Thursday, June 19, 2014

சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2) !!

சென்ற பகுதியான "சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1) !!"-இல் இந்த காட்டு பகுதியை தேடி சென்று டென்டை அடைவது வரை எழுதி இருந்தேன், அதை படித்துவிட்டு நிறைய பேர் கொஞ்சம் அதிகம் தகவல் தாருங்கள் என்று கேட்டு இருந்தனர், விரைவில் தருகிறேன். இந்த வாரம் அந்த டெண்டில் இரவு தங்கிய அனுபவமும், காட்டுவாசியாக இருந்த தருணமும், ஒரு சுத்தமான அதிகாலை பொழுதும் என்று பார்ப்போமே. தூரத்தில் டென்ட் தெரிந்தவுடனே இங்கே எல்லோரும் குதிக்க  ஆரம்பித்துவிட்டனர். நெருங்க நெருங்க சுமார் மூன்று டெண்டும், நெருப்பு  மூட்ட என்று   விறகுகளும் இருந்தது. ஆள் ஆளுக்கு இது என்னுது, அது  உன்னுது என்று டென்ட் பிரிக்க தொடங்கி விட்டனர். அந்த இரைச்சல் எல்லாம் அடங்கியவுடன்  அந்த இடத்தின் அமைதி புரிய ஆரம்பித்தது. நாங்கள் தங்கிய இடம் அவலாஞ்சி டேம் நடுவில் என்பதால் சுற்றிலும் தண்ணீர் இருந்தது, குளுமையான காற்று வீசி அப்போதே சிறிது குளிர ஆரம்பித்தது.



டென்டின் உள்ளே பார்த்தால் தரையில் ஒரு விரிப்பும், அதன் மேலே போர்வை போன்ற அமைப்பும் இருந்தது அவ்வளவே. முக்கோண வடிவில் கயிறை எல்லா பக்கமும் கொண்டு கட்டப்பட்டு இருந்த ஒன்றின் முன்பும், பின்பும் பூட்டி கொள்ளும் வகையில் இருந்தது. இதனால் பைகளை உள்ளே பத்திரமாக வைத்துவிட்டு தூங்கலாம். நடந்து வந்த களைப்பிற்கு அந்த டென்டின் முன்னே உட்கார்ந்து இளைப்பாற தொடங்கினேன். இயற்க்கை சூழ்ந்த அந்த இடத்தில் எந்த பரபரப்பும் இல்லாமல் இப்படி காலை நீட்டி உட்காருவது என்பது ஒரு வரமாகவே தெரிந்தது. இங்கு வருவதற்கு முன் ஐரோப்பாவும், கத்தாரும், கேரளாவும் என்று ஓடிக்கொண்டே இருந்ததால் இப்போது காலை நீட்டி உட்காரும்போது ஒரு சுகம் தெரிந்தது.... உள்ளே தலையை நீட்டி அந்த போர்வையை எடுத்து போர்த்தலாம் என்று கையில் எடுத்தால் அது வித்யாசமாக இருந்தது !

இது போன்ற ஓய்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை !


 
முதலில் பார்த்தபோது போர்வை போன்று தெரிந்தாலும் அது ரெக்சினால் ஆன ஒரு உரை போல இருந்தது. அதை எப்படி போர்த்திக்கொள்ள முடியும் என்று யோசித்தபோது எங்களுக்கு காவலுக்கு வந்தவர் அதில் இருந்த ஜிப்பை வேகமாக இழுக்க அது இரண்டாய் பிரிந்தது. உள்ளே நல்ல கதகதப்பாய் சாப்ட் ஆக இருந்தது. நீங்கள் அதன் உள்ளே இறங்கி ஜிப்பை போட்டுக்கொண்டு தலை மட்டும் தெரியும் வண்ணம் தூங்க வேண்டுமாம்..... அது சரி முன்னே பின்னே இதை உபயோகித்து இருந்தால்தானே தெரியும். வெளிநாடுகளில் இது போன்று தங்கி இருந்தபோது காரில் எல்லாமும் கொண்டு போக முடியும், இதனால் இரண்டு போர்வைகளை எடுத்து சென்று இருக்கிறேன், இங்கு இது புதுசு !! கீழே இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் எகிப்து மம்மி மாதிரியே தெரியவில்லை..... இன்னும் என்னவெல்லாம் கூத்து இருக்கோ ?!
 
