"ஜூது !"..... முதன் முதலில் சூதாட்டம் என்று ஆடியது எட்டாவது படித்துக்கொண்டு இருந்தபோது !!. நீங்கள் நினைப்பது போல காசு வைத்து சூதாடுவது, கோலி குண்டு பந்தயம் வைப்பது, சீட்டுக்கு பணம் வைப்பது, சிலாங்கல்லில் காசு கட்டுவது என்பதெல்லாம் நான் சிறுவயதிலேயே செய்து பிஞ்சிலேயே பழுத்து விட்டதாலும், அது சிறு பிள்ளைகள் சூதாட்டம் என்பதாலும் அதையெல்லாம் நான் இங்கே சொல்ல வரவில்லை, இந்த அஜித் படத்தில், பழைய ரஜினி படத்தில், ஜெய்சங்கர் படத்தில் எல்லாம் ஒரு டேபிளில் சுற்றி கோட்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்துக்கொண்டு சீட்டு போட்டு கொண்டு இருப்பது, ஒரு மெசினின் கைபுடியை இழுக்க மூன்று மாம்பழம் வந்தால் பணம் கொட்டுவது என்றெல்லாம் விளையாடுவதைத்தான் இங்கே நான் சூது என்று குறிப்பிட விரும்புகிறேன் யுவர் ஆனர் ! நான் எட்டாவது படிக்கும்போது பள்ளிகூடத்தில் இருந்து மிக தள்ளி ஒரு பர்மா பஜார் ஒன்று இருக்கும், எனது நண்பன் ஒருவனிடத்தில் நிறைய காசு புழங்க எப்படிடா என்று கேட்க நான் ஜெயிச்சது, நீயும் ஜெயிக்கலாம் என்று ஒரு MLM மார்க்கெட்டிங் கொடுத்தான், அதை நம்பி ஆசைப்பட்டு அடுத்த நாள் அவனோடு சென்றேன். ஒரு இடத்தில் படுதா போட்டு மூடி வைத்து அந்த பக்கம் சில்லிங் சில்லிங் என்று ஓசை மட்டும் கேட்டது.
சிங்கப்பூர் சூது....... |
கையில் இருந்த பத்து ரூபாயை அவன் கொடுத்து இருபது டோக்கன் வாங்கினான், ஒரு மெசினின் முன்பு சென்று ஒவ்வொரு டோக்கனாக போட்டு ஒரு கைபிடியை இழுக்க, எப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று ஒரே விதமான உருவம் வருகிறதோ அப்போதெல்லாம் டோக்கன் கீழே கொட்டும். முடிவில் அவன் சேர்த்த டோக்கன் எல்லாம் சேர்த்து கொடுக்க அன்று மட்டும் லாபம் மூன்று ரூபாய். அடுத்த நாள் நானும் அப்பாவிடம் இருந்து பத்து ரூபாய் திருடி சென்று இழுத்து இழுத்து பார்த்து எல்லாமும் போச்சு :-(, அடுத்த அடுத்த நாளில் இருந்து அவனோடு சென்று வெறுமெனே பார்த்துக்கொண்டு இருக்க ஒரு நாள் அந்த டோக்கன் கொடுக்கும் ஆள் சின்ன பசங்கள் எல்லாம் இங்க வரகூடாது என்று விரட்டி விட்டார், அடுத்த நாள் அதை கவனிக்காமல் போக பார்க்க எங்களுக்கு முன்னாலேயே போலீஸ் வந்து அங்கு இருந்தவர்களை குமிறி கொண்டு இருந்தது..... நாங்க இந்த பக்கம் எஸ்கேப் !! என்னுடைய அந்த வயசில் இந்த சூதாட்டத்தை விட்டேன்..... ஆனால் அப்போது தெரியாது என்னை ஆண்டவன் உலகம் முழுவதும் போய் சூதாட வைக்க போகிறான் என்று !
