Tuesday, July 22, 2014

ஊரும் ருசியும் - ராமசேரி இட்லி !

சில சமயங்களில் சில ஊர்கள் நிறைய ரகசியங்களை தனக்குள் கொண்டு இருக்கும், அதை தேடி செல்லும் பயணம் என்பது மிகவும் சுவாரசியம் மிக்கது ! கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ராமசேரி !! முகபுத்தகத்தில் ஒருவர் இந்த ஊரை பற்றி குறிப்பிட்டு இந்த ஊரில் செய்யும் இட்லி மட்டும் சுமார் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும், சுவையும் அமோகம் என்றார்..... அதில் இருந்து ஒரே ஆர்வம், இதை எப்படியாவது சாப்பிட்டே ஆகா வேண்டும் என்று. இதை பற்றி தெரிந்த தகவல் என்பது...... ராமசேரி இட்லி மட்டுமே. எனது பயணத்தில் வழக்கம் போல எனது ரதகஜதுரபதாதிபதிகளும் இணைந்தனர், ஒரு பசி நேரத்தில் இப்படி ஊர் தேடி அலையும்போது சில நேரங்களில் நமக்கு கட்டப்படும் பட்டமும், அதே பசி ருசியுடன் ஆறியபின் கிடைக்கும் பட்டமும்தான் ஒரு பயணத்தின் சுவாரசியம் !!

ராமசேரி இட்லி !!


ஒரு ஊரில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக இட்லி சுட்டு மக்கள் வாழ்கின்றனர், அதுவும் அந்த இட்லி சுமார் நான்கு நாட்கள் வரை கெட்டு போகாது என்பது நிச்சயம் அதிசயம்தானே ! கோயம்பதூரில் இருந்து சுமார் ஆறு மணிக்கு இட்லி சாப்பிட கேரளா போறோம் என்று சொன்னபோதே எல்லோருக்கும் ஏதோ நடக்கபோகுதுன்னு தோன்றியது ! இப்போது ரோடு போட்டுக்கொண்டு இருப்பதால் குண்டும் குழியுமான ரோட்டில் வண்டியை ஒட்டிக்கொண்டு அந்த அதிகாலையில் செல்லும்போது, அங்க கொஞ்சம் நிறுத்து கொஞ்சம் டீ சாப்பிடலாம் என்று சொன்ன என்னை, இட்லி தீர்ந்துடும் வேகமா போகலாம் என்று தலையில் தட்டினர். ரோட்டில் மேல் இருக்கும் கிராமம் என்று நினைத்து தூரம் சென்றுவிட்டு, பின்னர் அங்கே இங்கே கேட்டு ஒரு ஒற்றை ரோட்டில் ராமசேரி எவ்விட (இது கேரளாவின் எல்லையில் இருக்கிறது !) என்று கேட்டு கேட்டு செல்ல அப்போதே மணி ஏழரை..... எல்லோருக்கும் எஞ்சின் சத்தத்தையும் மீறி வயிறு சத்தம் போட ஆரம்பித்தது. தட்டு தடுமாறி ராமசேரி என்ற ஊரின் பேர் பலகையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அங்கு இருந்த ஹோட்டல் ஒன்றில் இட்லி இங்க பேமஸ் இல்லையா என்பதை எப்படி மலையாளத்தில் கேட்பது என்று பட்டிமன்றம் நடத்தில்.... இவ்விடத்தில் இட்லி பேமஸ் என்று மென்று கேட்க, எத்தனை இட்லி வேணும் சொல்லுங்க என்று பதிலுக்கு அவர் கேட்க, சார் எவ்வளவு இட்லி இருக்கு என்று எனது முதுக்குக்கு பின் இருந்து குரல் வந்தது.

சரஸ்வதி இட்லி கடை !

ஊரின் முதல் கடையே இதுதான் !

சங்கர் இட்லி கடை !

நாங்கள் அந்த ஊருக்குள் நுழைந்தபோது முதல் கடையின் முன்னே கார்களும், பைக்களும் நின்று கொண்டு இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு ஊர் என்றால் நான்கு தெரு இருக்கும், ஆனால் இங்கு மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் வீடுகள் அதுதான் ராமசேரி கிராமம். நாங்கள் அந்த கடையில் உட்கார இடம் தேட, அங்கு இருந்தவர்களை பார்த்தால் பெரிய இடம் போலவே தோன்றியது..... இட்லி சாப்பிட பென்ஸ் காரில் வந்து இருந்தனர் ! இடம் காலி இல்லை என்று வெளியில் காத்துக்கொண்டு இருந்தோம். பத்து நிமிடத்தில் இடம் காலி என்று சொல்ல நாங்கள் உள்ளே நுழைந்தோம். ஒரு சிறிய அறை, அதன் உள்ளே மர பெஞ்ச் போடப்பட்டு இருந்தது. இடது பக்கத்தில் டீ போடும் இடம். உட்கார்ந்தவுடன் ஒரு தட்டு வைத்து இட்லி என்று சொன்னவுடன் உள்ளே இருந்து சூடாக இட்லியை உங்களது தட்டில் எடுத்து போடும்போது நாம இட்லிதான கேட்டோம், ஊத்தப்பம் இல்லையே என்று சந்தேகபடவேண்டாம்..... இதுதான் ராமசேரி இட்லி !

