Tuesday, August 19, 2014

ஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் !

மண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓடி வரும்போது அருவாள் எல்லாம் எங்க செய்யுறாங்க என்று கொஞ்சம் சத்தமாக கேட்டால் எல்லோரும் கோரசாக சொலவது என்பது திருப்பாச்சி !! அருவாள் என்பதெல்லாம் நமக்கு கைபிடியோடு ஆரம்பித்து முடிவில் வளைவாக முடியும் என்பதுதான் தெரியும், நீளம் என்பது அதிகமாக அதிகமாக திரையில் வில்லனிடதில் பயம் கூடும்.... இவ்வளவுதான் தெரியும் நமக்கு, ஆனால் அருவாளுக்கு ஏன் திருப்பாச்சி பேமஸ், எவ்வளவு விதமான அருவாள்கள் உண்டு, அருவாள் எதனால் எப்படி செய்யப்படுகிறது என்றெல்லாம் தெரியுமா ?!  ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு எந்த இடத்திற்கும் சென்று தைரியமாக இது எங்கு கிடைக்கும் என்று விசாரித்து, சென்று செய்திகள் சேகரித்து இருக்கிறேன், ஆனால் இந்த ஊரில் சென்று வண்டியில் இருந்து இறங்கி அருவாள் வேண்டும் என்றாலே அஞ்சி ஓடுகின்றனர், இல்லையென்றால் ஆயிரம் கேள்விகள் அதுதான் இன்றைய நிலைமை !! வாருங்கள் தைரியமாக..... அருவாளின் ஊருக்குள் நுழைவோம் !!திருப்பாச்சேத்தி (ஆங்கிலம்:Thiruppachethi) இது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் ஆகும். இது மதுரைமாநகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு ஊரின் பெயர் எப்படி உருவானது என்பதே இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்பது வேதனையான ஒன்று. அந்த ஊரில் இருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு பார்த்தும் "அந்த காலத்தில் பாண்டிய நாட்டுக்கும், மருது பாண்டியர்களுக்கும் அருவாள் செஞ்சி கொடுத்தோம்........" என்றுதான் சொல்கிறார்களே தவிர அந்த ஊரின் பெயர் காரணம் என்பது எவருக்கும் தெரியவில்லை !! திருஞானசம்பந்தர்........ ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், ஏழாம் நூற்றாண்டில் சைவத்திற்கும் சமணத்திற்கும் இடையே பூசல் ஏற்படுகிறது. கூன்பாண்டியன் என்ற நின்ற சேர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னன் சமணசமயத்தை தழுவியவன். அவருடைய மனைவி மங்கையர்க்கரசி சோழர் பெண் அரசி. குலச்சிரையார் என்ற மந்திரி சைவத்திற்கு ஆதரவாக இருக்கிறார். எப்படியாவது அரசரையும் சைவத்தின்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது திருஞான சம்பந்தர் பதிகம் பாடிக்கொண்டு மதுரைக்கு வருகிறார். இப்போது நாம் சொல்லக்கூடிய குடல் அலர்ஜி நோய் போல (சூளை நோய் என சொல்கிறார்கள்) தாக்குகிறது. அந்த நோயில் இருந்து மன்னனை காப்பாற்ற அவர் சார்ந்த சமண துறவிகள் முயற்சிக்கிறார்கள். சமணர்கள் அவர்களது மருந்துக்களை கொண்டு முயற்சி செய்து பார்க்கிறார்கள், ஆனால் அந்நோய் நீங்கவில்லை. பிறகு திருஞான சம்பந்தர் சென்று திருநீற்று பதிகம் பாடி திருநீறு பூசிய உடன் அவருடைய நோய் குணமாகிறது.இதற்கு பிறகுதான் யாருடைய சமயம் வலிமையானது என வாதம் நடக்கிறது. அனல்வாதம் புனல்வாதம் என இரு வாதங்களை செய்ய வேண்டும் என முடிவு செய்கின்றனர். சமணர்களின் மந்திரத்தையும் சைவர்களின் மந்திரத்தையும் தனித்தனியாக ஓலையில் எழுதி ஓடுகின்ற வைகையிலே போட வேண்டும். அதில் எது ஆற்றின் எதிராக பயணித்து கரை ஏறுகிறதோ அதுவே வென்றதாக முடிவு செய்வதாகும். அப்போது சமணர்கள் போட்ட ஏடுகள் எல்லாம் ஆற்றில் அடித்து சென்று திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது. திருப்பா சேர்ந்த இடம் என்பதனால் திருப்பாச்சேத்தி என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. காலத்தின் சுழற்சியில் திருப்பாச்சி என்று இன்று சுருக்கி அழைக்கப்பட்டாலும்....... இன்றும் இந்த ஊரின் எல்லையில் பெயர் பலகை திருப்பாச்சேத்தி என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறது.


