Thursday, September 25, 2014

நான் ரசித்த கலை - பாட்டில் மணல் ஓவியம், துபாய்

கலை..... ஆடலும், பாடலும் மட்டும் அல்ல, அதையும் தாண்டி நிறைய கலைகள் இருக்கின்றன. பொதுவாக எங்கு சென்றாலும் கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது கலை இருந்தால் அதை வேடிக்கை பார்ப்பது வழக்கம், அதையே இங்கே பகிர்கிறேன்..... ஏனென்றால் உலகம் தன்னிடத்தில் பல வகை கலைகளை கொண்டுள்ளது !! சென்ற முறை துபாய் சென்று இருந்தபோது நான் தங்கி இருந்த ஒரு ஹோடேலின் ஓரத்தில் கண்ணாடி குடுவையினுள் ஓவியங்கள் வரைந்து வைத்து இருந்தது, முதல் பார்வையில் நமது ஊரில் இருப்பது போல பெயிண்ட், பிரஷ் கொண்டு வரைந்து இருக்கின்றனர் என்றுதான் நினைத்தேன். பின் இன்னொரு முறை அதை கடக்கும்போது சற்றே கூர்ந்து கவனித்ததில் உள்ளே இருந்தது அனைத்தும் மணல்....... உள்ளே மணலை நிரப்பி நிரப்பி ஒட்டகம், பாலைவனம், பறவைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து இருந்தார்கள் ! எப்படி இது சாத்தியம் என்று தோன்றியது !இதை இன்னும் எளிதாக சொல்வதென்றால்..... நீங்கள் ஒரு கண்ணாடி குடுவையில் மணலை நிரப்புவது போலவேதான் இது. மணலில் கலர் சேர்த்து, எங்கு உருவம் வேண்டுமோ அங்கு மட்டும் அந்த கலர் மணலை நிரப்புகின்றனர். இப்படியே எல்லா உருவத்தையும் உருவாக்குகின்றனர். இந்த மணலில் பசை போன்ற ஒன்று இருப்பதால் செய்த சிறிது நேரத்தில் இறுகி விடுகிறது ! மிகவும் நுணுக்கமான வேலை, ஆனால் அவர்களோ பழக்கத்தில் சரசரவென்று உருவாக்குகின்றனர்.

அந்த மணலை கையில் எடுத்து பார்க்க அது பாலைவன மணலை விட மிகவும் நைசாக இருந்தது. அதன் செய்முறையை கேட்க வெறும் சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. அந்த மணலில் கலர் போட்டு, அதனோடு சிறிது பசை வகையினையும் சேர்க்கின்றனர். முதலில் கொஞ்சம் மணல் எடுத்து உள்ளே போட்டு பின்னர் மிக மெலிதான பைப் போன்ற ஒன்றை கண்ணாடியின் அருகினில் விட்டு அவர் ஒட்டகத்தை உருவாக்கியது அற்புதம். இப்படியே பேரீட்சை மரங்கள், நிலா, மேகம் என்று உருவாக்கியது ஆச்சர்யம் தந்தது.ஒரு  பாட்டிலின் விலை சுமார் ஐநூறு வரை ஆகிறது, வெறும் மணலை ஒரு கலையாக்கி ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது இதுதான் போலும். நானும் எனது நினைவுக்கு என்று ஒன்று வாங்கி வந்தேன், அடுத்த முறை அரபு நாடுகளுக்கு சென்றால் இதை பார்க்கவும், அனுபவிக்கவும் மறக்காதீர்கள் !!

Labels : Suresh, Kadalpayanangal, Art, Sand art, Dubai, Bottle sand art, Amazing art, naan rasitha kalai, bottle art

Tuesday, September 23, 2014

ஊர் ஸ்பெஷல் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு !!