நாங்க ஏழு பேரு, எங்களுக்கு சுத்தறது, சாப்பிடறதுதான் வேலை !



இது இட்லியா, இல்லை தோசையா...... இல்லை சார், இது ராமசேரி இட்லி !

ராமசேரி இட்லி என்பதின் ஸ்பெஷல் என்பதே இதுதான்...... அது இட்லியும் அல்ல, தோசையும் அல்ல ! தொட்டுக்கொள்ள நல்ல தேங்காய் சட்னியும், கார சட்னியும் கொடுக்க ஒரு வாய் பியித்து வைக்க உங்களுக்கே புரியும் அதன் ருசி மெல்ல மெல்ல. பொதுவாக இட்லி என்பது சூடாக, மெதுவாக இருக்கும், மதுரை இட்லிக்கு அந்த குணம் உண்டு. ஆனால், இட்லியின் நாடு பகுதி என்பது சற்று உப்பியது போல இருக்கும்போது, சில சமயங்களில் அதன் ஓரத்தில் இருந்த அந்த தன்மை நடு பகுதியில் எதிர் பார்க்க முடியாதபடி செய்து விடும். ஆனால் இங்கு இட்லி ஒரே போல இருப்பதால் தின்று முடிக்கும் வரை அதே சுவை !! இதன் தன்மையும், வித்யாசமான இட்லி அமைப்பும் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்றால் அது மிகை இல்லை !


இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும், நீங்க எப்படி !

இப்படி வித்யாசமான இட்லியை செய்யும் விதமும் வித்தியாசம்தான். பொதுவாக நாம் உபயோகிக்கும் இட்லி பாத்திரம் போல இல்லை இது. ஒரு அலுமினியம் பானை அதன் உள்ளே தண்ணீர் கொதிதுக்கொண்டு இருக்கிறது. அதன் மேலே ஒரு சிறிய வட்டில் போன்ற அமைப்பு, அதன் மேலே துணி போடப்பட்டு இருக்கிறது. அந்த வட்டிலின் மேலே இட்லி மாவை எடுத்து தோசை போல ஊற்றுகிறார்கள். பின்னர், அதன் மேலே மீண்டும் வட்டில் வைத்து மீண்டும் இட்லி..... இப்படி ஒரு முறையில் நான்கு இட்லி மட்டுமே செய்ய முடியுமாம். இரண்டு மூன்று அடுப்பு வைத்து இட்லி செய்கின்றனர். இதை செய்ய புளியமரத்தின் விறகை மட்டுமே பயன்படுத்துகின்றனர், விறகு அடுப்பில் செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரு தனி சுவை உண்டு போல ! ஒரு நான்கு நிமிடம் கழித்து மேலே கவிழ்த்தி வைத்து இருந்த மூடியை எடுக்க உள்ளே வெள்ளை வெளேரென்று ராமசேரி இட்லி.......இப்போதே நாக்கு ஊற ஆரம்பித்தது எனக்கு ! ஒரு ஊர் இட்லியில் பிழைக்க முடியுமா என்று கேட்டால், பதிலாக சுவையான இட்லியுடன் ராமசேரி இருக்கிறது !

இட்லி பானை.......

ஒரு இட்லி ஊத்தியாச்சி, அடுத்தது.....





இட்லி ரெடி !


சூடான சுவையான இட்லி !

மீதி இட்லி எங்கே அப்படின்னு தேடறீங்களா....நானும்தான்.... எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 


Labels : Oorum rusiyum, District foods, Ramasery, Idly, Different idly, Palakad, Coimbatore, Oor special, district special

7 comments:

  1. குஷ்பூ இட்லி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்...

    இது சிம்ரன் இட்லி...? ஹிஹி...

    கவனிக்க : தளத்தில் தமிழ்மணத்தில் ஓட்டளிக்கும் போது, இதே tab-ப்பிலும், அடுத்த tab-ப்பிலும் தமிழ்மணம் login திறக்கிறது... உங்களின் blogger a/c-யை sign-out செய்து விட்டு ஓட்டளித்துப் பார்க்கவும்...

    Some gadgets to be removed...

    ReplyDelete
  2. இதுப்போன்ற இட்லியை ஆந்திர மாநிலம் பலமநேரில ஒரு ஹோட்டலில் 4 வருசத்துக்கு முந்தி சாப்பிட்டிருக்கேன். அதுக்கு பேரு திரிசா இட்லி. காரப்பொடி, கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பாரோடு. ரெண்டு இட்லிதான் சாப்பிட்டேன். வயிறு ஃபுல்.

    ReplyDelete
  3. இது புதுசா இருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமை வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
  5. ///இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும், நீங்க எப்படி !///
    ஹா ஹா ஹா... கண்டிப்பா சீனியர்... சொன்ன மாதிரி, இது சிம்ரன் இட்லி தான்... :) :) :)
    very different...

    ReplyDelete
  6. புதிதாக இருக்கின்றது.

    ReplyDelete