 

வாள் என்பது உலோகத்தால் செய்யப்பட்டதும், கூரிய விளிம்பு கொண்டதும், நீளமானதுமான ஒரு ஆயுதம் ஆகும். வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கங்களுமோ கூராக இருக்கக்கூடும். விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் நுனி கூராகக் குத்துவதற்கு ஏற்றவகையிலும் இருக்கும். வாள் போர்க் கலையின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே அதிக மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்துள்ளது. அரிவாள், அருவாள், அறுவாள் என்று இதை எப்படி அழைப்பது என்று இங்கு செல்லும் வரை சந்தேகம் இருந்தது...... அரிவாள் வேறு; அறுவாள் வேறு. காய்கறியறுக்கும் மணைவாளே அரிவாள் எனப்படும். பிற அறுப்பு வாளெல்லாம் அறுவாள் என்றே கூறப்பெறும். மெலிதாய் அறுப்பது அரிவாள் என்றும், வலிதாய் அறுப்பது அறுவாள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். தொழிலின் அல்லது வினையின் மென்மையைக் குறிக்க இடையின ரகரமும், வன்மையைக் குறிக்க வல்லின றகரமும், ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. என்ன அழகான மொழி தமிழ் மொழி இல்லையா !!அப்படி என்ன இந்த ஊரில் மட்டும் இரும்பினை கொண்டு செய்யப்படும் இந்த தொழில்  அவ்வளவு பிரபலம், எதனால் மன்னர்கள் இங்கு இருந்து போர் வாள்களை இங்கு செய்தனர் என்ற கேள்வி எழுகிறது இல்லையா ? இரும்பு தாது என்பது இந்த பகுதிகளில் அதிகமாக கிடைக்கிறது, அது மட்டும் இல்லாமல் வைகை நதி இந்த ஊரின் அருகில் ஓடுகிறது, மானாமதுரை மண்பாண்டம் என்று ஒரு பகுதி எழுதி இருக்கிறேன் அதில் இந்த பகுதியின் மண் பற்றி எழுதியுள்ளேன்...... இரும்பு தாது, நீர், மண் இது மூன்றும்தான் ஒரு நல்ல அருவாள் செய்ய தேவை அது இங்கு கிடைப்பதால் மன்னர்கள் இந்த ஊரை இங்கு நிர்மாணித்து இங்கு இருந்து போர் கருவிகளை பெற்றனர். இன்று இந்த இரும்பு தாது எடுக்க பெரிய நிறுவனங்கள் வந்து விட்டதால் இப்போது இரும்புகளையும், கழிவு இரும்புகளையும் பெற்று உருக்கி அருவாள் செய்கின்றனர். அருவாளில் பல வகைகள் இருக்கிறது ஆனால் இன்று காலப்போக்கில் அந்த பெயர்கள் அழிந்துவிட்டன (அதை விட கொடும் ஆயுந்தங்கள் வந்து விட்டது அல்லவா !) இன்று பன்னருவாள், வீச்சருவாள், பாளையருவாள், கதிர் அருவாள், வெட்டருவாள், கொத்தருவாள் என்று சில வகைகள் மட்டுமே இருக்கின்றன.