Thursday, October 30, 2014

ஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் !! (பகுதி - 2)

சென்ற வாரத்தில் ஈரோடு மஞ்சள் பற்றிய பதிவை படித்து, மஞ்சள் பற்றி நிறைய தெரிந்து கொண்டதாகவும், அடுத்த பதிவுக்கு எதிர் பார்த்து இருப்பதாகவும் வந்த கருத்துக்கள் நிறைய இருந்தது, இது போன்ற கருத்துக்கள்தான் இந்த பயணம் மேற்கொள்ள காரணம். சரி, வாருங்கள் இந்த வாரம் அந்த மஞ்சள் சந்தை படுத்த படுவதையும், மருத்துவ குணங்களையும், மஞ்சளின் பயன்களையும் பார்ப்போம் ! ஈரோட்டில் மஞ்சள் செடிகளை பார்த்துவிட்டு அதை எப்படி விரல் அளவுக்கு மாற்றுகிறார்கள் என்றும் பார்த்தோம், அடுத்து மஞ்சள் சந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்க அவர்கள் ஈரோடு மஞ்சள் வணிக வளாகம் செல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் ஏதோ ஒரு சிறிய இடத்தில், சந்தை கடை போல கூட்டத்தில் கத்தி கத்தி மஞ்சளை ஏலம் விடுவார்கள் என்று நினைத்து சென்றோம்......... மஞ்சள் வளாகமும், மஞ்சள் குடவுன்னும் எங்களை மலைக்க வைத்தன !!
மஞ்சளில் எத்தனை வகை தெரியுமா.......
மஞ்சள் விளைந்தவுடன், அதை தயார் செய்து வண்டியில் ஏற்றி இந்த மஞ்சள் குடவுன்னுக்கு கொண்டு வருகிறார்கள். குடவுன் என்றவுடன் சின்னதாக இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள், சுமார் நூற்றுக்கணக்கில் பெரிய பெரிய குடவுன்களாக அரசாங்கம் கட்டி வைத்து இருக்கிறது நல்ல ரோடு வசதிகளுடன். அங்கு மூட்டைகளை இறக்கி வைத்து ஒரு சீட்டு வாங்கி கொள்ள வேண்டும், அதில் உங்களது பெயர், எத்தனை மூட்டைகள் என்றெல்லாம் எழுதி இருக்கும். அதே மூட்டை ஒன்றை வியாபாரிகளும் சாம்பிள் ஒன்று வைத்து இருப்பார்கள், அதைதான் சந்தையின் போது சாம்பிள் ஆக வைத்து இருப்பார்கள். ஈரோட்டில் மஞ்சள் மார்க்கெட்டை பொருத்த வரையில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மற்றும் ஈரோடு சொசைட்டி, கோபி சொசைட்டி மற்றும் 200க்கும் மேற்பட்ட தனியார் மஞ்சள் மார்க்கெட்டுகள் என செயல்பட்டு வருகிறது.
மஞ்சள் வளாகம்..... இதில்தான் மஞ்சளை பரப்பி வைத்து ஏலம் விடுவார்கள் !
   
