Wednesday, July 23, 2014

ஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் ! (பகுதி - 1)

பிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் ! முதன் முதலாக இதை பார்த்த பொது வந்த பயம், அப்பா வாங்கி வந்த பிரம்பு மோடாவில் ஆச்சர்யமாக மாறியது. மிக அழகாக கைவினை கொண்டு செய்யப்பட்ட இதில் ஒரு சிறிய பிரம்பு எப்படி இவ்வளவு அழகாக மாறுகிறது என்று தெரியவந்தது. பின்னர் சொகுசு சோபாக்கள், ஸ்டீல் கட்டில்கள், பிளாஸ்டிக் சேர், அலுமினிய ஸ்டூல் என்று கால மாற்றத்தில் இது பின்னுக்கு தள்ளப்பட்டது என்பதுதான் உண்மை, இன்று எந்த ஷோ ரூம் சென்றாலும் மரத்தில் ஆன பொருட்கள் கிடைக்கிறது, மிகவும் அழுத்திக்கேட்டால் மட்டும் இதுவும் மரத்தில் ஆனதுதான் என்று "அந்த இன்னொரு பழம் இதுதான்"என்று காட்டி விற்ப்பதையே குறியாக கொண்டு பிரம்பு பொருட்கள் என்ற ஒன்றை மறைக்கின்றனர். இந்த பிரம்பு பொருட்களை மிக அருமையாக கலை நயத்துடன் செய்யும் ஒரு ஊர் இருக்கிறது தெரியுமா ? சுமார் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கில் கடைகளும், சிறு தொழில் போல ஒவ்வொரு வீடும் இந்த பிரம்பு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர் தெரியுமா…… இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில்தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள் !!
முதலில் அந்த ஊரையும், எப்படி பிரம்பு செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு முன் இந்த பிரம்பை பற்றி சிறிது தெரிந்து கொள்வோமே ! பிரம்பு உலகெங்கும் வளரும் போவேசியே குடும்பத்தைச் சேர்ந்த நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும். இது இரண்டு பேரினங்களைக் கொண்டது. பேரினம் அருண்டோ(Arundo) மத்திய தரைக்கடல் முதல் தூரக்கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மற்றைய பேரினம் அருண்டினாரியா (Arundinaria). போவேசியே செடி வகையில் சுமார் 10,000 வகைகள் உள்ளன அதில் ஒன்றுதான் பிரம்பு ! இன்னும் சிறிது தெளிவாக சொல்வதென்றால் எந்த புல்லை எடுத்துக்கொண்டாலும் அதன் இலைகளை எடுத்துவிட்டு பார்த்தால் நடுவில் தெரியும் தண்டு பகுதிதான் சிறியதில் இருந்து பெரியது வரையாக வித்தியாசப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது…… என்ன பார்க்கில் இருக்கும் புற்கள் சிறிது அதனால் காதலர்கள் பிடுங்கி போடுகின்றனர், இதுவே காவிரி கரையில் ஆள் உயரத்திற்கு வளர்ந்து இருப்பதை ரசித்துவிட்டு செல்கின்றனர் !! பிரம்பு ஒரு பெரிய தாவர வகை….. மூங்கில் மிக பெரிய தாவர வகை….. கரும்பு என்பது இனிக்கும் தாவர வகை…… நெல் பயிர் என்பதும் புல்லின் ஒரு வகையே…. இப்படி நீங்கள் சுற்றி பார்த்தால் இந்த உலகம் புல்லினால் ஆனது என்பது தெரிய வரும் !!
இப்படி பல சைஸ்களில் வளரும் பிரம்புகளை கோரை என்றும் பிரம்பு என்றும் நாம் சொல்கிறோம். இது பெரும்பாலும் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தைக்கால் கிராமத்திற்கு வருகிறது. பிரம்பில் இருக்கும் சிரமம் என்பது மிக சிறியதாக இருந்தால் எடையை தாங்காது, மிகவும் தடினமாக இருந்தால் வளையாது. இதனால் வரும் பிரம்புகளில் சுமார் 30% வரை கழிவில் சென்று விடும்…. அதாவது முத்தல், உடைந்தது, பூச்சி அரித்தது என்று, ஆனாலும் இதை குப்பையில் போடாமல் அதையும் ஒரு கலை வடிவமாக்கியோ அல்லது அதை மற்ற பகுதிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த பிரம்புகள் நீள நீளமாக சுமார் ஆறு அடி உயரம் வரை இருக்கும், பார்க்கும்போது குச்சிதானே என்று தோன்றினாலும் அது ஒரு கலைஞனின் கலைவண்ணத்தில் இந்த தைக்கால் கிராமத்தில் எப்படியெல்லாம் உருவாகிறது என்று தெரியுமா !!
பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே அழகுதான். கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்க, இன்று காவிரி பொய்த்து போனதால் பிரம்புகள் பீகாரில் இருந்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் வருகிறது ! சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு தைக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தைக்காலுக்கு ஒரு விசிட் அடிக்காமல் போவதில்லை. பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதும், பிரம்பு பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் முழுவதும் நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கிருந்துதான் வாங்கிச் செல்கின்றனர் என்பது இந்த ஊரின் சிறப்பு.

