Friday, June 27, 2014

அறுசுவை - நம்ம நாட்டு பர்கர் !!

பீட்சா, பர்கர் என்று வெளிநாட்டு பாஸ்ட் புட் எல்லாம் வீட்டிற்க்கு கொண்டு வந்தால் எனது அம்மா சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். சரி வெளியே செல்லும்போது அவர்களை ஒரு முறையாவது இது போன்ற உணவகத்திற்கு கூட்டி சென்று உலகம் இப்படிதான் என்று காட்டலாம் என்றால் அங்கு சென்று நாங்கள் சாப்பிட அவர் மட்டும் என்ன உனவுடா இது, என்ன இருந்தாலும் நம்ம ஊரு சாப்பாடு போல வருமா என்று கேட்க ஆரம்பித்து விடுவார். அப்போது தோன்றியதுதான் இந்த பர்கர் எல்லாம் நம்ம ஊரு சுவையுடன் செய்யும் கடை இருக்கிறதா என்று பார்ப்பது. நண்பர்களிடமும், கூகிளிடமும் பேசியபோது தெரிந்ததுதான் இந்த கடை, வெளியே இருந்து பார்க்கும்போது பாஸ்ட் புட் கடை போல தெரிந்தாலும் இவர்கள் தயாரிக்கும் உணவு எல்லாம் வெளிநாட்டு மருமகள் நம்ம ஊரு கண்டாங்கி சேலை கட்டி வருவது போல !!

உணவகத்தை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...... செட்டிஸ் கார்னர் !




உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று பார்வையை ஒட்டும்போதே அங்கே உண்ணும் சிலர் பர்கரை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து சாப்பிடுவதை பார்த்து எனது அம்மாவை பரிதாபமாக பார்த்தேன். அங்கு இருந்த மெனு கார்டை எட்டி பார்த்தபோது எதுவோ வித்யாசமாக தெரிந்தது....... பர்கர் என்று எந்த இடத்திலும் எழுதவில்லை. பக்கத்தில் இருந்த ஒருவர் அவருக்கு பன் நிப்பட் மசாலா ஒன்று என்று சொல்லியவுடன் பன்னை எடுத்து சரசரவென்று எதுவோ சேர்த்து அதை கொடுக்கும்போது அது பர்கர் போலவே இருந்தது. என்னடா இது என்று ஆச்சர்யமாக இருந்தாலும்...... ஒரு பக்கம் எனது அம்மா இதை சாப்பிடுவாரா என்று இருந்தது.


 
மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு எனக்கும் ஒரு பன் நிப்பட் மசாலா என்று ஆர்டர் செய்துவிட்டு என்ன செய்கிறார்கள் என்று ஓரமாக நின்று கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் ஒரு பன்னை எடுத்து இரண்டாக கத்தியை கொண்டு பிளக்கிறார்கள். அதன் மீது புதினா, கொத்தமல்லி அதில் கொஞ்சம் வரமிளகாயை நன்கு கூழ் செய்து கலந்த சட்னியை நன்கு தடவுகிறார்கள். இதன் மீது ஆந்திராவில் கிடைக்கும் நிப்பட் (வேர்கடலை நிப்பட் செய்முறை) ஒன்றை வைக்கிறார்கள், அதன் மேலே சிறியதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை கொஞ்சமாக தூவி, அதில் கொஞ்சமே கொஞ்சம் கொத்தமல்லி, காரம் வேண்டும் என்றால் கொஞ்சம் பச்சை மிளகாய், தக்காளி வைத்து அதன் மேலே கொஞ்சம் சாஸ் ஊற்றி ஒரு தாளில் சுற்றி கொடுக்கிறார்கள். எனது கைகளுக்கு வரும்போதே நம்ம ஊரு மசாலா வாசனை தூக்கியது, பயந்துக்கொண்டே எனது அம்மாவிடம் கொடுக்க முதலில் வேண்டாம் என்று மறுத்தவர், நான் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, முதலில் ஒரு கடி கடித்தவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்தார்........ ஏண்டா, இது போல பர்கர் வாங்கிட்டு வந்தாதான் என்ன என்று கேட்க எனக்கு மனது கூத்தாட தொடங்கியது ! 



 
எனது அம்மா சாப்பிட்டு நன்றாக இருக்குது என்று சொல்லிவிட எனக்கு அடுத்து என்ன சாப்பிடலாம் என்று வெஜ்ஜி பன் வித் வெட்ஜஸ் என்று ஆர்டர் செய்தேன். முறை அதுவே நடுவில் நிப்பட் வைக்காமல் பொறித்த சிறிய உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்கின்றனர். உருளைகிழங்கின் மொருமொருப்பும், மசாலாவின் கலவையும் என்று பெருமையாக நம்ம ஊரு பர்கர் என்று ஓ போட்டுக்கொண்டே சாப்பிட்டேன் !
 
