Tuesday, July 15, 2014

உலக பயணம் - தண்ணீருக்குள் ஒரு உலகம் !!

உலக பயணங்களில் சில நேரம் மெய் மறக்கும் தருணம் என்று சில நேரங்களில் நடக்கும், அது இந்த முறை சிங்கப்பூர் சென்று இருந்த போது நடந்தது ! தண்ணீரின் உள்ளே அதுவும் கோரல் ரீப் எனப்படும் இடங்களில் உலகம் என்பது எவ்வளவு வண்ணமயமானது என்பது புரியும், ஆனால் நீச்சல் தெரியாதவர்களுக்கு அதை அனுபவிக்க முடியாது, அப்படி தெரிந்தாலும் நீங்கள் தண்ணீரின் உள்ளே அந்த உபகரணங்களோடு செல்ல வேண்டியது இருக்கும்..... அப்படி எல்லாம் இல்லாமல் கடலின் அடியில், வெகு அடியில் நீங்கள் நனையாமல் இந்த அழகை எல்லாம் பார்த்துக்கொண்டு நடந்தால் எப்படி இருக்கும் !! சிங்கப்பூரின் சீ அகுவேரியம் (S.E.A Aquarium) என்னும் இடத்தில் இந்த அதிசயம் நடக்கிறது !
குறிப்பு : சிங்கபூரீன் அண்டர்வாட்டர் வேர்ல்ட் என்பதல்ல இது, இது புதிய தண்ணீர் உலகம் !


சிங்கப்போர் செல்பவர்கள் எல்லாம் செந்தோசா தீவிற்கு செல்லுவார்கள், அங்கு கண்டிப்பாக எல்லோரும் செல்வது என்பது அண்டர்வாட்டர் வேர்ல்ட் எனப்படும் ஒரு தண்ணீர் பூங்கா, அதில் ஒரு டியூப் போன்ற கண்ணாடி அமைப்பின் உள்ளே நீங்கள் நடந்து செல்லும்போது உங்களுக்கு மேலே மீன்கள் ஓடும், இதில் ஒரு கடலின் பிரம்மாண்டத்தை நீங்கள் உணரவே முடியாது...... ஆனால் இந்த தண்ணீர் உலகத்தில் விஷயமே வேற, உங்களது முன்னே ஒரு கடல், பிரம்மாண்டமான கடல் அதில் மிக பெரிய மீன்கள் எல்லாம் நீந்துகின்றன என்றால் எப்படி இருக்கும். உலகின் மிக பெரிய கண்ணாடி தடுப்பு என்ற சாதனை பெற்ற தண்ணீர் உலகம் இது ! கின்னஸ் சாதனை படைத்த ஒரு பெரிய தண்ணீர் உலகத்தை காணுவதற்கு கோடி கண்கள் வேண்டும் போங்கள் !
 

 
 
 
ரிசார்ட் வேர்ல்ட் சென்டோஸா என்னும் இடத்தில் இருக்கிறது இந்த இடம். உள்ளே நுழைவதற்கு பெரியவர்களுக்கு 38 வெள்ளி (1900 ரூபாய்), சிறியவர்களுக்கு சுமார் 28 வெள்ளி (1400 ரூபாய்) ஆகிறது. வெளியே நிறைய குடும்பங்களும், ஆட்களும் ஒருவருக்கு இவ்வளவு கொடுக்க வேண்டுமா என்று யோசித்து திரும்பி செல்கின்றனர், ஆனால் உண்மையிலேயே இது ஒரு மிக அருமையான அனுபவம், தவற விட வேண்டாம். பணம் கொடுத்து உள்ளே நுழைய ஒரு சிறிய கண்ணாடி இடம் அதன் பின்னே ஒரு படகு உடைந்த நிலையில், தண்ணீர் சுத்தமோ சுத்தம்...... கடல் தண்ணீரை கரையில் இருந்து களங்கமாகவே பார்த்த நமக்கு இங்கு தண்ணீர் இவ்வளவு சுத்தமா என்று வியக்க வைக்கிறது. இதில் கலர் கலராக மீன்கள் நீந்துவதை பார்க்க ஆனந்தமாக இருந்தது. இவ்வளவு பணம் கொடுத்து உள்ளே வந்து இவ்வளவு சிறிய கண்ணாடி தடுப்பை பார்க்கத்தானா என்று மனம் சுண்டி போனது, இதை எப்படி கின்னஸ் சாதனை என்கின்றனர் என்று மண்டை குழம்பியது. அதை தாண்டி செல்லும்போது ஒரு டியூப் போன்ற கண்ணாடி அமைப்பு வருகிறது, அதில் உள்ளே நடக்க நடக்க உங்களை சுற்றி மீன்கள் நீந்துகிறது, இதைதான் சென்டோஸா தீவில் எல்லோரும் பார்ப்பார்கள் !
 