    

இங்கு விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது. இந்த மெல்லிய பிரம்பு அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் கூடைகளைச் செய்ய முடியாது. அதனால கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். ஏழு வகை பிரம்புகளில் ரைடான், மூங்கில் பிரம்பு, முக்கால் பிரம்பு என ரகரகமாகப் பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான ரைடான் பிரம்புகளால் பெரிய பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய், ஜூலா போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் அங்கு இருக்கும் பிரம்பு பொருட்களை பார்த்து இதையெல்லாம் பிரம்பில் செய்ய முடியுமா என்று கண்டிப்பாக மூக்கின் மீது விரலை வைத்தாலும், சில சமயங்களில் உங்களுக்கு வேண்டும் பொருட்களை, வேண்டும் என்று சொன்னாலும் நன்கு செய்து கொடுக்கின்றனர்.
ஒரு கடையினுள் நுழைந்து ஒரு பிரம்பு பொருள் எப்படி உருவாகிறது என்று பார்க்க முடிந்தது. ஒரு சின்ன விளக்கு, நிறைய வகையான ஆணிகள், பிரம்பும் அறுக்கும் பொருட்களும், சுத்தியலும் என்று மட்டுமே இருந்தது. ஒரு பிரம்பை எடுத்து தீயில் காட்ட அது சற்று நெகிழ்ந்து கொடுக்கிறது, அதை சிறிது வளைத்து கொஞ்ச நேரம் பிடிக்க பிரம்பு அந்த வடிவத்தில் அப்படியே இருக்கிறது, பின்னர் மீண்டும் தீயில் காட்டி வளைக்கின்றனர். இப்படியே தேவைக்கு ஏற்ப வளைத்து, நெளித்து ஆணியை கொண்டு அடித்து, கயிறை கொண்டு கற்றி என்று விறு விறுவென்று ஒரு சேர் உருவாகி கொண்டு இருந்தது !

வெளியூர் விற்பனையாளர்கள் இங்கிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பொருட்களை பதினைந்து ஆயிரத்துக்கு தாராளமா விற்க முடியும் என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இங்கு வந்து நேரடியாக வாங்கும்போது கையில இருக்குற தொகைக்கு ஏற்ப பொருட்களை தரம் பார்த்து வாங்க முடியும். அதே சமயம் தரமானதாகவும் பார்த்து வாங்கலாம். சோஃபாசெட், ஜூலா, டைனிங் டேபிள் என எல்லாமே கிடைக்கிறது. முக்கியமாக நேரடியாக வந்து வாங்கும்போது கேரண்டியும் தருகிறார்கள்!.
 
சரி, இந்த பகுதியில் பிரம்பு பொருள்களை பார்த்தோம்.... கோரை பாய்களையும், அதில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அடுத்த பகுதியில் பார்ப்போமே !!
 
