Friday, October 31, 2014

சோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி !!

சோலை டாக்கீஸ்.... இந்த பகுதியில் உலகில் இருக்கும் பல விதமான இசை வடிவங்களையும், நான் சுற்றும்போது பார்த்த இசை கலைங்கர்களையும் அறிமுகபடுத்துகிறேன், இதன் மூலம் இசை எத்தனை எத்தனை வடிவத்தில் இருக்கிறது என்று பகிரலாமே என்று ஆசை !! கேரட்.... ஊட்டிக்கு சென்று இருந்தபோது பச்சை பசேல் என்று கேரட் கிடைத்தது, பார்த்தவுடன் நறுக் நறுக் என்று கடித்து சாப்பிட்டேன், சத்தியமாக தெரியாது நான் அப்போது ஒரு இசை கருவியை சாப்பிட்டேன் என்று ! லின்சே பொல்லாக், இவர் ஒரு ஆஸ்திரேலியா இசை கலைஞர். இவர் இசையை ஒரு கருவியை கொண்டு வாசித்தது வரை இவரை யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லை, ஆனால் என்றில் இருந்து விதவிதமான பொருட்களில் இருந்து இசையை வரவழைத்தாரோ அன்றில் இருந்து உலகம் அவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. 


இவரை இன்று உலகம் கேரட் இசை கலைஞர் என்று அழைக்கிறது, நாம் சாப்பிடும் கேரட்டில் கிலாரியோநெட் என்ற இசை கருவியின் வாய் பகுதியை இணைத்து, அடுத்த பகுதியில் ஒரு புனலை இணைத்து நான் இதை வாசிக்க போகிறேன் என்று சொல்லும்போது சிரிக்கும் நாம், அதில் இருந்து மனதை மயக்கும் ஒரு இசை வரும்போது வாயை பிளக்கிறோம் என்பது உண்மை !! இவர் கேரட்டில் மட்டும் இல்லை பல பல பொருட்களில் இருந்தும் இப்படி இசையை உருவாக்குகிறார். அடுத்த முறை கேரட்டை பார்க்கும்போது உங்களுக்கும் வாசிக்க தோன்றும் !



இந்த காணொளியை காணுங்கள்.... இசையை சுவையுங்கள் !!


Labels : Suresh, Kadalpayanangal, Solai Talkies, Carrot clarionet, instrument made in carrot, amazing music instrument, amazing music, music, different music

Thursday, October 30, 2014

ஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் !! (பகுதி - 2)

சென்ற வாரத்தில் ஈரோடு மஞ்சள் பற்றிய பதிவை படித்து, மஞ்சள் பற்றி நிறைய தெரிந்து கொண்டதாகவும், அடுத்த பதிவுக்கு எதிர் பார்த்து இருப்பதாகவும் வந்த கருத்துக்கள் நிறைய இருந்தது, இது போன்ற கருத்துக்கள்தான் இந்த பயணம் மேற்கொள்ள காரணம். சரி, வாருங்கள் இந்த வாரம் அந்த மஞ்சள் சந்தை படுத்த படுவதையும், மருத்துவ குணங்களையும், மஞ்சளின் பயன்களையும் பார்ப்போம் ! ஈரோட்டில் மஞ்சள் செடிகளை பார்த்துவிட்டு அதை எப்படி விரல் அளவுக்கு மாற்றுகிறார்கள் என்றும் பார்த்தோம், அடுத்து மஞ்சள் சந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்க அவர்கள் ஈரோடு மஞ்சள் வணிக வளாகம் செல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் ஏதோ ஒரு சிறிய இடத்தில், சந்தை கடை போல கூட்டத்தில் கத்தி கத்தி மஞ்சளை ஏலம் விடுவார்கள் என்று நினைத்து சென்றோம்......... மஞ்சள் வளாகமும், மஞ்சள் குடவுன்னும் எங்களை மலைக்க வைத்தன !!
மஞ்சளில் எத்தனை வகை தெரியுமா.......
மஞ்சள் விளைந்தவுடன், அதை தயார் செய்து வண்டியில் ஏற்றி இந்த மஞ்சள் குடவுன்னுக்கு கொண்டு வருகிறார்கள். குடவுன் என்றவுடன் சின்னதாக இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள், சுமார் நூற்றுக்கணக்கில் பெரிய பெரிய குடவுன்களாக அரசாங்கம் கட்டி வைத்து இருக்கிறது நல்ல ரோடு வசதிகளுடன். அங்கு மூட்டைகளை இறக்கி வைத்து ஒரு சீட்டு வாங்கி கொள்ள வேண்டும், அதில் உங்களது பெயர், எத்தனை மூட்டைகள் என்றெல்லாம் எழுதி இருக்கும். அதே மூட்டை ஒன்றை வியாபாரிகளும் சாம்பிள் ஒன்று வைத்து இருப்பார்கள், அதைதான் சந்தையின் போது சாம்பிள் ஆக வைத்து இருப்பார்கள். ஈரோட்டில் மஞ்சள் மார்க்கெட்டை பொருத்த வரையில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மற்றும் ஈரோடு சொசைட்டி, கோபி சொசைட்டி மற்றும் 200க்கும் மேற்பட்ட தனியார் மஞ்சள் மார்க்கெட்டுகள் என செயல்பட்டு வருகிறது.
மஞ்சள் வளாகம்..... இதில்தான் மஞ்சளை பரப்பி வைத்து ஏலம் விடுவார்கள் !
   
