Tuesday, June 17, 2014

அறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு

 ஒரு உணவகத்திற்கு போறீங்க, அங்க உங்க தட்டுல மசாலா தோசை அப்படின்னு ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கீங்க, முடிவா உங்க தட்டுல அரை மசாலா தோசை மட்டும் வைச்சா எப்படி இருக்கும்....... இங்க சும்மா குணா கமல் கையில லட்டு கிடைச்ச மாதிரி அப்படியே மெய் மறந்து போறாங்க !? இந்த இடத்தை பற்றி கேள்விப்பட்டு ஒரு வருஷம் ஆச்சு, போகணும் போகணும் அப்படின்னு நினைச்சே நாள் ஓடி போச்சு, சென்ற வாரம் போகலாம் அப்படின்னு முடிவு பண்ணி எனது மனைவியையும் கூட்டிக்கிட்டு போனேன். கடைக்கு ஒரு பெயர் பலகை கிடையாது, எங்கயும் விளம்பரம் கிடையாது, உட்கார ஒரு சின்ன மர பெஞ்சுதான், கையேந்தி பவனை விட கொஞ்சம் பெருசு அவ்வளவுதான்..... ஆனா வந்து உட்கார்ந்து சாப்பிடற ஆளுங்க மட்டும் வர்றது ஆடி, BMW, பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் என்றால் அப்படி என்னதான் இருக்குது அப்படின்னு தோணும்தானே..... எனக்கும் தோணிச்சு ஆனால் சாப்பிட்ட உடனே இந்த சுவைக்கு பிரதமரே இங்க வருவாருன்னு தோணிச்சு !!

பெயர் பலகை, விளம்பரம் என்று எதுவும் இல்லை..... ஆனால் பேமஸ் !!


இவர்தான் ஹோட்டல் ஓனர் திரு. சித்தப்பா (Sidappaa)
பெங்களுருவின் கார்பரேசன் சர்கிள் அருகில் இருக்கும் இந்த ஹோட்டலுக்கு பெயர் "சித்தப்பா (Sidappaa) ஹோட்டல்", இதை சொல்லியும் நிறைய பேருக்கு புரியவில்லை என்றால் அரை மசாலா தோசை கிடைக்கும் ஹோட்டல் என்று கேளுங்கள். காரில் செல்பவர்களுக்கு இங்கு எங்கும் பார்கிங் கிடைக்காது, அதனால் பசியான நேரத்தில் குடும்பத்துடன் பார்கிங் கிடைக்காமல் சுற்றி வர வேண்டாம் ! எங்கேயோ நிறுத்திவிட்டு நடந்து நடந்து ஹோட்டல் ஜியோ (Hotel Geo ) எங்கே என்று கேட்டு சென்றுவிட்டு, அதன் எதிரே இருக்கும் தெருவில் நடந்து சென்று உங்களது மூன்றாவது இடது பக்கம் இருக்கும் தெருவில் திரும்பி சென்று கொண்டிருந்தால் உங்களது இடது பக்கம் ஒரு கோவில் வரும். அந்த கோவிலுக்கு அருகினில் சென்று என்ன தேடினாலும் உங்களுக்கு ஒரு ஹோட்டல் கிடைக்கவே கிடைக்காது........ ஆனால் அந்த கோவிலின் முன்னே ஒரு லைன் நீண்டு கொண்டே சென்று அதற்க்கு பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டின் முன்னே முடியும், அதுதான் சித்தப்பா ஹோட்டல் !! கோவிலுக்கு செல்லும் கூட்டத்தை விட (இப்போதுதான் அதை எடுத்து கட்டுகிறார்கள் ) இங்கே செல்லும் கூட்டம் அதிகம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இதுதான் அந்த கோவில், இதன் அருகில்தான் வீடு !

இந்த வீட்டினுள்தான் சுவையான மசாலா தயார் ஆகிறது !