 


பர்கர் சாப்பிடும்போது நாம் எல்லோரும் கோக், பெப்சி குடிப்போம் இல்லையா, அதையும் இங்கு வித்யாசமாக தருகின்றனர். கோக்கில் மசாலா கலந்து அவர்கள் தரும்போது ஒரு வாய் வைக்கும்போதே சுவை நன்றாக இருக்கிறதே என்று ரசிக்க வைக்கிறது. என்னதான் வெளிநாட்டு மோகம் கொண்டு சில நேரங்களில் எல்லோரும் சாப்பிடுகிறார்களே என்று நாம் சாப்பிட நினைக்கும் பர்கரை இப்படி நம்ம ஊர் ஸ்டைலில் கொடுத்தால் வெளிநாடு வேண்டாம் நம்ம இந்தியாதான் டாப் என்று நினைக்க தோன்றாதா !!
 


 
பஞ்ச் லைன் :

சுவை - பர்கர் எல்லாம் வெளிநாட்டு உணவு உடம்புக்கு ஒத்துக்காது என்று நினைப்பவர்களும், நம்ம ஊரு டேஸ்டில் பர்கர் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களும் செல்ல, சாப்பிட வேண்டிய சுவை !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி  கொஞ்சம் கம்மிதான் ஆனால் எப்படியாவது கிடைத்து விடும் !
 
பணம் - அவ்வளவு ஒன்றும் ஜாஸ்தி இல்லை என்றுதான் தோன்றுகிறது !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள்.  வேண்டுவதை கேட்டு வாங்கி கொள்ளலாம் !

மெனு கார்டு: 


 
அட்ரஸ் :
 
2, Serpentine Road, Kumara Park West, Bangalore, Karnataka 560020, India
+91 80 2356 6616
 


 
Labels : Suresh, Kadalpayanangal, Bangalore, Bengaluru, Desi Burger, Naattu Burger, Different burger, Burger, masala coke, coke

Friday, June 20, 2014

சோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் !

சில இசையை கேட்க்கும்போது மெய் மறக்கும், அது எந்த வாத்தியத்தில் இருந்து வருகிறது என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும், அப்படி ஒன்றுதான் ஜலதரங்கம். சிறு வயதில் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் இதை காண்பிக்கும்போது சுலபமாக இருக்கும் போல இருக்கிறது என்று வீட்டில் நானும் தட்டு முட்டு சாமான்கள் எல்லாம் எடுத்து நடு வீட்டில் வைத்து தண்ணீர் நிரப்பி இசைகொலை செய்வேன் !! ஆனால், கண்களை மூடி இந்த இசையை கேட்டால் செவிகளுக்கு விருந்துதான். இந்தியாவில் இன்று வெகு சிலரே இந்த இசையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சோலை டாக்கீஸ் பகுதிகளில் உங்களுக்கு திரை இசையை தாண்டியும் அருமையான சங்கீதம் இருக்கிறது என்று காட்டுவதில் இந்த வாரம்..... ஜலதரங்கம்.
 

 
 

 ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது. நமது நாட்டில் பீங்கான் கிண்ணத்தில் தண்ணீர் வைத்து இசை அமைக்கிறார்கள், இதையே வெளிநாட்டில் பாட்டிலில் தண்ணீர் கொண்டு நிரப்பி செய்கிறார்கள். கீழே இருக்கும் வீடியோவை சொடுக்கி வெளிநாட்டு இசையை கேட்டுவிட்டு, நமது இசை எவ்வளவு ஜீவனோடு இருக்கிறது என்று பாருங்களேன் !! 
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Solai Talkies, Takkies, Jalatharangam, best music, amazing music, unique music instrument
 

Thursday, June 19, 2014

சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2) !!

சென்ற பகுதியான "சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1) !!"-இல் இந்த காட்டு பகுதியை தேடி சென்று டென்டை அடைவது வரை எழுதி இருந்தேன், அதை படித்துவிட்டு நிறைய பேர் கொஞ்சம் அதிகம் தகவல் தாருங்கள் என்று கேட்டு இருந்தனர், விரைவில் தருகிறேன். இந்த வாரம் அந்த டெண்டில் இரவு தங்கிய அனுபவமும், காட்டுவாசியாக இருந்த தருணமும், ஒரு சுத்தமான அதிகாலை பொழுதும் என்று பார்ப்போமே. தூரத்தில் டென்ட் தெரிந்தவுடனே இங்கே எல்லோரும் குதிக்க  ஆரம்பித்துவிட்டனர். நெருங்க நெருங்க சுமார் மூன்று டெண்டும், நெருப்பு  மூட்ட என்று   விறகுகளும் இருந்தது. ஆள் ஆளுக்கு இது என்னுது, அது  உன்னுது என்று டென்ட் பிரிக்க தொடங்கி விட்டனர். அந்த இரைச்சல் எல்லாம் அடங்கியவுடன்  அந்த இடத்தின் அமைதி புரிய ஆரம்பித்தது. நாங்கள் தங்கிய இடம் அவலாஞ்சி டேம் நடுவில் என்பதால் சுற்றிலும் தண்ணீர் இருந்தது, குளுமையான காற்று வீசி அப்போதே சிறிது குளிர ஆரம்பித்தது.