மஞ்சளில் ஈரோடு ரகம், பிடிஎஸ் 10 ரகம், 8ம் நெம்பர் என ரகங்கள் உள்ளது. எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்திலும், மைசூர் சம்பா, 10ம் நம்பர் ஆகிய மஞ்சள் பயிர், பிப்., மார்ச் மாதத்திலும் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடையாகும் மஞ்சள், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு வெளிமார்க்கெட், ஈரோடு கூட்டுறவு சொசைட்டி, கோபி கூட்டுறவு சொசைட்டி ஆகிய நான்கு மஞ்சள் மார்க்கெட் மூலம், ஏல விற்பனை செய்யப்படுகிறது. அதிக உற்பத்திக்கான சூழல், மற்றும் மஞ்சளை இருப்பு வைக்கும் கிடங்குகள் என அனைத்து வசதிகளும் ஈரோட்டில் இருப்பதால், மொத்த இந்தியாவிற்கும் மஞ்சள் மையமாக ஈரோடு விளங்கி வருகிறது. ஆண்டு முழுவதும் மஞ்சள் தேவைக்கு ஏற்றவாறு கிடங்குகளில் இருப்புகளை வைத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  வட மாநிலங்களில் போதிய கிடங்குகள் இல்லாத காரணத்தால் ஈரோடு மார்க்கெட்டுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து சென்றனர்.
எத்தனை எத்தனை மஞ்சள்.......
இதுவும் ஒரு வகை மஞ்சள்தான்.......
சீட்டு எடுத்துட்டா மஞ்சள் உங்களுக்கு சொந்தம் !
அதிகாலை ஆறு மணிக்கு மஞ்சள் சந்தை வளாகத்தில் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது, விவசாயிகள் அல்லது இடை தரகர்கள் தங்களிடம் இருக்கும் சாம்பிள்களை ஒரு சாக்கு மூட்டையின் மேலே வைத்து அதன் மேலே ஒரு அட்டையை வைக்கின்றனர், அந்த அட்டையில் அந்த விவசாயியின் சங்கேத எண் எழுதப்பட்டு இருக்கும். வரிசையாக கிடத்தப்பட்டு இருக்கும் அந்த மஞ்சள் ரகங்கள் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்றால் எவ்வளவு பெரிய இடம் அது என்று எண்ணி பாருங்கள். வியாபாரிகள் மெதுவாக ஒவ்வொரு மஞ்சளையும் பார்த்து செல்கின்றனர், சிலர் அதை கையில் எடுத்து பார்ப்பதும், சிலர் அதை கிள்ளி பார்ப்பதும், சிலர் முகர்ந்து பார்ப்பதும் என்று இருக்கின்றனர். அனுபவத்தில் அது நல்ல மஞ்சளா இல்லையா என்று கண்டுபிடித்து, அவர்களுக்கு அது சரி வரும் என்று தோன்றினால் அந்த அட்டையை எடுத்து கொள்கின்றனர். அந்த அட்டையை ஒரு சிறிய ஆபீஸ் அறையில் கொடுக்க அந்த சங்கேத எண்ணை மைக் கொண்டு கூப்பிட அந்த விவசாயி ஓடி வருகிறார். அவரிடம் இருந்து எத்தனை மூட்டை, விலை என்றெல்லாம் கேட்டு வாங்க வந்தவர் முன் பணம் கட்டி அந்த மஞ்சளை ரிசேர்வ் செய்ய அடுத்து வரும் நாட்களில் முழு பணமும் கொடுத்து அவர் முழுவதுமாக அந்த மஞ்சளை வாங்கி கொள்கிறார் !
இதுதான் ஏலம் விடும் ஆபீஸ்.......
மஞ்சள் மூட்டைகள் ஒவ்வொன்றும் 100 கிலோ, அதை ஒரு குவிண்டால் என்பார்கள். 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஒரு குவிண்டால் மஞ்சள் 4,300 ரூபாய்க்கும், மார்ச் மாதம் 5,019 ரூபாய்க்கும், மே மாதம் 5,447 ரூபாய்க்கும், ஜூன் மாதம் 6,000 ரூபாய்க்கும் விற்று சாதனை படைத்தது. மஞ்சள் வரத்து தொடர்ச்சியாக குறைந்ததாலும், வடமாநிலங்களில் மஞ்சள் தேவை அதிகரித்ததாலும், மஞ்சள் விலை மேலும் அதிகரிக்கத் துவங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு குவிண்டால் 8,000 ரூபாய்க்கும், செப்., மாதத்தில் 9,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சென்ற சில வாரங்களாக மஞ்சள் தேவை குறைந்து காணப்பட்டதால், மஞ்சள் விலை குவிண்டால் 8,200 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்தது.  மஞ்சள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து, ஒரு குவிண்டால் 9,000 ரூபாயை மீண்டும் தொட்டு சாதனை படைத்தது. அன்று, விரளி மஞ்சள் 9,335 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 9,263 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில், மஞ்சள் விலை மேலும் உயர்ந்து, ஒரு குவிண்டால் 11 ஆயிரத்தை கடக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர, தனியார் கமிஷன் மண்டிகள், மஞ்சள் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமும் மஞ்சள் விற்கப்படுகிறது. வெளிமாநில வியாபாரிகள், பெரும்பாலும் ‘ஆன்-லைனில்’ புக்கிங் செய்து, தங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றனர். சில ஆண்டுகளாக மஞ்சள் விலை குறைந்து காணப்பட்டதால், மஞ்சள் உற்பத்தி குறைந்தது. சென்றாண்டு இறுதியில் இருந்து, மஞ்சள் விலை அதிகரிக்கத் துவங்கியது என்பது ஒரு நற்செய்தி !!
இதுவரை இவ்வளவு மஞ்சளை நான் பார்த்ததில்லை......
இது போல நூறு குடவுன் இந்த ஏரியாவில்..... அப்போ எவ்வளவு மஞ்சள் இல்லை !!
வாங்க மஞ்சள் வாங்கலாம் !!
மஞ்சளில் காணப்படும் ‘குர்குமின்’ என்கிற வேதிப்பொருள், புற்றுநோய், அல்சர், நீரிழிவு நோய், மூட்டு வீக்கம்… போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துத் தயாரிப்புகளில் பிரதான பங்கு வகிக்கிறது. புரதம், கார்போ-ஹைட்ரேட், கொழுப்புச்சத்து, வைட்டமின்-சி, மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவையும் நிறைந்திருக்கின்றன. மனித உடலுக்கு நன்மை செய்யக்கூடிய மிகமுக்கிய வேதிப்பொருட்களும் மஞ்சளில் உள்ளன. ஆயுர்வேத மருந்துகள், கிருமிநாசினிகள், முகப்பூச்சுகள் தயாரிக்கவும், சாயத் தொழிற் சாலைகளில் நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது.  மஞ்சள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த தளத்தை காணுங்களேன்..... மஞ்சள் மகிமை !