அப்படியே அந்த ஜோதியில் கலந்து விட்டு (சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கூட்டம் பொளந்து கட்டும், ஆகையால் வார நாட்களில் செல்லுங்கள்) உங்களது முறை வந்தவுடன் அந்த வீட்டிற்க்கு உள்ளே நுழைய ஒரு சிறிய அறையில் சுமார் 15 அல்லது இருபது பேர் நெருக்கி கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள், இது போல் இரண்டு அறைகள் அப்புறம் முன்னே இருக்கும் கொஞ்சம் இடத்தில் சுமார் பத்து பேர் இப்படி நெருக்கி கொண்டு இருப்பார்கள். நாங்களும் அங்கே உட்கார எங்களது கைகளுக்கு ஒரு வாழை இலையும், கீழே வைத்துக்கொள்ள ஒரு பேப்பரும், சூடு கையில் தாக்காமல் இருக்க ஒரு பேப்பர் பிளேட்டும் கொடுத்தார்கள். எனது மனைவியிடம் எனக்கு நான் முழு மசால் தோசை வாங்கிக்கிறேன், உனக்கு என்று கேட்க அவரும் எனக்கும் அப்படியே என்று அதிசயமாக நான் சொன்னதை கேட்டார்..... அப்போவே நான் கொஞ்சம் உசாரா இருந்து இருக்கணும் !! என்ன வேண்டும் என்று எங்களிடம் கேட்ட ஆளிடம் ரெண்டு முழு மசாலா தோசை என்று சொல்லி விட்டு காத்து இருக்க, எங்களை அந்த ரூமில் உட்கார்ந்து இருந்த எல்லோரும் ஜூவில் கூண்டுக்குள் இருக்கும் ஒரு அடிப்பட்ட மிருகத்தை பரிதாபமாக பார்ப்பது போல பார்த்தனர்....... அப்போது தெரியாது எனக்கு அடுத்து நடக்க போவது !

இவ்வளவு சின்ன இடத்தில உட்கார்ந்து இருக்கணும்......


வயது, வசதி என்றெல்லாம் இல்லாமல் எல்லோரும் இலையோடு காத்திருக்கணும் !

அந்த ரூமில் அப்போதுதான் எல்லோரையும் கவனித்தேன், எல்லோரும் காலி இலையை வைத்து இருந்தனர், எல்லோரது இலையிலும் அவர்கள் சாப்பிட்டு முடித்து இருந்தது தெரிந்தது, பின்னே எதற்க்காக காத்திருக்கின்றனர் ? ஒரு ஐந்து நிமிடம் சென்றவுடன், நான்கு முறையாவது மசாலா தோசை என்னவாயிற்று என்று கேட்க, வரும் ஆனா வராது என்பது போலவே சொல்லி செல்ல..... எங்களுக்கு பக்கத்து இலையில் இட்லி என்று கேட்டு சாப்பிட்டவுடன், எங்களுக்கும் இரண்டு இட்லி என்று கேட்டு சாப்பிட்டோம். சிறிய சூடான இட்லி, அதன் மீது தேங்காய் சட்னி போட்டு, சிறிது குருமா ஊற்றவும், நொடியில் காலியானது. இன்னும் ஐந்து நிமிடம் சென்று தோசை வரும் என்று அவர் சொல்லி செல்ல இந்த முறை ப்ளைன் தோசை இரண்டு சொல்லி சாப்பிட்டோம், இன்னும் ஐந்து நிமிடம் செல்ல இந்த முறை இட்லி போட்டு அதன் மீது இரண்டு கரண்டி நெய் விட்டு சாப்பிட்டோம். இன்னும் ஐந்து நிமிடம் செல்ல........... இப்படியே மசாலா தோசை வரும் வரும் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். வந்த மசாலா தோசை எல்லாம் அங்கே பல பல நிமிடங்களாக காத்திருந்தவர்களுக்கு செல்ல எங்களை ஏன் அவர்கள் அப்படி பார்த்தார்கள் என்று புரிந்தது. முடிவில் எனது இலைக்கு பாதி மசாலா தோசை வைத்துவிட்டு அவர் முழு மசாலா கேட்டீங்களே இன்னொன்னு வைக்கவா என்று கேட்க..... அப்போதுதான் புரிந்தது ஏன் இந்த கடையில் அரை மசாலா தோசை பிரபலம் என்று...... காத்திருக்கும் நேரத்தில் இவ்வளவு சாப்பிட்டு எவண்டா முழு மசாலா தோசை திங்கறது !!

