Tuesday, July 8, 2014

அறுசுவை - மனம் நிறைந்த ருசி !!

இந்த அறுசுவை பகுதியில் எத்தனையோ உணவகங்களை பற்றி அறிமுகம் செய்துள்ளேன், பெரிய ஸ்டார் ஹோட்டல் ஆக இருக்கட்டும் இல்லை கையேந்தி பவனாக இருக்கட்டும் எந்த உணவகமாக இருந்தாலும் உணவின் தரம், அமைப்பு, பணம் என்று மட்டுமே பார்ப்பேன். எந்த உணவகத்தில் உண்டாலும் வெகு சில தடவைகள் மட்டுமே வயிறும் மனதும் நிறைந்து வெளியே வருவேன். உதாரணமாக சொல்வதென்றால், "அறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு" என்னும் இடத்திற்கு சென்று வந்தபோது வயிறு நிறைந்தது, ஆனால் மனம் நிறையவில்லை..... ஒரு உணவு உண்ணும்போது நாம் ஐம்புலன்களையும் உபயோகிக்கிறோம் இல்லையா, ஆனால் மனதை நிறைப்பது என்பது எப்போதாவது மட்டுமே கிட்டும். இந்த முறை ஏலகிரி சென்று இருந்தபோது அப்படி கிட்டியது !! 

திரு. நாகராஜ், ஹோட்டல் ஏலகிரி, ஜோலார்பேட்டை

ஒரு உணவகத்திற்கு நீங்கள் செல்லும்போதும், வெளியில் வரும்போதும் நின்று கவனித்தால் வெளியில் சில முகங்கள் பசியின் களைப்போடு தென்படும். நான் எழுதும் அறுசுவை பகுதிகளில் உணவை தேடி சென்று உண்பேன், ஒவ்வொரு உணவகத்திலும் நிறையும் குறையும் உண்டு. மிகுந்த ருசியான உணவு என்று தேடி செல்லும் இடத்தில் சர்விஸ் சரி இல்லாமல் இருக்கும், சர்விஸ் நன்றாக இருக்கும் பட்சத்தில் சுத்தம் உருக்காது, சுத்தம் இருக்கும் பட்சத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும், இப்படி நிறைய நிறைய உண்டு..... ஆனால் எல்லா இடத்திலும் ருசி என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த உணவகம் சென்றாலும் வயிறு நிரம்பும், ஆனால் மனது நிரம்புவது என்பது சிரமம். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகே ஹோட்டல் வைத்திருக்கும் இந்த தம்பதி... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் என்று பலருக்கும் தினம்தோறும் இலவசமாகவே உணவைத் தந்துவருகிறார்கள். இதுமட்டுமா... குறைவான வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு... பாதி விலைதான்!