தென் ஆப்ரிக்கா சூது....... |
உலகில் எங்கு சென்றாலும் இந்த சூதாடுவது மட்டும் எல்லோரும் பைத்தியம் பிடித்தது போல செய்வார்கள். முதன் முதலில் கோவாவில் படகு சூதாட்டத்தில் ஆரம்பித்தேன், பின்னர் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா என்று எங்கு சென்றாலும் வாடா மச்சான் என்று உள்ளூர் ஆட்கள் என்னை கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள். இங்குதான் நம்ம ஊரில் இதுக்கு பேரு சூது..... வெளிநாடுகளில் எல்லாம் கேசினோ !! (பொதுவாக கேசினோ உள்ளே படம் எடுக்க அனுமதி கிடையாது, இங்கே பார்க்கும் படங்கள் எல்லாம் அந்த அந்த நாட்டில் கேசினோக்களின் வெளியே எடுத்தேன், இவ்வளவு தூரம் போனவன் உள்ளே போய் இருக்க மாட்டேனா என்ன :-)). இங்கு விளையாடப்படும் விளையாட்டின் பேரை கேட்டாலே உங்களுக்கு தலையை சுத்தும்...... போக்கர், ப்ளாக் ஜாக், பெட்டிங் பூல், ஏசி டியுசி, போர் கார்டு போக்கர், கீனோ, மக்ஜோங், ஸ்பூப், டூ அப், ஸ்லாட் மெசின் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு விளையாட்டும் எப்படி விளையாடுவது என்றெல்லாம் இங்கே நான் சொல்லபோவதில்லை ஆனால் இங்கு நான் பார்த்த சுவாரசியத்தை மட்டும் பகிர்கிறேன்.
ஆஸ்திரேலியா சூது..... |
ஒரு முறை சிங்கப்பூரில் மரினா பே கேசினோவில் கையில் இருநூறு வெள்ளி (சுமார் பத்தாயிரம் ரூபாய்) வைத்துக்கொண்டு கெத்தாக உள்ளே நுழைந்து டோக்கன் வாங்க நின்று கொண்டு இருந்தேன். பக்கத்து கவுன்டரில் ஒரு ஆள் ஒரு சிறிய பையை பிரித்து ஒரு கட்டு ஐம்பது வெள்ளி நோட்டு கட்டு ஒன்றை எடுத்து வைத்தான். பின்னர் இன்னொன்று, இன்னொன்று என்று எடுத்து வைத்துக்கொண்டே இருந்தான், ஒரு நோட்டு கட்டு என்பது ரெண்டரை லட்சம், அவன் அன்று எடுத்து வைத்தது கண்டிப்பாக சுமார் நாற்ப்பது லட்சம் இருக்கும் பதிலுக்கு அவனுக்கு சுமார் 150 டோக்கன் மட்டும் கொடுத்தனர், எனக்கு இங்கே வேர்க்க ஆரம்பித்தது, என்னுடைய இருநூறு வெள்ளியை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போங்கடா.... போய் புள்ளகுட்டிங்களை படிக்க வைப்போம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு கிளம்பினேன். பின்னர் இங்கு மட்டும் அல்ல, மற்ற எல்லா நாடுகளிலும் இது போலவே கட்டு கட்டாக பணம் கொண்டு விளையாடும் கும்பலை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் !! டேய்.... என்ன வேலைடா செய்யறீங்க என்று கேட்கலாம் என்று நினைப்பேன், இன்று வரை கேட்டதில்லை...... சொல்ல மறந்திட்டேனே, முன்னால் சொன்ன அந்த கட்டு கட்டு நோட்டு பார்ட்டி அன்று கிளம்பும்போது எனக்கு முன்னால் சென்று கொண்டு இருந்தான், அவனின் பக்கத்தில் இருந்தவன் இன்னைக்கு எவ்வளவு ஜெயிச்ச என்று கேட்க வழக்கம் போல தோத்துட்டேன் என்று சொல்ல, வழக்கம் போலவா என்று எனக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லை !
