Tuesday, September 9, 2014

ஊர் ஸ்பெஷல் - குமாரபாளையம் லுங்கி / கைலி !!

கைலி அல்லது லுங்கி என்பது நமது ஒரு பாரம்பரிய உடை என்று சொல்லலாமா, எனக்கு விவரம் தெரிந்து எனது அப்பாவை கைலியில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். பச்சையும், நீலமும் சேர்ந்த அந்த லுங்கி என்பது எல்லோரையும் கவர்ந்தாலும் பொது இடத்தில் அதை கட்டிக்கொண்டு சென்றால் "என்ன கைலியோடு வந்துட்ட....." என்று கண்டிப்பாக கேட்ப்பார்கள், அந்த அளவுக்கு கைலி என்பது ஏதோ ரௌடிகளும், ஏழைகளும் மட்டுமே கட்டும் ஒன்றாகிவிட்டது என்பது வருந்தத்தக்கதே ! ஆனால், இந்த பயணத்தில் கைலி / லுங்கி பற்றி தெரிந்துக்கொண்ட பிறகு இன்னும் இன்னும் பெருமையாக அதை அணிய தோன்றும் என்பது நிச்சயம் ! மனிதன் தனது மானத்தை மறைப்பதற்கு ஒரு துணியை கண்டுபிடித்தான், அதை மேலாடை மற்றும் கீழாடை என்று பிரித்து வைத்தான், இன்று அந்த கீழாடை என்பது ஒரு பேசன் ஆகிவிட்டது எனலாம், வித விதமான பெயர்களுடன் இருக்கும் அந்த கீழாடையை நாம் லுங்கி / கைலி என்கிறோம்...... என்னதான் கோட்டு, சூட்டு போட்டு வெளியில் அலைந்தாலும் வீட்டிற்க்கு வந்து அந்த லுங்கியை மாட்டும்போது ஒரு சுகம்தானே, அந்த லுங்கி உலகம் முழுவதும் உபயோகிக்கும் ஒன்று என்று உங்களுக்கு தெரியுமா ?!
 
 
 
 
ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம். கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில்       கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர் என்பது பலரும் அறியாத செய்தி !
 
     
 
லுங்கி என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா ? 'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது. அப்படியென்றால் கைலி என்பது எப்படி வந்தது ? கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாட்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம். லுங்கி என்பது கிழக்கில் உள்ள மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்தது என்றால், கைலி என்பது ஆப்ரிக்காவில் இருந்து வந்தது எனலாம். இந்த லுங்கி என்பதை பல மாநிலத்திலும், நாடுகளிலும் எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் தெரியுமா..... லுங்கி, சரோங், கைலி, முண்டு, கசவு, சாரம், டெமட், லோங்கி, இஜார், சோமாலி, புதாஹ், லம்பா, பரியோஸ், கபுலனா, கிகோய், சம்பியாஸ், சத்ரா, சராமா, சம்போட், கிகாபா  என்று. அது மட்டும் அல்ல, லுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பர்மா, ப்ருனெய், மலேசியா, நேபால், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆப்ரிக்காவில் என்று பல பல நாடுகள் அணிகின்றன, அது குமாரபாளையம் லுங்கியாகவும் இருக்கலாம் !!
 