 
 
 

சரிதான், இவ்வளவு சின்ன கண்ணாடி தடுப்புக்கு கின்னஸ் சாதனையா என்று பேசிக்கொண்டே நடந்தால் உங்களது முன்னே ஒரு மிக பெரிய சிலிண்டர் வடிவில் ஆன ஒரு பெரிய தண்ணீர் தொட்டி, அதில் வானவில் நிறங்களில் மீன்கள் நீந்துகிறது. உண்மையிலேயே அது கண் கொள்ளா காட்சிதான் ! நம்ம கோவை நேரம் ஜீவாவும், ஆவியும் இங்க இருந்து இருந்தா மீனை தவிர எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்..... அவ்வளவு அம்மணிகள், அதுவும் அரை டவுசரில் !
 



இதை தாண்டி நடக்க நடக்க, ஒவ்வொரு விதமான தொட்டிகள் அதில் விதம் விதமாய் மீன்கள் என்று கடல் உலகத்தின் அதிசயம் தெரிந்தது. இங்கு இந்தியாவில் அக்வேரியம் என்று இருக்கும், அதில் உள்ளே சென்றால் சிறிய சிறிய தொட்டிகளில் கலங்கலாக மீன்கள் இருக்கும், அதை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டே இருப்போம். ஆனால் இங்கு நிஜமாகவே எல்லாமும் அதிசயமாக இருந்தது. கடலின் உள்ளே சென்று பார்க்க முடியாதவர்கள் இங்கே வந்து பார்த்து சென்றால் அடுத்த முறை இங்கேதான் வாழ வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
 



 

இப்படி சுமார் இருபது நிமிடங்கள் வரை நாம் மெதுவாக சுற்றி வர வர ஒரு திருப்பத்தில் அதிசயம் நிகழ்கிறது ! உங்களது முன்னே ஒரு பிரம்மாண்டமான கடல்....... மிக பிரம்மாண்டமாய் அதில் பெரிய பெரிய மீன்கள் நீந்துகிறது, நீங்கள் அதன் முன்னே நிற்க வெகு சிறியதாய் தெரிவீர்கள். இந்த அதிசயத்தை கண்டிப்பாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாய் உங்களது மனது அந்த தண்ணீரையும், மீனையும் ரசிக்க ஆரம்பிக்கும்..... சும்மா அப்படியே அந்த கண்ணாடியின் முன்னே உட்கார்ந்து நீங்கள் மணி கணக்கில் அப்படியே மயங்கி இருக்கலாம், அப்படி ஒரு அழகு இந்த கடல் உலகம் !
 
 
 
 
இது மட்டும் அல்ல, நீங்கள் கடலுக்கு அடியில் தங்க வேண்டும் என்று விருப்பபட்டால் அதற்கும் ரூம் இருக்கிறது. ஆனால் ஒரு நாள் வாடகையே....... வேண்டாம் விடுங்கள் விக்கல் வந்து விட போகிறது உங்களுக்கு. ஒரு நாள் முழுவதும் அந்த கண்ணாடி ரூமில் கடல் பார்த்து தங்கினால் உங்களுக்கு சொர்க்கம்தான் !! உலகம் பணம் இருப்பவர்களுக்கு ரொம்பவே அழகுதான் சார் !
 

 
Labels : Suresh, Kadalpayanangal, S.E.A. Aquarium, Singapore, Sentosa, Water world, Guinness world record glass, glass, water, Sea world, amazing fish, colorful

12 comments:

  1. இப்படிலாம் பதிவைப் போட்டு எங்களைலாம் பொறாமைப் பட வைக்கக்கூடாது.

    ReplyDelete
  2. ராஜியின் கருத்தை கன்னா பின்னான்னு ஆதரிக்கிறேன்!!!!!

    ReplyDelete
  3. வணக்கம்
    சிங்கப்பூரை சுற்றிக்காட்டிவிட்டீங்கள் அண்ணா. பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:

    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அனுபவி ராசா அனுபவி! மிகவும் சிறப்பான ஒர் பதிவு! படங்கள் அழகு!

    ReplyDelete
  5. எத்தனை எத்தனை இன்பம் வைத்தான் இப் பூலகில்! :))

    இந்திய மீன்கள் அருங்காட்சியகம் பார்த்த கண்களுக்கு இவை சொர்க்கம்!

    ReplyDelete
  6. தொடர்ந்து உலகம் சுற்ற
    வாய்ப்பையும் வசதியையும்
    ஆண்டவன் உங்க்களுக்குக் குறைவின்றி
    வழங்குவானாக
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  7. பார்க்கப் பார்க்க வியப்பாக இருக்கிறது நண்பரே
    நன்றி

    ReplyDelete
  8. சிங்கப்பூர் போகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் போவேன்....

    ReplyDelete
  9. இடம் எப்படியோ தெரியலை ஆனா பதிவு சூப்பர்

    ReplyDelete
  10. மனம் துள்ளி விளையாடுதே.....

    ReplyDelete