Tuesday, August 5, 2014

அறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் !!

ரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் ! தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வொரு ஊர் கடக்கும்போதும் அந்த ஊரின் உணவுகள் விற்றுக்கொண்டு வருவார்கள், ஒவ்வொன்றையும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வர அந்த பிரயாணம் இனிதாக இருக்கும். என்னதான் வாங்கி சாப்பிட்டாலும் எல்லாமுமே நொறுக்கு தீனிதானே, மணப்பாறை முறுக்கு ஆகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகட்டும் எல்லாமுமே நொறுக்கு தீனிதான். பசிக்கும் நேரம் வரும்போது அந்த நொறுக்கு தீனியை விட்டுவிட்டு சாப்பாடு என்ன இருக்கு என்றுதானே பார்க்க ஆரம்பிப்போம். ரயில் பிரயாணத்தில் ஒரு பெரிய சோகம் என்பது நாம் ருசிக்கும்படியாக ஒரு உணவும் கிடைக்காது என்பதுதான்...... நீங்கள் அந்நியன் அவதாரமே எடுத்தாலும் சூடாக சிக்கன் பிரியாணி என்று புளிசாதத்தில் முட்டையும் ஒரு பீஸ் சிக்கன் வரும்போது பசிக்கு முன் அந்நியன் அங்கு அம்பியாக மாறி ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்போம் !! ஆனால், ஒரே ஒரு ஊரை கடக்கும்போது மட்டும் அந்த ருசியான உணவு உண்டுவிட்டு சுகமாக தூங்குவோம்...... அதுதான் ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் !!

திரு.சமஸ் அவர்கள் எழுதிய ஸ்ரீரங்கம் இட்லி பற்றிய கட்டுரையை படிக்க..... இங்கே சொடுக்கவும் !



ஸ்ரீரங்கம்.......காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். அகண்டு விரிந்த காவேரி, பச்சை பசேல் என்ற வயல்கள் என்று ரயிலில் செல்லும்போது எப்போதுமே ஒரு புது அனுபவம் தரும் பயணம். சமஸ் அவர்கள் இந்த ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் பற்றி எழுதி இருந்தபோது அவர் சாப்பாட்டுப்புராணம் புத்தகத்தில் ஒரு தவறு செய்துவிட்டார் என்றே எண்ணினேன். இதுவரை எத்தனையோ முறை ரயில் பிரயாணங்கள் மேற்கொண்டபோதும் எந்த முறையும் ஒரு புகைவண்டி நிலையத்தில் சுவையான இட்லி கிடைத்ததாக சரித்திரம் இல்லை, ஆகவே அவர் சென்று எழுதிய உணவகங்களை தேடி செல்லும்போது இந்த ஸ்ரீரங்கம் பயணத்தின்போது மட்டும் மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை....... இட்லி கல்லு போலவும், சட்னி புளிப்பாகவும் இருக்க போகிறது என்றே எண்ணினேன், ஆனால் முடிவு வேறு மாதிரி இருந்தது !!
 
 
ஸ்ரீரங்கம் சென்று இறங்கியவுடன், ரயிலை பிடிக்க கூட அவ்வளவு அவசரமாக இறங்கி ஓடியதில்லை, இந்த இட்லி பொட்டலம் தீர்ந்து விடுவதர்க்குள் வாங்க வேண்டும் என்று ஓடினேன். ரயில் நிலையம் செல்லும் சாலை மிக குறுகியது, தேடி சென்று பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைய காவிரி ஆற்றின் குளுமையான காற்று அந்த ஆக பெரிய ரயில் நிலையத்தில் வந்து மோதுகிறது. திருச்சியின் கொளுத்தும் வெயிலுக்கு அவ்வளவு இதமான, குளுமையான காற்று நிச்சயம் ஒரு வரம்தான். அடுத்து அங்கு இடது பக்கம் இருந்த கான்டீன் நோக்கி நடக்க எங்களுக்கு முன்னே பெரும் கூட்டம். எல்லோரும் அங்கு முதலில் கேட்பது...... உண்மையை சொல்கிறேன்........ இட்லி இருக்கா ?! ஒரு புகைவண்டி நின்று கொண்டு இருந்து இது போன்று கூட்டம் இருந்தால் அது நியாயம், ஆனால் இங்கு எந்த வண்டியும் இல்லை, ஆனாலும் கூட்டம் அள்ளுகிறது !
 



