Tuesday, October 14, 2014

ஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் !! (பகுதி - 1)

மஞ்சள்...... இந்த வார்த்தையை நினைத்தாலே அந்த நிறமும், மஞ்சள் பூசி குளித்து இருந்த தாயின் முகமும், நம்மை சிறு வயதில் கொஞ்ச வரும்போது அவரிடத்தில் வரும் மஞ்சளின் வாசனையும் அல்லவா தெரியும் ! மஞ்சளுக்கும் நமக்குமான உறவு பாரம்பரியமானது; நமது பழக்கவழக்கங்களிலும், பண்பாட்டிலும் மஞ்சள் தவிர்க்க முடியாத ஒரு பொருள். மஞ்சள் மங்கலகரமான பொருள் மட்டுமல்ல, உணவுப் பொருளாகவும், கிருமிநாசினியாகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். தாலியில்கூட தங்கத்துக்குப் பதிலாக மஞ்சளை உபயோகிக்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி தேடி செல்லும்போதுதான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள் தெரியுமா...... நமது வீட்டில் எவ்வளவு மஞ்சள் இருக்கும், ஒரு கையளவுதானே ! சமையல் அறையில் தேடி பார்த்தால் கொஞ்சம் மஞ்சள் பொடி கிடைக்கும் அவ்வளவுதான், என்றாவது யோசித்தது உண்டா மலை அளவு மஞ்சளை !! மஞ்சளை எப்படி விளைவிக்கிறார்கள், அது எப்படி காய்ந்து விரல் அளவு வருகிறது, அது எப்படி சந்தைக்கு வருகிறது, ஈரோடு ஏன் மஞ்சளுக்கு அவ்வளவு பேமஸ், அங்கு மஞ்சள் வணிகம் எப்படி நடைபெறுகிறது......... இப்படி நிறைய கேள்விகள் உங்களது மனதில் இருந்தால், இந்த பதிவுகளை படிக்கும்போது ஆச்சர்யத்தில் வாயை பிளப்பீர்கள் !! நான் அறிந்த, பார்த்த விஷயத்தை ஒரு பதிவினில் அடக்கிட முடியாது, அதனால் அடுத்த வாரமும் வரும் !

ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும்மாநகராட்சி ஆகும். ஈரோடு என்றாலே நம் நினைவுக்கு வருவது மஞ்சளாகத் தான் இருக்கும். ஈரோட்டுக்கு மஞ்சள் மாநகரம் என்ற பெயரும் உண்டு. நவீன வரலாற்றாசிரியர்கள் ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்களிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். சூரம்பட்டியின் பெரும்பள்ளமும், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய்ப் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாகத் திகழ்கின்றன.  பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர்.


மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம்.  ஈரோட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சள் மார்கெட் நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட் மூலமே விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் மற்றும் இதர விவசாய பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.  
 ஈரோடு நுழையும் முன்னரே மஞ்சள் செடி வயல்கள் உங்களை வரவேற்க ஆரம்பித்து விடும். ஈரோட்டில் கீழ்பவானி பாசனம் பாயக்கூடிய கோபிசெட்டிபாளையம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி மஞ்சள் வயலில் இறங்கி பார்க்க ஆசைப்பட்டேன், பெரும் மஞ்சள் பயிர்களுக்கு இடையில் சென்று நிற்கும்போதே அங்கு மஞ்சள் வாடை அடிக்கிறது. சிறிது தூரத்தில் மஞ்சள் செடிகளுக்கு பாத்தி கட்டி கொண்டு இருந்ததை பார்த்து அவரின் அருகினில் சென்று பேசும்போதுதான் குளிக்கும் மஞ்சள் என்பது சம்பா மஞ்சள் என்றும், பெரும்பாலான மஞ்சள் மருந்து தயாரிக்கும் கம்பெனிக்கும், பெயிண்ட் தயாரிக்கும் கம்பெனிக்கும் செல்வது. முகத்தில் தேய்த்து குளிக்கும் மஞ்சள் செடி என்பது இரண்டு அல்லது மூன்றடி உயரம் மட்டுமே இருக்குமாம். தை மாதத்தில்தான் மஞ்சள் அறுவடை நடக்கும், மஞ்சள் செடி வாங்கி வீட்டில் கட்டி வைத்து சாமி கும்பிட்டவுடனே அடுத்த நாள் அந்த மஞ்சளை காய வைத்து முகத்திற்கு பூச பயன்படுதுவார்கலாம் !!
மஞ்சளில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா...... பொதுவாக மஞ்சளில் மூன்று வகை உண்டு  முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் அல்லது சம்பா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். ஆனா‌ல் இதனை சரும‌த்‌தி‌ல் பூ‌சினா‌ல் ‌நிற‌த்தை‌த் தராது. ஆனா‌ல் ந‌ல்ல மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்டது. மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். இதை‌த்தா‌ன் நா‌ம் சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். 
இதை தவிர ஊருக்கும், மார்கெட்டிர்க்கும் ஏற்ப மஞ்சளை இத்தனை வகையாக பிரிக்கின்றனர்.......

முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள், கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா,ஐஐஎஸ்ஆர் பிரபா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம் !


மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருபண்பாடு நிலம் மிகவும் உகந்தது. மஞ்சள் பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது, ஆண்டு ஒன்றுக்கு சராசரி மழை 1500 மி.மீ மேல் உள்ள பகுதிகளில் மஞ்சளை மானாவாரியாக பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் சாகுபடி செய்யலாம். தமிழ்நாட்டில் மே - ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும். தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர்ப்பெருக்கம் செய்யலாம். விதையளவு - 2000 கிலோ / எக்டர் (விரலி கிழங்கு). பயிர்  மஞ்சாளதல், சாய்தல், உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும். மகசூல் என்று பார்த்தால்....... பதப்படுத்தப்படாத கிழங்குகள்    :  25-30 டன்/எக்டர்
பதப்படுத்தப்பட்ட கிழங்குகள்      :   5-6 டன்/எக்டர் !!..... எவ்வளவு லாபம் என்று பார்ப்போமா ?
பதப்படுத்தப்பட்ட கிழங்குகள்      :   5-6 டன்/எக்டர் (2.47 ஏக்கர் என்பது ஒரு எக்டர்)
அறுவடை : 2.47 ஏக்கர் = 5 டன் = 5000 கிலோ 
1 குவிண்டால் = 100 கிலோ = சுமார் விலை 6000 ரூபாய் 
மொத்த மஞ்சள் மகசூல் பணம் =  5000 கிலோ * 6000 ரூபாய் / 100 = 3 லட்சம் !சரி, மஞ்சள் பயிரை பற்றி பார்த்தாகிவிட்டது, ஆனால் மஞ்சள் எப்படி அவ்வளவு தள தள என்று இருந்தது அவ்வளவு சுருங்கி போய் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதா ? மஞ்சளை தை மாதத்தில் அறுவடை செய்தவுடன் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் மஞ்சளை நன்றாக வேக வைக்கின்றனர். இப்படி வேக வைத்த மஞ்சளை சுமார் ஒரு மாதம் வரை காய வைக்க வேண்டும், பின்னர் அந்த காய்ந்த மஞ்சளை மஞ்சள் பொடியை கொண்டு பாலிஷ் செய்கின்றனர். உங்களது கைகளுக்கு அது வரும்போது "எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்" கதைதான். இப்போது விவசாயிகள் ஈரோட்டில் இப்படி மஞ்சளை வேக வைக்கவென்று மெசினை கொண்டு வந்துவிட்டனர், அதை வாடகைக்கு எடுத்து வந்து எல்லா மஞ்சளையும் வேக வைத்துவிட்டு அதை காய வைக்கின்றனர்.
 
இதுவரை ஈரோடு பற்றியும், மஞ்சள் பயிரை பற்றியும், அதன் வகைகள் என்று நிறைய விஷயத்தை பார்த்தோம், இது சும்மா டிரைலர்தான் ! அடுத்த பகுதியில் ஈரோடு மஞ்சள் என்று ஏன் சொல்கிறோம் என்பதற்கான உண்மையான விளக்கம், மஞ்சள் சந்தை, மஞ்சளை சேமிக்கும் குடோன் என்று நிறைய ஆச்சர்ய தகவல்கள் வரும்...... அதுவரை காத்திருங்களேன் !
Labels: Suresh, Kadalpayanangal, oor special, erode, manjal, turmeric, district special, Rhizome, making of rhizome, district 

7 comments:

 1. அற்புதம் சார்! ஒரு டாகுமெண்டரி பார்த்ததுபோலவே இருந்தது. தகவல் சேகரிப்பு, புகைப்படங்கள், தொகுப்பு எல்லாமே நன்றாக இருந்தது. இந்த பதிவுகளின் பின் நீங்கள் செலவழிக்கும் நேரமும் உழைப்பும் ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி அதிதி ! உண்மைதான், இதற்க்கு நான் செலவழிக்கும் நேரமும், பணமும் அதிகமே ஆனாலும் இதுவரையில் ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்த ஊரின் பெருமைகளை இப்படி நிறைய பேருக்கு சொல்ல முடிவது சந்தோசம் தருகிறது !

   Delete
 2. எத்தனை தகவல்கள்..... உங்கள் கடின உழைப்பு பதிவில் தெரிகிறது. பாராட்டுகள் சுரேஷ்.

  ReplyDelete
 3. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்யும் இந்த பணி போற்றத்தக்கது. உங்களை சந்திக்கும் ஆவலை தருகிறது.....உங்களின் அடுத்தடுத்த ஊர்கள் எதுவென்று சொன்னால் சந்திக்க முயற்சி செய்வேன்.

  ReplyDelete
 4. Hi sir. I am Brindha from Coimbatore. I saw ur blog recently. All your works and efforts should be praised and respected sir. Please say me how to cultivate mutta manjal in my garden. I also have almond trees in my farm plz say how to remove the almond shells sir. Do there is any automated machines/ shops which will remove the almond shells

  ReplyDelete
 5. கஸ்தூரி மஞ்சள் செடி கிடைக்குமா ஜயா

  ReplyDelete
 6. Is there a specific variety/varieties only to get virali manjal which is used in cooking? Dried one becomes like small sticks is understood, I wanted to know whether any particular type only becomes virali manjal?
  Thanks in advance. V Ramachandran. 20 02 22

  ReplyDelete