 
 
 
என்னை மம்மி ஆக்கிடீங்களே.... இப்படிதான் இன்னைக்கு தூங்கனும் !
 
மெல்ல மெல்ல இருள் கவிய ஆரம்பிக்க, குளிரும் சர சரவென்று ஏற ஆரம்பித்தது. ஊட்டியில், அதுவும் நடு காட்டில் இருக்கும்போது குளிருக்கு கேட்கவா வேண்டும் ?! இது போன்ற காடுகளில் தங்கும்போது குளிருக்கு நெருப்பு பற்ற வைப்பது வழக்கம்தான் என்றாலும் அதில் இருந்து பறக்கும் நெருப்பு பொறியினால் காடுகளும் பற்றி கொள்ளும். இதனால் அங்கு ஒருவர் அந்த நெருப்பை எவ்வளவு தூரம் பற்ற வைக்க வேண்டும் என்றும், எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ அந்த பக்கம் சில விறகுகளை வேறு விதமாக அடிக்கியும் என்று செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அருகில் யார் இருக்கிறார்கள் என்று தெரியா வண்ணம் இருள் சூழ அந்த இடத்தில் பொருத்திய ஒரு தீக்குச்சி பெரும் பிழம்பை உருவாக்கி கொண்டு இருந்தது......அதை நாங்கள் சுற்றி நின்று கொண்டு உடம்பை சூடாக்கி கொண்டோம் ! கொஞ்சம் நடுக்கம் குறைந்தவுடன் எங்களது ஆட்டம் ஆரம்பம் ஆனது, காட்டுவாசி நடனம், குத்து பாட்டு, MGR பாடல்கள் என்று சுற்றி சுற்றி வந்தாலும் கடைசியில் முடித்தது என்னவோ இளையராஜாதான். அந்த குளிரில் சூடாக சப்பாத்தியும், சப்ஜியும், தண்ணியும் (குடிக்கிற தண்ணிங்க :-)) சாப்பிட்டு விட்டு "தங்க சங்கிலி, மின்னும் பைங்கிளி...." என்று இளையராஜா ஆரம்பிக்க அந்த வானத்து நட்சத்திரங்களுடன் இரவு மிகவும் அருமையாக இருந்தது எனலாம் !
 

ஹோய்யற ஹொய்யா..... ஏ ஜம்பக்கு ஜபக்கு !!

நிலா காயுது, நேரம் நல்ல நேரம் !!

இரவு கவிய கவிய, எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வந்த களைப்புக்கு அசர ஆரம்பித்தனர். ஒரு ஒருவராய் டென்ட் உள்ளே செல்ல ஆரம்பிக்க அங்கே எங்களுக்கு காவலுக்கு இருந்தவரிடம் இங்கே மிருகங்கள் எதுவும் இல்லையா என்ன என்று கேட்க ஆரம்பித்தனர். இது டேம் பகுதியினால் இங்கு தண்ணீர் கிடைக்கும் என்று மிருகங்களுக்கு தெரியும், பொதுவாக காட்டெருமை, முயல் என்ற பிராணிகள் எல்லாம் வரும், வெகு சில சமயங்களில் மட்டும் சிறுத்தை இங்கே வரும் என்று சொல்ல சற்று நடுக்கம் ஆரம்பம் ஆனது. சில தைரியசாலிகள் மட்டும் எரியும் கொள்ளியை எடுத்துக்கொண்டு வாப்பா முயல் வேட்டைக்கு கிளம்பலாம் என்று ஆரம்பித்தனர். அந்த அடர்ந்த காட்டில் சிறிது தூரம் நடக்கும் முன்னரே தீ அணைந்து எங்கும் இருளே தெரிந்தது, அடுத்த முறை முயல் பிடிக்கலாம் என்று தூங்க செல்ல ஆரம்பித்தோம்....... அப்போது நான் "அப்போ சிறுத்தை வந்து என் டெண்டை சுரண்டினால் என்ன செய்யிறது..." என்று கேட்க, அவரோ "நீங்க சும்மா இருங்க, சத்தம் இல்லை என்றால் அதுவே போயிடும்" என்று சொல்ல பக்கத்தில் கர்ண கொடூரமாக சத்தம் ஒன்று கேட்டது..... அது சிறுத்தை அல்ல....... அங்கு உறங்கி கொண்டு இருந்தவர்கள் விட்ட குறட்டை !!சத்தியமா இங்கே சிறுத்தை வரவே வராது இந்த சத்தத்தில், என்று நான் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தேன் !
 