 
இந்த லுங்கி / கைலியின் ஆரம்பம் என்பது என்ன தெரியுமா ?! சரோங் (Sarong)....... இது இன்று உலகம் முழுவதும் தெரிந்த கைலியின் ஆரம்ப பெயர் எனலாம். இதை ஆண்களும், பெண்களும் கட்டலாம் கட்டும் முறைதான் மாறுபடும். அந்த சரோங்கில் இந்தியாவில் கோடுடன் பச்சை நீலம்  நிறத்தில் மட்டுமே அணிந்து வந்தாலும் அதில் பூக்களும், வண்ணங்களும் இணைந்து வர்ணஜாலங்கள் நிகழ்த்துகின்றன மற்ற நாடுகளில் என்பது உங்களுக்கு தெரியுமா. ஒரு அமெரிக்க கடற்கரையில் சென்று பார்த்தால் பெண்கள் இந்த சரோங்கை வண்ண நிறங்களில் கட்டி இருப்பதை பார்க்கலாம், அவ்வளவு ஏன், கோவா சென்று பார்த்தால் ஆண்கள் சிலர் இந்த சரோங்கை கட்டிக்கொண்டு செல்வதை பார்க்கலாம், நம்மையதான் இப்படியே கட்டம் போட்ட கைலி மட்டும் போட வைச்சி ஏமாத்தறாங்க....... இதுல மட்டும் உலகமயமாக்கல் இல்லையா ஞாஆஆஆஆஆஆயயயயயயயயயயயயயயமாமாமாமாமாமாமாமாமாரேரேரேரேரேரேரே!!
 
 
 
குமாரபாளையத்தில் கைலி பேமஸ் என்று சென்றுவிட்டு, அதை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் முழித்தபோது அட எந்த தெருவுக்குள்ளும் போய் மெசின் வேலை செய்யும் சத்தத்தை மட்டும் கேட்டு போனால் அங்க கைலிதான் என்று சொல்ல ஒரு தெருவுக்குள் நுழைய ஆயத்தம் ஆனோம். சரஸ்வதி தியேட்டர் ரோடு என்று ஒன்று தெரிந்ததில் உள்ளே நுழைய சிறிது தூரத்திலேயே மெசின் ஓடும் சத்தம் எல்லா திசையில் இருந்தும் வந்தது, எங்களுக்கு முன்னே ஒரு லாரியில் பஞ்சை மூட்டை மூட்டையாக இறக்கி கொண்டு இருந்தனர். இதை அப்படியே நூல் ஆக்கி, அதை சாயம் போட அதை இங்கே இருக்கும் கைலி செய்பவர்கள் வாங்கி செல்கிறார்கள். கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்'.
 
கடல் பயணங்கள்...... செய்தி சேகரிப்பில் உங்கள் சுரேஷ் !
 
 
 
 இங்கு எந்த தெருவுக்குள் நுழைந்தாலும் சட சடவென்று சத்தம் கேட்டு கொண்டு இருக்கிறது, அது உங்களை கைலி செய்யும் இடத்திற்கு வழி நடத்தும். ஆனால், அந்த சத்தத்தை நெருங்க நெருங்க காது வலிக்க ஆரம்பிக்கிறது. இந்த கைலி எல்லாம் தயாராவது என்பது பெரிய பெரிய பாக்டரிகளில் இல்லை ஓட்டு வீடுகளில்தான். ஒரு சிறிய ஓட்டு வீட்டில் சுமார் பத்தில் இருந்து இருபது மெசின் இடைவிடாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது, ஒரு வீட்டினில் நுழைந்து என்னை அறிமுகபடுதலாம் என்று முயலும்போதே சோதனை தொடங்கி விடுகிறது, அந்த சத்தத்தில் அவரை நெருங்கி காதில் மிக நெருக்கமாக நன்கு கத்தி சொல்ல வேண்டி இருந்தது, அதை மட்டும் வெளியில் நான் செய்து இருந்தால் உங்களது காதுகள் கண்டிப்பாக செவிடாகி இருக்கும் ! அங்கு வேலை பார்ப்பவர்கள் மிகவும் பாவம்தான், அவர்கள் காதுகளில் எப்போதும் ரீங்காரித்தது கொண்டு இருக்கும் அந்த சத்தம் ஒரு நரக வேதனை !! ஒரு கைலியில் டிசைன் எப்படி வரவேண்டும் என்று முடிவு செய்தவுடன் ஒரு பெரிய மர அலமாரி போன்ற அமைப்பில் நூல்களை அதற்க்கு ஏற்றவாறு முதலில் வைக்கின்றனர், அதன் பின்னர் ஒவ்வொரு நூலையும் அந்த மெசினின் பாகத்தில் இருக்கும் ஊசியின் முனையில் கோக்கின்றனர், அதனுள் நுழைத்து எடுத்தவுடன் அடுத்த பக்கத்தில் இருக்கும் ரோல்லரில் மெதுவாக சுற்ற சுற்ற எவ்வளவு நீளத்திற்கு கைலி தேவையோ அவ்வளவு நீளத்திற்கு இப்போது நூல் தயார் !
 