மஞ்சளில் ஈரோடு ரகம், பிடிஎஸ் 10 ரகம், 8ம் நெம்பர் என ரகங்கள் உள்ளது. எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்திலும், மைசூர் சம்பா, 10ம் நம்பர் ஆகிய மஞ்சள் பயிர், பிப்., மார்ச் மாதத்திலும் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடையாகும் மஞ்சள், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு வெளிமார்க்கெட், ஈரோடு கூட்டுறவு சொசைட்டி, கோபி கூட்டுறவு சொசைட்டி ஆகிய நான்கு மஞ்சள் மார்க்கெட் மூலம், ஏல விற்பனை செய்யப்படுகிறது. அதிக உற்பத்திக்கான சூழல், மற்றும் மஞ்சளை இருப்பு வைக்கும் கிடங்குகள் என அனைத்து வசதிகளும் ஈரோட்டில் இருப்பதால், மொத்த இந்தியாவிற்கும் மஞ்சள் மையமாக ஈரோடு விளங்கி வருகிறது. ஆண்டு முழுவதும் மஞ்சள் தேவைக்கு ஏற்றவாறு கிடங்குகளில் இருப்புகளை வைத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  வட மாநிலங்களில் போதிய கிடங்குகள் இல்லாத காரணத்தால் ஈரோடு மார்க்கெட்டுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து சென்றனர்.
எத்தனை எத்தனை மஞ்சள்.......
இதுவும் ஒரு வகை மஞ்சள்தான்.......
சீட்டு எடுத்துட்டா மஞ்சள் உங்களுக்கு சொந்தம் !
அதிகாலை ஆறு மணிக்கு மஞ்சள் சந்தை வளாகத்தில் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது, விவசாயிகள் அல்லது இடை தரகர்கள் தங்களிடம் இருக்கும் சாம்பிள்களை ஒரு சாக்கு மூட்டையின் மேலே வைத்து அதன் மேலே ஒரு அட்டையை வைக்கின்றனர், அந்த அட்டையில் அந்த விவசாயியின் சங்கேத எண் எழுதப்பட்டு இருக்கும். வரிசையாக கிடத்தப்பட்டு இருக்கும் அந்த மஞ்சள் ரகங்கள் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்றால் எவ்வளவு பெரிய இடம் அது என்று எண்ணி பாருங்கள். வியாபாரிகள் மெதுவாக ஒவ்வொரு மஞ்சளையும் பார்த்து செல்கின்றனர், சிலர் அதை கையில் எடுத்து பார்ப்பதும், சிலர் அதை கிள்ளி பார்ப்பதும், சிலர் முகர்ந்து பார்ப்பதும் என்று இருக்கின்றனர். அனுபவத்தில் அது நல்ல மஞ்சளா இல்லையா என்று கண்டுபிடித்து, அவர்களுக்கு அது சரி வரும் என்று தோன்றினால் அந்த அட்டையை எடுத்து கொள்கின்றனர். அந்த அட்டையை ஒரு சிறிய ஆபீஸ் அறையில் கொடுக்க அந்த சங்கேத எண்ணை மைக் கொண்டு கூப்பிட அந்த விவசாயி ஓடி வருகிறார். அவரிடம் இருந்து எத்தனை மூட்டை, விலை என்றெல்லாம் கேட்டு வாங்க வந்தவர் முன் பணம் கட்டி அந்த மஞ்சளை ரிசேர்வ் செய்ய அடுத்து வரும் நாட்களில் முழு பணமும் கொடுத்து அவர் முழுவதுமாக அந்த மஞ்சளை வாங்கி கொள்கிறார் !
இதுதான் ஏலம் விடும் ஆபீஸ்.......
மஞ்சள் மூட்டைகள் ஒவ்வொன்றும் 100 கிலோ, அதை ஒரு குவிண்டால் என்பார்கள். 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஒரு குவிண்டால் மஞ்சள் 4,300 ரூபாய்க்கும், மார்ச் மாதம் 5,019 ரூபாய்க்கும், மே மாதம் 5,447 ரூபாய்க்கும், ஜூன் மாதம் 6,000 ரூபாய்க்கும் விற்று சாதனை படைத்தது. மஞ்சள் வரத்து தொடர்ச்சியாக குறைந்ததாலும், வடமாநிலங்களில் மஞ்சள் தேவை அதிகரித்ததாலும், மஞ்சள் விலை மேலும் அதிகரிக்கத் துவங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு குவிண்டால் 8,000 ரூபாய்க்கும், செப்., மாதத்தில் 9,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சென்ற சில வாரங்களாக மஞ்சள் தேவை குறைந்து காணப்பட்டதால், மஞ்சள் விலை குவிண்டால் 8,200 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்தது.  மஞ்சள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து, ஒரு குவிண்டால் 9,000 ரூபாயை மீண்டும் தொட்டு சாதனை படைத்தது. அன்று, விரளி மஞ்சள் 9,335 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 9,263 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில், மஞ்சள் விலை மேலும் உயர்ந்து, ஒரு குவிண்டால் 11 ஆயிரத்தை கடக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர, தனியார் கமிஷன் மண்டிகள், மஞ்சள் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமும் மஞ்சள் விற்கப்படுகிறது. வெளிமாநில வியாபாரிகள், பெரும்பாலும் ‘ஆன்-லைனில்’ புக்கிங் செய்து, தங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றனர். சில ஆண்டுகளாக மஞ்சள் விலை குறைந்து காணப்பட்டதால், மஞ்சள் உற்பத்தி குறைந்தது. சென்றாண்டு இறுதியில் இருந்து, மஞ்சள் விலை அதிகரிக்கத் துவங்கியது என்பது ஒரு நற்செய்தி !!
இதுவரை இவ்வளவு மஞ்சளை நான் பார்த்ததில்லை......
இது போல நூறு குடவுன் இந்த ஏரியாவில்..... அப்போ எவ்வளவு மஞ்சள் இல்லை !!
வாங்க மஞ்சள் வாங்கலாம் !!
மஞ்சளில் காணப்படும் ‘குர்குமின்’ என்கிற வேதிப்பொருள், புற்றுநோய், அல்சர், நீரிழிவு நோய், மூட்டு வீக்கம்… போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துத் தயாரிப்புகளில் பிரதான பங்கு வகிக்கிறது. புரதம், கார்போ-ஹைட்ரேட், கொழுப்புச்சத்து, வைட்டமின்-சி, மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவையும் நிறைந்திருக்கின்றன. மனித உடலுக்கு நன்மை செய்யக்கூடிய மிகமுக்கிய வேதிப்பொருட்களும் மஞ்சளில் உள்ளன. ஆயுர்வேத மருந்துகள், கிருமிநாசினிகள், முகப்பூச்சுகள் தயாரிக்கவும், சாயத் தொழிற் சாலைகளில் நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது.  மஞ்சள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த தளத்தை காணுங்களேன்..... மஞ்சள் மகிமை !

