Wednesday, August 6, 2014

ஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் !

மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி சென்றால் நாம் மறக்காமல் வாங்கி வரும் ஒரு விஷயம் சளியும், தும்மலும்...... திடீரென்று இப்படி சில்லென்று ஒரு இடத்திற்கு போய் விட்டு வந்தால் இப்படிதான், ஆனால் அதற்க்கு மருந்தும் அங்கேயே கிடைக்கிறது, அதுதான் யூகலிப்டஸ் தைலம் !! உள்ளங்கையில் ஒரே ஒரு சொட்டு விட்டு முகர்ந்து பார்த்தால் அந்த வாசனை மூக்கின் அடைப்பை விளக்கி அந்த இடமே யூகலிப்டஸ் தைல வாசனையில் மூழ்கும் இல்லையா ?! ஊட்டியில் சில இடங்களுக்கு செல்லும்போது இந்த தைல வாசனை வரும், நிமிர்ந்து பார்த்தால் யூகலிப்டஸ் மரம் என்று ஒன்றை காட்டுவார்கள், இதில் இருந்து எப்படி இந்த தைலத்தை தயாரிக்கிறார்கள், அப்படி என்ன ஸ்பெஷல் இதற்க்கு, எப்படி யூகலிப்டஸ் தைலம் என்பது நீலகிரி தைலம் என்று சொல்லும் அளவுக்கு வந்தது, இதன் மருத்துவ குணங்கள் என்ன என்ற கேள்விக்கெல்லாம் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக மேற்கொண்ட முயற்சிகள் விடை அளித்தது.... வாருங்கள் நீலகிரி தைலத்தின் வாசனையை தேடி செல்வோம் !




இதுதான்  யூகலிப்டஸ் மரம்...... நான் மரத்தை சொன்னேன் :-)

நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் நீல நிறத்தில் இருக்கும், அது பூக்கும்போது இந்த மலை நீல நிறத்தில் இருப்பதால் மலையின் கீழ் இருந்த மக்கள் இதை நீல - கிரி (மலை) என்று அழைத்து அது நீலகிரி என்று ஆனது !
 

குறிஞ்சி பூ !

நீல - கிரி........... நீலகிரி !
 
 தைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்)என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது. மலைகளில் மேகங்கள் செல்லும்போது மழை பொழியும், அப்போது அந்த தண்ணீர் நிலத்திற்குள் செல்லும்போது நிலம் நெகிழ்ந்து இருக்கும், இதனால் மரங்கள் சாயும். இதை தடுக்க தண்ணீர் வேகமாக உரிஞ்சபடவேண்டும் என்பதால் இந்த மரங்கள் வைக்கப்பட்டன. இப்போது புரிகிறதா, ஏன் இது போன்ற மரங்கள் மலைகளில் மட்டுமே வளர்கிறது என்று ?
 

சரி, நீலகிரி தைலத்தில் நீலகிரி என்றால் என்ன, தைலம் என்றால் என்ன என்று பார்த்தாகிவிட்டது...... இப்போது இந்த தைலம் எப்படி உருவாகிறது என்று பார்ப்போமா ? இந்த மலை முழுவதுமே பரந்து விரிந்து கிடப்பது இந்த யூகலிப்டஸ் மரங்கள், இதில் இருந்து உதிரும் இலைகளை சுமந்து வந்து இந்த தைலம் தயாரிக்கும் இடத்தில் விற்கிறார்கள். ஒரு கிலோ யூகலிப்டஸ் இலைகள் எட்டு ரூபாய்க்கு இங்கு வாங்குகின்றனர். இப்படி இங்கு வரும் இலைகளை மலை மலையாக குவித்து வைக்கின்றனர்.


பல வயதானவர்களுக்கு இதுதான் வருமானம் !

எடை போடப்படும் யூகலிப்டஸ் இலைகள்......

நீலகிரி தைலம் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை பார்க்க வேண்டும் என்று சொன்னபோது, எங்களை வளைத்து வளைத்து கூட்டி சென்று ஒரு குடிசை வீட்டின் முன் நிறுத்தினார். அதற்க்கு கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய கட்டிடம் இருந்தது, அதுதான் பாக்டரி என்று விடுவிடுவென்று சென்ற என்னை தடுத்து நிறுத்தி "நீலகிரி தைலம் பார்க்கணும் அப்படின்னு சொல்லிட்டு எங்க போறீங்க...... இந்த குடிசையில்தான் தயாராகுது" என்று சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.  நீலகிரியில் பல இடத்தில் நீலகிரி தைலம் இப்படிதான் தயாராகிறது ! தூரத்தில் இருந்து பார்த்தால் குடிசைக்கு வெளியே ஒரு புறம் மலை மலையாக யூகலிப்டஸ் இலைகள் கொட்டி கிடக்கிறது, மறுபுறம் காய்ந்த நிலையில் யூகலிப்டஸ் இலைகள், உள்ளே இருந்து புகை வந்து கொண்டு இருந்தது....... நீலகிரியின் மிக பிரபலமான பிராண்டு நீலகிரி தைலம் இங்கே தயாராகிறது என்பதை நம்ப முடியவில்லை !


யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் கம்பெனி !!

எங்கும் யூகலிப்டஸ் இலைகள்தான் !

தைல வாசனை வருதா.... செய்திகள் சேகரிப்பது உங்கள் கடல்பயணங்கள் !
 
