Thursday, July 3, 2014

சிறுபிள்ளையாவோம் - குண்டு ஐஸ் !

ஐஸ் கிரீம்....... சிறு வயதில் என்னதான் பெற்றோர்கள் நமக்கு வாங்கி கொடுத்தாலும், இந்த ஐஸ் கிரீம் மட்டும் கையில் கிடைத்தால் அதை சுவைப்பதில் அவ்வளவு ஆனந்தம் இல்லையா ! சேமியா ஐஸ், குச்சி ஐஸ், பால் ஐஸ், கோன் ஐஸ், கப் ஐஸ் என்று வகை வகையாக இருக்கும் ஐஸ் கிரீமில் குண்டு ஐஸ் என்பதை அதிசயத்தோடு பார்த்த நாட்கள் யாபகம் இருக்கிறதா ?! பொதுவாக ஐஸ் கிரீம் வண்டியில் அதன் படம் வரைந்து இருக்கும் , அதுவும் அந்த வண்டிக்காரர் டப் டப் என்று சத்தம் கொடுக்க நாம் முண்டியடித்துக்கொண்டு ஐஸ் கிரீம் வாங்குவோம்..... ஆனால் ஐஸ் கிரீம் வண்டி என்று தெரியாமலேயே நிறைய நாட்கள் இருந்து பின்னர் அந்த ஐஸ் கிரீம் முதன் முதலில் கையில் வாங்கியபோது என்ன இது இப்படி குண்டா இருக்கு என்று யோசித்த அந்த ஐஸ் கிரீம் யாபகம் இருக்கிறதா ?!


சிறுபிள்ளையாவோம் என்ற பகுதி ஆரம்பித்ததில் இருந்து சிறுபிள்ளையாகவே ஆகிவிட்டேன் என்று சொல்லலாம், அதுவும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது ! அன்று பார்க்கில் எனது மகனுடன் நான் சறுக்கு மரம் விளையாட எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தது தெரிந்தது, ஆனாலும் அதில் கிடைத்த ஆனந்தம் !! அது போலவே சில விஷயங்கள் நமது காலத்தில் அழிந்து கொண்டு வருகிறது அதில் ஒன்றுதான் இந்த குண்டு ஐஸ். சென்ற முறை அருப்புக்கோட்டை சென்று இருந்த போது நான் சிறுவயதில் இதை உண்டதை யாபகபடுத்தி இதை இன்று சுவைக்க வேண்டும் என்று ஒவ்வொரு தெருவுகுள்ளும் சென்று வந்தோம்........ ஒரு தெருவின் கடைசியில் இந்த ஐஸ் கிரீம் வண்டி இருந்தது கண்டு, வெகு வேகமாக நாங்கள் அங்கே சென்று வண்டியை பிரேக் பிடித்து நிறுத்த அந்த ஆள் சற்று மிரண்டுதான் போனார் !அந்த வண்டியை பார்த்தாலே தெரிந்தது, சுற்றிலும் தகடு அடித்து எந்த பெயரும் இல்லாமல் தள்ளுவண்டியாக இருந்தது. ஆர்வத்துடன் ஐஸ் இருக்கா என்று கேட்க அவர் தலை அசைக்க ஆசையோடு ஒன்று கேட்டேன். அவர் மேலே இருந்த சிறு கதவை திறக்க ஆர்வமாய் எட்டி பார்த்தேன். குண்டு குண்டாக அலுமினியம் உருளைகள் ஒன்றின் மீது ஒன்றாக ஐஸ் மீது கிடந்தது.  அவர் ஒன்றை எடுத்து அருகில் காட்ட எனது ஆர்வம் அதிகம் ஆனது. இந்த ஐஸ் வகைகளில் ஒரு வசீகரமும், ஆச்சர்யமும் உண்டு...... அது இந்த அலுமினியம் உருளைகளை திறக்கும் வரைக்கும் உள்ளே இருக்கும் ஐஸ் கிரீம் கலர் என்பது தெரியாது என்பதுதான் !