டென்டின் உள்ளே பார்த்தால் தரையில் ஒரு விரிப்பும், அதன் மேலே போர்வை போன்ற அமைப்பும் இருந்தது அவ்வளவே. முக்கோண வடிவில் கயிறை எல்லா பக்கமும் கொண்டு கட்டப்பட்டு இருந்த ஒன்றின் முன்பும், பின்பும் பூட்டி கொள்ளும் வகையில் இருந்தது. இதனால் பைகளை உள்ளே பத்திரமாக வைத்துவிட்டு தூங்கலாம். நடந்து வந்த களைப்பிற்கு அந்த டென்டின் முன்னே உட்கார்ந்து இளைப்பாற தொடங்கினேன். இயற்க்கை சூழ்ந்த அந்த இடத்தில் எந்த பரபரப்பும் இல்லாமல் இப்படி காலை நீட்டி உட்காருவது என்பது ஒரு வரமாகவே தெரிந்தது. இங்கு வருவதற்கு முன் ஐரோப்பாவும், கத்தாரும், கேரளாவும் என்று ஓடிக்கொண்டே இருந்ததால் இப்போது காலை நீட்டி உட்காரும்போது ஒரு சுகம் தெரிந்தது.... உள்ளே தலையை நீட்டி அந்த போர்வையை எடுத்து போர்த்தலாம் என்று கையில் எடுத்தால் அது வித்யாசமாக இருந்தது !

இது போன்ற ஓய்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை !


 
முதலில் பார்த்தபோது போர்வை போன்று தெரிந்தாலும் அது ரெக்சினால் ஆன ஒரு உரை போல இருந்தது. அதை எப்படி போர்த்திக்கொள்ள முடியும் என்று யோசித்தபோது எங்களுக்கு காவலுக்கு வந்தவர் அதில் இருந்த ஜிப்பை வேகமாக இழுக்க அது இரண்டாய் பிரிந்தது. உள்ளே நல்ல கதகதப்பாய் சாப்ட் ஆக இருந்தது. நீங்கள் அதன் உள்ளே இறங்கி ஜிப்பை போட்டுக்கொண்டு தலை மட்டும் தெரியும் வண்ணம் தூங்க வேண்டுமாம்..... அது சரி முன்னே பின்னே இதை உபயோகித்து இருந்தால்தானே தெரியும். வெளிநாடுகளில் இது போன்று தங்கி இருந்தபோது காரில் எல்லாமும் கொண்டு போக முடியும், இதனால் இரண்டு போர்வைகளை எடுத்து சென்று இருக்கிறேன், இங்கு இது புதுசு !! கீழே இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் எகிப்து மம்மி மாதிரியே தெரியவில்லை..... இன்னும் என்னவெல்லாம் கூத்து இருக்கோ ?!
 
 
 
 
என்னை மம்மி ஆக்கிடீங்களே.... இப்படிதான் இன்னைக்கு தூங்கனும் !
 
மெல்ல மெல்ல இருள் கவிய ஆரம்பிக்க, குளிரும் சர சரவென்று ஏற ஆரம்பித்தது. ஊட்டியில், அதுவும் நடு காட்டில் இருக்கும்போது குளிருக்கு கேட்கவா வேண்டும் ?! இது போன்ற காடுகளில் தங்கும்போது குளிருக்கு நெருப்பு பற்ற வைப்பது வழக்கம்தான் என்றாலும் அதில் இருந்து பறக்கும் நெருப்பு பொறியினால் காடுகளும் பற்றி கொள்ளும். இதனால் அங்கு ஒருவர் அந்த நெருப்பை எவ்வளவு தூரம் பற்ற வைக்க வேண்டும் என்றும், எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ அந்த பக்கம் சில விறகுகளை வேறு விதமாக அடிக்கியும் என்று செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அருகில் யார் இருக்கிறார்கள் என்று தெரியா வண்ணம் இருள் சூழ அந்த இடத்தில் பொருத்திய ஒரு தீக்குச்சி பெரும் பிழம்பை உருவாக்கி கொண்டு இருந்தது......அதை நாங்கள் சுற்றி நின்று கொண்டு உடம்பை சூடாக்கி கொண்டோம் ! கொஞ்சம் நடுக்கம் குறைந்தவுடன் எங்களது ஆட்டம் ஆரம்பம் ஆனது, காட்டுவாசி நடனம், குத்து பாட்டு, MGR பாடல்கள் என்று சுற்றி சுற்றி வந்தாலும் கடைசியில் முடித்தது என்னவோ இளையராஜாதான். அந்த குளிரில் சூடாக சப்பாத்தியும், சப்ஜியும், தண்ணியும் (குடிக்கிற தண்ணிங்க :-)) சாப்பிட்டு விட்டு "தங்க சங்கிலி, மின்னும் பைங்கிளி...." என்று இளையராஜா ஆரம்பிக்க அந்த வானத்து நட்சத்திரங்களுடன் இரவு மிகவும் அருமையாக இருந்தது எனலாம் !
 

