Wednesday, June 4, 2014

அறுசுவை (சமஸ்) - வெள்ளையப்பம், கோபி ஐயங்கார் கடை

சமஸ் அவர்கள் எழுதிய "சாப்பாட்டு கடை" புத்தகம் எவ்வளவு ரசிகர்களை கொண்டு இருக்கிறது என்பதற்கு என்னை சாட்சிக்கு கூப்பிடுங்கள் சொல்கிறேன்.... அவர் எழுதிய கடையை தேடி பிடித்து சென்று அதன் சுவையை பற்றி எழுத, பலரும் எச்சில் வடிய இதை படிப்பதை சாட்சியாக சொல்கிறேன். இந்த வாரம் மதுரை !! ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள், உங்கள் சிற்றறிவுக்கு தெரிந்த வரை இந்த உணவு இப்படிதான் இருக்கும் என்று போய் இலையில் உட்கார அது வேறு ஒரு வடிவத்தில் வர உங்களுக்கு எப்படி இருக்கும் ? என்னை பொறுத்தவரை எனக்கு தெரிந்தது ஆப்பம் மட்டுமே. சமஸ் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இந்த கோபி ஐயங்கார் கடை வெள்ளையப்பம் என்று சொன்னவுடன் ஆப்பம் - வெள்ளை இதை இணைத்து நமது செட்டிநாடு பக்கம் சுடும் ஆப்பம் என்று நினைத்து விட்டேன். ஆனால் இது வேறு.... சுவையும் வேறு !



மீனாக்ஷி அம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் கோபி ஐயங்கார் கடையை யாரிடமும் கேட்காமல் கண்டு பிடிக்கலாம் என்று சென்றால், அதுவும் முதல் முறை..... கண்டிப்பாக மிஸ் செய்வீர்கள். மேல சித்திரை வீதியின் ஒரு மூலையில் கும்பல் கும்பலாக காபி குடித்துக்கொண்டு இருப்பார்கள், இதனால் ஒரு சிறிய போர்டில் அதுவும் முதலில் கண்ணில் படும் மலையாளத்தில் கோபி ஐயங்கார் கடை என்று எழுதி இருப்பது உங்களது கண்களுக்கு தெரியாமல் போகலாம், ஆனால் யாரை கேட்டாலும் வழி சொல்கிறார்கள். ஒரு மிக சிறிய இடம், நெருக்கி உட்கார்ந்தால் சுமார் இருபது பேர் உட்காரலாம் போல கடை, அதற்க்கு ஒரே ஒரு சிறிய வாசற்படி, நெருக்கிதான் உள்ளேயே போக வேண்டி இருக்கிறது. உள்ளே நுழையும்போதே அது பழைய காலத்து கட்டிடம் என்றும், அங்கு மாட்டப்பட்டு இருக்கும் பழைய காலத்து படங்கள் எல்லாம் அந்த இடம் எவ்வளவு காலமாக புகழுடன் இருக்கிறது என்பதை சொல்லும் !

 

 


உள்ளே நுழையும்போதே, இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி இருப்பதில் கண்ணில் படுகிறது வெள்ளையப்பம் !! மனது அப்போதே தயாராகிறது...... உள்ளே இடம் தேடும்போதே "வெள்ளையப்பம் ரெண்டு பார்சல், வெள்ளையப்பம் நாலு பார்சல்" என்று விடாமல் கேட்டு கொண்டே இருக்கிறது, இதனால் எங்கே தீர்ந்து விடுமோ என்று பதட்டம் அதிகம் ஆகி கிடைத்த இடத்தில் உட்கார, ஒரு பெரிய வாழை இலையை போட்டு தண்ணீர் தெளித்து என்ன வேண்டும் என்று கேட்க ஒரு வெள்ளையப்பம் என்று சொல்லிவிட்டு நான் அடுத்த இலைகளில் பார்க்க, அங்கே ஒரு பெரிய சைஸ் வடை போன்ற ஒன்றை எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்க....... அப்போது தெரியாது அதுதான் வெள்ளையப்பம் என்று !!



சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, எல்லாரது இலையிலும் அது இருக்க, அதுவும் இங்கு பிரபலம் போல, சமஸ் அவர்கள் ஏன் எழுதல என்று யோசித்து முடிக்கவும், எனது இலையில் நான் சூடாக வெள்ளை ஆப்பம் எதிர் பார்க்க வந்ததோ வெள்ளையாப்பம் !! அப்போதுதான் புரிந்தது, வெள்ளையப்பம் என்பது இதுதான் என்பது. எங்க அம்மா என்னை ஆப்பதுக்கும், அப்பதுக்கும் வித்யாசம் தெரியாமலே வளர்த்துட்டாங்க.... சூது வாது தெரியாமல் வளர்த்திட்டேன் போங்க !   கொஞ்சம் கார சட்னியை இலையில் வைக்க, அப்பத்தையும் அந்த சட்னியையும் கொஞ்சம் நேசத்துடன் பார்த்தேன். முதலில் கொஞ்சம் பியித்து எடுக்க, மேலே மொறு மொறுவென்று அங்கங்கே அரைத்த கருவேப்பில்லை, ஜீரகம் என்று தெரிந்தது. உள்ளே வெள்ளை  வெளேரென்று அரிசி மாவு நன்றாக  வெந்து மிருதுவாக இருந்தது. கொஞ்சம் கார சட்னி தொட்டு வாயில் வைக்க ஒரு கடிக்கு மொரு மொரு, அடுத்த  கடிக்கு மிருது என்று காரத்துடன் உள்ளே சென்றது. நல்லா இருக்கே என்று  அடுத்த முறை பியித்த போது என்னையும் அறியாமல்  பெரிதாக பியித்து விட்டேன், மனது சீக்கிரம் சாப்டுடா என்றது நன்றாக கேட்டது. ஒவ்வொரு கடியிலும் மனதை மயக்க, இங்க ரெண்டு வெள்ளையப்பம் கொடுங்க என்று கூவினேன் !
 