இவ்வளவு மஞ்சளை நான் வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்தேன், இதுவரை மஞ்சள் என்பது முகத்துக்கு போடுவதும், பாலில் போட்டு குடிப்பதும் என்று மட்டும் பார்த்துவிட்டு இவ்வளவு மஞ்சளை என்ன செய்வார்கள் என்று கேட்டதற்கு இவை யாவும் மெடிக்கல் மற்றும் பெயிண்ட் கம்பெனிக்கு செல்கிறது என்கின்றனர். நீங்கள் உட்கொள்ளும் அல்லது பூசும் எந்த மருந்திலும் கொஞ்சமேனும் மஞ்சள் இருக்கிறதாம். விவசாயிகள் மஞ்சளை பயிரிட்டாலும், இடை தரகர்கள்தான் மிகுந்த லாபம் அடைகின்றனர் ஈரோட்டில் ! ஒரு சிறு மஞ்சள் என்று நாம் நினைப்பது மிக பெரிய வியாபாரமாக இங்கு ஆகிறது என்பதை பார்க்கும்போது........ இந்த உலகத்தில் எதுவுமே சிறிதில்லை என்பதும், எல்லாமே ஒரு நோக்கதிர்க்குதான் படைக்கப்பட்டு இருக்கிறது என்பது மீண்டும் புலனாகிறது !
Labels: Suresh, Kadalpayanangal, oor special, erode, manjal, turmeric, district special, Rhizome, making of rhizome, district, Benefits of turmeric, uses of turmeric, medicine, paint

Wednesday, October 29, 2014

ஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)

தமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு கொண்டே இருந்தனர். முன்பெல்லாம் ஒரு அருவியில் ஆர்பரித்து வரும் தண்ணீரை பார்க்கவும், அனுபவிக்கவும் குற்றாலம் செல்வார்கள் இப்போது எல்லாம் பார்டர் கடைக்கு போய்விட்டு அப்படியே குற்றாலம் வருகிறார்கள்......... டிரெண்டு மாறிடுச்சு !! குற்றாலத்தில் நன்கு குளித்துவிட்டு வரும்போதே நன்கு பசிக்க ஆரம்பிக்கும், சிலர் வீட்டில் இருந்து குடும்பத்துடன் ஒரு சமையல்காரரையும் கூட்டிக்கொண்டு வந்து விடுவார்கள், வீடு பிடித்து தங்கி குளித்து, சாப்பிட்டு, மீண்டும் குளித்து என்றே மூன்று நாட்கள் ஓட்டுவார்கள்,  இப்படி பசியோடு வருபவர்களுக்கு ஒரு அருமையான உணவகம் இருந்தால் அங்கு கும்பலுக்கு கேட்கவா வேண்டும் !! நான் இந்த முறை திருநெல்வேலி வரை சென்று இருந்தபோது மதியம் எங்கு சாப்பிடலாம் என்று கேட்க, திருநெல்வேலியில் நிறைய கடை சொல்லிக்கொண்டு இருந்தபோது, இங்க இருந்து ஒரு ரெண்டு மணி நேரம் சென்றால் பார்டர் கடை என்றவுடன்....... அதுக்கென்ன போய்டுவோம் என்றேன் !! இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது....... :-)