 அலங்காநல்லூர்..... இந்த பெயரை கேட்டாலே சீறி பாயும் காளைகள்தானே நமது நினைவுக்கு வரும் ! 2014ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது, இந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு பார்த்தே தீர வேண்டும் அல்லது அதற்க்கு சுமார் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டுமே என்று அவசரம் அவசரமாக பெங்களுருவில் இருந்து சென்று வந்தேன். வழக்கமாக இது போன்ற திருவிழாவிற்கு அவ்வளவு ஆட்கள் வரமாட்டார்கள் என்று வீட்டில் நன்றாக உண்டுவிட்டு, அலங்காநல்லூருக்கு கிளம்பினோம்...... உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு என்று ஏன் சொல்கிறார்கள் என்பது அங்கு செல்லும்போதுதான் தெரிந்தது, கூட்டம் தள்ளி சாய்ந்தது ! ஒரு சாதாரண ஊர் அன்று அசாதாரணமாக வீறு கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதை பார்க்கும்போது ஏன் இங்கு மட்டும் இந்த ஜல்லிக்கட்டு பேமஸ், காளையை அடக்குவது என்றால் என்ன, ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏன் வந்தது, அது ஏன் பொங்கல் பண்டிகையின்போது கொண்டாடுகிறோம், அது ஏன் வீர விளையாட்டு என்கிறோம் என்று பல கேள்விகள், அன்று ஜல்லிக்கட்டு முடிந்து ஊர் திரும்பும்போது அனைத்துக்கும் விடை கிடைத்தது, அது தமிழர்களின் பண்பாடு குறித்து மரியாதையை கொடுத்தது !

அடங்கா காளை ஒன்று அலங்காநல்லூரில்....... !!

மாடு பிடிக்க போகலை, பார்க்கத்தான் போனேன்..... understand !
அலங்காநல்லூர் (ஆங்கிலம்:Alanganallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திண்டுக்கல் - மதுரை பைபாஸ் சாலையில் அலங்காநல்லூர் என்று ஒரு போர்டு பார்த்தவுடனே இதோ வந்துவிட்டது என்று நினைத்தீர்கள் என்றால் அது தவறு, அதில் இருந்து சென்றுகொண்டே இருந்தால் கிராமத்து வயல் வெளிகளும், கண்மாய் என்று பாரதிராஜாவின் கிராமங்களை நினைவு படுத்திக்கொண்டே செல்லலாம், முடிவில் அலங்காநல்லூர் கிராமம் உங்களை வரவேற்கிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு என்பதற்கு மஞ்சு விரட்டு, ஏர் தழுவுதல் என்ற பெயரும் உண்டு. சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.

அலங்காநல்லூர் செல்லும் அந்த கிராமத்து ரோடு !

அலங்காநல்லூர் பேருந்து நிலையம்...... காளைகளின் ஊர் !
 தை முதல் நாளில்தான் சூரியன் தட்சிணாயத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயணத்துக்கு அதாவது வடதிசைக்கு மாறுகிறது. மேலும், தமிழர்கள் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனிக் காலம் எனப்படும். தமிழர் இளவேனில் காலத்தையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர். இந்த இளவேனிற் காலமும் தைத்திங்களில்தான் தொடங்குகிறது. அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன்! இந்தச் செய்தியைச் சற்று உள்வாங்கிப் பார்க்கும்போது, காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற மிகைப்படுத்தப்படா உண்மை புலர்கிறது! தமிழர் திருநாள் எனும் சொல்லாட்சியினை முதன்முதலில் பொங்கலுக்குச் சூட்டியவர் பேரறிஞர் கா.நமச்சிவாயர்! மலையகத்தில் கோ.சாரங்கபாணியார் இதனைப் பரவலாக்கினார். பொங்கல் என்பது விழாவுக்குரிய மரபுப் பெயராகும். இவ்விழா தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்றே அழைக்கலாம்.

காளை மாடு பெருமையாக.......
பொங்கல் விழா என்று சொல்லும்போதே அது ஒரு நாள் பண்டிகை இல்லை என்று புரியும், ஆனால் அதன் அர்த்தம் தெரியுமா....... அலங்காநல்லூரில் ஒரு பெரியவரிடம் பேசியபோது தெரிந்தது இதுதான்....
 
போகி (மார்கழி கடைசி நாள்) - போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது போகிப் பொங்கல். 'பழையனக் கழித்து, புதியன புகவிடும் ' நாளாகக் கருதப் படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. விவசாயி என்னதான் கணக்கு போட்டாலும், பூமி தாய் நிறைய நெல்லை கொடுப்பாள். அதை அறுவடை செய்யும்போது வீட்டில் வைக்க இடமில்லாமல் போய் விடக்கூடாது என்று இந்த நாளில் பழையதை நெருப்பில் இடுவார்கள். அன்று வீடிற்கு வெள்ளை அடிக்கும்போது சுண்ணாம்பு வாசனையில் பூச்சி, எலி ஆகியவை வீட்டை விட்டு செல்லும், நெல்லும் பாதுக்கக்கப்படும். போகித் திருநாள், மாரியம்மன் விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு பல ஊர்களில். மாரியைப் பொழிபவள் மாரியம்மன், என்ற வகையில் கொண்டாடுகிறார்கள்.
 
