Tuesday, July 1, 2014

அறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் !

கலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை ! இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்தி என்று இருக்கிறது, அதிலும் வெகு சில இடத்தில்தான் கலவை சாதங்கள் கிடைக்கின்றன, அதுவும் அந்த சாதத்தை சாப்பிட்டால் நாக்கில் கலர் ஒட்டி கொள்கிறது. திரு. சமஸ் அவர்கள் எழுதிய சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் சென்று அதை அனுபவித்து எழுத வேண்டும் என்ற நோக்கில் இதுவரை எழுதப்பட்ட எல்லாமும் உங்களுக்கு ஆர்வத்தையும், எச்சிலையும் தூண்டியதை என்னால் அறிந்திட முடிந்தது, அந்த வரிசையில் இந்த வாரம் திருவாரூரில் இருக்கும் SRR கபே !!


 
சிறு வயதில் எல்லாம் வெளியூர் செல்வதாக இருந்தாலே அம்மா பொட்டலம் கட்ட ஆரம்பித்து விடுவார். பஸ்சில் செல்லும்போது பசி நேரத்தில் ஒரு பொட்டலத்தை பிரித்தால் போதும் எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று வகை வகையாக இருக்கும். என்னதான் வெளியில் பரோட்டா சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் ருசியில் எல்லாமும் மறந்து போகும். இந்த கலவை சாதங்களை இன்று கொன்று தீர்க்கிறது செல்லும் வழியெங்கும் இருக்கும் ஹோட்டல்கள் ! இன்றும் அந்த கலவை சாதங்களை தரமும், ருசியும் குறையாமல் தருகிறது திருவாரூரில் இருக்கும் SRR கபே என்னும் ஹோட்டல். திருவாரூர் பேருந்து நிலையத்தின் வெளியே இருக்கும் இந்த உணவகத்திற்கு மதியம் சாப்பிட கும்பல் அலைமோதுகிறது. வெளியே இருக்கும் பலகையில் மீல்ஸ் ரெடி என்ற வார்த்தை இருந்தாலும், இன்றைய ஸ்பெஷல் என்ற போர்டில்.... எல்லாமே கலவை சாதங்கள். சாப்பிட்டு வெளியே வருபவர்களது முகத்தில் சுவையையும் மீறி ஒரு திருப்தி தெரிகிறது.

 

கலவை சாதம் என்றால் சுலபமாக தெரிந்தாலும் அதில் இருக்கும் அமிர்தமான சுவை யாருக்கு தெரியும் ? சூடான பொன்னி அரிசியில், சாதம் எதுவும் கட்டியாக இல்லாமல், பொல பொலவென்று ஒன்றும் ஒட்டாமல் இருக்க, அதில் லெமன், புளி, தக்காளி, தயிர், சாம்பார் , தேங்காய், கருவேப்பில்லை, கதம்பம், மாங்காய் இஞ்சி, கற்கண்டு, ஜீரகம், மாங்காய், பூண்டு என்று வகை வகையாக சாதம் செய்யலாமே. அதுவும் சாதத்திற்கு தொட்டு கொள்ளவென்று தயிர் பச்சடி, அப்பளம்,வற்றல், ஊறுகாய் (இஞ்சி, எலுமிச்சை, பூண்டு என்று அது நீளும் ஒரு பட்டியல் ), வெங்காயம், பூந்தி, சிப்ஸ், முறுக்கு, விதம் விதமான தொக்கு, சட்னி என்று அது ஒரு தனி பட்டியல். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை சாதத்திற்கும் ஒரு வகையான தொட்டுகை மட்டுமே சிறந்து விளங்கும், உதாரணமாக தயிர் சாதத்திற்கு ஊறுகாயும், புளி சாதத்திற்கு முறுக்கு என்றும் ஒரு உறவு உண்டு, இதை நீங்கள் உடைக்க நினைத்தால் அந்த கலவை சாதம் சிறக்காது !! இப்படி இவ்வளவு சுவையான சாதத்தை இன்று இருக்கும் உணவு பழக்கங்கள் ஒழிக்க ஆரம்பித்துவிட்டன, பயணத்திலும்  நிற்கும் இடத்தில் கிடைக்கும் உணவுகளை மக்கள் சாப்பிட பழகிவிட்டனர்.
 
