Monday, June 16, 2014

சிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் !!

மகிழ்ச்சியாய் இருக்கிறது….. இந்த பகுதியை நிறைய பேர் படித்துவிட்டு தாங்களும் இது போல் விளையாடவேண்டும் என்று ஆவலுடன் சொல்வதை பார்த்து ! கடந்த பகுதிகளான சேமியா ஐஸ், மாட்டு வண்டி பயணங்கள், பானை செய்வோம் என்பதெல்லாம் ரசித்து படித்ததற்கு நன்றி, இன்னும் நிறைய நிறைய நான் செய்த சிறுபிள்ளைதனத்தை எழுத தூண்டுகிறது ! அந்த வரிசையில் இந்த வாரம் வாருங்கள் நாம் ஆடி மகிழ்ந்த கடற்கரை மணல் விளையாட்டுக்களை பார்ப்போம் !! சிறு வயதில் கடல் என்றாலே ஆச்சர்யம், அதிலும் அந்த தங்க நிற மணலை பார்த்தால் இன்னும் ஆச்சர்யம் இல்லையா. புழுதி மணலையே பார்த்து பார்த்து சுத்தமான மணலை பார்க்கும்போது சிறுவயதில் எவ்வளவு மகிழ்ச்சி. அதுவும் அந்த ஈர மணலை கையில் ஏந்தி கோட்டை கட்டியது யாபகம் இருக்கிறதா !சென்ற மாதத்தில் நானும் எனது குடும்பமும் ஒரு பீச் ஒட்டிய ரிசார்ட் ஒன்றிற்கு சென்று இருந்தோம், அது கடலுக்கு மிக அருகில், அதாவது வராண்டாவில் இருந்து பார்த்தால் சில அடிகளில் கடல் உங்களது கால்களை தழுவும். வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தாலே மணலில்தான் எனும்போது அங்கு இருந்த நாட்கள் எல்லாம் தினமும் மணலில் கோட்டை எழுப்பியும், இன்னும் பல விளையாட்டுக்களும் விளையாடினோம். யோசித்து பாருங்கள் எந்த தருணத்தில் நீங்கள் மணல் விளையாட்டை ரசிக்க ஆரம்பிதீர்கள், அதில் என்ன என்ன விளையாட்டுக்களை விளையாடினீர்கள் !

மணலில் கோட்டை கட்டாதே..... இது ஒரு சொல் மொழியாக இருந்தாலும் கடற்க்கரை ஓரத்தில் ஈர மணலை எடுத்து குவித்து, குவித்து மலை போல கட்டுவதில் உள்ள சுகம் எவ்வளவு இல்லையா ? சிறிது சிறிதாக மலையாய் மணல் குவித்து அதன் ஒரு புறம் தோண்டி தோண்டி, அடுத்த சைடு இன்னொருவர் தோண்ட முடிவில் அவரது கை கிடைக்கும் போது கிள்ளி விடுவது என்பது சிறு பிராயத்தின் சுகம் அல்லவா. முடிவில் அந்த மணல் மலையை ஏறி குதித்து உடைத்து தரைமட்டம் ஆக்குவதில் ஒரு ஆனந்தம் கிடைக்குமே !!


அடுத்து மணல் விளையாட்டில் சிறப்பு மிகுந்தது என்பது அச்சு பதிப்பது. கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து அதில் மணலை நிரப்பி அதை கவிழ்க்கும்போது அந்த அச்சு மணலில் இருக்கும். அதை போலவே நிரப்பி நிரப்பி விளையாடுவது ஆனந்தமே ! இந்த முறை எனக்கு கிடைத்தது கொட்டங்குச்சி. முதலில் ஒரு கைப்பிடி மணலை எடுத்து அதில் நிரப்பி, பின்னர் மீண்டும் மீண்டும் அது முழுதும் நிரம்பும் வரை செய்துவிட்டு அதை தட்டி தட்டி சரேலென்று மேலே தூக்கி தப்பென்று மணலின் மீது வைத்துவிட்டு மிக ஜாக்கிரதையாக கொட்டங்குச்சியை தூக்க அந்த அச்சு உடையாமல் வரும்போது ஹே...... னஎன்று கூச்சல் போடுவதும், அடுத்தவர் செய்த அச்சு உடைந்து வரும்போது தோத்தாங்குளி தோத்தாங்குளி என்று எள்ளி நகையாடுவதும் என்று என்ன வாழ்க்கை இல்லை !!