அடித்து பிடித்து முன்னேறி ரெண்டு இட்லி, ஒரு வடை என்று கேட்க.... வடை காலியானதால் மூன்று இட்லி வைத்து கட்டி கொடுத்தார். பொதுவாக எந்த ரயில் நிலையமாக இருந்தாலும், இட்லி என்பது சுட்டு வைத்து இருப்பார்கள், நாம் கேட்கும்போது கட்டி தருவார்கள், ஆனால் இங்கு இட்லி சூடாக கிடைக்கிறது ஆச்சர்யம்தான் ! பொட்டலத்தை மீறி கையில் சூடு தெரிகிறது..... இதமான காவிரி காற்றில் எங்கு சாப்பிடலாம் என்று தேட தொடங்க, அங்க போய் உட்காரேன் என்று வயிறு அவசர அவசரமாக வழி சொல்கிறது ! எப்போதாவது இட்லி பொட்டலத்தை நின்று நிதானித்து பார்த்து இருக்கிறீர்களா ? இன்றைய யுகத்தில் இட்லியை அலுமினியம் பாக்ஸ் உள்ளே வைத்து, சட்னியை தனியாகவும், சாம்பாரை தனியாகவும் கொடுத்து விடுகிறார்கள்.... ஆனால் இட்லி பொட்டலத்தில் இருந்து வரும் வாசனை என்பது தனி என்பது தெரியுமா உங்களுக்கு ?!
 



ஒரு தினத்தந்தி பேப்பர் எடுத்து அதன் மேலே காவிரி கரையின் ஓரம் வளர்ந்த அகலமான வாழை இலையை நன்கு அகலமாக நறுக்கி, அதில் கெட்டி சட்னியை வைப்பார்கள். அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் கார சட்னி வைப்பார்கள், அதன் முனையை அப்படியே மடக்கி அதன் மேலே மூன்று இட்லிகளை அடுக்கி வைத்து, அதை நான்கு புறமும் அப்படியே மடக்கி அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் நூல் வைத்து மட்டுமே கட்டுவார்கள்.... (ஒரு வாழை இலை, இரண்டு வகை சட்னி, மூன்று இட்லி, நான்கு புறமும் மடித்து, ஐந்து புலனையும் தூண்டும் இட்லி !! - அதிசயமாக இல்லை !) பசி நேரத்தில் நூல் பிரிக்க திணற கூடாது என்று அந்த எங்கு பிடித்து இழுத்தாலும் வரும்போல இருக்கும். அதனோடு காவிரி தண்ணீரும், சின்ன வெங்காயமும் கலந்த சாம்பார் ஒரு சிறு பொட்டலமாக கிடைக்கும். இன்னும் சிலர், சட்னியை தனி தனியாக பிரித்து கட்டாமல், இட்லியின் மேலே தேங்காய் சட்னியும், கார சட்னியும் வைத்து கொடுப்பார்கள்..... இப்படி கொடுக்கும்போது பொட்டலத்தை பிரிக்கும்போதே அந்த சட்னியும் இட்லியும் கலந்த சுவை கிட்டே இருப்பவர்களுக்கும் எச்சில் வரவழைக்கும்.இட்லிக்கு சட்னி தொட்டு சாப்பிடுவது ஒரு சுவை என்றால் இப்படி சட்னி ஊறிய இட்லியை சாப்பிடுவது தேவாமிர்த சுவை, அதுவும் ஒரு பகுதியில் தேங்காய் சட்னியும், இன்னொரு ஓரத்தில் கார சட்னியும் கலந்து இருக்கும் அந்த இடத்தை பியித்து தின்கும்போதுதான் என்ன இட்லிடா என்று தோன்றும் !
 