   

ஆனாலும், ஏன் மக்கள் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு காத்திருந்து இந்த அரை மசாலா தோசை சாப்பிடறது என்று அதை ஒரு வாய் பிட்டு வைத்தவுடன் தெரிந்தது. தோசையில் உங்க வீட்டு எங்க வீட்டு நெய் இல்லை...... எல்லார் வீட்டு நெய்யையும் போட்டு இருக்காங்க. அதனால் பொன்னிறமாக மொறு மொறுவென்று அப்படி ஒரு மொறுமொறுப்பு ! அதன் மேலே கொஞ்சமே கொஞ்சமாக நன்கு மஞ்சள், கொத்தமல்லி, காரம் சேர்த்த மசாலாவை பொன்னிறமாக (இதுவும் பொன்னிறமா...... நம்பிக்கை, நாணயம், கைராசி, ரேட் கார்ட் இருக்கா பாருங்க..... நம்பிக்கை.....) வைக்க, தோசையை உடைத்துதான் சாப்பிட வேண்டி இருக்கிறது. ஒரு வாய் கொண்டு போகும் முன்னரே மூக்கிற்கு அந்த நெய் வாசனை போய் விடுகிறது. அதனால் வாய் எச்சில் ஊறி ரெடி ஆகி விடுகிறது. உள்ளே ஒரு வாய் போட அந்த தோசை வழுக்கி கொண்டு நம்ம தீம் பார்க்கில் வாட்டர் ஸ்லைடு போவது போல போகிறது. நெய்யை தோசையில் ஊற்றவில்லை அவர்கள்...... அதில் முக்கி எடுத்து கொடுக்கிறார்கள். அரை தோசை சாப்பிட முடிவு செய்தாலும் கால் தோசைக்கு மேல் முடிவதில்லை...... இதுதான் அரை தோசை ரகசியம் என்று அவர்கள் சொல்லாமலே தெரிகிறது !!

வந்தாச்சு.... அரை மசாலா தோசை !! யுரேகா.... யுரேகா......

நெய்யில் குளித்த மசாலா தோசை !!

பஞ்ச் லைன் :

சுவை - மசாலா தோசை விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம், இதை விட கிரிஸ்பியாக வேற எங்கயும் சாப்பிட முடியாது !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி இல்லவே இல்லை, பல காத தூரம் சென்று கிடைக்கும் இடத்தில் பார்க் செய்ய வேண்டும் ! உட்கார இடம் கம்மிதான் !
பணம் - கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்திதான்..... சுவைக்கு கொடுக்கலாம் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் ! ஆனால் மசாலா தோசைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது வெயிட் செய்ய வேண்டும் !!

மெனு கார்டு: 


அட்ரஸ் :

ஹோட்டல் ஜியோ (Hotel Geo ) எங்கே என்று கேட்டு சென்றுவிட்டு, அதன் எதிரே இருக்கும் தெருவில் நடந்து சென்று உங்களது மூன்றாவது இடது பக்கம் இருக்கும் தெருவில் திரும்பி சென்று கொண்டிருந்தால் உங்களது இடது பக்கம் ஒரு கோவில் வரும். அந்த கோவிலுக்கு அருகினில் இருக்கும் வீடுதான் ஹோட்டல். பெயர் பலகை எல்லாம் கிடையாது..... கூட்டமே வழி சொல்லும் !!

 

Open · 7:30 am – 11:00 am, சண்டே கூட கடை உண்டு. காலையில் மட்டும்தான் இங்கு உணவு கிடைக்கும்.
Labels : Suresh, Kadalpayanangal, Bangalore, Bengaluru, Sidappaa hotel, half masala dosa, Sampangi rama nagar, hotel geo, best masala dosa, thosai, dosai

23 comments:

  1. இம்புட்டு நெய் சாப்பிட்டா உடம்புக்கு ஒண்ணும் பண்ணாதா சகோ!!??