 குற்றாலம் அருவிக்கு செல்லும் ரோட்டில், இடது பக்கம் அருவி என்றால், வலது பக்கம் ரோடு எடுத்து ஒரு பதினைந்து நிமிடம் சென்றால் வருகிறது "பார்டர் ரஹ்மத் பரோட்டா கடை". கடையை நெருங்கும்போதே அங்கங்கே பார்க் செய்யப்பட்டு இருக்கும் கார் எல்லாம் சொல்லிவிடும் இங்கு என்னவோ இருக்கு என்று. ரோட்டின் மீது ஒரு கடை இருந்தாலும், கொஞ்சம் உள்ளே தள்ளி ஒரு கடை உண்டு, பார்கிங் வசதியோடு ! நாங்கள் கடைக்கு உள்ளே நுழைந்து இடம் பார்த்து உட்காருவதர்க்கே ஒரு இருபது நிமிடம் ஆகிறது..... உட்கார்ந்தவுடன் ஒருவர் வந்து இலை வைத்து பரோட்டா, பிரியாணி என்ன வேண்டும் என்று கேட்க, ஆளுக்கு ரெண்டு பரோட்டா என்று கேட்க, கொண்டு வரேன் என்று சென்றார் !  



பரோட்டா, பிரியாணி மட்டும்தானா என்று பார்வையை சுழட்ட கண்ணில் பட்டது மெனு போர்டு !! மொத்தமே பதினைந்து வகைதான் அதில்தான் இத்தனை சுவை ! ஒரு இலையை போட்டு உட்கார்ந்து இருக்க சுற்றிலும் பார்க்க எல்லா இடத்திலும் குற்றாலத்தில் குளித்து முடித்து ஈர தலையுடன் வந்த முகங்களே.... உண்மையை சொல்வதென்றால் அங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு விதமான ஆர்வத்திலேயே இருந்தது தெரிந்தது. சில பசங்க குடித்துவிட்டு உள்ளே வர முயல அவர்களை அனுமதிக்கவில்லை ! இடம் ஒரு அஸ்பெஸ்டாஸ் கொட்டகை அதன் கீழே பேன் போட்டு புகை மூட்டமோடு பரோட்டாவை எதிர் நோக்கி காத்திருந்தேன் !



வெகு நேர காத்திருப்புக்கு பின், ஒரு அலுமினிய அண்டாவில் சிறிய பரோட்டாக்களை எடுத்து வந்து நமக்கு முன்னே வைக்கின்றனர். உங்களுக்கு எவ்வளவு என்று சொல்லி எடுத்து எடுத்து வைக்க நாங்கள் அடுத்து சைடு டிஷ் என்ன வேண்டும் என்று சொல்வதற்குள் அவர் சென்றுவிட்டார்..... என்ன சர்விஸ் இது என்று எரிச்சல் எடுக்க, எனது நண்பர் கண்களால் கூல் என்றார் ! இப்போது பரோட்டாவை பார்க்க, இவ்வளவு கூட்டம் வருதே பரோட்டாவை கொஞ்சம் பெரிசா போடலாமே என்று நினைத்துக் கொண்டே எங்களுக்கு முன்னே இருந்த சால்னாவை எடுத்து கொஞ்சம் போட்டு கொண்டோம். பரோட்டாவை எப்போதாவது நிதானமாக பார்த்து இருக்கிறீர்களா ? வெள்ளை வெளேரென்று மாவை அடித்து பரோட்டாவாய் போட்டு அதை கல்லில் இருந்து இறக்கும்போது ஒரு பொன்னிறத்தில் அங்கும் இங்கு கொஞ்சம் கருகியும், சில இடங்களில் பிரவுன் நிறத்திலும் என்று வெண்மைக்கும் கருப்புக்கும் இடையில் எத்தனை நிறம் உண்டோ அது எல்லாம் ஒரு பரோட்டாவில் இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ?! இட்லிக்கு எந்த வகை சட்னி உண்டாலும் சூடாக இருந்தால் உள்ளே இறங்கும், ஆனால் பரோட்டாவிற்கு மட்டும் அந்த தேங்காயை அரைத்து போட்ட அந்த காரமான குருமா இருந்தால் மட்டுமே ஊற வைத்து உள்ளே இறக்க முடியும் இல்லையா ?! ஒரு பரோட்டா - சால்னா என்பது இணைபிரியாத தம்பதிகள் போல, இருவரும் மனம் ஒத்து இருந்தால் மட்டுமே ருசிக்கும். சில இடங்களில் கற்கள் போன்ற பரோட்டாவும், மனதை மயக்கும் சால்னா கிடைக்கும்..... சில இடங்களில் மிருதுவான ருசியான பரோட்டாவும், வாயில் வைத்தால் வாந்தி வரும் சால்னாவும் கிடைக்கும்......... இங்கு பார்டர் பரோட்டா கடையில் மட்டுமே, அந்த அருமையான காம்பினேசன் கிடைத்தது எனலாம்..... பூ போன்ற பொன்னிறமான பரோட்டாவும், நல்ல காரமான சால்னாவும். ஒரு கரண்டி எடுத்து அந்த பரோட்டாவின் மீது ஊற்றி ஒரு ஓரத்தில் இருந்த பரோட்டாவை பியித்து வாயில் வைக்க அந்த பசிக்கு தேவாமிர்தம்தான் !!