இந்த வகை கேசினோக்கள் மிகவும் பெரியதாக இருக்கும், உள்ளே நுழைந்து சும்மா சுற்றி விட்டு வெளியில் வந்தாலே இரண்டு மணி நேரம் போய் இருக்கும். குளு குளு இடம், மங்கலான வெளிச்சம், மெல்ல கசியும் இசை, குடிக்க பானங்கள், கண்ணை பறிக்கும் உடைகள் என்று சொர்க்கலோகம்தான். நம்மை போன்ற ஆட்கள் எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் எடுத்துக்கொண்டு போவோம், கொஞ்சம் பணம் இழக்க ஆரம்பித்த உடனேயே ஐயோ போதும் என்று எழுந்து விடுவோம், சிலர் ஒரு மாத சம்பளத்தை ஒரே மணி நேரத்தில் இழந்ததை நேரில் பார்த்து இருக்கிறேன். ஒவ்வொரு டேபிள் மாறி மாறி நமது அதிர்ஷ்டத்தை தேடி கொண்டு இருப்பவரை பார்த்தால் பாவமாக இருக்கும், ஆனால் இங்கு உள்ளே போவதற்கு நீங்கள் சூ போட்டு இருக்க வேண்டும், ஆடை கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு உண்டு, வெளி நாட்டவர்களுக்கு கண்டிப்பாக பாஸ்போர்ட் எடுத்து சென்று இருக்க வேண்டும் ! ஒரு சொர்க்கலோகம் எப்படி குஷியும் கூத்தொடும் இருக்கும் என்பதற்கு நீங்கள் இந்த கேசிநோக்களின் உள்ளே சென்று பார்க்கலாம், நரகம் எப்படி இருக்கும் என்று பார்க்க இந்த கேசிநோக்களின் வெளி வாசல் வந்து பணம் இழந்தவர்களிடம் கேட்டால் தெரிந்து விடும் !
இந்த வகை கேசிநோக்களில் பிரைவேட் அறை என்று ஒன்று இருக்கும், இதில் உள்ளே செல்லவே லட்சகணக்கில் முன் பணம் வேண்டும். இது போன்ற பிரைவேட் அறைகளில் விளையாடுவதற்கு யார் வரபோகிறார்கள், காற்று வாங்கும் என்று நினைத்த எனக்கு இந்த அறைகள் எல்லாம் பல வாரங்களுக்கு முன்பாகவே புக் ஆகிவிடும் என்று தெரிந்து அதிர்ச்சிதான். சவுத் ஆப்ரிகா சென்று இருந்த போது அங்கு இருந்த ஒரு நண்பர் (தங்க சுரங்கம் உண்டு அவருக்கு !) வாங்களேன் அப்படியே சும்மா ஒரு ரவுண்டு போகலாம் என்று அவரது ஆடி காரில் கூப்பிட்டு கொண்டு போய், நடுவில் ஐயோ மறந்திட்டேன் இங்க ஒரு கேசினோ இருக்கு ஒரு ரூம் புக் பண்ணி இருந்தேன் போயிட்டு போகலாம் வரீங்களா என்றார், எனக்கு என்ன போகலாம் என்றேன். கேசினோ உள்ளே நுழைந்து வெளியே இருந்த அவ்வளவு பெரிய பெரிய விளையாட்டுக்களில் எல்லாம் போகாமல் இரண்டு தடி தாண்டவராயங்கள் வெட்டியாக ஒரு கதவை காவல் காத்துக்கொண்டு இருக்க, அவர்களிடம் சென்று ஏதோ பேச அவர்கள் அதுவரை உம் என்று இருந்தவர்கள் இப்போது சிறிது சிரித்து ப்ளீஸ் கோ இன் சார் என்று வழி விட்டார்கள்.