    ReplyDelete
    Replies
    1. வயிற்றை கலக்கி கொழுப்பை ஏத்திடும்...... பாருங்க எங்க அக்காவுக்காக என்னவெல்லாம் கஷ்டப்படறேன் ! :-)

      Delete
  2. பெங்களூர் ஹோட்டல் எல்லாவற்றில்லும் தோசைக்கு ஏன் இவ்வளவு நெய் ஊற்றுகிறார்கள்? மல்லேஸ்வரம் சென்ட்ரல் டிபன் ரூமில் சமீபத்தில் சாப்பிட்ட போதும் இதே போல தான் மசாலா தோசை மொறுமொறு என்று அதீதமான நெய்யுடன் இருந்தது, சுவைக்காக மாதம் ஒரு நாள் இப்படி அதிக நெய்யுடன் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் அவ்வளவு தான் !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது நிஜம்தான் பழனிசாமி சார் ! இங்கே எல்லாமே ருசியா இருக்கும், சக்கரை அதிகமாக. தினமும் இப்படி சாப்பிட்டால் அவ்வளவுதான் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. எங்கிருந்துதான் சுவையான சாப்பாட்டுக்கடைகளை தேடிப்பிடிக்கிறீர்களோ :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் சொல்வதை வைத்துதான், நீங்கள் ரசிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்குது போங்க !

      Delete
  4. வணக்கம்

    கடைக்கு நல்ல விளம்பரம்...வாடிக்கையாளர்கள் இனி இந்த உணவகத்தை நாடுவார்கள் நிச்சயம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ரூபன், நீங்க வரும்போது சொல்லுங்க செல்லலாம் !

      Delete
  5. இது ரொம்ப ஓவர்..அடுத்து குவார்ட்டர் இட்லி கடையா???

    ReplyDelete
    Replies
    1. ஐ, ஐடியா நல்லா இருக்குதே, பேசாம நாமளே ஒரு கடை ஆரம்பிப்போமே !

      Delete
  6. மலையைத் தோண்டி எலியைப் புடிக்கிற கதையாயிருக்கே............!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... ஆனா ருசியான எலி சார் !

      Delete
  7. இந்த நெய் விளையாட்டிற்கு வரலே சாமீ...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, சார் உங்களை இந்த விளையாட்டில் விட போவதில்லை !

      Delete
  8. // மசாலா தோசை விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம்// இதோ கிளம்பிட்டேன்.. மேப் எல்லாம் எதுக்கு.. அதுதான் வந்தா நீங்களே கூட்டிட்டு போயிடுவீங்களே.. ஹஹஹா..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வாங்க ஆவி, சென்ற முறை சென்றது போல இந்த முறையும் செல்லலாம், நீங்க வரத்தான் காத்திருக்கேன் !

      Delete
  9. புதுசா கடை திறந்திருக்கேன்.. இங்கயும் எட்டிப் பாருங்க.. ஹஹஹா..
    http://www.kovaiaavee.com/2014/06/Gadothkajamess-kannannan.html

    ReplyDelete
    Replies
    1. பாஸ், உங்க மெஸ்க்கு நான் அடிமை.... நீங்கதான் அடிக்கடி போட மாட்டேன்றீங்க !

      Delete
  10. Replies
    1. சரியா போச்சு, அப்போ எப்போ சாப்பிட போறீங்க, சீக்கிரம் பெங்களுரு பஸ் புடிங்க !

      Delete
  11. அரை மசாலா தோசை.... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது!....

    ReplyDelete
    Replies
    1. அப்போ நாகராஜ் சாருக்கு ஒரு முழு தோசை பார்சல் !

      Delete
  12. பாஸ், உங்களுக்கு எப்படி தெரியும்.... உண்மைதான் காய்ச்சல் பறந்து உங்ககிட்ட வந்துகிட்டு இருக்கு, சீக்கிரம் ஒடுங்க !

    ReplyDelete