"பதனீ..... பதனீ"..... சிறு வயதில் காலை ஏழு மணிக்கு இப்படி ஒரு குரல் என்னை எழுப்பும். பல நாட்கள் அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வப்படவில்லை, ஆனால் அதன் சுவை தெரிந்ததில் இருந்து குரல் கேட்டவுடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் எழுந்து, அம்மாவிடம் நச்சரித்து ஒரு சொம்பில் வாங்கி வருவேன் !! இந்த தலைமுறைக்கு, அதுவும் நகரத்தில் வாழும் சிறுவர்களுக்கு இதன் சுவை தெரியுமா ?! முதலில் அவர்கள் பனைமரத்தை பார்த்து இருக்கிறார்களா என்பதே சந்தேகமே. நமது சிறு வயதில் எல்லாம் இயற்க்கை கொடுத்த தின்பண்டங்களே அதிகம், செயற்கை என்பது கடையில் கிடைத்தாலும் அந்த இயற்கையின் ருசி என்பது நாம் அறிவோம் என்பதுதான் நிஜம். என்னதான் இளநீர் குடித்தாலும், இந்த பதநீரை சொம்பில் வாங்கி குடிக்கும்போது அந்த சுண்ணாம்பின் சுவை சேர்த்த அந்த நீர்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நாக்கு ஊருதையா !!
பனை மரம் என்பது எல்லாம் ஊருக்கு வெளியே இருக்கும் என்பது எழுதப்படாத விதி, அதுவும் அந்த பனைமர ஓலையை எடுத்து விளையாடியது எல்லாம் மறக்கவே முடியாத ஒன்று. நுங்கு என்பதை ஒருமுறை சுவைத்தபோது அதன் உள் இருக்கும் தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது, பின்னர் பனை மரத்தில் இருந்துதான் நுங்கு வருகிறது என்று தெரிந்தபின் இந்த பதநீர் நுங்கில் இருந்துதான் எடுக்கின்றனர் என்றே நினைத்திருந்தேன்....... சிறிய சிறிய நுங்குகளை பிரித்து தண்ணீர் எடுத்து அதை இரண்டு குடங்களில் தூக்கி வரும்போது எவ்வளவு வேலை என்று ஆச்சர்யமாக இருந்தது, ஆனால் உண்மை புரிந்தபோது அதிசயமாக இருந்தது எனலாம். நீங்கள் இந்த பதநீர் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்து இருக்கிறீர்களா ?!


பனை மரம் என்பது தானாக வளரும் என்பார்கள், அதை பராமரிக்க தேவை இருக்காது, இதனால் இதன் கிளைகள் அவ்வப்போது காய்ந்து கீழே விழுகும், அதை பனங்கருக்கு என்பார்கள், அது கத்தி போன்று கூர்மையாக இருக்கும், ஒரு விளறு விளாரினால் ரத்தம் தெறிக்கும். அந்த மரத்தில் காயம் படாமல் ஏறி, அது பூபூத்து இருக்கும் போது, அதன் பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டி விடுவார்கள், இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார் !!
பதநீர் தயாராவதை விடுங்கள், அதை சிறுவயதில் நாம் அதிகம் பார்த்து இருக்க மாட்டோம், இந்த பதநீர் கொண்டு வருபவர்களை பார்த்து இருக்கிறீர்களா ? நன்கு கருத்த கட்டுமஸ்தான உடம்பு, ஒரு பிரம்பு கழியில் இரண்டு பக்கமும் கயிறு கட்டி, அதில் ஒரு பானை வைத்து பேலன்ஸ் செய்து கொண்டு வருவார்கள்....... "ஏம்பா.... பதனீ.... கொஞ்சம் நில்லு" என்றவுடன் சரட்டென்று நின்று கம்பை அப்படியே தூக்கி திரும்பி மறு தோளில் வைத்து என்ன தாயீ..... என்று வந்து இறக்கி வைக்க, எனது கண்கள் அந்த பிரம்பையே பார்த்துக்கொண்டு இருக்கும். பதனி எவ்வளவுப்பா என்று கேட்க்கும்போதே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் என்று பக்கத்தில் இருக்கும் சிறு பயல்களுக்கு என்று சொம்பில் சிறிது எடுத்து முதலில் குடிச்சு பாருங்க என்று கொடுக்க...... அந்த சொம்பை எடுத்து அண்ணாந்து கொஞ்சம் ஊற்றும்போது, முதல் மடக்கில் தொண்டை கொஞ்சம் சுண்ணாம்பினால் எரியும், அடுத்த நொடியே சிறிது இனிப்பு நாக்கில் வேகமாக பரவும், பின்னர் கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் சுண்ணாம்பு என்று தித்திப்பு இருக்கும்....... குடித்து முடித்தவுடன் அம்மாவை பார்த்து இன்னும் கொஞ்சம் என்று கேட்க, அவர் விலையை குறைத்து கேட்டாலும் இப்போது பலன் இருக்காது !!
பதநீரை சொம்பினில் ஊற்றி குடிப்பது ஒரு வகை என்றால், அதை பனை மர இலையை கொண்டு ஒரு குழி உருவாக்கி குடிப்பது என்பது இன்னொரு வகை. ஒரு இலையை எடுத்து சரசரவென்று மடித்து ஒரு குழி உருவாக்கி, அதில் கொஞ்சம் பதநீர் ஊற்ற, அந்த இலையின் வாசனையோடு அருந்துவது என்பது பேரின்பம் அல்லாமல் வேறென்ன. இன்று விதவிதமான விதங்களில் எவ்வளவோ குடிக்கின்றோம் ஆனால் இப்படி பனை ஓலையில் குடிப்பது எவ்வளவு சுகம் !!
இதை இன்று குடிக்கும்போது, சிறு வயது நினைவுகள் பல வந்து செல்கின்றன, இன்று காரில் செல்லும்போது பனை மரத்தினை பார்க்கும்போது அந்த கரடு முரடான மரம் எவ்வளவு சுவையானதை உள்ளே வைத்து இருக்கின்றது...... அப்பாவை திரும்பி பார்க்கிறேன், இவரும் பனை மரத்தினை போலதானே என்று மனதில் தோன்றும்போது கேட்கிறார்...... பனை மரம் ஜாஸ்தியா இருக்கு, பக்கத்தில் பதநீர் எங்கேயாவது இருந்தா கொஞ்சம் காரை நிறுத்து..... இப்போது அவர் குழந்தையாகிறார் !!
Labels : Suresh, Kadalpayanangal, sirupillaiyaavom, child, childhood, Pathaneer, Palm water, Palm, Amazing drink