கைலியின் நூல் ரெடி !
 
 
 
ஒவ்வொரு நூலும், ஒவ்வொரு கம்பியில்..... இப்படி கோர்க்க எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா !
 
 
இந்த சத்தத்தில் தினமும் இருந்தால், உங்களால் நிம்மதியாக தூங்க முடியுமா ?!
 
 இப்போது அந்த ரோல்லரையும், அந்த ஊசி இருக்கும் பாகத்தையும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் மெசினில் மாட்டிவிட கைலி செய்ய தொடங்கலாம். இப்போது மாட்டிய நூலை வார்ப்(Warp) என்பார்கள், இதனின் ஊடே ஒரு நூல் செல்லும் அதை வெப்ட் (Wept) என்பார்கள். குறுக்கே டக் டக்கென்று ஒரு நூல் சென்று வருமே அதையே இப்போது பார்க்க போகிறோம். நூல் கண்டினை வாங்கி வந்து ஒரு சிறிய கண்டாக சுற்ற வேண்டும், அதை செய்ய இங்கே மெசின் இருக்கிறது. இப்படி செய்ததை ஒரு இரு முனை கூரான ஒன்றின் உள்ளே வைத்து ஒரு பக்கம் தட்ட, அது நூலின் இடையே நுழைந்து சென்று அடுத்த பக்கத்தில் இருக்கும், இப்போது மேல் நூல் கீழாகவும், கீழ் நூல் மேலாகவும் மெசின் செய்ய மீண்டும் அடுத்த பக்கத்தில் இருந்து அது இந்த பக்கம் வரும், இப்படி செய்ய செய்ய நமக்கு கைலி கிடைக்கிறது ! வீவிங் (weaving) எனப்படும் இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... வீவிங் !
 
 
நூல் கண்டாக சுற்றுகிறது !
 
அந்த நீல நிற கைலி இதுதானா !
 
கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும், இப்படி இரைச்சலோடு ஓடும் மெசினில் ஏதாவது ஒரு மெசினில் நூல் கட் ஆகிவிட்டாலும் அதை இங்கு வேலை பார்ப்பவர்கள் பார்த்து (கேட்டு ?!) சரி பார்ப்பது என்பது அதிசயம்தான். சட சடவென்று இப்படி ஓடும் மெசினில் நான் இதுவரை கேள்விமட்டும் பட்டு இருந்த குமாரபாளையம் லுங்கி என்பது உருவாகி கொண்டு இருந்தது. கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.
 
 
என்னுடன் கூட பயணித்த ஆனந்த்....... ஆனந்தத்துடன் !
 
உலக புகழ்பெற்ற குமாரபாளையம் லுங்கி..... கடல் பயணங்கள் ஆய்வு !!
 
பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது !
 
நண்டு பிராண்ட் லுங்கிக்கு மாடல் ஆக போகலாமா ?!
 
கைலியை மூட்டுதல் என்று புழங்கியிருக்கிறீர்கள் அல்லவா? மூட்டுதல் என்றால் to close என்றுதான் பொருள். கதவை மூடு என்று எப்படிச் சொல்லுகிறோம்? மூடுவது தன்வினை; மூட்டுவது பிறவினை. மூடவைப்பதைத் தான் மூட்டுதல் என்று சொல்லுகிறோம். இதனால்தான் கைலியை மூட்டி விட்டு வா என்ற சொல் பழக்கத்தில் வந்தது. இப்படி உருவாக்கப்பட்ட கைலிகளை கீழே படத்தில் காட்டியது போல மடித்து அதை அப்படியே வெளியே விற்க்கின்றனர். அதை வாங்கி அளவாக வெட்டி, இஸ்திரி போட்டு கவர் போட்டு உங்களிடம் வரும்போது......
 
