Tuesday, August 19, 2014

நான் ரசித்த கலை - மெழுகு கைகள் !!

கலை..... இந்த உலகில் கலை எனும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சினிமா, டிராமா, கூத்து, ஓவியம், இசை என்பதுதானே ! ஆனால், இந்த உலகில் எவ்வளவு வித்யாசமான கலைகள் எல்லாம் இருக்கிறது தெரியுமா, அதை பகிர்வதுதான் இந்த பகுதியின் நோக்கம், அதில் ஒன்றுதான் இந்த மெழுகு கைகள் சிற்பம் !! மலேசியாவின் கெண்டிங் சென்று இருந்தபோது இதை பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது, ஆர்வம் உந்த ஒரு முறை முயன்று பார்ப்போமே என்று தோன்றியது. சிறு வயதில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருக்கும்போது அந்த கரைந்த மெழுகை கைகளில் தொட்டு விளையாடுவோம் இல்லையா, அதை சொட்டு சொட்டாக விட்டு மலை போல செய்து மெழுகை கரைப்போம், இப்படி மெழுகு என்றாலே  ஆனந்தம்தானே ! மெழுகு சிலை என்று வர்ணனைகள் செய்வோம், அது போல நமக்கு ஒரு சிலை இருந்தால் எப்படி இருக்கும் !!
 
 
 
 
கெண்டிங் என்பது மலேசியாவில் இருக்கும் ஒரு சுற்றுலா தளம், தீம் பார்க்  மற்றும் சூதாட்ட விடுதிகள் நிறைந்த இடம் எனலாம். இங்கு சுற்றி கொண்டு இருக்கும்போது ஒரு கடை கண்ணில் பட்டது, அதை சுற்றி ஒரே கூட்டம், வெளியில் இருந்து பார்க்கும்போது எங்கும் கைகளின் ஓவியங்கள் ஒரு ஆர்வத்தில் எட்டி பார்க்க ஒருவரது கையின் மெழுகு அச்சு உருவாகி கொண்டு இருந்தது. வெகு ஆர்வமாகவும், ஆச்சர்யத்துடனும் நானும் முயன்று பார்க்க சென்றேன். அங்கு பல விதங்களில் உங்களது கைகளின் மாதிரிகளை உருவாக்கலாம், முதலில் எது போன்று அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க சொன்னார்கள். கண்ணாடி பெட்டியினுள் இருந்த மாதிரிகளை பார்த்தேன், டாடா காட்டுவது போன்று, பந்தை பிடிப்பது போன்று, ஹார்ட் வடிவம், ரோஸ் பிடித்து இருப்பது போல, தேசிய கொடி பிடித்து இருப்பது போல, ஒரு விரல் காட்டி, இரு விரல் காட்டி, ஐந்து விரல் காட்டி, சூப்பர் என்று சொல்வது போல என்று நிறைய நிறைய மாடல்கள்..... நான் விக்டரி என்று சொல்வது போல இரு விரல் காட்டுவதை தேர்ந்தெடுத்தேன். அடுத்து என்ன என்று கேட்க பக்கத்தில் கொதித்து கொண்டு இருந்த மெழுகை காட்டி அதன் உள்ளே கையை விட வேண்டும் என்று சொல்ல இங்கே கொஞ்சம் ஜெர்க் அடித்தது !!
 
 
 
ஒரு சிறிய மெழுகு குளம் போன்று ஒரு தொட்டியில் இருந்தது, அதை சுற்றி எங்கும் மெழுகு வழிந்து கொண்டு இருந்தது, அதன் பக்கத்திலேயே குளிர்ந்த தண்ணீர் தொட்டி. முதலில் எனது கைகளை எண்ணை பசை இல்லாமல் சோப்பு போட்டு கழுவ வைத்தனர். எண்ணை பசையுடன் இருந்தால் மெழுகு சரியாக ஒட்டாதாம் ! அடுத்து முதலிலேயே எச்சரிக்கை செய்தனர்..... மெழுகு முதலில் தொடும்போது மட்டும் சூடாக இருப்பது போன்று தோன்றும், அதனால் கையை அசைத்து நீங்கள் கொடுக்கும் போஸ் ஆடிவிட கூடாது, அப்படி செய்தால் மாதிரி சரியாக வராது, அதனால் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் மெழுகு சூட்டை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று. என்னை சுற்றி அவ்வளவு கூட்டமும் சீக்கிரம் செய் வேற வேலை இருக்கும் என்பது போலவே பார்த்தனர், கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு ஓகே என்று சொல்ல, சரக்கென்று கொதிக்கும் மெழுகில் எனது கையை அழுத்தி விட்டனர்....... ஆஆஆஆஆஆஆஆஅ !!
 