அருவாள் என்பது நமது கலாசாரத்தின் அடையாளம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.... ஆனால் அதுதான் நிஜம் ! ஒரு ஊரில் மரங்களை வெட்டவே மாட்டார்கள், அங்கு விவசாயம்தான் தொழில், எந்த சண்டையும் இல்லை என்றால் நீங்கள் அங்கு விவசாயம் சம்மந்தமான அருவாள்களை மட்டுமே பார்க்க முடியும். சில இடங்களில் மாடுகளுக்கு இலை பறித்து போட வேண்டும் என்றால் அங்கு அருவாள்கள் நீளமாக இருக்கும், ஒரு ஊரில் போர் பதட்டம் அதிகமாக இருந்தால் அங்கு அருவாள்கள் நல்ல ஷார்ப்பாக இருக்கும்...... இப்படி ஒரு இடத்தின் கலாசாரம் என்பது அந்த அருவாள்களில் தெரியும். நமது ஊரில் மதுரை வீரனும், ஐயனாரும், எல்லை சாமிகளும் வாழ்ந்து மறைந்த வீரர்களே (எனக்கு தெரிந்த வரை), அவர்களின் வீரத்தை சொல்ல நீளமான அருவாள்களை அவர்களது கைகளில் திணிக்கிறோம் இல்லையா !! இன்னும் விவரமாக சொல்ல வேண்டும் என்றால் மதுரை பக்கம் இருக்கும் வீச்சரிவாள், தஞ்சாவூரில் நெல் அறுக்கும் இடத்தில் கிடைக்காது...... பழனி பக்கம் கரும்பு வெட்ட வைத்திருக்கும் அருவாள், நாகர்கோவிலில் மீன் வெட்டும் இடத்தில் கிடைக்காது..... அருவாள் என்பது உங்களின் அடையாளம், திருப்பாச்சி அருவாள் என்பது அந்த மண்ணின் அடையாளம். இன்று மக்கள் குடி பெயர்ந்து பல ஊருக்கு சென்றதால்...... எங்குமே திருப்பாச்சி அருவாள்தான் !!
 வைகை கரையோரம் காரில் செல்வது என்பது ரம்மியமான ஒன்று, ரோட்டில் சென்று கொண்டு இருக்கும்போது திடீரென்று திருப்பாச்சேத்தி என்று பெயர் பலகை பார்க்க ஊர் எப்படி இருக்கும், எல்லோருமே முதுகுக்கு பின்னே அரிவாளுடன் அலைவார்களோ, பெரிய மீசை எல்லாம் வைத்துக்கொண்டு ரௌடியின் தோற்றத்துடன் இருப்பர்களோ என்றெல்லாம் எண்ணினால் எல்லாமே தவறு என்று புரியும். தேசிய நெடுஞ்சாலை இந்த ஊரை இரண்டாக பிரித்து வைத்து இருக்கிறது, ஊருக்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றாலே அங்கொன்று இங்கொன்றுமாக சில கடைகள் தென்படுகின்றன. ஒரு கடையினுள் நுழைந்து என்னை அறிமுகபடுதிக்கொண்டு பேச ஆரம்பிக்க இன்னும் அவர்களுக்கு சந்தேகம் போகாமல்தான் பேசினார்கள், என்னவென்று விசாரிக்க அருவாள் வாங்க வரும்போது எல்லோரும் நல்லவர்கள் போலதான் இருக்கிறார்கள், அதை வாங்கி கொண்டு போய் என்ன செய்வார்களோ, போலீஸ் எங்களை தேடி வந்து நாங்க என்னமோ கொலை செய்வதற்கென்றே அந்த அருவாளை செய்வதைப்போல விசாரணைக்கு என்று கூட்டிக்கொண்டு போய் விடுகிறார்கள், குலசாமிக்கு என்று வாங்கி சென்று இப்படியெல்லாம் செய்தால் என்னவென்று செய்வது என்று ஆதங்கப்பட என்னை பற்றி சொல்லி புரிய வைக்க நேரம் ஆனது !!