 
முதலில் தூரத்தில் இருந்து பார்க்கும்போதே பெரிய போர்டு உங்களை வரவேற்கும், உள்ளே நுழையும்போது இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி இருப்பதை படிக்கும்போது எச்சில் ஊற ஆரம்பிக்கும். இடம் தேடி உட்கார பக்கத்தில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு வகையான கலவை சாதத்தை சுவைக்கும்போது, உள்ளே வரும்போது எதை சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து வந்தோமோ அதை பக்கத்துக்கு டேபிளில் இருந்து வரும் மணம் உங்களை கண்டிப்பாக குழப்ப ஆரம்பிக்கும், அது எனக்கும் நடந்தது. முடிவில் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தேன். தட்டில் ஒரு சிறிய இலை போட்டு அதன் மேலே வெஜிடபிள் பிரியாணி உங்களது முன் இருக்க விரைவில் வந்து குருமா, பச்சடி, சட்னி, பருப்பு, சாம்பார், வடை இதில எது வேணும் என்று பசி நேரத்தில் அடுத்த குழப்பம் ஆரம்பிக்கும் ! முடிவில் எனக்கு பச்சடி, சாம்பார், குருமா என்று வாங்கினேன்.


வெஜிடபிள் பிரியாணி சாதம் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் பட்டாணி, கேரட், அங்கங்கே முந்திரி, பச்சைமிளகாய் மசாலா எல்லாம் போட்டு இருக்க கொஞ்சமே கொஞ்சம் எடுத்து சிறிது தயிர் பச்சடியும், குருமாவும் தொட்டுக்கொண்டு ஒரு வாய் வைக்கவும் சிறிய வயது நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. சுத்தமாக, மிகவும் சுத்தமாக...... நல்ல பதத்துடனும், கைபக்குவதுடனும் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இது போன்ற கலவை சாதங்கள் தள்ளு வண்டியில் கிடைக்கிறதே, அங்கு மட்டும் என்ன சுவை என்று கேட்பவர்களுக்கு இந்த சுவையை, மிக நேர்த்தியான சுவையை புரிய வைப்பது கடினம். கலவை சாதம் என்பது தோசை சுடுவது போல இல்லை, அது கைப்பக்குவம் சார்ந்தது...... இங்கு அதை காண முடிந்தது !! அடுத்த முறை ஒரு வித்தியாசத்திற்கு கலவை சாதத்தை மதிய உணவாக முயன்று பாருங்களேன் உங்களுக்கே புரியும் அதன் சுவை...... அதுவும் திருவாரூர் SSR கபேயில் முயன்று பார்த்தால் ஒரிஜினல் கலவை சாதத்தின் சுவை தெரியும் !
 

  
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Thiruvaaroor, SRR café, Kalavai satham, Variety rice
 

21 comments:

 1. மூன்று மாதத்துக்கு முன்னால் இந்தப் பதிவு படிக்கக் கிடைத்திருக்கிறதோ.... திருவாரூர் போயிருந்தேன்! அடுத்தமுறை பார்ப்போம். என் சாய்ஸ் புளியோதரை! அது சுவை சரியாக இருந்தால் எக்ஸ்பர்ட் என்றுதான் அர்த்தம்.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒரு முறை சென்று வாருங்கள் ஸ்ரீராம்...... தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றி !

   Delete
 2. வணக்கம்

  எழுதிய பதிவை படித்த போது அந்த கடையில் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு வருகிறது பிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன், கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கடை இது !

   Delete
 3. அருமையாக சொன்னீர்கள்! கலவை சாதத்தின் ருசியே தனி! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, கலவை சாதத்தின் சுவை இந்த தலைமுறைக்கு தெரிவதில்லை என்பது வருத்தம் !