குடிசையின் உள்ளே நுழைந்து உங்களுக்கு சுற்றி காண்பிப்பதற்கு முன்னால் நீலகிரி தைல தயாரிக்கும் செய்முறையை விளக்கி விடுகிறேனே ?! நூறு கிலோ  யூகலிப்டஸ் இலைகளில் இருந்து ஒரு லிட்டர் யூகலிப்டஸ் தைலம் தயாரிக்க முடியும். ஒரு பெரிய தொட்டியில் யூகலிப்டஸ் இலைகளை (சுமார் இருநூறு கிலோ) கொட்டி, அதன் அடியில் காய்ந்த (எண்ணை எடுத்து சருகாகிவிட்ட) யூகலிப்டஸ் இலைகளை கொண்டே எரிக்கின்றனர். வெப்பத்தில் யூகலிப்டஸ் இலைகளில் இருந்து வரும் வாயுவை ஒரு டியுப் மூலம் இன்னொரு தொட்டிக்கு கொண்டு செல்கின்றனர். இந்த இரண்டாவது தொட்டியில் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி இருக்கின்றனர், இந்த வாயு டியுப் மூலம் வரும் போது குளிர்ந்து யூகலிப்டஸ் தைலமாக மாறுகிறது. அதை ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கின்றனர் !!
 
யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் முறை !

இந்த தொட்டியில்தான் யூகலிப்டஸ் இலை போடப்படும்.

யூகலிப்டஸ் இலை......தொட்டியில் தயாராக 

இந்த தொட்டியின் மேல் ஒரு பெரிய மூடி கொண்டு மூடி அதை மண் மூலம் அடைக்கின்றனர். இதன் மூலம் ஆவி வெளியே செல்லாதவாறு தடுக்கபடுகிறது. சுமார் பத்து மணி நேரம் வரை இப்படி செய்தால் உங்களுக்கு 100 கிலோவிற்கு ஒரு லிட்டர் யூகலிப்டஸ் எண்ணை கிடைக்கிறது. இது முடிந்தவுடன் அந்த யூகலிப்டஸ் இலை வெறும் சருகுதான், இதைதான் காயவைத்து எரிக்க பயன்படுத்துகின்றனர்.


மணல் கொண்டு சீல் செய்யப்பட்ட தொட்டி......

அடியில் இருந்து எரிக்கப்படும் யூகலிப்டஸ் இலைகள்.....

இலைகளை தள்ளி யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் தொழிலாளி...... நல்லா பாருங்க, நான்தான் !

அண்டா கா கசம், அபுகாகா குசும்..... யூகலிப்டஸ் தைலம் ஆகிடு சீசே !

இந்த டியூப் உள்ளே இருக்கும் வாயு இப்படிதான் குளிர்விக்கபடுகிறது !

இப்படி சொட்டு சொட்டாக தயாராகும் நீலகிரி தைலத்தை இந்த தயாரிப்பாளர் பெரிய பெரிய பாட்டிலில் அடைத்து வைத்து இருக்க, இதை வாங்கி செல்லும் சிறு வியாபாரிகள் சிறு பாட்டிலில் அடைத்து லேபில் ஒட்டி கடைகளில் கொடுக்கின்றனர். சுமார் சிறிய கணக்கு போடலாம் வாருங்களேன்..... ஒரு கிலோ இலைகளை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கி, நூறு கிலோ இலையில் ஒரு லிட்டர் தைலம் கிடைக்கிறது, ஆக இதன் அடக்க விலை என்பது எண்ணூறு ரூபாய். வெளியில் 100 ml கொண்ட தைலம் சுமார் 250 ரூபாய் !! (இதில் கலப்படம் செய்து வருவது எக்ஸ்ட்ரா வருவாய்) அப்போ நாம தைல பாக்டரி ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :-). முடிவில் ஒரு தைல பாட்டில் வாங்கி கொண்டு இரண்டு சொட்டு வாங்கி கைகளில் தடவி கொண்டு வீட்டிற்க்கு திரும்பினோம்...... சுமார் இரண்டு நாட்கள் வரை அந்த வாசனை போகவில்லை, இந்த பதிவின் வாசனை போலவே ! 
 
ம்ம்ம்ம்ம்ம்...... தைலம் ரெடி !
 

 
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, Eucalyptus, how it is made, nilgiri, thailam, nilagiri thailam, nilgiris special

13 comments:

  1. எனக்கும் இப்போ நீலகிரித் தைலம் தேவைப்படுது! ரெண்டு நாளா ஜலதோஷம்! வழக்கம் போல தெளிவான விளக்கங்களுடன் ஊர் ஸ்பெஷல் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தளிர் சுரேஷ், இப்போ ஜலதோஷம் சரியா போச்சா, உங்களுக்காகத்தான் இந்த பதிவே போட்டேன் தெரியுமா :-)

      Delete
  2. அருமை ....All rounder. சுரேஷ் .. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம், வெகு நாள் ஆகிவிட்டது உங்களது கருத்து பார்த்து !

      Delete
  3. அருமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நாடோடி பையன்.... உங்களை போலவே நானும் இப்போது நாடோடிதான் !

      Delete
  4. வாசம் வீசுகிறது உங்கள் எழுத்தில்! வாசகர்களையும் நேரில் பார்க்கும் அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது உங்கள் பதிவுகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அதிதி...... உங்களது கருத்து எனக்கு மகிழ்ச்சியை தந்தது. வாசம் நன்றாக இருந்ததா !

      Delete
  5. Dear Suresh,
    i recently started reading your blogs. your blogs were different from others in the way , that they introduce the local flavor. you are doing an absolute good job. I wonder how you find time to travel to those places and also registering it as a blog fantastic

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your comments Sarav......it really gives me pleasure when I read it ! Yes, you are right many people asked me the same question, but when you find a passion, you can find the time...... that is the truth. Keep reading my blog and call me when you are free to have a chat !

      Delete
  6. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஜெகன் !

    ReplyDelete
  7. supper..அருமையான் பதிவு.

    ReplyDelete