ரயில் பயணங்களில் இட்லி சாப்பிடுவது என்பது ஒரு தனி கலை, ஒற்றை கையில் இட்லி இருக்க பசி நேரம் என்னும்போது சட்டென்று ஒரு வாய் அள்ளி போட்டுவிட்டு சாம்பாரை எப்படி பிரிப்பது என்று முழிக்கும்போது பக்கத்தில் இருப்பவர் இங்க கொடுங்க என்று பிரித்து ஊற்றுவார், அவரது கையில் கொஞ்சம் ஒட்டி இருக்கும் சாம்பாரை நாம் பார்க்காதவாறு கொஞ்சம் நக்கிவிட்டு வெங்காய சாம்பாரா நல்லா இருக்கே என்று நம்மிடம் எச்சில் ஊற கேட்க, நாமளும் சும்மாவா ஸ்ரீரங்கம் இட்லியாச்சே என்று சொல்லும்போதே புரை ஏறி இருக்கும், இன்னொருவர் காவிரி தண்ணியை எடுத்து கொடுக்க அதை அண்ணாந்து குடிக்கும்போது ரயில் காவிரி பாலத்தை தடக் தடக் என்று கடக்க, ஒரு குளிர்ந்த காற்று அங்கே உங்களை குளிர்வித்து கொண்டு இருக்கும். இப்படி ஒரு அருமையான சூழலில் வழிந்தோடும் சாம்பாரை ஒரு கையில் இருக்கும் இட்லி பொட்டலத்தில் ஊற போட்டு, அங்கு அடியில் போன சட்னியை தேடி எடுத்து சாப்பிடும் சுவையே தனிதானே !! இதில் எந்த ரயில் பிரயாணத்திலும் கிடைக்காத சூடான இட்லியும், சுவையான சட்னியும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது என தெரிந்து எழுதிய சமஸ் சார் நீங்கள் உண்மையிலேயே சரியாய்தான் சொல்லி இருக்கிறீர்கள் !
 

 
இப்படி இட்லி சாப்பிட்டுவிட்டு, அந்த களைப்பில் ஒரு நித்திரையை காவிரியின் குளிர்ந்த காற்றுடன் செய்யும்போது, எந்த ஒரு ரயில் பிரயாணமும் இவ்வளவு சுகமாக இருந்தது இல்லை என்றே சொல்ல முடியும் ! அடுத்த முறை ரயில் பயணத்தின் போது ஸ்ரீரங்கம் வரும் வரை பொறுத்து இருந்து இதை செய்து பாருங்கள்......... உங்களுக்கே புரியும் !!

Labels : Suresh, Kadalpayanangal, Samas, Arusuvai, Srirangam, Idli, best idli, idly, train journey
 

11 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    தங்களின் ஒவ்வொரு பதிவும் ரயில் பிரயாணம்.....போலதான் படிக்க படிக்க அலுக்காத பதிவுகள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உணவுவகைகள் அறிமுகம் கண்டு மகிழ்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன், எனது பதிவுகளை ரயில் பயணத்தோடு ஒப்பிட்டு காட்டியதற்கு, இந்த ரயில் பிராயணத்தில் சுவாரசியம் சேர்ப்பது என்பது உங்களை போன்ற நண்பர்கள்தானே. நன்றி !

      Delete
  2. பல்லவன் விரைவு வண்டி காலையில் திருவரங்கம் வரும்பொழுது இந்தக் கடையில் அப்படி கூட்டம் இருக்கும்! இட்லி, பொங்கல் என சுடச்சுட பல அறுசுவை உணவுகள் கிடைத்தாலும் இட்லி ரசிகர்கள் தான் இங்கே அதிகம்..... காலையில் நான்கு மணிக்கு முன்னரே எழுந்து ரயில் நிலையம் அருகிலே இருக்கும் ஒரு இடத்தில் தயாரித்து எடுத்து வந்த படியே இருப்பார்கள் - வர வர தீர்ந்தபடியே இருக்கும்! எத்தனை உழைப்பு இதில் இருக்கிறது என்பது தெரியும்போது வியப்பும் மகிழ்ச்சியும் ஒரு சேர கிடைக்கும்....

    திருவரங்கத்திலிருந்து பல்லவனில் புறப்படும் பயணிகள் தவிர ஜங்ஷனில் இருந்து வரும் நபர்களும் ரயிலில் இருந்து இறங்கி ஓடி வந்து வாங்குவதைப் பார்க்க முடியும்!