பொங்கல் (தை 1ம் நாள்) - தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரியபகவானைப் போற்றி வணங்கி வழிபடும். இந்த நாளில் அறுவடை செய்து நாளெல்லாம் கதிர் அடித்து மாட்டை வைத்து வீட்டிற்க்கு நெல்லை கொண்டு வருவார்கள். அன்று பொங்கலிட்டு அந்த நாளை வணங்குவார்கள் !
 
மாட்டுப்பொங்கல் (தை 2ம் நாள்) - இந்த நாளில் கதிர் அடித்து, நெல்லை கொண்டு கொட்டியதால் மனிதனும், மாடும் வெகுவாகவே உடம்பில் நோவுடன் இருப்பார்கள். அன்று நின்று நிதானித்து நெல் மூட்டைகளை கணக்கு எடுக்க வழி வகுக்கும்.
 
காணும்பொங்கல் (தை 3ம் நாள்) - இந்த நாளில், நெல் விளைச்சலை வைத்து முன் பணம் வாங்கலாம், இன்றுதான் விவசாயி பணத்தை காணுவார்கலாம். இந்த நாளில் கிடைத்த பணத்தை வைத்து வண்டி கட்டி திருவிழா காண கிளம்புவார்கள். இன்று நிறைய வீர விளையாட்டுக்கள் நடக்கும், அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. "தை பிறந்தால், வழி பிறக்கும்" எனும்போது இந்த ஜல்லிக்கட்டில் வீரர்களை அடையாளம் கண்டு தங்கள் வீட்டு பெண்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதும் நடக்குமாம்.

எப்படி எல்லாம் பார்க்குறாங்க பாருங்க....... அரசாங்கம் ஒரு நல்ல வழி செய்ய கூடாதா !


உள்ளே நுழையவே முடியாது, ராத்திரியில் இருந்தே இடம் போட்டு படுத்துப்பாங்க !

டிவி ஒன்னுதான் நம்ம வழி !
ஜல்லிகட்டு மாடு வளர்க்கபடுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை. மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை.ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். இப்படி காளை மாடு / ஜல்லிக்கட்டு மாடு என்பது ஒரு குடும்பத்தின் அடையாளம், இந்த ஜல்லிக்கட்டில் ஒரு மாட்டை வைத்து ஒரு குடும்பத்தின் குணத்தை புரிந்து சம்பந்தம் பேசுவார்களாம்.
 
வாடி வாசல் கொண்டு போக எவ்வளவு காளைகள் பாருங்க.....
 ஜல்லிகட்டில் இரண்டுவிதமாக உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது.அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. இந்தவகையில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும். யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு போர்களம் போலிருக்கும். வாடிவாசல் (vadi vasal) என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தப்படும். தஞ்சை வட்டாரத்தில், மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து இரவு ஒரு திடலில் கொண்டு வந்து கட்டுவார்கள். அங்கு ஒரு மரத்தின் கீழே இறைவனின் உருவைப் பிடித்துவைத்து பொங்கலிடுவார்கள். பின் பொங்கலைக் குவித்து பழங்களைச் சேர்த்து பிசைந்து மாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டுவார்கள். மறுநாள் அதிகாலை மாடுகளின் கழுத்தில் தேங்காய், பழங்களைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். முறைப்பெண்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, இளைஞர்கள் மாடுகளைத் துரத்தி அந்த தேங்காயைப் பறிப்பார்கள். இதுவே சேலம், ஈரோடு, கோவை, காரைக்குடி பகுதிகளில் மஞ்சு விரட்டு அல்லது வெளிவிரட்டு என்ற பெயரில் நடக்கிறது. சிறுவயல், பலவான்குடி, திருப்பத்தூர், வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சேர்ந்தவை.
 
யாருப்பா அது காளைய அடக்குனது, இந்தா பரிசு !

வாடி வாசல்...... ஒரு சாதாரண நாளில் !
 