ஹோய்யற ஹொய்யா..... ஏ ஜம்பக்கு ஜபக்கு !!

நிலா காயுது, நேரம் நல்ல நேரம் !!

இரவு கவிய கவிய, எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வந்த களைப்புக்கு அசர ஆரம்பித்தனர். ஒரு ஒருவராய் டென்ட் உள்ளே செல்ல ஆரம்பிக்க அங்கே எங்களுக்கு காவலுக்கு இருந்தவரிடம் இங்கே மிருகங்கள் எதுவும் இல்லையா என்ன என்று கேட்க ஆரம்பித்தனர். இது டேம் பகுதியினால் இங்கு தண்ணீர் கிடைக்கும் என்று மிருகங்களுக்கு தெரியும், பொதுவாக காட்டெருமை, முயல் என்ற பிராணிகள் எல்லாம் வரும், வெகு சில சமயங்களில் மட்டும் சிறுத்தை இங்கே வரும் என்று சொல்ல சற்று நடுக்கம் ஆரம்பம் ஆனது. சில தைரியசாலிகள் மட்டும் எரியும் கொள்ளியை எடுத்துக்கொண்டு வாப்பா முயல் வேட்டைக்கு கிளம்பலாம் என்று ஆரம்பித்தனர். அந்த அடர்ந்த காட்டில் சிறிது தூரம் நடக்கும் முன்னரே தீ அணைந்து எங்கும் இருளே தெரிந்தது, அடுத்த முறை முயல் பிடிக்கலாம் என்று தூங்க செல்ல ஆரம்பித்தோம்....... அப்போது நான் "அப்போ சிறுத்தை வந்து என் டெண்டை சுரண்டினால் என்ன செய்யிறது..." என்று கேட்க, அவரோ "நீங்க சும்மா இருங்க, சத்தம் இல்லை என்றால் அதுவே போயிடும்" என்று சொல்ல பக்கத்தில் கர்ண கொடூரமாக சத்தம் ஒன்று கேட்டது..... அது சிறுத்தை அல்ல....... அங்கு உறங்கி கொண்டு இருந்தவர்கள் விட்ட குறட்டை !!சத்தியமா இங்கே சிறுத்தை வரவே வராது இந்த சத்தத்தில், என்று நான் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தேன் !
 
குறட்டை சத்தத்தை இங்கே பதிவு பண்ண முடியலியே !

முயல் வேட்டைக்கு கிளம்பிய டீம்......

காட்டில் இருள் பொழுது எவ்வளவு பயமாக இருக்குமோ, அதை போலவே காலை பொழுது மிகவும் ஆனந்தமாக இருக்கும். இயற்க்கை ஒரு புதிய குளியல் போட்டு ப்ரெஷ் ஆக இருக்கும். காற்றில் ஒரு புதிய மலர்ச்சி இருக்கும். காலையில் சூரிய உதயத்தை காண வேண்டும் என்று முன்பே எழுந்தேன். எல்லோரையும் எழுப்பி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த டேம் பகுதியில் இறங்க ஆரம்பித்தோம். பார்க்கும்போது சுலபமாக தெரிந்தாலும் வழுக்கி வழுக்கி தண்ணீரை அடைந்தோம். அந்த தண்ணீரில் இருந்து பனி கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டு இருக்க, தண்ணீரின் ஜிலு சிலுப்பு என்று அந்த நாளின் சூரிய உதயம் மிகவும் அருமையாக இருக்கும் என்று மனம் சொல்ல ஆரம்பித்தது. 
 

இயற்க்கை எவ்வளவு அழகு !


என்ன இந்த வாரம் எப்படி இருந்துச்சு, அடுத்த வாரம் வாங்க இயற்கையின் சுத்தமான காற்றையும், அழகையும் சிறிது சிறிதாக அனுபவிப்போம், அதுவரை காத்திருங்களேன் !!
 
Labels : Suresh, Kadalpayanangal, Camping, ooty, udagamandalam, avalanche, night out, night camping, dense forest, camp fire

Tuesday, June 17, 2014

ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ! ( நிறைவு பகுதி - 4)

கடந்த வாரங்களில் மாம்பழம் பற்றி நான் எழுதி வந்ததை படித்து நிறைய பேர் இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்தது நடந்தது. முக்கியமாக திரு. வெங்கடகிருஷ்ணன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவர் எனது மாம்பழ பதிவுகளை முகபுத்தகத்தில் ஷேர் செய்து இருந்தார், அத்துடன் அவர் ஒரு உணவு பிரியர், இவர் ஷேர் செய்யும் உணவுகள் எல்லாம் நாவில் நீர் வரவைக்கும் ஒன்று. அவர் என்னுடைய இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியை விரும்பி படிப்பது கண்டு மகிழ்ந்தேன் ! சரி, இந்த வாரம் நிறைவு பகுதியாக மாம்பழத்தை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா ! மாம்பழம் என்பது ஒரு குறிப்பிட்ட சீசன் மட்டுமே காய்க்கும், அதுவும் வெகு விரைவில் அழுகிவிடும், இதனால் இதன் சுவை விரும்பிகள் ஆண்டு முழுவதும் சுவைக்க கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் மாம்பழ கூழ் !! அது சரி, இப்படி எவ்வளவு மாம்பழ கூழ் செய்ய முடியும் என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் படத்தை பாருங்கள்...... எனக்கு பின்னால் இருப்பது ஏற்றுமதிக்கு தயாராக இருக்கும் ஒரு சிறிய பகுதியின் மாம்பழ கூழ் டின் மட்டுமே !
 