கொஞ்சம் கொஞ்சமாக அந்த பரோட்டா சால்னாவில் ஊற ஊற அதன் சுவை மும்மடங்கு அதிகரிக்கிறது. சாப்பிட்டு கொண்டு இருக்கும்போதே ஒரு சட்டியில் நன்கு மசாலா தடவி பிரை செய்த காடை வந்தது ஒரு அலுமினிய சட்டியில். யாருக்கு வேண்டும் என்று கேட்டு கேட்டு வைக்கின்றார். நன்கு மசாலா தடவி, அதில் வெங்காயமும் பெப்பரும் போட்டு வந்த அந்த காடையை அந்த பரோட்டாவை கொஞ்சம் தொட்டு சாப்பிட ஒரு ததிங்கினதோம் ஆரம்பம் ஆகிறது. நிறைய பேர் அப்போதுதான் பேன்டையும், கைலியையும் லூஸ் செய்து கொள்ள ஆரம்பிக்கின்றனர் ! கொஞ்சம் கொஞ்சமாக அந்த காடையை அதன் இளம் எலும்போடு கடித்து சாப்பிட சாப்பிட இங்கே அந்த வெயிலுக்கு ஒரு குற்றாலம் பெருக ஆரம்பிக்கிறது !




இங்கு சாப்பிடும்போது முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, முதலில் சில உணவு வகைகள் வரும்போது சடசடவென்று வாங்கி போட்டு வயிற்றை ரொப்பி கொள்ள கூடாது என்பதைத்தான். இதன் பின்னர் வறுத்த கோழியை வெங்காயம், பெப்பர் ஜாஸ்தியாக போட்டு தோசைகல்லில் பிரட்டி கொண்டு வருவார்கள், வேணுமா வேணுமா என்று கேட்டு இலையில் வைக்கிறார்கள், இந்த முறை பரோட்டாவிற்கு சால்னா ஊற்றிக்கொள்ளமலேயே அந்த சிக்கனோடு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட இன்னும் ஐந்து பரோட்டா காலி. இதை நாங்கள் சாபிடும்போதே அருகில் இருந்த நண்பர், கொஞ்சமாய் சாப்பிடுங்க அடுத்து இன்னொரு அயிட்டம் வரும் அதை கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்....... நாங்கள் அவரை பாவமாய் பார்த்தோம் !


அடுத்து ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு வந்ததை எங்களால் பார்க்க மட்டுமே முடிந்தது, அவ்வளவு புல். இதுவரையில் எந்த குழம்பு / சால்னா நன்றாக இருக்கிறது என்று வழித்து வழித்து குடித்தோமோ அந்த சால்னாவில் நன்றாக ஊறப்போட்ட நாட்டு கோழியை தோசைகல்லில் போட்டு, வெங்காயமும் காரப்பொடி மற்றும் பெப்பர் போட்டு வறுத்து எடுத்து வந்து இருந்தார்கள்....... வயிற்றில் இடம் இல்லாமல் இருந்தாலும், அந்த சால்னாவில் போட்ட நாட்டு கோழி என்றதும் கொஞ்சமே கொஞ்சம் என்று எல்லோரும் எடுத்துக்கொண்டோம். உண்மையை சொன்னால், இதை முதலில் கொண்டு வந்து இருந்தால் இது மட்டுமே போதும் என்று சொல்லி இருப்போம் போலும். நல்ல மிருதுவாக, காரத்துடன் இருந்த நாட்டுக்கோழி ஒரு பீஸ் எடுத்து வாயில் வைக்கவும் அமுதமாய் கரைந்தது, அதுவும் பரோட்டாவுடன் சாப்பிட அந்த காரத்துடன் இன்னும் நன்றாக இருந்தது !! நீங்கள் செல்லும் போது இதற்க்கு கண்டிப்பாக இடம் நிறைய வைக்கவும் !! சொல்ல மறந்திட்டேனே..... நாங்கள் பாவமாய் பார்த்த நண்பர் இரண்டு சிக்கன் வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.



முடிவில் எல்லாமும் சாப்பிட்டு விட்டு வேர்க்க விறுவிறுக்க பணத்தை கொடுத்துவிட்டு வெளியில் வர, கண்டிப்பாக நீங்கள் இன்னொரு முறை குற்றாலம் சென்று குளித்தால் மட்டுமே அந்த கசகசப்பு தீரும் ! ஒரு அருவியில் நன்றாக குளித்து விட்டு வரும்போது இப்படி ஒரு நல்ல உணவு கிடைத்தால் வேறு என்ன வேண்டும் ?!