இவ்வளவும் பரிசு...... அடக்குனா கிடைக்கும் !
 இந்த ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது பெரிய வேலை தெரியுமா ? அதுவும் உலகபுகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவது சும்மா இல்லை.
 • விழாவின் அமைப்பாளர்கள் ரூ.2 லட்சத்துக்கும் குறையாமல் பிணை வைப்புத் தொகை செலுத்த வேண்டும். 
 • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாடுகள் குறித்து தனித்தனியே விண்ணப்பங்களைப் நிறைவு செய்து சென்னை மத்திய பிராணிகள் நல வாரிய அமைப்புக்கு உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மத்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்து தகுதியானது என சான்றளிக்கப்படும் காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
 • காளைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது, ஒரு காளையை 4 நபர்களுக்கு மேல் அடக்க முயற்சி செய்யக் கூடாது.
 • காளைகள் போட்டியின் போது காயமுற்றால் உடனடியாகத் தேவையான சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் கால்நடை சிகிச்சை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.
 • ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும். தலா 10 கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என 30 பேர் கொண்ட குழுவை, நான்கு தனிக் குழுக்களாகப் பிரித்து காளைகளை நன்குப் பரிசோதித்த பின்னரே வாடிவாசலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 • ஒவ்வொரு காளைக்கும் ஒரு ஸ்பான்சர் இருப்பார்கள், அது அந்த ஊரின் டீ கடையோ அல்லது வெளிநாட்டில் இருப்பவரோ, அவர்களது தகுதிக்கு ஏற்ப அந்த காளைக்கு போட்டிக்கு முதல் நாள் அந்த காளையின் தகுதி சான்றிதழோடு பரிசு பொருட்களையும் பெயர் எழுதி கொடுக்க வேண்டும். மாட்டை அடக்கினால் அது வீரருக்கு, இல்லையென்றால் அது மாடு வளர்தவர்க்கு.
 • சில வேளைகளில், சில மாட்டிற்கு பரிசு எதையும் எவரும் ஸ்பான்சர் செய்ய யாரும் இல்லாத பட்சத்தில், விழா குழுவினரின் ஆறுதல் பரிசு கொடுக்கப்படும்.
 • மாட்டை அடக்கும் வீரர்கள் என்று பார்த்தால் வெகு சிலரே இருப்பார்கள், மீதி எல்லோரும் பதிவு செய்தால் கிடைக்கும் டி-ஷர்ட், பரிசு பொருட்களுக்காக வருவார்களாம். மாடு வந்தாலே வேலியில் தொற்றி கொள்பவர்கள் இவர்கள்!

இது கும்பலின் ஒரே ஒரு பகுதிதான், இவ்வளவு கிட்டக்க போக முடிஞ்சது என்னால !
 
வாடிவாசலின் பின் பக்கம் காளைகள் பாய்வதற்கு ரெடி ஆக .........
 
 
மாட்டை பிடிப்பதில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா......... கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள். மாடு வாடி வாசலை விட்டு வெளியே வந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் கோட்டை கடப்பதற்குள் நீங்கள் மாட்டினை தழுவி சென்றால் நீங்கள் வீரர்...... பரிசு பொருள் உண்டு ! இப்படி மாடு பிடிக்கும்போது, சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.
 • தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.
 • கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.
 • தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.
 • நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.
 • அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.
 • பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
 • கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.
 
காளை முட்டி சாபவனும், சவுக்கு சரிந்து சாபவனும் இருக்கான் இங்க.....
 
ஜல்லிக்கட்டு காளைகளில் பல வகை உண்டு, இன்று ஜல்லிக்கட்டிற்கு வரும் காளைகள் எல்லாம் ஒரிஜினல் இல்லை, அன்றைய நாளில் நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆகும்.
 
ஜல்லிக்கட்டு மாட்டிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது....