 



 
மாம்பழ   கூழ் எப்படி செய்யபடுகிறது என்பதை பார்ப்பதற்கு முன், அது ஏன் உணவு தொழிற்சாலைகளில் அலுமினியம் என்பது அதிகமாக பயன்படுத்த படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? கோக் பாட்டில், கேக், பதப்படுத்தப்பட்ட எந்த உணவு பொருளும் அலுமினியத்தில் மட்டுமே பேக் செய்யபடுகிறது...... ஆனால் ஊறுகாய், புளிப்பு நிறைந்த உணவுகள், அமில தன்மை வாய்ந்த உணவுகள் பிளாஸ்டிக் அல்லது  கண்ணாடியில்  மட்டுமே பேக் செய்யப்படுகிறது, இது எதனால் என்று யோசித்து இருக்கிறீர்களா ? (ஊறுகாய் எப்போதுமே பாட்டிலில் தான் வரும் !!)அலுமினியம் ஒரு வெண்மையான உலோகம். இதன் அடர்த்தி 2698 கிகி/கமீ. உருகு நிலை 933 K கொதி நிலை 2740 K, அணு எண் 13, அணு நிறை 26.98. வெள்ளியைப் போன்று உறுதியான அலுமினியத்தை அடித்து தகடாகவும், மெல்லிய கம்பியாக நீட்டவும் முடியும். அலுமினியம் நல்ல கடத்தியாக விளங்குவதால் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது. சுயவெப்பம் ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறனை மதிப்பிடுகின்றது. ஒரு கிகி நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை 1 டிகிரி C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலே அப்பொருளின் சுய வெப்பம் என்பதால் உயரளவு சுயவெப்பம் கொண்ட அலுமினியம் குறைந்த வெப்ப நிலை மாற்றத்தோடு உயரளவு வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது.[17] அலுமினியத்தின் வெப்ப ஏற்புத் திறன் செம்பை விட 2.35 மடங்கும், வெள்ளியை விட 3.86 மடங்கும், தங்கத்தை விட 6.85 மடங்கும் அதிகமானது. இதனால் வெளிச்சம் மற்றும் வெப்பம் என்பதை அதிகமாக இது கடத்தாது என்பதால் இதை எல்லா உணவு பதப்படுத்தப்படும் இடங்களிலும் உபயோகிக்கின்றனர் !
 
           
 
 
நல்ல பழுத்த மாம்பழத்தை முந்தைய பகுதிகளில் சொன்னது போல காம்பு நீக்கி கன்வேயரில் போடுகின்றனர். அதை அப்படியே தண்ணீரில் கழுவி செல்ல இன்னொரு இடத்தில அதை தோலும், கோட்டையும் நீக்குகின்றனர். சில தொழிற்சாலையில் மெசினும் உண்டு. இப்படி உரித்த மாம்பழத்தை நீராவி கொண்டு நன்கு கழுவுகின்றனர். பின்னர் அது ஒரு மெசினில் நன்கு கூழ் போன்று அறைக்கபடுகிறது, இப்படி அறைக்கப்படும்போதே அது கெட்டு போகாமல் இருக்க சில வகை கெமிகலும் சேர்க்கப்படுகிறது. சில நேரங்களில் இப்படி அரைக்கப்படும் மாம்பலத்தில் இனிப்பு தன்மை என்பது கூட குறைய இருக்கும், இதனால் சமமான இனிப்பு வருவதற்கு அதை சர்க்கரை அல்லது சாக்கரின் கலப்பார்கள். இதன் பின்பு பால் திரிந்து தயிர் ஆவது போல், இந்த மாம்பழ கூழில் யீஸ்ட் கலப்பார்கள், அதை நன்கு நீராவியில் கொதிக்க வைத்த பின்பு குளிர வைத்தால் மாம்பழ கூழ் ரெடி !!
 