இவ்வளவு தூரம் வந்து ஒரு அப்பத்தின் சுவையில் அடிமையாகி அடுத்து வீட்டில் இப்போதெல்லாம் மாதம் ஒரு முறையாவது வெள்ளையப்பமும் கார சட்னியும்தான்..... எப்படி செய்வது என்று இங்கே பாருங்கள். (ராஜி அக்கா, உங்க செய்முறையையும் சொல்லுங்களேன் !!) 

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 2 கப்
  • உளுத்தம்பருப்பு – 1 /2 கப்
  • தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்)
  • சமையல் சோடா – சிறிது
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.
  3. மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  5. மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும்.
  6. அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும்.
  7. இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும்.
  8. எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும்.
  9. அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.  
 அந்த கடையில் நீங்கள் இருக்கும்போது வெள்ளையப்பம் பார்சல் என்று சவுண்ட் கேட்டுக்கொண்டே இருப்பதை பார்க்கலாம். பஜ்ஜி, போண்டா என்று சாப்பிட்டவர்கள் கண்டிப்பாக முயன்று பார்க்கலாம். இங்கு கிடைக்கும் ஜீரா போளி, அடை அவியல் பற்றி எழுதினால் இன்னும் இரண்டு பகுதி போகும் !! மதுரை வந்து மீனாக்ஷி அம்மன் கோவிலை தரிசித்து விட்டு கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று !!



Labels : Arusuvai, Samas, Madurai, Gobi iyengar, vellaiappam, appam, kara chutney, amazing, tasty, food, suresh, kadalpayanangal

13 comments:

  1. எங்க ஊர் பக்கம் அப்பமும், ஆப்பமும்லாம் கிடையாது. இது ஏதோ வேத்து கிரக வாசிங்க உணவுன்னு நினைப்பாங்க. இனிதான் செய்யப் பழகனும். செய்முறைக்கு நன்றி. செய்து பார்த்துட்டு பதிவு போடுறேன்.

    ReplyDelete
  2. முன்பு மதுரை பேலஸ் கபே யில் சுவையான வெள்ளையப்பம் கிடைக்கும்.!இப்போதெல்லாம் ஓட்டல்களில் வெள்ளையப்பம் பார்ப்பதே அரிது.சென்னை லஸ் சுக நிவாசில் கிடைக்கும் மங்களூர் போண்டாவின் சுவை கிட்டத்தட்ட இதேதான்!

    ReplyDelete
  3. நான் கோபி ஐயங்கார் கடை
    வெள்ளையப்பம் மற்றும் அந்தப் பச்சை
    மிளகாய் சட்னி ரசிகன்
    அருமையாக எங்களூர் கடையை அறிமுகம்
    செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அப்பம் தெரியும்! வெள்ளை அப்பம் தெரியாது! அம்மாவிடம் கேட்டுப்பார்க்கிறேன்! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  5. செய்முறை விளக்கத்துடன் அசத்தல்... நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  6. வணக்கம்

    தங்களின் பதிவு வழிநாங்களும் செய்துபார்க்க வழி பிறந்துள்ளது...பார்த்தவுடன் வாய் ஊறுகிறது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. //அங்கங்கே அரைத்த கருவேப்பில்லை, ஜீரகம் என்று தெரிந்தது// இதெல்லாம் செய்முறையில் இல்லையே.

    ReplyDelete
  8. செய்முறையும் சேர்த்தாச்சா சூப்பர்.. :)

    ReplyDelete
  9. எங்க அம்மா என்னை ஆப்பதுக்கும், அப்பதுக்கும் வித்யாசம் தெரியாமலே வளர்த்துட்டாங்க.... சூது வாது தெரியாமல் வளர்த்திட்டேன் போங்க ! - நம்பிட்டேன் நம்பிட்டேன்...!

    ReplyDelete
  10. வெள்ளையப்பம்.... படிக்கும்போதே ருசித்தது. உடனே சாப்பிடணும் போல இருக்கே! நாளைக்கு செஞ்சு பார்த்துட வேண்டியது தான்!

    ReplyDelete
  11. ஊரில் உள்ளவனை எல்லாம் கடையை தேடி சுற்ற வைக்கிரறாம், இவர் சூது-வாது தெரியாமல் வளர்ந்துடாராம் ! செம comedy !!!

    ReplyDelete
  12. சார், இங்க உள்ள ரெசிப்பி வெள்ளை பணியாரம் மாதிரி நன்றாக வந்தது.
    நன்றி.

    ReplyDelete