 
ஜல்லிக்கட்டு என்று பெருமையாக சொன்னாலும், இன்றைய ஜல்லிக்கட்டுகளில் வரும் காளைகளை பார்த்து இருக்கிறீர்களா ? அன்று காளைகள் வயல் வேலைக்கும், மாட்டு வண்டிக்கும் பயன்படுத்தப்பட்டன, இன்று டிராக்டர் வந்துவிட்டதால் இதை சினைக்கு மட்டுமே வளர்க்கும் படியாக ஆகிவிட்டது. இதனால், இன்றைய ஜல்லிக்கட்டு காளையை பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே, எவ்வளவு நோஞ்சான் காளை எல்லாம் வருகிறது என்று ?! இந்த காளைகள் பசு மாடுகளை உருவாக்கி, அது தரும் பாலை நாம் குடித்து உடம்பு வளர்க்கிறோம்....... யோசித்து பாருங்கள், இந்த உலகமயமாக்களில் அர்ஜுன் அம்மாவின் நாலரை பால் எப்படி எல்லாம் உங்களை மூளை சலவை செய்து வருகின்றது என்பது தெரியும். காளைகள் வளர்ப்பவர்கள் இன்று மிகவும் குறைவு, பத்து பசு மாட்டிற்கு மூன்று காளைகள் என்று இன்று இருக்கிறது, சிசு கொலையாக இன்று காளைகளை கொல்ல ஆரம்பித்து விட்டனர்........ ஒரு நாளில் பசுவும் விந்தணுவை வெளிநாடுகளில் இருந்து பெறும் நாள் வரும், அன்று ஜல்லிக்கட்டின் வாடி வாசலில் வரும் காளைகள் மம்மி என்று கத்துவதை பார்க்க நாம் இருப்போமா ?! இன்றும் ஜல்லிக்கட்டில் ஒரு காளை எல்லோரையும் ஜெயித்துவிட்டால் அந்த ஊர் மிகவும் பிரபலமாகிவிடும், அந்த ஊரில் இருந்து மாப்பிள்ளை எடுக்க போட்டி இருக்கிறது தெரியுமா ?! ஊரின் பெருமையை காக்கும் இந்த விளையாட்டு தொடருமா..........
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, special, Jallikattu, eru thaluvuthal, manjuvirattu, jalli, maadu pidi, alanganallur, alanganalloor, world, famous, world famous, bull fight, Tamilnadu, India

Monday, September 22, 2014

அறுசுவை(சமஸ்) - கூத்தாநல்லூர் தம்ரூட் !!

சமஸ் எழுத்தின் வசீகரித்தால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன், அவரது சாப்பாட்டு புராணம் புத்தகத்தை வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தபோது அதற்காகவே சுற்றி சுற்றி சாப்பிட வேண்டும் என்று தொடங்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கும்பகோணம் பகுதிக்கு சென்று சாப்பிடுவது வழக்கம் ஆகி விட்டது ! இது போல சுற்றி வந்ததில் ஒன்று மட்டும் புரிந்தது..... பொதுவாக எந்த ஊருக்கு சென்றாலும் ஹோடேலில் இட்லி, தோசை, மீல்ஸ் கிடைக்கும் அதை மட்டுமே சாப்பிட்டு வருவோம், ஆனால் கொஞ்சம் மெனகெட்டால் அந்த ஊரின் பாரம்பரிய சுவை கொண்ட ஒன்றை சுவைக்க முடியும், அதையே ஊரும் ருசியும் என்ற பகுதியில் எழுதி வருகிறேன். அப்படி சுவையான ஒன்றை உள் அடக்கி வைத்து இருப்பதுதான் திருவாரூர், மன்னார்குடி சாலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம் கூத்தாநல்லூர். அந்த ஊரை கடக்கும்போது பிரியாணியும், பரோட்டாவும் மெயின் ரோட்டில் கிடைத்தாலும் அந்த ஊரில் அதை மட்டும் சாப்பிட்டு போனால் உங்களது நாக்கே உங்களை சாபம் விடும்..... அதற்க்கு தம்ரூட் கொடுத்து பாருங்கள், சுருட்டிக்கொண்டு இருக்கும் !!

திரு.சமஸ் அவர்களின் எழுத்தில் படிக்க…… கூத்தாநல்லூர் தம்ரூட் !!