 
 
 
 
 
இதுவரை நான் சொன்னதை கேட்க்கும்போதே உங்களுக்கு நாக்கு ஊறினால், பார்த்த எனக்கு எப்படி இருக்கும். சரி மாம்பழ கூழ் ரெடி, அதை அடைக்க அலுமினிய டின் வேண்டுமே, அதை எப்படி செய்கிறார்கள் என்று சுருக்கமாக பார்ப்போமே. இந்த அலுமினிய டின்கள் சிறியதாக வெளியூரில் இருந்து பெட்டி பெட்டியாக வந்து விடுகிறது. அதை எடுத்து பார்த்தால் ஒரு பேப்பர் போலவே இருக்கிறது, அதை ஒரு மெசினில் வைத்து அழுத்த, அது ஒரு டின் போன்ற வடிவத்தில் வருகிறது. தினம் தினம் ஆயிரம் ஆயிரம் டின்கள் இப்படி செய்யப்படுகிறது !! பொதுவாக இது ஐந்து அல்லது மூன்று கிலோ அளவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
 
 
    
 
                                              
 
 
 சரி எல்லாம் ரெடி, வாங்க மாம்பழ கூழ் பார்க்கலாம் என்று அழைத்துப்போக, அங்கு பொன்னிறத்தில் மாம்பழம் பால் போல கொட்ட அதை ஒருவர் சர சரவென்று அந்த அலுமினிய டின்னில் பிடித்துக்கொண்டு இருந்தார். அதை பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது. அது முடிந்தவுடன், இன்னொருவர் ஒரு மெசினில் மூடி கொண்டு இறுக்கமாக மூட, அதை ஒருவர் அடுக்கி கொண்டு இருந்தார். மாம்பழ கூழை ஒரு ஸ்பூன் வாங்கி வாயில் ஊற்ற..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த பொறப்புதான் என்று பாடல் மனதில் ஓடியது.
 
 
 




 
 இந்த சுவையில் மயங்கி வெளியே வர, எனது முன்னே ஒரு மலையே இருந்தது. இவ்வளவு மாம்பழ கூழ் எங்கே போகிறது, என்ன ஆகிறது என்று எனது மனதில் எழுந்த கேள்விகளை தவிர்க்க முடியவில்லை. வருடம் முழுவதும் இங்கே விளைந்த மாம்பழங்கள் ஸ்வீட் ஆகவும், ஜூஸ் ஆகவும் இன்னும் இன்னும் பல பல வடிவங்களை எடுக்கிறது என்றனர். இந்த மாம்பழ கூழ் எல்லாம் வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றனர். அது ஒரு லாரியில் மெதுவாக ஏற்றப்படும்போது பார்த்த நான் பெருமையாக "இது சேலம் மாம்பழம்........" என்று சொல்லிக்கொண்டேன்.
 






 
 மாம்பழ கூழ் வைத்து சமையல் செய்ய விரும்புபவர்கள் இந்த ரெசிபி பார்த்து செய்யலாமே....... 30 வகை மாம்பழ ரெசிபி. அப்படியே எனக்கும் ஒரு வாய் அனுப்பி வைத்தால் சந்தோசம் ! அடுத்த முறை மாம்பழத்தை பார்க்கும்போது இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி நினைவுக்கு வந்தால் அதை விட எனக்கு வேற என்ன சந்தோசம் வேண்டும் !!


 




Labels : Suresh, Kadalpayanangal, Salem, Mango, Mango district, Mango Pulb, Pulp, how to make mango pulb, mango pulb factory, ripen mango

அறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு

 ஒரு உணவகத்திற்கு போறீங்க, அங்க உங்க தட்டுல மசாலா தோசை அப்படின்னு ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கீங்க, முடிவா உங்க தட்டுல அரை மசாலா தோசை மட்டும் வைச்சா எப்படி இருக்கும்....... இங்க சும்மா குணா கமல் கையில லட்டு கிடைச்ச மாதிரி அப்படியே மெய் மறந்து போறாங்க !? இந்த இடத்தை பற்றி கேள்விப்பட்டு ஒரு வருஷம் ஆச்சு, போகணும் போகணும் அப்படின்னு நினைச்சே நாள் ஓடி போச்சு, சென்ற வாரம் போகலாம் அப்படின்னு முடிவு பண்ணி எனது மனைவியையும் கூட்டிக்கிட்டு போனேன். கடைக்கு ஒரு பெயர் பலகை கிடையாது, எங்கயும் விளம்பரம் கிடையாது, உட்கார ஒரு சின்ன மர பெஞ்சுதான், கையேந்தி பவனை விட கொஞ்சம் பெருசு அவ்வளவுதான்..... ஆனா வந்து உட்கார்ந்து சாப்பிடற ஆளுங்க மட்டும் வர்றது ஆடி, BMW, பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் என்றால் அப்படி என்னதான் இருக்குது அப்படின்னு தோணும்தானே..... எனக்கும் தோணிச்சு ஆனால் சாப்பிட்ட உடனே இந்த சுவைக்கு பிரதமரே இங்க வருவாருன்னு தோணிச்சு !!

பெயர் பலகை, விளம்பரம் என்று எதுவும் இல்லை..... ஆனால் பேமஸ் !!