    ReplyDelete
    Replies
    1. பல்லவன் மட்டும் இல்லை இன்று, நிறைய நிறைய ரயில்களில் இப்படி நடக்கிறது, முக்கியமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை சொல்லலாம் !


      உங்களது ராஜ்தானி பயணம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் !நன்றி !

      Delete
  3. உண்மை?.
    neenga sappita-pin...
    kadayil....
    இட்லி இருக்கா ?!

    valaichu valaichu photo eduthvar
    vilasam???

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, இட்லி அதிசயமாக இருந்தது, ஆனால் நீங்கள் அங்கு வந்து சென்றபின் உணவு பஞ்சமாமே !! :-)

      போட்டோ எடுத்தவரே சொல்வார் !!

      Delete
  4. ஒரு தினத்தந்தி பேப்பர் எடுத்து அதன் மேலே காவிரி கரையின் ஓரம் வளர்ந்த அகலமான வாழை இலையை

    வாழை இலை-smell vechu kaveri-nu sorengalo?


    நன்கு அகலமாக நறுக்கி, அதில் கெட்டி சட்னியை வைப்பார்கள். அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் கார சட்னி வைப்பார்கள், அதன் முனையை அப்படியே மடக்கி அதன் மேலே மூன்று இட்லிகளை அடுக்கி வைத்து, அதை நான்கு புறமும் அப்படியே மடக்கி அதன் மேலே கொஞ்சமே கொஞ்சம் நூல் வைத்து மட்டுமே கட்டுவார்கள்

    Really! idhu romba pudusu! ippthaan kelvipaduren!! wow!!!!

    .... (ஒரு வாழை இலை, இரண்டு வகை சட்னி, மூன்று இட்லி, நான்கு புறமும் மடித்து, ஐந்து புலனையும் தூண்டும் இட்லி !! - அதிசயமாக இல்லை !)

    அதிசயமாக இல்லை? ippadi irukkavendum, illey?

    பசி நேரத்தில் நூல் பிரிக்க திணற கூடாது என்று அந்த எங்கு பிடித்து இழுத்தாலும் வரும்போல இருக்கும்.
    nool idley-laya? vadayila?

    அதனோடு காவிரி தண்ணீரும், சின்ன வெங்காயமும் கலந்த சாம்பார் ஒரு சிறு பொட்டலமாக கிடைக்கும். இன்னும் சிலர், சட்னியை தனி தனியாக பிரித்து கட்டாமல், இட்லியின் மேலே தேங்காய் சட்னியும், கார சட்னியும் வைத்து கொடுப்பார்கள்..... இப்படி கொடுக்கும்போது பொட்டலத்தை பிரிக்கும்போதே அந்த சட்னியும் இட்லியும் கலந்த சுவை கிட்டே இருப்பவர்களுக்கும் எச்சில் வரவழைக்கும்.இட்லிக்கு சட்னி தொட்டு சாப்பிடுவது ஒரு சுவை என்றால் இப்படி சட்னி ஊறிய இட்லியை சாப்பிடுவது தேவாமிர்த சுவை, அதுவும் ஒரு பகுதியில் தேங்காய் சட்னியும், இன்னொரு ஓரத்தில் கார சட்னியும் கலந்து இருக்கும் அந்த இடத்தை பியித்து தின்கும்போதுதான் என்ன இட்லிடா என்று தோன்றும் !

    அந்த இடத்தை பியித்து தின்கும்போதுதான் என்ன இட்லிடா என்று தோன்றும் !
    tamil unga kitta disco aduthu!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      Delete
  5. வழக்கம் போல நாவில் நீர் ஊற வைத்த பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தளிர் சுரேஷ், உங்களது உணவு ரசனை என்னை ரசிக்க வைக்கிறது, எப்போது சந்திப்போமோ !

      Delete
  6. Sir, Good Narration, my experience was totally disappointing, I was there on 27th Jan'15.. My bad luck none of the items was good, I have reached station around 9:30 A.M. I tried IDLI, Poori with Sambar only no Chutnly, and Pongal, - Taste of Idli is average and other items below average.. Not sure why the quality went down - I may be late to go station on time or contractor might have changed.

    ReplyDelete