கூத்தாநல்லூர் என்ற பெயரை படிக்கும்போதே மனம் கூத்தாட தொடங்கிவிடுகிறது. மெயின் ரோட்டில் இறங்கி இங்க மௌலானா பேக்கிரி எங்க இருக்கு என்று கேட்க ஒரு ரோட்டை காண்பித்து இப்படி போங்க, ரோட்டின் மேலேதான் கடை என்று வழி காட்டினர். கண் கொத்தி பாம்பாய் தேடிக்கொண்டு செல்ல நீங்கள் மிஸ் செய்ய முடியாத அளவுக்கு அந்த கடை பெரிய போர்டு போட்டு இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு பேக்கரி உள்ளே சென்று பொறுமையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இதுதான் தம்ரூட்டா என்று என்னையே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தபோது என்ன சார் வேணும் என்று கேட்க இங்க தம்ரூட் அப்படின்னு ஒன்னு இருக்காமே, என்று கேட்க ஆமாம் என்று எடுத்துக்கொடுக்கிறார்கள், அது சரி நான் முன்னேயே அதை பார்த்துவிட்டு கேக் போலும் என்று நினைத்து இருந்தது..... முன்னே பின்னே பார்த்து இருந்தால்தானே !!பெட்டியை பிரித்தவுடன் பொன்னிறம் உங்களது கண்களை தாக்கும், ஒரு துண்டு எடுக்கும்போதே நெய் வாசனை தூக்குகிறது. கண்களில் அதை விழுங்கிக்கொண்டே ஒரு கடி கடிக்கும்போது ம்ம்ம்ம்ம்ம்...... பாகாய் கரைகிறது நாக்கினுள். ரவை, நெய், பால், சர்க்கரை, முட்டை மற்றும் முந்திரி, திராட்சை எல்லாம் இருக்கும்போது இனிக்காமலா இருக்கும். ரஸ்க் சாப்பிட்டு இருக்கிறீர்களா, கேக்....... இதற்க்கு இடையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் ? கேக் போன்ற மென்மையும், ரஸ்க் போன்ற கொஞ்சமே கொஞ்சம் கடினமும் சேர்ந்து, ஒவ்வொரு கடிக்கும் முந்திரியும், திராட்சையும் நான் முந்தி, நீ முந்தி என்று நாக்கினுள் நாட்டியம் ஆட, ரவையின் சுவையில் கரைய கரைய இதை சாப்பிடும்போது இதை எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தோம் என்றே எண்ண தோன்றியது. எல்லா முஸ்லிம் நண்பர்களின் ஏரியாவிலும் இந்த பண்டம் என்பது நிச்சயம் கிடைக்கும் எனும்போது, இனி விடக்கூடாது என்றே தோன்றியது !

ஒரு பீஸ் கையில் எடுத்து.....

ஒரு கடி கடிக்க........ தேவாமிர்தம் போங்கள் !!

தம்ரூட் சாப்பிட்டு முடித்தவுடன்....... சந்தோசத்தை பாருங்களேன் !

அங்கு தம்ரூட் போலவே அவர்களது பால் ரஸ்க்கும் ரொம்பவே பேமஸ் என்று சமஸ் அவர்கள் எழுதி இருந்ததால், அதையும் ஒரு கை பார்த்தோம். நாங்கள் தம்ரூட்டை இவ்வளவு ரசித்து சாப்பிட்டது கண்டு எங்கு இருந்து வரீங்க என்று கேட்க, நான் பெங்களுரு என்று சொல்ல...... இந்த ஊருல யாரை பார்க்க வந்து இருக்கீங்க என்றபோது நான் இல்லை, தம்ரூட் சாப்பிட மட்டுமே இங்கே தேடி வந்தோம் என்று சொல்லி சமஸ் அவர்களின் புத்தகத்தை காட்டினேன். அட, இதை சாப்பிட மட்டுமா என்று ஆச்சர்யமாக பார்க்க, எனக்கு ஒரு அரை டஜன் தம்ரூட் வேணும் என்று பார்சல் சொல்லிவிட்டு, இந்த சுவைக்கு இவ்வளவு தூரம் வருவது தப்பில்லை என்றேன் !!

இனிமேல் தம்ரூட் சாபிடனுமின்னா மௌலானா பேக்கரி வாங்க.......