Labels : Suresh Kumar, Kadalpayanangal, Border kadai, Border Rahmath, Pranoor, Kutraalam, Kutralam, best parotta, Naattu Koli, Country chicken, Biriyani, best food, oorum rusiyum, Arusuvai

Tuesday, October 28, 2014

மறக்க முடியா பயணம் - ரிப்லி'ஸ் நம்பினால் நம்புங்கள் !

வாழ்வில் நம்பவே முடியாது என்று சில விஷயங்கள் இருக்கும் இல்லையா, அதை நாம் அடுத்தவரிடம் சொல்லும்போது கதைய விடறான் என்று நினைப்பார்கள்....... உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் உங்களது தெருவில் ஒருவர் வெறும் கண்ணாடியை தின்று உயிர் வாழ்கிறார் என்று உங்களுக்கு தெரியும், இதை அடுத்தவரிடம் சொல்லும்போது என்னதான் உண்மை இருந்தாலும் சில நேரத்தில் கதையோ என்று தோன்றும். இது போன்று இந்த உலகத்தில் நம்மால் நம்ப முடியவில்லை என்று சொல்லப்படும் விஷயங்களை தொகுத்து வைத்து இருந்தால் எப்படி இருக்கும், அதைதான் செய்கிறது இந்த........ ரிப்லி'ஸ் பிலீவ் இட் ஆர் நாட் !! உதாரனத்திற்க்கு சொல்வதென்றால் நம்ம ஊரில் பொருட்காட்சியில் எல்லாம் அதிசயம் ஆனால் உண்மை என்று ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்து உள்ளே சென்று குட்டை மனிதர்கள், வாழைபழத்தில் கல் தொங்குவது என்று பார்ப்போமே, அதேதான் ! ஒரு முறை மலேசியா சென்று இருந்தபோது இதை பார்த்துவிட்டு உள்ளே சென்றேன்........... உண்மையிலேயே இந்த உலகத்தில் நமக்கு தெரியாத அதிசயமான விஷயம் நிறைய இருக்கு !!

மேலும் தகவல்களுக்கு அவர்களது தளத்திற்கு செல்லவும்....... Ripley's Believe it or Not !




1918ம் ஆண்டு ரிப்லி என்பவர் ஒரு பத்திரிக்கையில் நம்ப முடியாத விஷயங்களை பற்றி ஒரு தொடர் எழுதினார், அது ஹிட் அடித்தவுடன் 1923ம் ஆண்டில் இருந்து இது போன்ற விஷயங்களை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அப்பொழுதுதான் பேப்பர் கொண்டு செய்திகள் மக்களை சென்று அடைய ஆரம்பித்து, உலகத்தை பற்றி அதிசயத்துடன் படிக்க ஆரம்பித்தனர், இதனால் இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. இப்படி ஆரம்பித்த பயணம் இன்று ஒரு பெரிய நிறுவனமாக ஆகி இன்று பெரிய பெரிய நகரங்களில் எல்லாம் "ரிப்லி'ஸ் பிலீவ் இட் ஆர் நாட் " அருங்காட்சியகம் ஆக உருவெடுத்து இருக்கிறது. பொதுவாக அருங்காட்சியகம் என்றாலே கொட்டாவி விடுபவர்கள் கூட இங்கு சென்றால் வாயை பிளப்பது நிச்சயம்....... அவ்வளவு தகவல்கள் !



உள்ளே நுழையும்போதே ஒரு பெரிய குண்டான ஆண் ஒருவரது மெழுகு உருவத்தினை வைத்து உலகத்தின் மிக எடை அதிகமான ஆள் இவர்தான் என்றும், அவர் பிறந்த நாடு, அவரை பற்றிய செய்திகள் என்று நிறைய போட்டு இருந்தனர். உள்ளே நடக்க நடக்க ஒவ்வொரு பொருளும் ஆச்சர்யம் கொடுத்தது...... உலகின் வயதான போட்டோ எடுப்பவர், அதிக மிருகங்களை வேட்டை ஆடியவர், இரட்டை தலை கன்னுக்குட்டி, சித்திரவதை கூடங்கள், உலகின் உயரமான மனிதர், உடம்பில் அதிகமாக பச்சை குத்தியவர், அதிகமான புத்தகத்தை அடுக்கி வைத்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு இடத்திலும் நின்று பார்த்து, அதிசயித்து இது எல்லாம் இந்த உலகத்தில் இருந்ததா, இப்படியும் மனிதர்கள் இருந்தார்களா என்றெல்லாம் அதிசயிக்க ஆரம்பித்தேன்.