குறட்டை சத்தத்தை இங்கே பதிவு பண்ண முடியலியே !

முயல் வேட்டைக்கு கிளம்பிய டீம்......

காட்டில் இருள் பொழுது எவ்வளவு பயமாக இருக்குமோ, அதை போலவே காலை பொழுது மிகவும் ஆனந்தமாக இருக்கும். இயற்க்கை ஒரு புதிய குளியல் போட்டு ப்ரெஷ் ஆக இருக்கும். காற்றில் ஒரு புதிய மலர்ச்சி இருக்கும். காலையில் சூரிய உதயத்தை காண வேண்டும் என்று முன்பே எழுந்தேன். எல்லோரையும் எழுப்பி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த டேம் பகுதியில் இறங்க ஆரம்பித்தோம். பார்க்கும்போது சுலபமாக தெரிந்தாலும் வழுக்கி வழுக்கி தண்ணீரை அடைந்தோம். அந்த தண்ணீரில் இருந்து பனி கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டு இருக்க, தண்ணீரின் ஜிலு சிலுப்பு என்று அந்த நாளின் சூரிய உதயம் மிகவும் அருமையாக இருக்கும் என்று மனம் சொல்ல ஆரம்பித்தது. 
 

இயற்க்கை எவ்வளவு அழகு !


என்ன இந்த வாரம் எப்படி இருந்துச்சு, அடுத்த வாரம் வாங்க இயற்கையின் சுத்தமான காற்றையும், அழகையும் சிறிது சிறிதாக அனுபவிப்போம், அதுவரை காத்திருங்களேன் !!
 
Labels : Suresh, Kadalpayanangal, Camping, ooty, udagamandalam, avalanche, night out, night camping, dense forest, camp fire

9 comments:

  1. ஆகா...! பிரமாதம்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், திண்டுக்கல் பக்கத்தில் இது போல இடம் ஏதேனும் இருக்கா !?

      Delete
  2. சூப்பர் பதிவு ஜி. இந்த பயணத்திற்கு யாரிடம் எப்படி அனுமதி வாங்குவது, கட்டணம் எவ்வளவு போன்ற தகவல்கள் அடுத்த பதிவில் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவில் உங்களுக்கு அந்த தகவலை தருகிறேன் நண்பரே......நன்றி !

      Delete
  3. அருமையான ஒரு பயணம். இரவில் இது போன்ற இடத்தில் இருப்பதில் உள்ள சுகம்.... அலாதியானது தான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகராஜ் சார் ! உங்களது நைனிடால் பயணத்தில் இப்படி சென்று வந்தீர்களா ! டெல்லியில் இருந்து காஷ்மீர் பக்கம் சென்றால் இன்னும் அருமையாக இருக்குமே, முயன்று பாருங்களேன் !

      Delete
  4. சரியா சொன்னீங்க ஜெகதீஷ் ! இளையராஜாவின் பாடலில் இரவு இன்னும் அழகுதான் ஆகும் !

    ReplyDelete