 
 


அருவாளுக்கு என்று இரும்பை லாரி அடியில் இருக்கும் ஸ்ப்ரிங்கில் இருந்து எடுக்கிறார்கள், இதற்காகவே அந்த பகுதி, ஈரோடு இங்கெல்லாம் ஸ்ப்ரிங் கேட்டு பெறுகிறார்கள். வரும் ஆட்கள் கேட்க்கும் வகைக்கு ஏற்ப முதலில் மனதில் டிசைன் செய்து பேப்பரில் படம் வரைந்து காண்பிக்கின்றனர், அதை உறுதி செய்தவுடன் இரும்பை எடுத்து நெருப்பில் போடுகின்றனர். இந்த அருவாள் செய்வதற்கு இரும்பு நன்கு உருக வேண்டும், இரும்பு உருக 1538 டிகிரி வெப்பம் வேண்டும், இதை உருவாக்க இன்றும் கரியை கொண்டுதான் செய்கின்றனர்.  கரியின் தன்மை என்பது என்ன தெரியுமா, அது நெருப்பை உள்ளே வைத்து இருக்கும் கொஞ்சம் காற்று கிடைக்க கிடைக்க அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கும், அதை எரிய வைக்க இங்கே ஒரு மெசினை பயன்படுத்துகின்றனர் அதன் பெயர் பிளோயர் (Blower) அது வெளியில் இருக்கும் காற்றை உள்ளே இழுத்து சரியான அழுத்தத்தில் வெளியிடும், அது Centrifugal fan எனப்படும். நெருப்பினில் இரும்பை காட்டி அது இளகி வரும்போது சுத்தியலை கொண்டு அடிக்க அது நெகிழ்ந்து கொடுக்கும். இப்படி இரும்பை கொஞ்சம் கொஞ்சமாக நெகுழ்த்தி ஒரு அறுவாளின் வடிவத்தை உருவாக்குகின்றனர். அதன் பின்னர் அதை சானை பிடித்து கூர் ஏற்றி தருகின்றனர்.... கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் இந்த அருவாளை செய்வதற்கு சுமார் ஆறு மணி நேர உழைப்பு தேவை.... அதுவும் உடல் உழைப்பு !!
 
 
  

 இந்த ஊரில் செய்யும் அருவாள் வெகு நேர்த்தியாக செய்யப்படுவதால் மக்கள் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். தெற்கில் முன்பு நிறைய கொலைகள் அருவாள் மூலம் நடந்ததால் இப்போது போலீஸ் ஒன்றரை அடிக்கு மேல அரிவாள் செய்யக் கூடாதுன்னும், வீச்சரிவாள், வாள், கத்தி செய்யக் கூடாதுன்னும் போலீஸ் உத்தரவு போட்டு இருப்பதால் இங்கு அருவாளின் மவுசு குறைந்துவிட்டது. என்ன இருந்தாலும் இன்று வரை திருப்பாச்சி அதன் பெருமையை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது எனலாம் !!

 

14 comments:

 1. அரிவாள் ரெண்டு பார்சல்....பாஸ்//

  ReplyDelete
  Replies
  1. என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு....... நான் வரும்போது குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரேன், அருவாள் எல்லாம் வேண்டாம், இது ரத்தம் பார்த்த பூமி ! :-)

   Delete
 2. வணக்கம்
  அண்ணா
  அறிவாள் பற்றி நன்றாகசொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தேவை வரும் நிச்சயம் சொல்லுகிறேன் அனுப்புங்கள்
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தேவை வரும்போதா எதற்கு ரூபன்...... தேவை வராமலேயே போகட்டுமே, தாயினை பற்றி கவிதை எழுதிவிட்டு அருவாள் கேட்கிறாயே !

   Delete
 3. அறுவாவுக்கும் ஆயிரம் விளக்கம் குடுக்குராறே இவரு... தென்கச்சி கோ.சுவாமினாதன் தினம் ஒரு தகவல் மாதிரி, பல பல தகவல்கள் குடுக்குராரே... இனிமே நீங்க எங்க கூப்புட்டாலும் வர மாட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. சரி, சரி கோவம் கூடாது..... சரக்கு அடிக்க எங்கே போகலாம் சொல்லுங்க !

   Delete
 4. ஊர் விளக்கம் முதல் இலக்கணமும் சொல்லி அரிவாள்- அறுவாள் விளக்கி சிறப்பாக சென்றது பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ஊர் விளக்கம் முதல் இலக்கணமும் சொல்லி அரிவாள்- அறுவாள் விளக்கி சிறப்பாக சென்றது பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ந்தேன், மிக்க நன்றி தளிர் சுரேஷ் !

   Delete
 6. super anna tamil martial art and war arts pathi pesunga and ancient tamil swords

  ReplyDelete
 7. எனக்கு பேன் நம்பர் வேணும்

  ReplyDelete
 8. ஆச்சாரி அருவாள்

  ReplyDelete
 9. எனக்கு வாள் வேண்டும் 1அடி வாள்மற்றும் இரண்டரை அடி வாள்

  ReplyDelete
 10. வாழைக்காய் அறுக்க உதவும்/தேங்காய் சில்லெடுக்கும் சின்ன அறிவாள் தாங்களிடமுள்ளதா

  ReplyDelete