Tuesday, September 23, 2014

ஊர் ஸ்பெஷல் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு !!

 அலங்காநல்லூர்..... இந்த பெயரை கேட்டாலே சீறி பாயும் காளைகள்தானே நமது நினைவுக்கு வரும் ! 2014ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது, இந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு பார்த்தே தீர வேண்டும் அல்லது அதற்க்கு சுமார் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டுமே என்று அவசரம் அவசரமாக பெங்களுருவில் இருந்து சென்று வந்தேன். வழக்கமாக இது போன்ற திருவிழாவிற்கு அவ்வளவு ஆட்கள் வரமாட்டார்கள் என்று வீட்டில் நன்றாக உண்டுவிட்டு, அலங்காநல்லூருக்கு கிளம்பினோம்...... உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு என்று ஏன் சொல்கிறார்கள் என்பது அங்கு செல்லும்போதுதான் தெரிந்தது, கூட்டம் தள்ளி சாய்ந்தது ! ஒரு சாதாரண ஊர் அன்று அசாதாரணமாக வீறு கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதை பார்க்கும்போது ஏன் இங்கு மட்டும் இந்த ஜல்லிக்கட்டு பேமஸ், காளையை அடக்குவது என்றால் என்ன, ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏன் வந்தது, அது ஏன் பொங்கல் பண்டிகையின்போது கொண்டாடுகிறோம், அது ஏன் வீர விளையாட்டு என்கிறோம் என்று பல கேள்விகள், அன்று ஜல்லிக்கட்டு முடிந்து ஊர் திரும்பும்போது அனைத்துக்கும் விடை கிடைத்தது, அது தமிழர்களின் பண்பாடு குறித்து மரியாதையை கொடுத்தது !

அடங்கா காளை ஒன்று அலங்காநல்லூரில்....... !!

மாடு பிடிக்க போகலை, பார்க்கத்தான் போனேன்..... understand !
அலங்காநல்லூர் (ஆங்கிலம்:Alanganallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திண்டுக்கல் - மதுரை பைபாஸ் சாலையில் அலங்காநல்லூர் என்று ஒரு போர்டு பார்த்தவுடனே இதோ வந்துவிட்டது என்று நினைத்தீர்கள் என்றால் அது தவறு, அதில் இருந்து சென்றுகொண்டே இருந்தால் கிராமத்து வயல் வெளிகளும், கண்மாய் என்று பாரதிராஜாவின் கிராமங்களை நினைவு படுத்திக்கொண்டே செல்லலாம், முடிவில் அலங்காநல்லூர் கிராமம் உங்களை வரவேற்கிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு என்பதற்கு மஞ்சு விரட்டு, ஏர் தழுவுதல் என்ற பெயரும் உண்டு. சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.

அலங்காநல்லூர் செல்லும் அந்த கிராமத்து ரோடு !

அலங்காநல்லூர் பேருந்து நிலையம்...... காளைகளின் ஊர் !
 தை முதல் நாளில்தான் சூரியன் தட்சிணாயத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயணத்துக்கு அதாவது வடதிசைக்கு மாறுகிறது. மேலும், தமிழர்கள் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனிக் காலம் எனப்படும். தமிழர் இளவேனில் காலத்தையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர். இந்த இளவேனிற் காலமும் தைத்திங்களில்தான் தொடங்குகிறது. அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன்! இந்தச் செய்தியைச் சற்று உள்வாங்கிப் பார்க்கும்போது, காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற மிகைப்படுத்தப்படா உண்மை புலர்கிறது! தமிழர் திருநாள் எனும் சொல்லாட்சியினை முதன்முதலில் பொங்கலுக்குச் சூட்டியவர் பேரறிஞர் கா.நமச்சிவாயர்! மலையகத்தில் கோ.சாரங்கபாணியார் இதனைப் பரவலாக்கினார். பொங்கல் என்பது விழாவுக்குரிய மரபுப் பெயராகும். இவ்விழா தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்றே அழைக்கலாம்.

காளை மாடு பெருமையாக.......
பொங்கல் விழா என்று சொல்லும்போதே அது ஒரு நாள் பண்டிகை இல்லை என்று புரியும், ஆனால் அதன் அர்த்தம் தெரியுமா....... அலங்காநல்லூரில் ஒரு பெரியவரிடம் பேசியபோது தெரிந்தது இதுதான்....
 