உள்ளே நுழைந்தால் எங்களது இரண்டு பக்கமும் கதவுகள் ஹோட்டல் போல போய் கொண்டே இருந்தது, நண்பர் கதவில் இருந்த நம்பரை பார்த்து உள்ளே நுழைய அங்கே ஒரு கும்பல் சீட்டு ஆடிக்கொண்டு இருந்தது, அதில் ஒருவரது மடியில் (நிஜமா சார்... இதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்திருக்கேன், இப்போ நேரிலேயே பார்த்தேன்!!) ஒரு அழகு பதுமை உட்கார்ந்துக்கொண்டு அவரது சீட்டுக்களை பார்த்துக்கொண்டு அவ்வப்போது தடவிக்கொண்டு என்று இருந்தது கண்டு ஒரு மாதிரி இருந்தது. நண்பர் உள்ளே நுழைந்து என்னை அறிமுகபடுத்த நீங்களும் ஒரு கை போடுங்களேன் என்று சொல்ல, நானும் கொஞ்சம் கெத்து காண்பிக்கலாமே என்று நினைத்தபோது நண்பர் அதெல்லாம் வேண்டாம், அவருக்கு சரியா விளையாட வராது என்று சொல்லி என்னை அவரின் பின்னே ஒரு இருக்கை போட சொல்லி உட்கார சொன்னார். சரக்கென்று ஒரு செக் புக் எடுத்து கையெழுத்து போட்டு 1 போட்டு சைபர் போட்டுக்கொண்டே இருந்தார், எத்தனை சைபர் என்று எண்ணிக்கொண்டே..... பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம்...... சரக் என்று கிழித்து நீட்ட, அதற்க்கு மேல் போட்ட சைபரை என்ன முடியவில்லை. அதை வாங்கி கொண்டு சென்ற அந்த பேரிளம் மங்கை கொடுத்த பணத்தை சூட்கேசில் போட்டு இருந்தால் சுமார் ஐந்து ஆறாவது வந்து இருக்கும், அவள் அதை டோக்கனாகி கொண்டு வந்து கொடுத்தது...... கொய்யால, வெறும் கையளவுதான். நல்ல வேலை நண்பர் எனக்கு விளையாட தெரியவில்லை என்று சொன்னது நல்லதுதான் என்று நினைத்தேன் !! அவர் விளையாட ஆரம்பிக்க ஒவ்வொரு டோக்கனும் சுமார் பத்தாயிரம், லட்சமாம்...... அவர் அன்று முடிக்கும்போது கொஞ்சமே கொஞ்சம் ஜெயிதிருந்தார் !!
பொதுவாக சூதாட்டம் என்று சொல்லும்போது எதுவுமே தெரியாமல் விளையாடலாம் என்பது ஸ்லாடிங் மெசின் ! உதாரணமாக சொல்வதென்றால், உங்களது முன் மூன்று அல்லது நான்கு வரிசை இருக்கும், நீங்கள் அந்த மெசினின் சைடில் இருக்கும் கைபிடியை பெட் வைத்துவிட்டு இழுக்க, உங்களுக்கு உதாரணமாக இரண்டு வரிசை மாம்பழம் வந்தால் ஐந்து வைத்தால் ஏழு ரூபாய் கிடைக்கும். மூன்று வரிசை வைத்தால் பத்து ரூபாய் கிடைக்கும், நான்கு வரிசை வைத்தால் இருபது ரூபாய் கிடைக்கும். இந்த விளையாட்டில் முதலில் கிடைப்பது போல போய் கொண்டே இருக்கும், அப்புறம் ஒரு தருணத்தில் பணம் போக ஆரம்பிக்கும். விட்டதை பிடிக்கிறேன் என்று விளையாட விளையாட எல்லாமே போய் விடும்......ஆனால் இதில் ஜாக்பாட் என்று ஒன்று இருக்கிறது !! அதாவது நீங்கள் இப்படியே விளையாடும்போது ஒரு தருணத்தில் எல்லா வடிவங்களுமே வரிசையில் வரும், அந்த தருணத்தில் நீங்கள் கோடீஸ்வரர் என்று மெசின் கூவ ஆரம்பிக்கும்...... உடனே ஒரு ஆள் ஓடி வந்து, உங்களை பத்திரமாக கூட்டி கொண்டு போய் கட்டு கட்டாக பணம் கொடுத்து, கார் கொடுத்து, செக்யூரிட்டி கொடுத்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார், இல்லையென்றால் உங்களை மிரட்டி வழியிலேயே பறித்துக்கொண்டால்...... ஆனால் அது நடக்க எல்லா கிரகங்களும் உச்சத்தில் இருக்க வேண்டும் :-)
இதை விட நான் மிகவும் விரும்பிய கேசினோ என்பது மலேசியாவின் கெண்டிங் மலையில் இருந்ததுதான். இங்கும் மக்கள் சூதாட வருவார்கள், ஆனால் இங்கு உள் அரங்கு, வெளி அரங்கு தீம் பார்க் இருக்கும், அது மட்டும் இல்லாமல் சூதாட வருபவர்களுக்கு என்று அங்கு ஹோட்டல் ரூம் ரொம்பவே சீப் ஆக இருக்கும் ! கொஞ்ச நேரம் சூதாட்டம், கொஞ்சம் நேரம் தீம் பார்க், கொஞ்ச நேரம் தூக்கம் என்று எல்லாமே கலந்து கட்டி இருந்தது..... கொண்டாட்டம்தான் போங்கள் !!