இவர்தான் ஹோட்டல் ஓனர் திரு. சித்தப்பா (Sidappaa)
பெங்களுருவின் கார்பரேசன் சர்கிள் அருகில் இருக்கும் இந்த ஹோட்டலுக்கு பெயர் "சித்தப்பா (Sidappaa) ஹோட்டல்", இதை சொல்லியும் நிறைய பேருக்கு புரியவில்லை என்றால் அரை மசாலா தோசை கிடைக்கும் ஹோட்டல் என்று கேளுங்கள். காரில் செல்பவர்களுக்கு இங்கு எங்கும் பார்கிங் கிடைக்காது, அதனால் பசியான நேரத்தில் குடும்பத்துடன் பார்கிங் கிடைக்காமல் சுற்றி வர வேண்டாம் ! எங்கேயோ நிறுத்திவிட்டு நடந்து நடந்து ஹோட்டல் ஜியோ (Hotel Geo ) எங்கே என்று கேட்டு சென்றுவிட்டு, அதன் எதிரே இருக்கும் தெருவில் நடந்து சென்று உங்களது மூன்றாவது இடது பக்கம் இருக்கும் தெருவில் திரும்பி சென்று கொண்டிருந்தால் உங்களது இடது பக்கம் ஒரு கோவில் வரும். அந்த கோவிலுக்கு அருகினில் சென்று என்ன தேடினாலும் உங்களுக்கு ஒரு ஹோட்டல் கிடைக்கவே கிடைக்காது........ ஆனால் அந்த கோவிலின் முன்னே ஒரு லைன் நீண்டு கொண்டே சென்று அதற்க்கு பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டின் முன்னே முடியும், அதுதான் சித்தப்பா ஹோட்டல் !! கோவிலுக்கு செல்லும் கூட்டத்தை விட (இப்போதுதான் அதை எடுத்து கட்டுகிறார்கள் ) இங்கே செல்லும் கூட்டம் அதிகம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இதுதான் அந்த கோவில், இதன் அருகில்தான் வீடு !

இந்த வீட்டினுள்தான் சுவையான மசாலா தயார் ஆகிறது !



அப்படியே அந்த ஜோதியில் கலந்து விட்டு (சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கூட்டம் பொளந்து கட்டும், ஆகையால் வார நாட்களில் செல்லுங்கள்) உங்களது முறை வந்தவுடன் அந்த வீட்டிற்க்கு உள்ளே நுழைய ஒரு சிறிய அறையில் சுமார் 15 அல்லது இருபது பேர் நெருக்கி கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள், இது போல் இரண்டு அறைகள் அப்புறம் முன்னே இருக்கும் கொஞ்சம் இடத்தில் சுமார் பத்து பேர் இப்படி நெருக்கி கொண்டு இருப்பார்கள். நாங்களும் அங்கே உட்கார எங்களது கைகளுக்கு ஒரு வாழை இலையும், கீழே வைத்துக்கொள்ள ஒரு பேப்பரும், சூடு கையில் தாக்காமல் இருக்க ஒரு பேப்பர் பிளேட்டும் கொடுத்தார்கள். எனது மனைவியிடம் எனக்கு நான் முழு மசால் தோசை வாங்கிக்கிறேன், உனக்கு என்று கேட்க அவரும் எனக்கும் அப்படியே என்று அதிசயமாக நான் சொன்னதை கேட்டார்..... அப்போவே நான் கொஞ்சம் உசாரா இருந்து இருக்கணும் !! என்ன வேண்டும் என்று எங்களிடம் கேட்ட ஆளிடம் ரெண்டு முழு மசாலா தோசை என்று சொல்லி விட்டு காத்து இருக்க, எங்களை அந்த ரூமில் உட்கார்ந்து இருந்த எல்லோரும் ஜூவில் கூண்டுக்குள் இருக்கும் ஒரு அடிப்பட்ட மிருகத்தை பரிதாபமாக பார்ப்பது போல பார்த்தனர்....... அப்போது தெரியாது எனக்கு அடுத்து நடக்க போவது !

இவ்வளவு சின்ன இடத்தில உட்கார்ந்து இருக்கணும்......


வயது, வசதி என்றெல்லாம் இல்லாமல் எல்லோரும் இலையோடு காத்திருக்கணும் !