போகி (மார்கழி கடைசி நாள்) - போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது போகிப் பொங்கல். 'பழையனக் கழித்து, புதியன புகவிடும் ' நாளாகக் கருதப் படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. விவசாயி என்னதான் கணக்கு போட்டாலும், பூமி தாய் நிறைய நெல்லை கொடுப்பாள். அதை அறுவடை செய்யும்போது வீட்டில் வைக்க இடமில்லாமல் போய் விடக்கூடாது என்று இந்த நாளில் பழையதை நெருப்பில் இடுவார்கள். அன்று வீடிற்கு வெள்ளை அடிக்கும்போது சுண்ணாம்பு வாசனையில் பூச்சி, எலி ஆகியவை வீட்டை விட்டு செல்லும், நெல்லும் பாதுக்கக்கப்படும். போகித் திருநாள், மாரியம்மன் விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு பல ஊர்களில். மாரியைப் பொழிபவள் மாரியம்மன், என்ற வகையில் கொண்டாடுகிறார்கள்.
 
பொங்கல் (தை 1ம் நாள்) - தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரியபகவானைப் போற்றி வணங்கி வழிபடும். இந்த நாளில் அறுவடை செய்து நாளெல்லாம் கதிர் அடித்து மாட்டை வைத்து வீட்டிற்க்கு நெல்லை கொண்டு வருவார்கள். அன்று பொங்கலிட்டு அந்த நாளை வணங்குவார்கள் !
 
மாட்டுப்பொங்கல் (தை 2ம் நாள்) - இந்த நாளில் கதிர் அடித்து, நெல்லை கொண்டு கொட்டியதால் மனிதனும், மாடும் வெகுவாகவே உடம்பில் நோவுடன் இருப்பார்கள். அன்று நின்று நிதானித்து நெல் மூட்டைகளை கணக்கு எடுக்க வழி வகுக்கும்.
 
காணும்பொங்கல் (தை 3ம் நாள்) - இந்த நாளில், நெல் விளைச்சலை வைத்து முன் பணம் வாங்கலாம், இன்றுதான் விவசாயி பணத்தை காணுவார்கலாம். இந்த நாளில் கிடைத்த பணத்தை வைத்து வண்டி கட்டி திருவிழா காண கிளம்புவார்கள். இன்று நிறைய வீர விளையாட்டுக்கள் நடக்கும், அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. "தை பிறந்தால், வழி பிறக்கும்" எனும்போது இந்த ஜல்லிக்கட்டில் வீரர்களை அடையாளம் கண்டு தங்கள் வீட்டு பெண்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதும் நடக்குமாம்.

எப்படி எல்லாம் பார்க்குறாங்க பாருங்க....... அரசாங்கம் ஒரு நல்ல வழி செய்ய கூடாதா !


உள்ளே நுழையவே முடியாது, ராத்திரியில் இருந்தே இடம் போட்டு படுத்துப்பாங்க !

டிவி ஒன்னுதான் நம்ம வழி !
ஜல்லிகட்டு மாடு வளர்க்கபடுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை. மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை.ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். இப்படி காளை மாடு / ஜல்லிக்கட்டு மாடு என்பது ஒரு குடும்பத்தின் அடையாளம், இந்த ஜல்லிக்கட்டில் ஒரு மாட்டை வைத்து ஒரு குடும்பத்தின் குணத்தை புரிந்து சம்பந்தம் பேசுவார்களாம்.
 
வாடி வாசல் கொண்டு போக எவ்வளவு காளைகள் பாருங்க.....
 ஜல்லிகட்டில் இரண்டுவிதமாக உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது.அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. இந்தவகையில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும். யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு போர்களம் போலிருக்கும். வாடிவாசல் (vadi vasal) என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தப்படும். தஞ்சை வட்டாரத்தில், மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து இரவு ஒரு திடலில் கொண்டு வந்து கட்டுவார்கள். அங்கு ஒரு மரத்தின் கீழே இறைவனின் உருவைப் பிடித்துவைத்து பொங்கலிடுவார்கள். பின் பொங்கலைக் குவித்து பழங்களைச் சேர்த்து பிசைந்து மாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டுவார்கள். மறுநாள் அதிகாலை மாடுகளின் கழுத்தில் தேங்காய், பழங்களைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். முறைப்பெண்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, இளைஞர்கள் மாடுகளைத் துரத்தி அந்த தேங்காயைப் பறிப்பார்கள். இதுவே சேலம், ஈரோடு, கோவை, காரைக்குடி பகுதிகளில் மஞ்சு விரட்டு அல்லது வெளிவிரட்டு என்ற பெயரில் நடக்கிறது. சிறுவயல், பலவான்குடி, திருப்பத்தூர், வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சேர்ந்தவை.
 