மன்னார்குடி - திருவாரூர் சாலையில், மன்னார்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் (சுமார் இருபது நிமிடம்) தூரத்தில் இருக்கிறது கூத்தாநல்லூர். இங்கு சென்று யாரை கேட்டாலும் சொல்வார்கள்.... தம்ரூட் சாப்பிட மௌலானா பேக்கரி போங்கள் என்று !
தம்ரூட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....... தம்ரூட் ! செய்ய சுலபமாக இருக்கிறது, சுவையோ அபாரம் !

what you need
Butter – 250 gm
Condensed milk – 150 ml
Semolina (Sooji) – 350 gm
Sugar – 450 gm
Eggs - 6
Cashews and raisins - 1 cup
Cooking instructions
Melt butter in a heavy-bottomed vessel until it becomes frothy and changes to a light golden colour.
Fry cashews and raisins in 1 tbsp of ghee.
In a bowl mix together eggs, sugar, condensed milk, sooji, melted butter, cashews and raisin with a spatula.
Pour the mixture in a 10-inch cake tin.
Place in the oven and bake at 220 degree for an hour.
Cool and serve.

 தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும்போது கூத்தாநல்லூர் சென்று வருவது தப்பே இல்லை, எனக்கும் ஒன்றை பார்சல் அனுப்புங்களேன் !

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Sappaattu puraanam, oorum rusiyum, district, taste, Thamroot, Thamrut, Dhamroot, Dhamrut, Koothanallur, Mannargudi, muslim, dessert, mannargudi, thiruvaaroor

Wednesday, September 17, 2014

அறுசுவை - காட்டுக்குள்ளே சாப்பிடலாமா ?!

உணவை தேடி செல்வது, அதுவும் நல்ல உணவை தேடி செல்வது என்பது மனதுக்கு சந்தோசம் தரும் ஒன்று, அப்படி நல்ல உணவு கிடைக்கும் இடத்தில் சாப்பிடும் இடமும் வித்யாசமாக இருந்தால் எப்படி இருக்கும் ? ஒரு முறை NCCயில் மலையேற்றம் கூட்டிக்கொண்டு சென்றபோது மலை ஏறுவதற்கு முன்பு சாப்பாடு எல்லாம் வாங்கி மூட்டை கட்டிக்கொண்டோம், காடுகளுக்கு இடையில் கால் வலிக்கும்போது ஒரு ஓடையின் அருகில் உட்கார்ந்து அந்த தயிர் சாதத்தை பிரித்து உண்டபோது மிகவும் நன்றாக இருந்தது, அப்போது அங்கு வந்த பறவைகள், சிறு மிருகங்களுக்கும் அந்த உணவை பகிர்ந்து உண்டது என்ன ஒரு அனுபவம் ! பெங்களுருவில் இந்திரா நகரில் ஒரு முறை சென்று கொண்டு இருந்தபோது "தி ராக்" என்ற உணவகம் கண்ணில் பட்டது, அந்த உணவகத்தின் முன் காட்டு மிருகங்களின் படம் போட்டு இருந்ததை கவனித்து எனது மனைவியிடம் என்ன அங்க போகலாமா, அப்படியே பையனுக்கு அங்க பாரு ஒரு குரங்கு போட்டு இருக்கான் அதையும் காண்பித்து போல இருக்கும் என்றபோது தலையை ஆட்டிவிட்டு ஏதோ முனகினார்..... கண்டிப்பாக "அதைதானே நான் கட்டிக்கிட்டு இருக்கேன்" என்று மட்டும் இருக்காது !
 
 
 

இது மூன்றாவது மாடியில் இருந்தது, லிப்டில் உள்ளே சென்று, மூன்றாவது மாடியில் கதவு திறக்கும்போதே எதிரில் தத்ரூபமாக கையில் ஈட்டியுடன் ஒரு காட்டுவாசி உங்களை முறைத்தால் கலக்கதானே செய்யும். ஒரு கதவு திறக்க உள்ளே நிஜமாகவே ஒரு காட்டுக்குள் வந்தது போல கொரில்லாவும், பனிக்கரடியும், யானையும், சிறு சிறு பறவைகளின் குரலும் என்று வந்தது. சிலு சிலுவென்று குளிர் காற்று அடிக்க, ஒரு சிறு அருவியில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது, மரத்தில் பட்டாம்பூச்சியும், குரங்கும் இருந்தது, சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஒரு இடம் பார்த்து உட்கார வைத்தனர், உட்கார்ந்து இருந்த சோபா, பின்னால் தெரிந்த சுவற்றில் மிருகங்களின் செதுக்கல்கள், அங்கங்கே காட்டுவாசி போன்ற பொம்மைகள் என்று புதுமையாகத்தான் இருந்தது !