அந்த ரூமில் அப்போதுதான் எல்லோரையும் கவனித்தேன், எல்லோரும் காலி இலையை வைத்து இருந்தனர், எல்லோரது இலையிலும் அவர்கள் சாப்பிட்டு முடித்து இருந்தது தெரிந்தது, பின்னே எதற்க்காக காத்திருக்கின்றனர் ? ஒரு ஐந்து நிமிடம் சென்றவுடன், நான்கு முறையாவது மசாலா தோசை என்னவாயிற்று என்று கேட்க, வரும் ஆனா வராது என்பது போலவே சொல்லி செல்ல..... எங்களுக்கு பக்கத்து இலையில் இட்லி என்று கேட்டு சாப்பிட்டவுடன், எங்களுக்கும் இரண்டு இட்லி என்று கேட்டு சாப்பிட்டோம். சிறிய சூடான இட்லி, அதன் மீது தேங்காய் சட்னி போட்டு, சிறிது குருமா ஊற்றவும், நொடியில் காலியானது. இன்னும் ஐந்து நிமிடம் சென்று தோசை வரும் என்று அவர் சொல்லி செல்ல இந்த முறை ப்ளைன் தோசை இரண்டு சொல்லி சாப்பிட்டோம், இன்னும் ஐந்து நிமிடம் செல்ல இந்த முறை இட்லி போட்டு அதன் மீது இரண்டு கரண்டி நெய் விட்டு சாப்பிட்டோம். இன்னும் ஐந்து நிமிடம் செல்ல........... இப்படியே மசாலா தோசை வரும் வரும் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். வந்த மசாலா தோசை எல்லாம் அங்கே பல பல நிமிடங்களாக காத்திருந்தவர்களுக்கு செல்ல எங்களை ஏன் அவர்கள் அப்படி பார்த்தார்கள் என்று புரிந்தது. முடிவில் எனது இலைக்கு பாதி மசாலா தோசை வைத்துவிட்டு அவர் முழு மசாலா கேட்டீங்களே இன்னொன்னு வைக்கவா என்று கேட்க..... அப்போதுதான் புரிந்தது ஏன் இந்த கடையில் அரை மசாலா தோசை பிரபலம் என்று...... காத்திருக்கும் நேரத்தில் இவ்வளவு சாப்பிட்டு எவண்டா முழு மசாலா தோசை திங்கறது !!

   

ஆனாலும், ஏன் மக்கள் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு காத்திருந்து இந்த அரை மசாலா தோசை சாப்பிடறது என்று அதை ஒரு வாய் பிட்டு வைத்தவுடன் தெரிந்தது. தோசையில் உங்க வீட்டு எங்க வீட்டு நெய் இல்லை...... எல்லார் வீட்டு நெய்யையும் போட்டு இருக்காங்க. அதனால் பொன்னிறமாக மொறு மொறுவென்று அப்படி ஒரு மொறுமொறுப்பு ! அதன் மேலே கொஞ்சமே கொஞ்சமாக நன்கு மஞ்சள், கொத்தமல்லி, காரம் சேர்த்த மசாலாவை பொன்னிறமாக (இதுவும் பொன்னிறமா...... நம்பிக்கை, நாணயம், கைராசி, ரேட் கார்ட் இருக்கா பாருங்க..... நம்பிக்கை.....) வைக்க, தோசையை உடைத்துதான் சாப்பிட வேண்டி இருக்கிறது. ஒரு வாய் கொண்டு போகும் முன்னரே மூக்கிற்கு அந்த நெய் வாசனை போய் விடுகிறது. அதனால் வாய் எச்சில் ஊறி ரெடி ஆகி விடுகிறது. உள்ளே ஒரு வாய் போட அந்த தோசை வழுக்கி கொண்டு நம்ம தீம் பார்க்கில் வாட்டர் ஸ்லைடு போவது போல போகிறது. நெய்யை தோசையில் ஊற்றவில்லை அவர்கள்...... அதில் முக்கி எடுத்து கொடுக்கிறார்கள். அரை தோசை சாப்பிட முடிவு செய்தாலும் கால் தோசைக்கு மேல் முடிவதில்லை...... இதுதான் அரை தோசை ரகசியம் என்று அவர்கள் சொல்லாமலே தெரிகிறது !!

வந்தாச்சு.... அரை மசாலா தோசை !! யுரேகா.... யுரேகா......

நெய்யில் குளித்த மசாலா தோசை !!

பஞ்ச் லைன் :

சுவை - மசாலா தோசை விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம், இதை விட கிரிஸ்பியாக வேற எங்கயும் சாப்பிட முடியாது !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி இல்லவே இல்லை, பல காத தூரம் சென்று கிடைக்கும் இடத்தில் பார்க் செய்ய வேண்டும் ! உட்கார இடம் கம்மிதான் !
பணம் - கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்திதான்..... சுவைக்கு கொடுக்கலாம் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் ! ஆனால் மசாலா தோசைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது வெயிட் செய்ய வேண்டும் !!

மெனு கார்டு: 


அட்ரஸ் :

ஹோட்டல் ஜியோ (Hotel Geo ) எங்கே என்று கேட்டு சென்றுவிட்டு, அதன் எதிரே இருக்கும் தெருவில் நடந்து சென்று உங்களது மூன்றாவது இடது பக்கம் இருக்கும் தெருவில் திரும்பி சென்று கொண்டிருந்தால் உங்களது இடது பக்கம் ஒரு கோவில் வரும். அந்த கோவிலுக்கு அருகினில் இருக்கும் வீடுதான் ஹோட்டல். பெயர் பலகை எல்லாம் கிடையாது..... கூட்டமே வழி சொல்லும் !!

 

Open · 7:30 am – 11:00 am, சண்டே கூட கடை உண்டு. காலையில் மட்டும்தான் இங்கு உணவு கிடைக்கும்.
Labels : Suresh, Kadalpayanangal, Bangalore, Bengaluru, Sidappaa hotel, half masala dosa, Sampangi rama nagar, hotel geo, best masala dosa, thosai, dosai