Wednesday, August 20, 2014

உலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ?!

அமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்றும் இல்லை பயண நேரத்தையும், கால நேர மாற்றத்தையும் கண்டு. இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கு சென்றாலும் எட்டு அல்லது பத்து மணி நேர விமான பயணம், உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால் அமெரிக்காவிற்கு ஒன் ஸ்டாப் சேவை கிடைக்கும், அதாவது பெங்களுருவில் இருந்து பிரான்கபார்ட் சென்று (எட்டு மணி நேர பயணம்), பின்னர் அங்கு இருந்து சிகாகோ செல்ல இன்னொரு எட்டு மணி நேர பயணம்..... உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை என்றால் டைரக்ட் சேவை அல்லது பெங்களுருவில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் இருக்கும் அரபு நாட்டுக்கு சென்று அங்கு இருந்து சுமார் பதினைந்து மணி நேர விமான பயணம் என்று இருக்கும். பல நாடுகளுக்கு மேலே பயணம் செய்வோம், பதினைந்து மணி நேரம் இப்படியே உட்கார்ந்து செல்வது என்பது நரக வேதனை (சென்ற மாதம் இரண்டு முறை இப்படி சென்று வந்தேன் :-( ).... சரி அதை விடுங்கள், அமெரிக்கா என்பது பெரிய நாடு, நமது ஊரில் அமெரிக்கா போயிட்டு வந்தேன் என்றால் வெள்ளை மாளிகை பார்த்தியா என்பார்கள், இல்லை என்று  சொன்னால் அப்புறம் என்ன அமெரிக்கா போயிட்டு வந்தேன் அப்படின்ற என்று நம்பவே மாட்டார்கள். முதல் இரண்டு முறை அமெரிக்கா சென்று விட்டு வந்தும், என்னை கடுப்பு ஏற்றியதால் ஒரு முறையாவது கண்டிப்பாக வெள்ளை மாளிகை பார்க்க வேண்டும் என்று கிளம்பினேன் !!  


அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிறது இந்த வெள்ளை மாளிகை. பொதுவாக அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது அவரது பின்னால் பார்த்தால் ஒரு வெள்ளை கலர் பில்டிங் தெரியும், அதுதான் வெள்ளை மாளிகை. இந்த வெள்ளை மாளிகையில்தான் அமெரிக்க ஜனாதிபதி தங்குவார். பொதுவாக நமது ஊரில் ஜனாதிபதி தங்கும் மாளிகையை பார்த்து இருக்கின்றீர்களா, அது ராஷ்டிரபதி பவன் என்பார்கள் சும்மா மாளிகை போல இருக்கும், அது போலவே அங்கும் !! வாஷிங்டன் சென்று இறங்கியவுடன் எங்க போகணும் என்று மெட்ரோ ரயில் பிடித்து ஒரு இடத்தில இறங்கி வெள்ளை மாளிகை எங்கே தெரியுது என்று தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்....... தூரத்தில் தெரிந்தது வெள்ளை மாளிகை !!



பொதுவாக இந்த இடத்தில் பாதுகாப்பு மிகவும் அதிகம், வெள்ளை மாளிகை முன்பு பெரிய பார்க் போன்ற இடம் என்பதால் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். வழியில் அமெரிக்காவின் உணவு வகைகளை சுவைத்துக்கொண்டே நடந்தோம், அவ்வப்போது அங்கங்கு இருந்த முயூசியம் சிலவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் வெள்ளை மாளிகையை எப்போது பார்ப்போம் என்றே இருந்தது...... அவ்வளவு ஆர்வம் பாஸ். மெல்ல மெல்ல அதை நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் எங்களை தாக்கியது, வெள்ளை வெளேரென்று தும்பை பூ நிறத்தில் எனது கண் முன்னே இருந்தது, அது ஒரு வரலாற்று தருணம் சார் !!