அடி கணக்கில் கைலி வேண்டுமா ....... நான் ரெடின்னு சொல்லுது !
 


அது இப்படி விளம்பரம் செய்யப்படுகிறது !! 
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District special, Kumarapalayam, Lungi, Lungee, Kaili, Best wear, summer wear, nandu brand, kibs, kayili  

17 comments:

 1. அருமையான முயற்சி...

  வீட்டுக்கு வீடு நெய்யப்படும் இந்த சராங்குகளை பார்த்து வியந்து நின்றோம்..

  இப்போது தங்கள் பதிவில் நுணுக்கமான விவரிப்புகள் ஆச்சரியமளித்தன.. பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 2. Hi Sir, Lots of thanks to introduce about my native place at your website.. :) :)
  //காதுகளில் எப்போதும் ரீங்காரித்தது கொண்டு இருக்கும் அந்த சத்தம் ஒரு நரக வேதனை // --- Definitely not acceptable. bcoz we can never have a sound sleep without this sound.

  ReplyDelete
 3. enga oorukku poitu, Ramaraj Bhavan venpongal, Ganeshabhavan sambar vadai and Kathaalapettai thayir vadai ellam saptu pathingala??

  ReplyDelete
 4. ரீங்காரித்தது கொண்டு இருக்கும் அந்த சத்தம் ஒரு நரக வேதனை !!// எங்களுக்கு சுகமான தாலாட்டு !!
  வேஷ்டி சேலம்மாவட்டம் தாரமங்களம் மற்றும் ஒமலூர் பகுதிகளில் கிடைக்கும்

  ReplyDelete
 5. வழமைபோல் படம், தகவல் என அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்.

  இந்த லுங்கியை "சாறம்" என இலங்கையில் சகல இனத்தவரும் அணிந்த போதும், தமிழர்களின் வீட்டுடையாகவே இது இன்றும் இருக்கிறது.வெளிநாடுகளிலும் பெரும்பான்மையான இலங்கைத் தமிழர் வீட்டில் சாறம் உடுத்துவதையே வழக்கமாகக் கொள்கின்றனர். சிறப்பான நிகழ்வுகளுக்கோ, பயணங்களுக்கோ என்றும் தமிழர் சாறம் அணிவதில்லை. இலங்கையில் சிங்கள ஆண்களால் வெள்ளைச் சாறங்கள் எல்லா சிறப்பு விழாக்களுக்கும் அணியப்படுகிறது.
  அதேபோல் முஸ்லீம் சமுதாயத்திலும் இப்பழக்கம் உண்டு.
  இது பர்மாவிலிருந்து வந்த வியாபாரிகளால் பரவியதாகவே கூறினார்கள்.
  இந்த வகை சாறங்கள் (லுங்கி) இலங்கையில் மட்டக்களப்பில் கைத்தறியில் நெய்யப்பட்டது. இப்போது அங்கு அது தொடர்கிறதோ தெரியவில்லை.
  தயவுசெய்து எங்கள் நாட்டைத் தமிழில் குறிப்பிடும் போது "இலங்கை" எனக் குறிப்பிடவும். இன்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி தமிழில் "இலங்கை" தான், வெகுவிரைவில் தமிழிலும் " ஸ்ரீலங்கா "எனக் குறிப்பிட வேண்டுமென மாற்றம் கொண்டுவந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் அது வரை "இலங்கை" என்போம்

  ReplyDelete
 6. நல்ல பதிவு. சில டெக்னிகல் பெயர்களையும் பயன் படித்ததினால் நன்றாக இருக்கும். முதலில் அது மெஷின் அல்ல. தறி. குமாரபாளையத்தில் இருப்பது விசைத்தறி. போலவே பலவற்றுக்கும் பெயர் இருக்கிறது. நெய்யப்பட்ட துணி அயர்ன் செய்யப் படுவதில்லை. கேலண்டரிங்க் மில்லில் கொடுத்து கஞ்சி போட்டு மடிக்கப் படுகிறது. சரியான அளவுகளின் மடித்து, கிழித்து அதை ப்ரெஸ்சிங் மெஷினின் வைத்து ப்ரெஸ் செய்வார்கள்.