முதன் முதலில் கடற்கரை சென்றுவிட்டு அப்பா, அம்மாவுடன் கடலில் கால் நனைக்க வேண்டும் என்று கைகளை இருக்க பிடித்துக்கொண்டு கடல் அலையை எதிர்நோக்கி இருப்போம். சடாரென்று அலை வந்து உங்களை அடித்துவிட்டு உங்களது கால்களை தழுவும்போது கிடைக்கும் அந்த சில்லிப்பும், அதே அலை திரும்பவும் செல்லும்போது உங்களது கால்களுக்கு கீழ் இருக்கும் மணலை அரிக்க உங்களுக்கு பூமி கீழே நழுவுவது போல உணர்வதும், அப்போது அம்மாவின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு கதறியதும் நினைவு இருக்கிறதா. ஒவ்வொரு முறை அலைகள் கால்கள் நனைக்கும்போதும் நமது கால் மண்களால் மூடப்படும்போதும் ஒரு வித சிலிர்ப்பு தோன்றுமே..... எவ்வளவு ஆனந்தமான விளையாட்டு அது !அடுத்து மணலில் நாம் ரசித்து செய்வது என்பது ஒருவரது கைகளையோ, கால்களையோ, இல்லை ஒரு ஆளையோ மணல் போட்டு மூடுவது. ஈர மணலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நீங்கள் மூட மூட கால்களுக்கு அந்த ஜில்லிப்பு ஏறி குறு குறுவென்று வருமே........ அதுவும் இப்படி ஆளை மூடிவிட்டு அவருக்கு அரிக்கும்பொது முகத்தை அஷ்டகோணலாக்கி அந்த தவிப்பை செய்யும்போது கையை தட்டி சிரிப்பதும், முடிவில் அந்த மணலை உடைத்துக்கொண்டு வரும்போது ஏதோ ஹீரோ போல பீல் செய்வதும் என்று இந்த விளையாட்டு தலைமுறைகளை தாண்டி தொடர்கிறது !!


எத்தனை காலங்கள் ஆகட்டும் இந்த விளையாட்டு மட்டும் மாறவே இல்லை. எனது அம்மாவிடம் கேட்டாலும் இதே விளையாட்டைத்தான் சொல்கின்றனர், நானும், எனது குழந்தைகளும் என்று எப்போதும் இந்த மணல் விளையாட்டுக்களின் வடிவம் மட்டும் மாறவில்லை என்பதுதான் நிஜம், ஒவ்வொரு முறை பீச் செல்லும்போது அந்த மணலை ஆச்சர்யதுடந்தான் பார்க்கிறோம். மணலை கண்டவுடன் எந்த வயதினராய் இருந்தாலும் இந்த விளையாட்டுக்களை மறக்காமல் விளையாடுகிறோம். வயதானாலும் இந்த மணல் விளையாட்டுக்கள் நம்மை குழந்தையாக்குகின்றன என்பதுதான் நிஜம் !!

Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood, memories,

13 comments:

 1. அந்த சந்தோசமே தனி தான்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கடலலையில் நின்று கொண்டே இருக்கலாம்... நம் கவலைகளும் கரைந்து விடும்...

  ReplyDelete
 3. "ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!"

  "அந்த நாள் நெஞ்சிலே நின்றதே நண்பனே! நண்பனே!!"

  ReplyDelete
 4. மிக அருமையான பகிர்வு..இதே விளையாட்டுகளை விளையாடிய நினைவுகள் வருகின்றன. படங்கள் அருமை.
  இதையும் நேரமிருக்கும்பொழுது பாருங்கள், ஆழி தந்த அணிகலன் http://thaenmaduratamil.blogspot.com/2014/04/aazhi-thandha-anikalan.html

  ReplyDelete
 5. எதையுமே ரசித்துச் செய்கிறீர்கள் சார்.. சூப்பர் :-)

  ReplyDelete
 6. நீங்காது மனதில் இடம் பிடித்துக் கொண்ட சுகமான உணர்வுகளில் இதுவும் ஒன்றே .
  மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டி எம்மையும் மகிழ வைத்துள்ளீர்கள் நன்றி
  சகோதரரே சிறப்பான இப் பகிர்விற்கு .

  ReplyDelete
 7. கடலும் மணலும் என்றும்ஆனந்தமே.

  ReplyDelete
 8. நானும் மணலில் வீடுக் கட்டி, கொட்டாங்கச்சியில் மண் அப்பி இட்லி சுட்டு விளையாடி இருக்கேன். இப்பவும் எங்காவது மண்லைப் பார்த்தா உக்காந்துடுவேன். பழைய நினைவுகளை மீட்டுட்டீங்க சகோ!

  ReplyDelete
 9. வணக்கம்

  அதிலும் ஒரு சுகந்தான் நீங்கள் எழுதியதைப்பார்த்தவுடன் ஊரில் விளையாடிய நினைவுதான் வந்தது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. ஆத்தோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடு கட்டி.. பல ஞாபகங்களையும் கிளறி விட்டது உங்க பதிவு..!

  ReplyDelete
 11. இந்தப் பதிவைப் படிக்கையில் ஊரில் சிறுவயதில் ஈர மணலை தேங்காய் சிரட்டையில் நிறைத்து இட்லிபோல தரையில் வரிசையாக வைத்து அவற்றையெல்லாம் கலைத்து மீண்டும் இட்லிபோல செய்ததெல்லாம் ஞாபகம் வந்தது.....

  ReplyDelete
 12. மனத் தளவில்,நாங்களும் உங்களுடன்
  மணலில் விளையாண்டு மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அந்த மணலில் அமர்ந்து விளையாடுவதும், ஓய்வில்லாது உழைத்துக் கொண்டிருக்கும் கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் - ஆஹா என்ன ஒரு சுகம்....... ம்ம்ம்... நல்ல ரசனை உங்களுக்கு....

  ReplyDelete