நல்லா பார்த்துக்கோங்க பாஸ்...... இதுதான் வெள்ளை மாளிகை ! :-)

அதன் முன்பு இருந்த மஞ்சள் நிற பூக்களுடன் போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு, இனிமேல் எவன் கேட்டாலும் நான் அமெரிக்கா போயிட்டு வந்தேன் என்பதற்கு ஆதாரமாக இந்த வெள்ளை மாளிகையின் முன்பு எடுத்த போட்டோவை காண்பிப்பேன் என்று கர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். அப்போது எங்களது அருகில் இருந்த ஒரு சீன டூரிஸ்ட் ஒருவர், Where is the White House ? என்று கேட்க..... அட மாக்கான் இங்க உன் முன்னாடி இவ்வளவு பெரிய வெள்ளை மாளிகை தெரியுதே , கண்ணாடி போட்டு பாருடா என்று நினைத்துக்கொண்டு This is the White House என்று பெருமையாக சொன்னேன், என்னுடன் இருந்த நண்பனும் மாப்ளை எவ்வளவு பெரிய பில்டிங் இல்ல இப்போ மட்டும் ஜனாதிபதி வெளியே வந்து கையை ஆட்டுனா எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே எங்களது பக்கத்தில் வந்த அந்த சீனன் மீண்டும் Is this the White house... are you sure ? என்று கேட்க மீண்டும் நான் அழுத்தி அதே பதிலை சொன்னேன், அவன் என்னை ஒரு மாதிரி பார்க்க நான் அவனை வேறு மாதிரி பார்த்து அனுப்பினேன்.

 

வெள்ளை மாளிகை !!



அப்புறம், எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் சிகாகோ வந்து அடுத்த நாள் ஆபீஸ் சென்று நாங்கள் வெள்ளை மாளிகை சென்று வந்தோம் என்று பெருமையாக போட்டோ எல்லாம் காண்பித்துக்கொண்டு இருந்தோம், எல்லா போடோவையும் பொறுமையாக பார்த்துவிட்டு "வெள்ளை மாளிகை போனேன்னு சொன்னீங்க, அந்த போட்டோ எங்க..." என்று கேட்க, அட வெண்ணை இவ்வளவு போட்டோ பார்த்தியே இன்னுமா உனக்கு தெரியலை என்று வெள்ளை மாளிகை போட்டோவை காண்பிக்க, அவர் அட, இது காபிடல் பில்டிங் வெள்ளை மாளிகை இல்லை என்றபோது குழப்பம் அதிகம் ஆனது. அட, உங்க ஊரு ஜனாதிபதி எல்லாம் பேசும்போது பின்னாடி தெரியுமே கட்டிடம் அதுதானே வெள்ளை மாளிகை, அது இதுதானே என்று கேட்க, அவரோ ஆமாம், ஆனா அது இது இல்லை என்று சொல்ல பயங்கரமாக குழம்ப ஆரம்பித்தேன். பின்னர் அவர் கூகுளில் இருந்து படம் எல்லாம் எடுத்து காட்டியவுடந்தான் தெரிந்தது ரெண்டு பில்டிங்குமே வெள்ளைதான் ஆனால் இது பாராளுமன்றம் மாதிரி, ஜனாதிபதி தங்குவது என்பது வேறு மாதிரி இருக்கும் என்றார். திரும்ப மேலே போய் ஜனாதிபதி பின்னாடி இருக்கும் படத்தை பாருங்க.......... உங்களுக்கே புரியும் :-)

வெள்ளை மாளிகையா.... காபிடல் பில்டிங்கா.... நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க !

நம்ம இந்திய நாட்டு ஜனாதிபதி மாளிகை.... ராஷ்டிரபதி பவன் !

நம்ம ஊரு ஜனாதிபதி தங்கும் இடம் அரண்மனை போல இருந்ததால், இந்த இடத்தை பார்த்து நான் கான்புஸ் ஆகிட்டேன். நல்ல வேளை ரெண்டும் வெள்ளையாக இருந்ததால் இன்று வரை இந்த போட்டோ காண்பித்து நானும் அமெரிக்கா போயிருக்கிறேன், வெள்ளை மாளிகை பார்த்து இருக்கிறேன் என்று ஒரு ரௌடியாக பார்ம் ஆகிவிட்டேன்..... இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை. வெள்ளையா இருக்குறதெல்லாம் பால் அப்படின்னு நினைக்கிற பச்சை புள்ளையை இப்படி ஒரு வெள்ளை மாளிகையை கொண்டு ஏமாத்திபுட்டீங்களே........ ஞாயமாரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரே !! அது சரி, இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும். 

