Monday, August 11, 2014

உலகமகாசுவை - சமையல்....சாப்பாடு.....உங்க முன்னாலே !!

உலகின் ஒவ்வொரு நாடிலும் ஒவ்வொரு சுவை, எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் அந்த ஊரின் பிரபல உணவு அல்லது உணவகம் செல்ல முனைவேன். ஒவ்வொரு நாட்டிலும் வித விதமான உணவுகள் இருந்தாலும் பரிமாறும் விதத்தில் ஒரே ஒரு உணவகம் என்னை மிகவும் கவர்ந்தது என்றால் அது டெபயன்கி (Teppanyaki) ஸ்டீக் ஹவுஸ் எனப்படும் ஜப்பான் உணவு வகைதான். இந்த வகை உணவு உண்ணும், செய்யப்படும், பரிமாறும் விதத்தை கண்டிப்பாக எங்கேயும் நாம் காண முடியாது ! எந்த ஒரு உணவகம் சென்றாலும் நாம் டேபிளில் உட்கார்ந்து இருக்க, என்ன வேண்டும் என்று கேட்டு சிறிது நேரம் சென்று உணவை கொண்டு வருவார்கள் இல்லையா ? ஆனால் இங்கே கதையே வேற........ உங்களது முன்தான் உணவே தயாராகும் !


முதலில் உள்ளே நுழையும்போது உங்களுக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியாது, உற்று பார்த்தால் டேபிளின் ஒரு பக்கம் மட்டும் உண்ணும் தட்டு வைக்கப்படாமல் இருக்கும். அட, ஒரு மேஜையில்தான் அப்படி மறந்து இருப்பார்கள் என்று நினைத்தால் அங்கு இருக்கும் எல்லா மேஜையிலும் அப்படிதான் இருக்கும் ! ஒரு இடத்தில் உங்களை உட்கார வைத்தபிறகு மெனு கார்டை கையில் கொடுக்க படித்து பார்த்து விட்டு எனக்கு சிக்கன் ரைஸ், கொஞ்சம் வெங்காயம் போட்ட மட்டன் கறி என்றெல்லாம் ஆர்டர் செய்துவிட்டு சற்று உன்னிப்பாக பார்த்தால், உங்களது முன்னே இருப்பது மேஜை மாதிரி தெரியவில்லையே என்ற சந்தேகம் எழும் ! உற்று பார்த்தால் அட தோசை கல்லு என்று புரியும்...... அதுதான் டெபயன்கி (Teppanyaki), ஜப்பானிய மொழியில் டெப்பன் என்றால் இரும்பு கல்லு, யாகி என்றால் வறுப்பது எனலாம். கொஞ்சம் கீழே குனிந்து பார்த்தால் தெரியும், கேஸ் அடுப்பு ஒன்று உள்ளே இருப்பது....... அட பாவிகளா, அடுப்பை சுற்றி இப்படி ஆதிவாசி மாதிரி உட்கார வைச்சிடீங்கலேடா !!
 என்னடா இது அப்படின்னு நாம ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருக்கும்போதே, உங்களுக்கு தேவையான ட்ரின்க் மற்றும் சாலட் வரும். அதுக்கு பின்னே ஒரு சின்ன வண்டிய தள்ளிகிட்டு ஒரு செப் (அதாங்க, சமயகாரரு !!) வருவாரு. ஏதோ சண்டைக்கு வர மாதிரியே இடுப்பை சுற்றி கத்தி, கபடா எல்லாம் எடுத்துக்கிட்டு, வண்டியை வைச்சிட்டு எல்லோருக்கும் கோநிசிவா அப்படின்னுவார், பயந்துடாதீங்க அவர் ஹலோ அப்படின்னு ஜப்பானிய மொழியில் சொன்னார் ! அப்புறம் நீங்க இதுதான் ஆர்டர் பண்ணுணீங்களா அப்படின்னு ஒரு தடவை படிச்சு காட்டுவார், அப்புறம் தோசை கல்லை கிளீன் பண்ணிட்டு, அதில் எண்ணையை ஊத்தி கொஞ்சம் வெங்காயம் போடுவார்....... அப்போ அவர் பண்ற அலும்பு இருக்கே !! 
 