தமிழில் "கற்கண்டு" என்று ஒரு புத்தகம் உண்டு, அதை சிறு வயதில் படிக்கும்போது அது ஒரு செய்தியாகத்தான் தெரியும், ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது நாம் படித்த செய்தி உங்களது முன் இருப்பதை பார்க்கும்போது வரும் அனுபவமே தனி. சில விஷயங்களை பார்க்கும்போது இது உண்மைதானா என்று சந்தேகம் வந்தாலும் இந்த ரிப்லி என்ற மனிதன் உண்மையான விஷயத்தை மட்டுமே தொகுத்து இருக்கிறான் என்ற அந்த நம்பிக்கை இதை நம்ப வைக்கிறது.



உலகில் நிறைய பைத்தியக்காரத்தனம் என்று சொல்லப்படும் விஷயங்களும், நம்ப முடியாத மனிதர்களும், நம்ப முடியாத விஷயம் என்றும் நிறைய உள்ளது, அதை பார்க்கும்போது நாம் சில நேரங்களில் செய்வது எல்லாம் பைத்தியக்காரத்தனம் இல்லை என்று தோன்றும். உதாரணமாக ஒரு சறுக்கு மரத்தில் ஏறி விளையாட வேண்டும் என்ற ஆசையில் அதை செய்தால் இந்த வயசில் இப்படி செய்யறீங்களே என்று சொல்வார்கள்.......... அவர்களை இங்கே கொண்டு வந்து விடும்போது, ஒரு காரை ஒரு ரூபாய் கொண்டு ஒட்டி வைத்து இருந்தது, வைரத்தில் ஜட்டி செய்தது, பற்களை டிராகுலா போல ராவியவன், நீளமாக நகம் வளர்த்தவர்கள், தினமும் புது டை என்று சாகும் வரை இருந்தவரின் டை அணிவகுப்பு  என்று அதை பணம் கொடுத்து பார்க்கும்போது இந்த உலகத்தில் நமது விருப்பம் போல வாழ்வது என்றுமே தப்பில்லை என்று தோன்றும் !!


Labels : Suresh, Kadalpayanangal, Malaysia, Genting, Ripley's Believe it or not, Ripley's, museum, interesting museum, marakka mudiyaa payanam, unforgettable journey, journey

Thursday, October 16, 2014

உயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்

உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் உயரமான கட்டிடம் எது என்று தேடி பார்த்து அதில் இருந்து அந்த நகரத்தை பார்ப்பது என்பது எனக்கு சந்தோசம் தரும் ! இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உயரமான கட்டிடங்களை பார்த்து இருந்தாலும், உலகின் மிக உயரமான கட்டிடம் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது, அதை நிறைவேற்றி வைப்பது போல சென்ற முறை துபாய் சென்று இருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததில் இருந்து காரின் வெளியே அந்த கட்டிடம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன், சில நிமிடத்தில் அந்த கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தவுடன் மனதில் அவ்வளவு ஆனந்தம் ! அந்த பாலைவன நகரத்தில் வானை தொடுவது போல அந்த வெயிலுக்கு மின்னி கொண்டு இருந்தது அந்த உலகத்தின் மிக உயரமான கட்டிடம்......... புர்ஜ் கலீபா !!

உயரம் தொட்டாச்சு…… இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கு !


துபாய் செல்ல போகிறேன் என்று தெரிந்தபோதே இங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன், அதனால் இங்கு இருந்தே அதன் உயரமான தளத்திற்கு செல்வதற்கு புக் செய்ய முயன்றேன். அதற்கென்றே அட் தி டாப் (At the top) என்ற தளம் இருக்கிறது, அதில் என்று செல்கிறோம், என்ன நேரத்திற்கு என்று தேடினால் நீங்கள் இங்கு இருந்தே புக் செய்து விடலாம். பொதுவாக சூரிய அஸ்தமனத்தை அந்த உயரத்தில் இருந்து பார்ப்பது கண் கொள்ளா காட்சி, இதனால் நான்கு மணியில் இருந்து சுமார் ஏழு மணி வரை எல்லா டிக்கெட்களும் முன்னரே பலரும் புக் செய்து விடுவார்கள். நீங்கள் அங்கு சென்றும் டிக்கெட் வாங்கலாம் ஆனால் கொஞ்சம் பணம் ஜாஸ்தி ஆகும், உங்களுக்கு முன்னர் நிறைய பேர் டிக்கெட் வாங்க நின்று கொண்டு இருப்பார்கள் !! ஒரு ஆளுக்கு 125 திர்கம் (சுமார் 2000 ரூபாய்) ஆகும் !

இந்த டிக்கெட் கிடைக்க நான் தலைகீழாய் நின்னேன் !!