 

20 comments:

  1. நல்லா இருக்குங்க..... நானும் குழம்பிட்டேன்.... !!!!

    அந்த சீனாகாரன் கண்டிப்பா உங்களை திட்டியிருப்பான்..!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் விமல், கண்டிப்பாக கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி இருப்பான் ! நீங்களுமா ஏமாந்தீர்கள்..... :-) நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
    2. அடங்கொய்யாலே. என்னயியே ஒரு மினிட் கொளப்பிட்டியே மச்சி. ஹாலிவூட்டு படத்லேலாம் வாஷிங்டன்னா கபிடல் பில்டிங்கும் சுதந்திர சதுக்கமும் காட்டுவாங்கலே. வயிட் ஹாவுசில ஓமாபா இருக்காறு. அது வேற.

      Delete
  2. சீனாக்காரனுக்கே தலைல குட்டி "This the White House" சொல்லியிருக்கீங்க... வாழ்க வளமுடன்...

    அவன் ஊருக்கு போய் எத்தன பேருகிட்ட பொலம்புனானோ???

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக், இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.... ஒரு வெள்ளை உள்ளதோடு கூடிய குழந்தையை அந்த வெள்ளை மாளிகை ஏமாற்றி விட்டது ! நன்றி !

      Delete
  3. அப்ப அது வெள்ளை மாளிகை இல்லையா? நல்லாவே ஏமாத்துறீங்க பாஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நான் எங்க எமாத்துனேன், ஏமாந்தேன் அப்படின்னு சொல்லுங்க :-) நன்றி !

      Delete
  4. வெள்ளை மாளிகை இருப்பது வாஷிங்டன் நகரம் (மாகாணமல்ல).

    DC is a federal district and not part of any state.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நண்பரே, இதை எல்லாம் இப்போ சொல்லுங்க..... அது எதுவா இருந்தாலும் வெள்ளை மாளிகை இல்லை......நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  5. //தூரத்தில் தெரிந்தது வெள்ளை மாளிகை !!

    இதை படித்த உடனே நீங்கள் capitol building தான் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

    White house is not visible from far except when you look from the base of Washington monument.

    ReplyDelete
    Replies
    1. திரும்ப திரும்ப பேசறீங்க..... வேண்டாம் அழுதுடுவேன் !

      Delete
  6. ஆஹா கேபிடல் பில்டிங் பார்த்து ஏமாந்துட்டீங்களா?

    இந்த டீலிங் பிடிச்சுது! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டுமே....... அப்புறம் ராஜ்தானி உணவு பற்றி இவ்வளவு விரிவா எழுதி இருந்ததை படிச்சேன், அதுவும் அந்த சூப் பிஸ்கட் வர்ணனை சூப்பர் !! நன்றி !

      Delete
  7. ஹா ஹா... வாஷிங்டன் போய் ரொம்ப வருஷம் ஆச்சோ? போட்டோல ரொம்ப இளமையா இருக்கீங்களே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே, சுமார் ஆறு வருடம் ஆகிச்சு, அப்போ இப்போ நல்லா இல்லை அப்படின்னு சொல்றீங்களா...... டவுட்டு !

      Delete
  8. Nice article. a small correction "வாஷிங்டன் மாகாணத்தில்" -- White House is in Washington , District of Columbia .
    thanks,
    Sasikumar

    ReplyDelete
    Replies
    1. பாஸ், அது எதுவா இருந்தாலும் தீர்ப்பு முடிவானது, சொம்பை தூக்கிட்டேன் சொல்லிட்டேன்.... அது வெள்ளை மாளிகை இல்லை அவ்வளவுதான் ! நன்றி !

      Delete
  9. அண்ணே இங்க ஒரு சீனாகாரன் உங்கள தேடிகிட்டு இருக்கான் ... அனுப்பி விடவா ..?

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கொலை வெறி ஆனந்த், என்னோட தம்பியா இருந்து இப்படியா....... நீ வா பெங்களுருக்கு !!

      Delete
  10. ஜெகதீஷ், சத்தமா சொல்லாதீங்க, தடை விதிச்சிட போறாங்க ! :-)

    ReplyDelete