 
 
 
 
ஒரு மெழுகுவர்த்தி எரிந்துக்கொண்டு இருக்கும்போது அதில் இருக்கும் உருகிய மெழுகினில் கையை வைத்தால் எப்படி இருக்கும்....... அந்த சூடு தோலை தொட, அந்த சூடு மூலையில் அலாரம் அடிக்க, அந்த அலாரம் வாய் வழியாய் சத்தமாக வர முயலும்போது கண்கள் என்னை சுற்றி பார்க்க அங்கே கூடி இருந்த கூட்டத்தில் நானும் ரவுடிதான் என்று சொல்ல வேண்டுமே என்று பொறுத்துக்கொண்டேன், இரண்டு அல்லது மூன்று நொடிகள்தான் பின்னர் அந்த கையை எடுத்து அப்படியே அந்த குளிர்ந்த நீர் தொட்டியில் அமுக்கினர். முதல் மெழுகு கோட்டிங் உருவானது.
 
 
 
அடுத்து மீண்டும் மெழுகு தொட்டியில் கையை விட இந்த முறை முதல் முறை போல வலிக்கவில்லை, அடுத்து குளிர்ந்த தண்ணீர் தொட்டி. கண்ணை மூடி திறப்பதற்குள் இப்படி சுமார் பத்து முறை செய்ய எனது கையின் மாதிரி உருவானது !! இப்போது அதை எப்படி எடுக்க முடியும் என்று நினைக்கும்போதே ஒரு சிறு கத்தி கொண்டு ஒரு இடத்தில சிறு கோடு போட அந்த மெழுகு கையுறை போல அப்படியே வெளியே வந்தது. என்ன கலர் வேண்டும் என்று கேட்டு பக்கத்திலேயே இருந்த அந்த வகை மெழுகினில் முக்கி எடுக்க இப்போது எனது கை சும்மா கலராக இருந்தது ! அதை நிறுத்தி வைக்கும் பேஸ் என்பதும் பல மாதிரிகள் இருக்கிறது, அது ஏற்கனவே செய்து வைத்து இருக்க இந்த கைகளை அதன் மேலே வைத்து கொஞ்சம் தீயை காட்ட அது ஒட்டிக்கொண்டு இப்போது எனது கையின் மாதிரி தயார் !! ஒரு சிறு மெழுகுதான் ஆனால் எப்படி எல்லாம் வடிவம் பெறுகிறது....... புதுமையான கலைகள் இந்த உலகில் ஏராளம்தான் போல !!
 
 


 

 



 
Labels : Suresh, Kadalpayanangal, art, art forms, wax hands, making wax hand, art in wax, kalai, naan rasitha kalai, melugu, melugu kaigal, candle, candle wax

7 comments:

  1. வித்தியாசமான அனுபவம்தான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தளிர் சுரேஷ் ! நம்ம ஊரில் இப்படி ஏதேனும் இருக்கா சொல்லுங்களேன் !

      Delete
  2. அருமையான அனுபவம் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார் !

      Delete
  3. எந்த வித்தியாசமான அனுபவமா இருந்தாலும் முயற்சி செஞ்சு பார்த்திடறது உங்களுடைய மிகப்பெரிய பலம்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன், அனுபவங்கள்தானே வாழ்க்கை. அனுபவங்களை தேடி ஓடி கொண்டே இருப்போமே !

      Delete
  4. மிக்க நன்றி ஜெகதீஷ், கொஞ்சம் பெரிய குழந்தை இல்லையா !

    ReplyDelete