமிர்ந்து இருந்தது. திங்கும்போது எங்கே வாயில் அடிப்பட்டு விடுமோ என்று இருந்தாலும் ஒவ்வொரு வில்லலும் அருமை, அருமை !! கர்நாடகாவில் தோசையின் மீது மையாய் அரைத்த  கார  மிளகாயை தடவுவார்கள், சாப்பிடும்போது அங்கங்கே அது கொடுக்கும் காரம் அமோகம் போங்கள் ! அதுவும் அவர்கள் கொடுத்து இருந்த தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியில் தொட்டு உண்ணவும் இன்னமும் அருமை ! இப்படியே பியித்து சாப்பிடும்போது திடீரென்று புதையல் பார்த்தது போல தோசையின் நடுவில் மஞ்சளாக மசாலா இருந்தது, உருளை கிழங்கை நன்கு மசித்து மஞ்சள் போட்டு, அதனுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் போட்டு ஒரு கரண்டி நல்ல ருசியுடன் தோசையினுள் வைத்து இருக்க, தோசையை அதனுடன் உண்ண..... இன்னைக்கு ஞாயிற்று கிழமை அமோகமான நாள் என்று பேப்பரில் போட்டு இருந்ததா என்று பார்க்க வேண்டும் !!
 

பஞ்ச் லைன் :

சுவை - ஒரு நல்ல மசாலா தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் MTR, வித்யார்தி பவனை அடுத்து இங்குதான்..... ம்ம்ம்ம் சூப்பர் !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி கம்மி ! சிறிய இடம் என்பதால் இடம் கிடைப்பதற்கு சில நேரம் நீங்கள் நிற்க வேண்டியதிருக்கும் !

பணம் - எல்லாம் கம்மிதான் என்றே தோன்றியது, பெங்களுருவில் சில இடங்களில் உணவகங்களில் கிடைப்பதை விட கம்மிதான் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். என்ன மசாலா தோசை கேட்டால் மட்டும் லேட் ஆகிறது !


அட்ரஸ் :

7th Cross, Margosa Road, Malleshwaram, Bangalore


மெனுகார்ட் :
 

கன்னடத்தில்...... படிக்க முடியுமா பாருங்களேன் !
 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, CTR, Bangalore, Bengaluru, Best masala dosa, CTR masala dosa, Malleshwaram

8 comments:

 1. சாம்பாரே இனிப்பா...? பசிக்கிறது வர்றேன்... ஹிஹி...

  ReplyDelete
 2. வணக்கம்

  தங்களின்பயணத்தின் போது ரசித்த அனுபவங்களை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்...கண்டவுடன் எனக்கும் பசிவருகிறது போல உள்ளது ..


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. கர்நாடகாவில் நான் சாம்பார்
  வாங்குவதே இல்லை
  காரணம் அந்த இனிப்புதான்
  அடுத்த முறை நீங்கள் சொல்லும் கடையில்
  மசாலா தோசை சாப்பிட முயற்சிக்கவேண்டும்

  (நீங்கள் வந்து சென்ற இரவு நாங்கள்
  போன இடம் 99 தோசைக் கடைதான் )

  படங்களுடன் பதிவு சுவை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. பாஸ்,

  அரிசிய ஊற வைச்சு மாவா அரைக்காம, பொடியாக்கி தண்ணில கரைச்சு ஊத்தும் கர்னாடக இட்லி, தோசை என்னிக்குமே லாயக்கில்லாதது. அதுவும் இட்லி வாயில் வைக்க முடியாது. அது தெரிஞ்சுதான் இட்லிய சாம்பாரில் ஊற வைச்சு கரைச்சு சாப்பிடுறாங்க(றோம்).

  தோச மொறுமொறுன்னு முதல் 5 நிமிசத்துக்கு இருக்கும். அப்புறம் பிய்க்க அப்பளம் போல உடையும். அதை மறைக்கத்தான் பெண்ணே மேக்கப் எல்லாம். அந்த சாம்பார் எல்லாம்..... என்னத்தச் சொல்ல?

  ReplyDelete
 5. பொதுவாக கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் போடுவார்கள். நான் அங்கிருந்த மூன்று வருடங்களில் வெல்ல சாம்பார் நிறைய சாப்பிட்டதுண்டு. பல நேரங்களில் இட்லி தோசையுடன் சட்னி மட்டும் தொட்டு சாப்பிட்டிருக்கிறேன்....

  ReplyDelete
 6. பொதுவாகவே கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் போடுவதுண்டு. அது ஒரு அசட்டு தித்திப்பாக இருக்கும். இருக்கும் சட்னியோடு அந்த தோசை சாப்பிட சுவை தான்....

  ReplyDelete
 7. படங்களை போட்டு பசியை கிளப்பிட்டீங்க! அருமை!

  ReplyDelete
 8. மல்லேசுவரம் லிங்க் ரோட்டில் ஒரு பிரியாணி கடை உள்ளது, அருமையான சுவை, முயற்சி செய்து பாருங்கள் :-)

  ReplyDelete