   Delete
 4. எங்கள் ஊருக்கு சென்று வந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்! இங்கு அதன் உரிமீயாளர் உயிரோடு இருந்தபோது இருந்த சுவை இப்பொழுது இல்லை. மற்ற உணவகங்களைk காட்டிலும் தற்போதைக்கு பரவாயில்லை. இதற்கு எதிரஎ ஒரு மசாலா பால் கதை உண்டு. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். மசாலா பால் மற்றும் முந்திரி அல்வா. சுட சுட சாப்பிட்த்தால் அடடா. அமிர்தம் போல இருக்கும். அடுத்த முறை சென்றால் இதையும் சாப்பிட்டு பாருங்கள். வாசன் ஹொட்டேலில் ஒரு பாதாம்அல்வா கிடைக்கும். இங்கு காலை 4 மணி முதல் சுட சுட காஃபீ கிடைக்கும். அதன் சுவை அனுபவித்தால் மட்டுமே புரியும். தெற்கு வீதியில் ஒரு இட்லி கடை உண்டு. இது ஒரு இரவுக் கடை. இங்கு வெறும் இட்லி மட்டும் தான் மெனு. ஆனால் இரவு 11 மணி வரை கூட்டம் இருக்கும்.இது போல் நிறைய கடைகள் உண்டு எங்கள் ஊரில்.நேரம் இருப்பின் ஊருக்கு வரும் போது எனக்கு தகவல் தெரிவிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, ஆஹா.... அருமையான தகவல்கள், அடுத்த ட்ரிப்புக்கு நான் !
   கண்டிப்பாக வரும்போது தகவல் தெரிவிக்கிறேன் !

   Delete
 5. திருவாரூர் செல்ல நினைத்திருக்கிறேன் - அடுத்த தமிழகப் பயணத்தில்.... நிச்சயம் அங்கே செல்ல வேண்டும் என குறித்து வைத்துக் கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. திருவாரூர் மட்டும் இல்லை, நீங்கள் கும்பகொனதிர்க்கும் செல்ல வேண்டும் ! அருமையா ஊர் !

   Delete
 6. சுவையை மிஞ்சிவிடுகிறது
  நீங்கள் சொல்லிச் செல்லும் விதம்
  நல்ல சுவை அறியும் நாவும்
  அற்புதமாகச் சொல்லிச் செல்லும் திறனும் தமிழும்
  தொய்வின்றி விடாது செய்யும் முயற்சியும்
  தங்களுக்கு அருளிய ஆண்டவனுக்கு
  நன்றியை காணிக்கையாக்குகிறோம்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார், உங்களது பாராட்டுக்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது !

   Delete
 7. தங்களின் எழுத்தைப் படிக்கப் படிக்க கலவைச்சாத வாசனையே வருகின்றது நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, இதுதான் எனது எழுத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி, நன்றி ஜெயக்குமார் ஜி !

   Delete
 8. Replies
  1. நன்றி தனபாலன் சார் !

   Delete
 9. பாஸ், சாப்பாடை ரொம்ப வர்ணிக்கிறீங்க.....

  ReplyDelete
  Replies
  1. சரவணன், வர்ணனை எல்லாமே உண்மை !

   Delete
 10. நான் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் தவிர அநேகமான எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறேன் (திருவாரூர் உட்பட). எல்லா வகையான உணவகங்களிலும் (பெட்டிக்கடை, தள்ளுவண்டி தவிர்ந்த) உணவருந்தியிருக்கிறேன், ஆனால் எங்குமே சாப்பாடு சரியில்லை. நீங்கள் ஆ, ஊ, பிரமாதம் என்பதைப் பார்க்கும் போது, எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லையே என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இந்த உணவு வகை எல்லாமே வெறும் சோற்றை மட்டும் தின்று பழக்கப்பட்டு மரத்துப் போன தமிழ்நாட்டு நாக்குகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது. :-)

  தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் அங்கு போகத் தூண்டும், எத்தனை முறை அங்கு சென்றாலும், என்ன தான் வெய்யிலில் காய்ந்து, புழுதியில் அலைந்தாலும், மீண்டும் அங்கே இழுக்கும் காந்தத் தன்மை கொண்ட என்னவோ இருக்கிறது ஆனால் நிச்சயமாக, அது தமிழ்நாட்டின் உணவல்ல. உணவு என்ற விடயத்தில் தமிழ்நாட்டு உணவுகள் சுவையற்ற,இரவல் வாங்கிய, உப்புச்சப்பற்ற, தரம் குறைந்த, அழகற்ற, ஒரேமாதிரியான, பசியைத்தூண்டாதவை என்பது தான் எனது கருத்தாகும். மன்னிக்கவும். :-)

  ReplyDelete
 11. SRR கபே ல சப்பாத்தியும் மிக மிக நன்றாக இருக்கும்.

  ReplyDelete