வானம் தொடலாம் வாருங்கள் !
நான் முன்னரே பதிவு செய்தபடியால், அங்கு சென்று ஒரு மெசினில் எனது பேப்பரை காட்டியவுடன் அது டிக்கெட் கொடுத்தது, அதை நுழைவு வாயிலில் காண்பித்து நேரம் உறுதி செய்தவுடன் (நீங்கள் உங்களது டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே உள்ளே செல்ல அனுப்பி வைக்கின்றனர்.) உங்களை உள்ளே அனுப்புகின்றனர். அங்கு அந்த புர்ஜ் கலீபாவின் கண்ணாடி மாடல் ஒன்றை வைத்து இருக்கின்றனர், விளக்கு வெளிச்சத்தில் மின்னுகிறது. அதை சுற்றி தொடு திரை கொண்டு அந்த கட்டிடத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் பலரும் அதை தொட முயல்வதும், செக்யூரிட்டி வந்து சத்தம் போடுவதும் என்று போகிறது. அங்கு நிற்கும் ஒவ்வொரு தருணமும் நாம் உலகின் மிக உயரமான கட்டிடத்தை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது.




புர்ஜ் கலீபா (Burj Khalifa) என்ற இந்த கட்டிடம் சுமார் 829.8மீட்டர் (2,722 அடி) உயரம் கொண்டது. இதுவே இன்றைய உலகத்தின் மனிதன் கட்டிய மிக பெரிய கட்டிடம் என்று பெயர் கொண்டது. செப்டம்பர் 2004இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் உள்ளே 30000 வீடுகளும், ஒன்பது ஹோட்டல்களும் எண்ணத்ற்ற அலுவலகங்களும் இயங்குகிறது. இதை கட்டும்போது உலகத்தில் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்தது இதனால் துபாய் நகரத்தில் கட்டிடங்கள் கட்டும் பணி பாதிக்கப்பட்டது, இந்த கட்டிடம் துபாய் நகரத்திற்கு ஒரு பெயரை பெற்று தரும் என்று துபாய் மன்னர் பண உதவி கேட்டு அபு தாபி மன்னரை தொடர்ப்பு கொண்டதாகவும்,  அவர் பண உதவி செய்து இந்த கட்டிடத்தை முடிக்க உதவியதால் அந்த நாட்டின் முன்னால் ஆண்ட மன்னர் பெயரான புர்ஜ் கலீபா அவர்களின் பெயர் இந்த கட்டிடத்திற்கு சூட்டப்பட்டதாகவும் தகவல்.




இதன் உச்சிக்கு செல்ல லிப்ட் முன் காத்திருந்தோம். லிப்ட் ஓபன் ஆகி உள்ளே செல்ல நல்ல இருட்டு, அது இயங்க ஆரம்பித்தபோது LED விளக்கில் லிப்ட் முழுவதும் மிதமான வெளிச்சமும் அந்த கட்டிடத்தின் வரலாறும் சொல்கிறார்கள், வெறும் 60 நொடியில் அது 124வது தளத்திற்கு சென்று விடுகிறது. இந்த தளத்தில்தான் டூரிஸ்ட் எல்லோரும் வெளி அழகை பார்க்க முடியும். வெளியே வரும்போதே எல்லோரது முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி....... வெளியே கின்னஸ் சாதனையான உலகின் மிக உயரமான கட்டிடம் என்பதை பிரேம் செய்து மாட்டி இருக்கின்றனர், நான் 452 மீட்டர் உயரத்தில் இருக்கிறேன் என்று அங்கு எழுதி இருக்கிறார்கள். ஒரு ஜன்னலின் ஓரம் சென்று எட்டி பார்க்க துபாய் அவ்வளவு அழகாக இருக்கிறது.



பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இருந்து மேலே கொண்டு போனால் கட்டிடங்கள் மறைந்து ஒரு நேரத்தில் பாலைவனம் தெரிய ஆரம்பிக்கிறது. வெறும் மணல் மேடாய் இருந்த இந்த நகரம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமே, மனிதன் நினைத்தால் எதுவும் முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் !! கண்ணாடியின் உள்ளே இருந்து நான் இந்த நகரத்தை ரசித்தாலும் ஒரு இடத்தில் சிறிய இடத்தில் நீங்கள் வெளியே சென்று அந்த உயரத்தில் காற்றை சுவாசிக்கலாம். நான் வெளியே சென்று அந்த நகரத்தின் பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டு இருந்தபோது அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடித்தது !!



சூரிய அஸ்தமனம்……. உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து !
ஈர பதம் இல்லாத காற்றில் ஸ்டாடிக் கரண்ட் என்பது உருவாவதால், நீங்கள் அங்கு இருக்கும் பொழுதில் அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. அங்கு இருந்து கட்டிடத்தின் மீதி உயரத்தை பார்க்கும்போது ஆச்சர்யம்தான். இந்த கட்டிடம் கட்ட எவ்வளவு சிரமபட்டிருப்பார்கள் என்று தோன்றியது. மீண்டும் மீண்டும் அந்த நகரத்தை ரசித்துவிட்டு கீழே வந்து டாக்ஸி பிடித்து ஹோட்டல் செல்லும் வழியில் அந்த கட்டிடம் தொலை தூரத்தில் தெரிந்தது……. இந்த முறை அதை பார்க்கும்போது இன்னும் இன்னும் காதலோடு பார்க்கிறேன் !!





Labels : Suresh, Kadalpayanangal, Uyaram thoduvom, Burj Khalifa, Tallest tower in the world, man made tallest tower, touch the sky, visit at the top, Dubai attractions, Dubai