யாருப்பா அது காளைய அடக்குனது, இந்தா பரிசு !

வாடி வாசல்...... ஒரு சாதாரண நாளில் !
 
இவ்வளவும் பரிசு...... அடக்குனா கிடைக்கும் !
 இந்த ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது பெரிய வேலை தெரியுமா ? அதுவும் உலகபுகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவது சும்மா இல்லை.
 • விழாவின் அமைப்பாளர்கள் ரூ.2 லட்சத்துக்கும் குறையாமல் பிணை வைப்புத் தொகை செலுத்த வேண்டும். 
 • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாடுகள் குறித்து தனித்தனியே விண்ணப்பங்களைப் நிறைவு செய்து சென்னை மத்திய பிராணிகள் நல வாரிய அமைப்புக்கு உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மத்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்து தகுதியானது என சான்றளிக்கப்படும் காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
 • காளைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது, ஒரு காளையை 4 நபர்களுக்கு மேல் அடக்க முயற்சி செய்யக் கூடாது.
 • காளைகள் போட்டியின் போது காயமுற்றால் உடனடியாகத் தேவையான சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் கால்நடை சிகிச்சை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.
 • ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும். தலா 10 கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என 30 பேர் கொண்ட குழுவை, நான்கு தனிக் குழுக்களாகப் பிரித்து காளைகளை நன்குப் பரிசோதித்த பின்னரே வாடிவாசலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 • ஒவ்வொரு காளைக்கும் ஒரு ஸ்பான்சர் இருப்பார்கள், அது அந்த ஊரின் டீ கடையோ அல்லது வெளிநாட்டில் இருப்பவரோ, அவர்களது தகுதிக்கு ஏற்ப அந்த காளைக்கு போட்டிக்கு முதல் நாள் அந்த காளையின் தகுதி சான்றிதழோடு பரிசு பொருட்களையும் பெயர் எழுதி கொடுக்க வேண்டும். மாட்டை அடக்கினால் அது வீரருக்கு, இல்லையென்றால் அது மாடு வளர்தவர்க்கு.
 • சில வேளைகளில், சில மாட்டிற்கு பரிசு எதையும் எவரும் ஸ்பான்சர் செய்ய யாரும் இல்லாத பட்சத்தில், விழா குழுவினரின் ஆறுதல் பரிசு கொடுக்கப்படும்.
 • மாட்டை அடக்கும் வீரர்கள் என்று பார்த்தால் வெகு சிலரே இருப்பார்கள், மீதி எல்லோரும் பதிவு செய்தால் கிடைக்கும் டி-ஷர்ட், பரிசு பொருட்களுக்காக வருவார்களாம். மாடு வந்தாலே வேலியில் தொற்றி கொள்பவர்கள் இவர்கள்!

இது கும்பலின் ஒரே ஒரு பகுதிதான், இவ்வளவு கிட்டக்க போக முடிஞ்சது என்னால !
 
வாடிவாசலின் பின் பக்கம் காளைகள் பாய்வதற்கு ரெடி ஆக .........
 
 
மாட்டை பிடிப்பதில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா......... கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள். மாடு வாடி வாசலை விட்டு வெளியே வந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் கோட்டை கடப்பதற்குள் நீங்கள் மாட்டினை தழுவி சென்றால் நீங்கள் வீரர்...... பரிசு பொருள் உண்டு ! இப்படி மாடு பிடிக்கும்போது, சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.
 • தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.
 • கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.
 • தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.
 • நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.
 • அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.
 • பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
 • கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.
 
காளை முட்டி சாபவனும், சவுக்கு சரிந்து சாபவனும் இருக்கான் இங்க.....
 
ஜல்லிக்கட்டு காளைகளில் பல வகை உண்டு, இன்று ஜல்லிக்கட்டிற்கு வரும் காளைகள் எல்லாம் ஒரிஜினல் இல்லை, அன்றைய நாளில் நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆகும்.
 
ஜல்லிக்கட்டு மாட்டிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது....