இந்த சூதாட்டம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தால் பக்கம் பக்கமாக போகும். இந்த பகுதியில் உலகில் சூதாட்டம் எப்படி இருக்கும், அதில் என்ன என்ன இருக்கும் என்று சொல்வது மட்டும்தான் நோக்கம். அதில் மிக சிறிய சுவாரசியமான அனுபவத்தைதான் சொல்லி இருக்கிறேன், ஆனால் நிறைய நிறைய அனுபவங்கள்.
சூது கவ்வும்! :))))
ReplyDeleteஎத்தனை அனுபவங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.
மிக்க நன்றி வெங்கட் சார்..... நிஜமாவே சூது கவ்வும்தான் !
Deleteசில காசினோக்களில் உள்நாட்டு மக்களுக்கு அதிக நுழைவுக்கட்டணம்..
ReplyDeleteஅவர்கள் நாட்டு மக்களை பாதுகாத்துக்கொண்டு
வெளிநாட்டு மக்களின் பணத்தை மட்டும் கொள்ளை அடிப்பார்கள்..
வயதானவர்கள் அடிக்ட் ஆனமாதிரி சளைக்காமல் விளையாடுகின்றனர்..!
சரியாக சொன்னீர்கள் நண்பரே,....... அது ஒரு அரசாங்கத்தின் கடமைதானே !
Deleteஅடேங்கப்பா ,சூது பற்றிதெரிஞ்சுகிட்டு சூதானமா நடந்துக்கணும் போலிருக்கே !
ReplyDeleteத ம 1
ஆம் ஜோக்காளி நண்பரே.... இதை பற்றி எதுவும் போட்டதில்லையா நீங்கள் உங்களது பதிவில் !
Deleteவாங்களேன்... ஒரு கை போடுவோம்....!
ReplyDeleteபோடலாமே, அதுக்கு என்கிட்டே பணம் இல்லை, உன்னோட புது வண்டியை வைச்சு விளையாடலாமா !!
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் அனுபவங்களை பதிவாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
இதற்கு அடிமையாகமல்இருந்தால் சரிதான்
என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரவுக்கும், கருத்திற்கும் நன்றி ரூபன்..... உங்களது கவிதைகள் எங்களை அடிமையாக்குகிரதே !
Deleteவாழ்க்கையை அனுபவிக்கிறீர்களய்யா நீர் !!!!
ReplyDeleteஇல்லை ஜெகதீஷ், இதை அனுபவிக்கிறேன் என்று சொல்ல முடியாது, தோற்றால் வாழ்க்கையை இழக்க வேண்டி வரும் !
Deleteஉங்களுடைய அனுபவமே இவ்வளவுன்னா தினம் தினம் லட்சக்கணக்கில 'சரக்'னு செக் கிழிச்சுக்கொடுக்கிறவங்களுக்கு எவ்வளவு இருக்கும்? நமக்கெல்லாம் பதிவைப் படிக்கிற அனுபவம் மட்டுமே!!!!
ReplyDeleteஅவர்களுக்கு எல்லாம் அதிகமான அனுபவங்கள் இருக்கும், ஆனால் பார்வையாளன் ஆன எனக்கு கொஞ்சமே கொஞ்சம்தான்....... உங்களுக்கும் இனிய அனுபவங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் !
Delete