Labels : Suresh, Kadalpayanangal, oor special, district special, Thaikkal, Chidambaram, Pirambu, Paai, amazing works

17 comments:

 1. பெங்களூர் டூ சென்னை ஹைவேஸ்ல வேலூர், ஆற்காடு தாண்டி வாலாஜான்னு ஒரு ஊர் வரும். அங்கயும் பிரம்பு பொருட்கள் செய்து விற்குறாங்க. தமிழக அரசின் கூட்டுறவு துறை மூலமாகவும் ஒரு பிரம்பு பொருட்கள் உற்பத்தி ஆகுது. இந்த வாலாஜாவுக்கு இன்னொரு ஸ்பெஷலாட்டியும் உண்டு சகோ! மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து கொடுக்குறாங்க. குணமும் ஆகுது. நினைவில் வச்சுக்கோங்க. வாய்ப்பு கிடைக்கும்போது பதிவும் போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. தகவல்களுக்கு நன்றி ராஜி அக்கா.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. தல எப்புடி தல இவ்ளோ சமச்சாரம் புடிக்குரிங்க? எவ்வளவு தகவல்கள். அப்பப்பா.... ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி, சிதம்பரம் பக்கம்னு சொல்ரிங்க அப்போ புத்தூர் ஜெயராமன் கடைக்கு ஒரு எட்டு போயிருப்பிங்களே?.. கலக்குங்க தல...

  ReplyDelete
  Replies
  1. அப்போ புத்தூர் ஜெயராமன் கடைக்கு ஒரு எட்டு போயிருப்பிங்களே? :) Point!

   Delete
  2. புத்தூர் ஜெயராமன் கடைக்கு சென்று கடையைப் பற்றி விரிவாக இந்த சுட்டியில் எழுதி உள்ளார்கள். http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_27.html

   Delete
 4. பிரம்பு பொருள்கள் தயாராகும் இடத்தையும் பிரம்பை பற்றியும் விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி! எங்க ஊரிலேயும் ஒரு பிரம்பு தொழில் முனைவர் இருக்கிறார்! ஆந்திர கரையோரம் சுண்ணாம்புகுளம், வேநாடு பகுதிகளிலும் பிரம்பு நிறைய விளைகின்றது

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்களுகு பிரப்மு பொரூள் தேவை எனில் திண்டுக்கல் அருகில் வடமதுரை இல் கிடைகும் 9597907666

   Delete
 5. தெருவெங்கும் பிரம்புக் கடைகள்
  பலமுறை பார்த்திருக்கிறேன்
  அருமையான பதிவு நண்பரே
  தம 3

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்களுகு பிரப்மு பொரூள் தேவை எனில் திண்டுக்கல் அருகில் வடமதுரை இல் கிடைகும் 9597907666

   Delete
 6. படங்களுடன் விளக்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே... பாராட்டுக்கள்...

  // இந்த உலகம் புல்லினால் ஆனது என்பது தெரிய வரும்... // அப்படிச் சொல்லுங்க...

  ReplyDelete
  Replies
  1. உங்களுகு பிரப்மு பொரூள் தேவை எனில் திண்டுக்கல் அருகில் வடமதுரை இல் கிடைகும் 9597907666

   Delete
 7. உங்கள் ப்ளாக்கை தந்தி சரவணன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அருமையான பதிவுகள். தொடரட்டும் உங்கள் பணிகள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. பிரம்படிபட்டால்தெரியும் அதன் அருமை. :)). நம்நாட்டிலும் இருக்கின்றது.

  ReplyDelete
 9. பிரம்பு குச்சிகல் எனக்கு தேவைபடுகிறது இருந்தா கூருங்கள்

  ReplyDelete
 10. பிரம்பு குச்சிகல் எனக்கு தேவைபடுகிறது இருந்தா கூருங்கள் 6382000511

  ReplyDelete
  Replies
  1. பிரம்புசேர் 2 தேவை

   Delete