 
ஜல்லிக்கட்டு என்று பெருமையாக சொன்னாலும், இன்றைய ஜல்லிக்கட்டுகளில் வரும் காளைகளை பார்த்து இருக்கிறீர்களா ? அன்று காளைகள் வயல் வேலைக்கும், மாட்டு வண்டிக்கும் பயன்படுத்தப்பட்டன, இன்று டிராக்டர் வந்துவிட்டதால் இதை சினைக்கு மட்டுமே வளர்க்கும் படியாக ஆகிவிட்டது. இதனால், இன்றைய ஜல்லிக்கட்டு காளையை பார்த்தாலே உங்களுக்கு தெரியுமே, எவ்வளவு நோஞ்சான் காளை எல்லாம் வருகிறது என்று ?! இந்த காளைகள் பசு மாடுகளை உருவாக்கி, அது தரும் பாலை நாம் குடித்து உடம்பு வளர்க்கிறோம்....... யோசித்து பாருங்கள், இந்த உலகமயமாக்களில் அர்ஜுன் அம்மாவின் நாலரை பால் எப்படி எல்லாம் உங்களை மூளை சலவை செய்து வருகின்றது என்பது தெரியும். காளைகள் வளர்ப்பவர்கள் இன்று மிகவும் குறைவு, பத்து பசு மாட்டிற்கு மூன்று காளைகள் என்று இன்று இருக்கிறது, சிசு கொலையாக இன்று காளைகளை கொல்ல ஆரம்பித்து விட்டனர்........ ஒரு நாளில் பசுவும் விந்தணுவை வெளிநாடுகளில் இருந்து பெறும் நாள் வரும், அன்று ஜல்லிக்கட்டின் வாடி வாசலில் வரும் காளைகள் மம்மி என்று கத்துவதை பார்க்க நாம் இருப்போமா ?! இன்றும் ஜல்லிக்கட்டில் ஒரு காளை எல்லோரையும் ஜெயித்துவிட்டால் அந்த ஊர் மிகவும் பிரபலமாகிவிடும், அந்த ஊரில் இருந்து மாப்பிள்ளை எடுக்க போட்டி இருக்கிறது தெரியுமா ?! ஊரின் பெருமையை காக்கும் இந்த விளையாட்டு தொடருமா..........
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, special, Jallikattu, eru thaluvuthal, manjuvirattu, jalli, maadu pidi, alanganallur, alanganalloor, world, famous, world famous, bull fight, Tamilnadu, India

10 comments:

 1. Hello Suresh,

  I used to read ur blog often, but i almost i dont share my views(may be its so selfish/wrong!!). And now there is some point i need to share here for a better clarity.... Pongal vizha is celebrated by tamil community for a very long ages now. In ur article u meant about "indira vizha"......which was much influenced in times of cholas period only. In contrast, "indira vizha" is not a dravidian festival itself. so there is no realtion of indira vizha with pongal Suresh....

  ReplyDelete
  Replies
  1. Hi Friend, What you said is right. When I went there and collected the information (Although I was not a professional journalist) I came across much more information than what I had written over here. The problem is if I write about that, it will go for another 4 weeks for sure ! I did some research on the Indira Vizha or Pongal Vizha and met some scholars too. There are different opinions are there and I tried to present the most / best one what I heard. But, to be honest the informations are not known to manyone in tamilnadu, digging deep into that to my best was a challenge. Thanks for reading my blog and keep sharing your views !

   Delete
 2. நிறைய நிறைய விஷயம் இருக்குது இதுல, ஆனா எழுதத்தான் முடியலை. நீங்கள் சொல்வது போல மஞ்சு விரட்டை பற்றி எழுதினால் இன்னும் இரண்டு வாரம் எழுதலாம், ஆனால் படிப்பார்களா என்று தெரியவில்லையே ! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜெகதீஷ் !

  ReplyDelete
 3. ஜல்லிக்கட்டு பற்றி விரிவான தகவல்கள்! அனைத்தும் வியக்கவைத்தன! பாரம்பரியமான இந்த விளையாட்டு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்தால் நல்லதுதான்! நன்றி!

  ReplyDelete
 4. எத்தனை எத்தனை தகவல்கள் சுரேஷ். மலைப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 5. இரண்டு முறை பார்த்து இருக்கேன். முதலில் வரும் சாமி மாடு அங்கிருக்கும் எங்க சொந்தக்காரங்க வீட்டிலிருந்து (நாட்டாமை) வரும்.

  ReplyDelete
 6. I read your article 8n dinamalar newspaper really nice. Now onwards I am your fan because I also like to travel and collect news from where I go...

  ReplyDelete
 7. Atlanta you have witnessed the event, now the high court had banned this jallikattu. What a sad ending

  ReplyDelete
 8. அருமையான கட்டுரை சகோ. தற்போது நிலவி வரும் போராட்ட சூழலில் பல புரிதல்களை தருகிறது. சுதாகர் பிச்சைமுத்து

  ReplyDelete
 9. எல்லாம் சரிங்க. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது? அதற்கான உண்மையான காரணம் என்ன?

  ReplyDelete