 இந்த முறை ஜோலார்பேட்டை வழியே செல்லும்போது இங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ரெயில்வே ஸ்டேஷன் செல்ல திரும்பும் இடத்தில் அமைந்து இருக்கிறது இந்த ஹோட்டல், மிக சிறிய கடை. தூரத்தில் இருந்து பார்க்கும்போதே சிலேட்டில் ஏதோ எழுதி தொங்க விட்டு இருப்பது என்பது தெரிகிறது, சற்று நெருங்கி சென்று பார்க்கும்போது அந்த கடைக்கு பெயர் பலகை எதுவும் இல்லை என்பது தெரிகிறது....... முதியவர்களுக்கு 8-11 வரை இலவச உணவு, குழந்தைக்கு பால் இல்லை என்றால் இலவசம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதி விலை, மன நலம் குன்றியவர்களுக்கு இலவசம் என்று எழுதி வைத்து இருக்கிறார், அதே போல் நான் சென்று இருந்தபோது சிலர் அவருக்கு வணக்கம் மட்டும் சொல்லி செல்வதையும் பார்த்தேன். ''பொதுவா, மனநிலை பாதிக்கப்பட்டவங்க... பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடைகளைக் கடந்து போறப்ப... நிக்க மாட்டாங்க. ஆனா, டீக்கடை, ஹோட்டல்னு பார்த்துட்டா... நின்னுடுவாங்க. சுயநினைவு இல்லைனாலும், சாப்பாட்டோட தேவை அவங்களுக்கு நல்லாவே தெரியுறதுதான் காரணம். ஆனா, அதை பூர்த்தி செய்துக்கற வழிதான் தெரியாது. அதனால, தினமும் காலையில சாப்பாட்டை பார்சல் பண்ணி எடுத்துட்டு போய், ரயில்வே ஜங்ஷனுக்குள்ள இப்படிப்பட்ட ஆளுங்கள தேடித்தேடி கொடுத்துவிட்டு வருவேன்'' என்று நாகராஜ் சொன்னபோது, வியப்பில் விழிகள் அசையவில்லை.
ஒரு ஓரத்தில் பரோட்டா மாஸ்டர் பரோட்டா போட்டு கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் சிறிய டீ கடை. லாபம் என்று பார்த்து இருந்தால் அந்த மெயின் ரோட்டில் அவர் ஒரு பரோட்டாவை சுமார் இருபது ரூபாய் என்று கூட விக்கலாம், ஆனால் இது போன்ற சேவை செய்யும் மனது உடையவரை பார்ப்பது கடினம். அவரிடம் இரண்டு பொட்டலங்களில் பரோட்டா வாங்கி கொண்டு, ஒரு டீ மட்டும் வாங்கி குடித்துவிட்டு சிறிது பேசினேன். மனது நிறைவாக இருந்தது........ செல்லும் வழியில் அந்த பரோட்டா பொட்டலங்களை ஏழைகளுக்கு தானம் செய்தோம். சில நேரங்களில் ருசி என்பது நாக்குக்கு மட்டுமே தெரியும் என்பது பொய்த்து போனது, அன்று மனதில் இனம் புரியாத சந்தோசமும், மனதுக்கும் ருசி தெரிந்தது போல ஒரு எண்ணம் !!அடுத்த முறை ஜோலார்பேட்டை செல்லும்போது இங்கு சாப்பிட்டு பாருங்களேன், நளபாகமும் சாப்பிட்டது போல ஒரு உணர்வு வரும் !! இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதினால்தான் மழை பெய்கிறது போலும் என்று நினைக்கும்போதே எனது நெற்றியில் விழுந்தது ஒரு துளி !!


Labels : Suresh, Kadalpayanangal, Jolarpettai, vellore, meals free, great human being, support him, arusuvai, feels good

20 comments:

 1. நல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜி.... உங்களின் போன் நம்பர் கொஞ்சம் குடுங்களேன் !

   Delete
 2. நல்லோர் ஒருவர் பொருட்டு பெய்யும் பெரு மழை.
  அறிமுகபடுதியத்ற்க்கு நன்றி.
  உதவும் உள்ளம் கொண்டு
  உறுதியாய் உழைக்கும் எல்லொருக்கும்
  எல்லம் வல்ல இறைவன்
  அள்ளி தரட்டும்.

  சரவணகுமார்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சரவணகுமார் !

   Delete
 3. நாகராஜ் அவர்களின் வாழ்வு மேலும் சிறக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார், இவரை போலவே பதிவர்களை கருத்து சொல்லி உற்சாகபடுத்தும் உங்களாளும்தான் மழை பெய்கிறது !

   Delete
 4. திரு,நாகராஜ் அவர்கள் செய்துவரும் சேவையைப் பற்றிப் படித்ததும் மனம் நெகிழ்ந்தது. வயிற்றுடன் மனதுக்கும் நிறைவு உங்களுக்குக் கிட்டியது போன்று எங்களுக்கும் கிட்டியது. அவர் நீடூழி வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பால கணேஷ் சார், தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 5. Long live Mr.nagaraj, God bless you and your supporting family.

  ReplyDelete
 6. அற்புதம் சீனியர்... படித்த போது ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்பட்டது...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கார்த்திக், நீங்களும் ப்ளொக்கில் அசத்தி வருவதை உங்களின் பதிவுகளில் பார்க்கிறேன், நமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கிறோம் !

   Delete
 7. வணக்கம்
  இப்படியான நல்லவர்கள் இருக்கத்தான் செய்வர்கள் வாழ்க

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன், தங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சியை அளித்தது !

   Delete
 8. நல்லமனம்படைத்த தம்பதிகள். வாழ்த்துவோம்.

  ReplyDelete
 9. இது போன வாரம் ஜெகதீஷ்... நாமளும் இதுபோல ஒரு முறை சென்று வருவோமே !

  ReplyDelete