இரண்டு அலுமினியம் உருளைகள், அதை சிறிது ரப்பர் போட்டு இறுக்கமாக மூடி விடுவார்கள். அதன் மேலே இருக்கும் துளைகளில் ஒரு சிறிய புனல் வைத்து இந்த ஐஸ் கிரீமை பால் போல ஊற்றுவார்கள். பின்னர் அதை சிறிது மெழுகு கொண்டு அடைத்து இந்த ஐஸ் பெட்டியினுள் இரவு போட்டு விட அடுத்த நாள் காலையில் ஐஸ் கிரீம் ரெடி. இதை அப்போதெல்லாம் கைகளில் செய்வார்கள், இன்று மெசின் வந்து விட்டது. அவர் ஒரு அலுமினியம் உருளையை எடுத்து ஒரு ஐஸ் கிரீம் குச்சியை அதன் மேலே இருந்த ஓட்டையில் சொருக, பின்னர் அதை இறுக்கி வைத்திருந்த அந்த ரப்பரை எடுக்க எனக்கு இங்கே இதயம் துடிக்க ஆரம்பித்து விட்டது....... நமக்கு இன்னைக்கு என்ன கலர் வரும்........ கொஞ்சம் தட்டி தட்டி மேலே இருந்த உருளையை எடுக்க...... ஐய்யா, எனக்கு பச்சை கலரு !!


எனது கைகளில் கொடுக்கும்போது எனக்கு அவ்வளவு ஆனந்தம் ! முதலில் அதை ஆசை தீர பார்த்தேன், பின்னர் நுனி நாக்கினால் சிறிது நக்க...... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் சூப்பர்ஜி ! கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஐஸ் சாப்பிட சாப்பிட இன்றைக்கு இருக்கும் அருண் ஐஸ் கிரீம் மற்றும் இன்னும் பிற ஐஸ் கிரீம் எல்லாவற்றையும்விட அன்று சாப்பிட்ட ஐஸ் கிரீம் அவ்வளவு சுவை என்று தோன்றியது. இன்று அரிதிலும் அரிதாகவிட்ட ஒன்றை சிறுபிள்ளையின் சந்தோசத்தோடு சுவைத்தது மனதை நிரப்பியது. அடுத்த முறை இதை முயன்று பாருங்களேன் !!


Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood memories, child, gundu ice, ice cream, village ice

15 comments:

  1. ஸ்ஸ்... சூப்பர்ஜி...!

    இப்போது கிடைப்பது அரிதிலும் அரிது தான்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், இப்படி அரிதிலும் அறிதானவற்றை ருசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது ! நீங்கள் சிறு வயதில் ரசித்தவற்றை சொல்லுங்களேன்.

      Delete
  2. சிறு வயதில் சாப்பிட்ட நினைவுகள் வந்தன. சூப்பர்ஜி...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பையனுக்கு கண்டிப்பா இது பிடிச்சு இருக்கணுமே..... நன்றி சரவணன் !

      Delete
  3. இது மாதிரி ஐஸ் நான் பார்த்ததில்லை.... நானெல்லாம் சேமியா ஐஸ் 10 பைசா, குச்சி ஐஸ் 5 பைசா காலம்... இந்த குண்டு ஐஸ் வந்த போது வளர்ந்துட்டன் போல....

    ReplyDelete
    Replies
    1. மேடம், நீங்க அப்போ வாழ்க்கையில் ஒரு பகுதியை மிஸ் பண்ணிட்டீங்க போங்க !

      Delete
  4. வணக்கம்
    இளமைக்கால நினைவுகள் வந்தது பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன், இந்த பதிவு உங்களின் நினைவுகளை கிளப்பி விட்டது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  5. எங்க ஊர்ல இதை குல்ஃபி ஐஸ்னு சொல்லுவோம்! இப்பவும் கிடைக்குது! சுவை ரொம்ப ஜோராக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தளிர் சுரேஷ் ! இது குல்பி ஐஸ் இல்லை பால் ஐஸ்தான் ஆனால் வேற மாதிரி இருக்குது !

      Delete
  6. இங்கே கிடைப்பதில்லை சுரேஷ்... :(

    Mother Diary, Amul, Vadilal, Quality போன்ற branded ice cream தான்..... இதற்காகவே கிடைக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க நாகராஜ் சார், இப்போதெல்லாம் இது அரிதாகி வருகிறது. டெல்லியில் என்ன ஸ்பெஷல் இது போல ?

      Delete
  7. சிறு வயது நினைவுகள்
    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், தமிழ் மண ஓட்டிற்கும் நன்றிகள் ஜெயக்குமார் சார் ! நினைவுகள் எப்போதும் சுகமானவைதான் !

      Delete