  ReplyDelete
 7. வடக்கிலும் லுங்கி உண்டு - ஆனால் மூட்டுவதில்லை! குறிப்பாக சர்தார்கள் வீடுகளில் இதை அணிந்து கொள்வதுண்டு! குறிப்பாக தென்னிந்திய லுங்கிகள் அவர்களுக்குப் பிடிக்கும். என்னுடைய வட இந்திய நண்பர்கள் நான் தமிழகம் செல்லும் போதெல்லாம் வாங்கி வரச் சொல்லி, நான் வாங்கித் தந்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. கைலியை மூட்டுதல் என்று புழங்கியிருக்கிறீர்கள் அல்லவா? மூட்டுதல் என்றால் to close என்றுதான் பொருள். கதவை மூடு என்று எப்படிச் சொல்லுகிறோம்? மூடுவது தன்வினை; மூட்டுவது பிறவினை. மூடவைப்பதைத் தான் மூட்டுதல் என்று சொல்லுகிறோம். ///////

  அறியாத விடயம் அறிந்தேன் ,,,,, thanks for my photo anna

  ReplyDelete
 9. இந்த பதிவை படிக்கும் போது,, அந்த தட தட சத்தம் என் காதுகளில் ஒலிக்கிறது

  ReplyDelete
 10. எனக்கும் வீட்டில் விருப்ப உடை கைலி தான்... இருந்தாலும் இதைத் தயாரிப்பதற்கு நிறைய அளவில் தண்ணீர் செலவாகுமாமே? அப்படி செய்வதற்கு பதில் வேஷ்டியையே அணியலாமே என சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு பதிவில் படித்த ஞாபகம்....

  ReplyDelete
 11. Can we buy lungi directly from the manufacturer?

  Regards
  Kumar kannan

  ReplyDelete
 12. மதுரையில் நடக்க இருக்கிற பதிவர் திருவிழாவில் ,உங்கள் தலைமையில் சாரோங் பேஷன் அணிவகுப்பு ஏற்பாடு செய்துவிடலாமா ,சுரேஷ் ஜி ?
  த ம 2

  ReplyDelete
 13. நல்ல பதிவு. கைலி, சாரம், லுங்கி என்றழைக்கப்படும் இந்த ஆடை தமிழர்களுடையதல்ல, பர்மியர்களிடமிருந்து அல்லது மலே மக்களிடமிருந்து தமிழர்கள் இரவல் வாங்கியது, ஆனால் வேட்டி என்ற ஆடையையோ அல்லது வேட்டி என்ற சொல்லையோ நாங்கள் (தமிழர்கள்) யாரிடமிருந்தும் இரவல் வாங்கவில்லை.

  ஆகவே ஒரு அன்பான வேண்டுகோள்: வேஸ்டி என்பது தமிழ்ச் சொல் அல்ல வேட்டி என்பது தான் சரி. அதனால் வேஷ்டி என்று எழுதுவதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லிலிருந்து உருவாகிய சுத்தமான தமிழ்ச் சொல். அது மட்டுமன்றி, வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடை, அதை எதற்காக வேஷ்டி என்றழைக்க வேண்டும்.

  ReplyDelete
 14. பெரும்பாலும் பச்சை,நீலம் அதிகமாகவும், சிவப்பு, மஞ்சள் நிறங்கள் மிக குறைவாகவும் இருக்க காரணம் என்ன?

  ReplyDelete