இந்த வகை உணவகத்தின் சிறப்பே, செப் அவர்களுக்கும் உங்களுக்கும் நடக்கும் சுவாரசியமான உரையாடலும், அவர் செய்யும் குறும்புகளும்தான். வந்ததில் இருந்து செப் சும்மாவே இல்லாமல், தோசை கரண்டியை சுற்றி சுற்றி ரஜினி ஸ்டைலில் போடுவது, ஜோக் அடிப்பது, டான்ஸ் ஆடுவது, உணவில் படம் போடுவது என்று செய்துக்கொண்டே இருப்பார்கள். எங்களுக்கு வந்த செப் வந்ததில் இருந்து கரண்டியை வகை வகையாக தூக்கி போட்டுக்கொண்டே இருந்தார், சமயங்களில் முகத்துக்கு அருகே வரை அப்படி தூக்கி போடுவது சட்டென்று பிடிப்பது என்று லூட்டிதான். இதில் சில சமயங்களில் சண்டை நடப்பதும் உண்டு, இப்படிதான் சீனாவில் ஒரு முறை இப்படி தூக்கி போடும்போது எங்கள் நண்பர் ஒருவர் மீது கரண்டி முதல் முறை தவறி விழுந்தது, சரி போகட்டும் என்று விட்டால் மீண்டும் அதே போல் விழுக இரண்டு பேருக்கும் பெரும் சண்டை...... அந்த சண்டையில்தான் விலக்கிவிட போன என் சட்டை கிழிஞ்சது..... அது சரி சண்டையில கிழியாத சட்டை அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன?!
 அதுக்கு அப்புறம் நம்ம முன்னாடியே வெங்காயத்தை நல்லா வதக்கி, கறியை போட்டு எந்த அளவுக்கு செய்யணும் அப்படின்னு கேட்டு செய்வாங்க, இப்படி செய்யும்போது அந்த குரூப் ஆட்களுக்கு ஏற்ற மாதிரி உருவத்தை அந்த உணவில் கொண்டு வருவாங்க. உதாரணமாக நாங்க அதிகம் சிக்கன் ஆர்டர் செய்து இருந்ததால், எங்களுக்கு முட்டையை ஊற்றி கோழி உருவத்தை ஆம்பலேட் போல ஊற்றி கொக் கொக் கொக் என்று எங்களை சுற்றி ஓடி வந்தார். இதுவே பக்கத்து டேபிளில் சிறு வயது தம்பதிகள் இருந்ததால் அவர்களுக்கு ஹார்ட் படம் போட்டு அம்பு விட்டார் இன்னொரு செப் !
 


 
இப்படி எல்லாத்தையும் போட்டு கொஞ்சம் ரைஸ் போட்டு, அதை அப்படியே பிரைட் ரைஸ் ஆக்கி விட்டு  எல்லோருக்கும் ஒரு ஒரு கப் கொடுப்பார், அதை சாப்பிட்டு கொண்டு இருக்கும்போதே அடுத்தது அவர் நாம ஆர்டர் செய்து இருந்த மட்டன், சிக்கன், பீப் வகைகளை அந்த தோசை கல்லில் (இனிமே அப்படி சொல்ல கூடாதோ ?!) போட்டு புரட்ட புரட்ட..... இங்க நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும் !பொதுவா நம்ம வீட்டில் எல்லாம் கறியை நல்லா வேக வைச்சு, மசாலா பொடி போட்டு வதக்க ஆரம்பிக்கும்போதே வாசனையில் இங்கே மூக்கு வேர்க்க ஆரம்பிச்சு, வாய் உள்ளேயும் வேர்க்க ஆரம்பிச்சிடும் இல்லையா. இங்க கதையே வேற, அவர் எடுத்து போட்ட கறியை, நமக்கு தேவையான அளவு மசாலா போட்டு நாம கேட்டபடி சமைச்சு குடுப்பார்..... அதுக்கு அப்புறமாதான் தெரியும் நாம சொல்லி இருக்கவே தேவை இல்லைன்னு, நீங்களே பண்ணி குடுங்க அண்ணே அப்படின்னு சொல்லி இருந்தாலே அது நல்லா இருக்கும், கொஞ்சம் மசாலா தூக்கலா போடு, கலர் கொஞ்சம் போடு, உப்பு போடு அப்படின்னு படுத்தி எடுத்தா அப்புறம் எப்படி இருக்கும். நல்ல வேளை நான் கொஞ்சமாதான் சொன்னேன், அதனால் அந்த கறி நல்லா இருந்துச்சு ! இப்படி வதக்கும்போது இவ்வளவு பக்கத்தில் மூக்கை வைச்சிகிட்டு இருந்தா, நாக்கில் எச்சில் வடியதான் செய்யும், என்ன அது தோசை கல்லில் பட கூடாது !
 