 
 
மதியம் சென்றால் பப்பெட் முறை இருந்தது, சூப், ஸ்டார்ட்டர்ஸ், சாலட், ரோட்டி, கிரேவி, அரிசி, புலாவ் என்று வகை வகையாக இருந்தது..... வெஜ்ஜிலும், நான்-வெஜ்ஜிலும் !! சூப் பரவாயில்லை என்று இருந்தாலும் பிரைடு பொடேடோ என்று ஒன்று இருந்தது நிஜமாகவே சூப்பர், சிறு உருளைகிழங்குகளை அங்கங்கே கீறி அதை எண்ணையில் கொஞ்சமே கொஞ்சமாக வறுத்து அதில் காரமும், பெப்பரும் போட்டு இருந்தது, ஒரு கடிக்கே நாக்கில் நீர் ஊறியது நிஜம்.அடுத்து அங்கு இருந்த பன்னீர் பிரை, மசாலா பிரைடு பேபிகார்ன் என்பதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகவே அமைந்தது. பொதுவாக எந்த உணவகம் சென்றாலும் ஒரு சில டிஷ் ட்ரை செய்தாலே தெரிந்துவிடும் மற்றதெல்லாம் எப்படி இருக்கும் என்பது. எல்லா ஸ்டார்ட்டர்ஸ் வகைகளும் பிரை வகையாகவே இருந்தாலும், புலாவ், பேபிகார்ன் மசாலா, ராஜ்மா மசாலா என்று இருந்த வகைளில் சரியான வகையில் காரமும், சுவையும் இருந்தது ! 
 
எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு சாய்ந்து உட்கார்ந்து இருந்தபோதுதான், சார் டெசெர்ட் சாப்பிடறீங்களா என்று கேட்டனர், அடடே அதை மறந்துட்டோமே என்று நினைத்து கொண்டு இருந்தபோது மூளையும், மனதும் இதுக்கு மேலே போனா நடக்குறதே வேற என்று எச்சரித்தாலும் நாக்கு இழுத்துக்கொண்டு போனது. சிறு சிறு கேக், குலாப்ஜாமூன், அல்வா, ஐஸ் கிரீம் என்று எடுத்துக்கொண்டு வந்ததை பார்த்து சற்று மிரண்டுதான் போனால் என் மனைவி ! சிறுக சிறுக கரையும் குலாப்ஜாமூனில் அவ்வப்போது சிக்கும் அந்த ஏலக்காயை நாக்கினில் தள்ளி எடுப்பதே ஒரு தனி சுவைதான். எந்த ஒரு உணவகத்துக்கு சென்றாலும் அழுக்கு சுவர்களும், ஒரே போல மேஜை நாற்காலிகளும் இருக்கும், உணவும் சில நன்றாக இருந்தாலும் பல நம்மை அடுத்து செல்லலாமா என்று யோசிக்க வைக்கும்....... இங்கு உள்ளே நுழையும்போதே அந்த காட்டின் எபக்ட் கொடுத்து, சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதும் ஸ்பீக்கரில் அவ்வப்போது மிருகங்கள், பறவைகளின் குரல்கள் கொடுப்பது ஒரு வித்யாசமான அனுபவம் !!

பஞ்ச் லைன் :

சுவை - செப் நன்றாக சமைக்க கூடியவராக இருக்கிறார், சுவை நன்றாக இருக்கிறது.

அமைப்பு - சிறிய உணவகம், வேலட் பார்கிங் வசதி இருக்கிறது,   காடு, மிருகங்கள், பறவைகள் என்று எல்லாமுமே அருமையாக அமைத்து உள்ளனர். அருவியின் சத்தம், பறவைகளின் சத்தங்கள் என்று சாப்பிடும்போது அதுவும் சுவை சேர்க்கிறது !
 
பணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், எப்போதாவது ஒரு முறை இது போன்ற அனுபவங்களுக்கு செல்லலாம் !
 
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் !

மேலும் தெரிந்துகொள்ள..... https://www.zomato.com/bangalore/the-rock-indiranagar

 

மெனு கார்டு:

பப்பெட் இருந்தாலும், மெனு கார்டில் சில பகுதிகள் மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு 

அட்ரஸ் :

2001, 3rd Floor, 100 Feet Road, Indiranagar, Bangalore      

                                          Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, The Rock, Indira nagar, Concept restaurant, Forest theme, Dine with animals, Dine in forest, Forest type