அப்பாடா அப்படின்னு ஒரு வழியா ப்ளேட்டில் எல்லாம் வந்தவுடன், அந்த செப் அரிகதொ கொசைமச்தா அப்படின்னு ஜப்பானிய மொழியில் நன்றி சொல்லும்போது நீங்களும் அதை அப்படியே சொல்லி பாருங்க..... நாக்கு சுளுகிடுச்சா, ஹா ஹா ஹா இனிமே எப்படி சாப்பிடுவேன் !!

அந்த இடத்தில் என்ன என்ன இருக்கும் அப்படின்னு கேட்கிறவங்க, கீழே இருக்கும் மெனு கார்டு பாருங்களேன்.....


Labels : Suresh, Kadalpayanangal, World taste, Arusuvai, World, Teppanyaki, Japanese restaurant, Different, cuisine 

13 comments:

 1. வணக்கம்
  அண்ணா.

  ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உணவு வகைகளை அறிமுகம் செய்து எங்களை அசத்தி விட்டீர்கள் இப்படியான முறையை நான் நான் பார்த்ததில்லை. பகிர்வுக்கு நன்றி
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன், உங்களது கவிதையை போலவே நானும் புதிய களம் தேடுகிறேன் ஆனால் சுவையில், என்ன இருந்தாலும் உங்களது கவிதையின் சுவையை எட்ட முடியவில்லையே !

   Delete
 2. முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் போலவே... சுவாரஸ்யம்தான். நேரமிருந்தால் எங்கள் ப்ளாக் பக்கம் வந்து தோசை புராணம் படியுங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம், இது முற்றிலுமே புதிய அனுபவமாக இருந்தது எனக்கு ! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 3. Replies
  1. ஆம் பாரதி, இது நான் அமெரிக்காவில் உண்ட உணவு.... நீங்கள் சொல்வது சரிதான் !

   Delete
 4. வித்தியாசமான உணவகம்தான்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தளிர் சுரேஷ் !

   Delete
 5. ஜப்பான் உணவுன்னு தெரியுது... எந்த ஊருன்னு சொல்லலையே... ஏன்னா நீங்க உலகம் சுற்றும் வாலிபன் ஆச்சே....

  ReplyDelete
  Replies
  1. இதில் எதுவும் உள்குத்து இல்லையே ?! ஆம், இது நான் அமெரிக்காவில் உண்ட ஜப்பான் உணவு ! நன்றி !

   Delete
 6. அப்பப்ப, இறைச்சி, இரால் துண்டுகளை எதோ நாய்க்குத் தூக்கிப் போடுவதைப்போல் மேசையைச் சுத்தி உக்கார்ந்துருக்கும் மக்கள்க்கு அவர்கள் எதிர்பாரா சமயத்தில் தூக்கிப்போடுவதை, மக்கள்ஸ் கவனமா வாயில் புடிச்சுக்கணும். இங்கே நம்மூர் டெப்பன்யாகியில் பார்த்தது.

  எனக்கு வெஜிடேரியன் என்பதால் தனியா ஒரு மேஜையில் இடம் கிடைச்சது, மூணு கோர்ஸ் மீல். ஃப்ரைய்ட் டோஃபூவையே வெவ்வேற டிஸைன் தட்டில் மூணுவாட்டி கொண்டுவந்து விளம்புனாங்க சப்பானிய பணிப்பெண்:(

  ஆஃபீஸ் பார்ட்டி என்பதால் வீடு திரும்பும்போது, கோபாலுக்கு நல்லா கொடுக்கும்படி ஆச்சு:(

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, சரியா சொன்னீங்க. கோபால் சார் பாவம், அவர் என்ன பண்ணுவார்.


   வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம் !

   Delete