இவ்வளவு மஞ்சளை நான் வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்தேன், இதுவரை மஞ்சள் என்பது முகத்துக்கு போடுவதும், பாலில் போட்டு குடிப்பதும் என்று மட்டும் பார்த்துவிட்டு இவ்வளவு மஞ்சளை என்ன செய்வார்கள் என்று கேட்டதற்கு இவை யாவும் மெடிக்கல் மற்றும் பெயிண்ட் கம்பெனிக்கு செல்கிறது என்கின்றனர். நீங்கள் உட்கொள்ளும் அல்லது பூசும் எந்த மருந்திலும் கொஞ்சமேனும் மஞ்சள் இருக்கிறதாம். விவசாயிகள் மஞ்சளை பயிரிட்டாலும், இடை தரகர்கள்தான் மிகுந்த லாபம் அடைகின்றனர் ஈரோட்டில் ! ஒரு சிறு மஞ்சள் என்று நாம் நினைப்பது மிக பெரிய வியாபாரமாக இங்கு ஆகிறது என்பதை பார்க்கும்போது........ இந்த உலகத்தில் எதுவுமே சிறிதில்லை என்பதும், எல்லாமே ஒரு நோக்கதிர்க்குதான் படைக்கப்பட்டு இருக்கிறது என்பது மீண்டும் புலனாகிறது !
Labels: Suresh, Kadalpayanangal, oor special, erode, manjal, turmeric, district special, Rhizome, making of rhizome, district, Benefits of turmeric, uses of turmeric, medicine, paint

14 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    தேடலுக்கு முதலில் வாழ்த்துக்கள் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன், இந்த தேடல் உங்களை போல பல நண்பர்களை பெற்று தந்துள்ளது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  2. மஞ்சளில் ஒரு வகை பனங்காளி மஞ்சள். மஞ்சள் செடியின் வேர் பகுதியில் இருக்கும். இதை வாங்கி நீங்கள் கூறிய “குர்குமின்” -ஐ மட்டும் வேதியல் முறைப்படி பிரித்தெடுக்கிறோம். அந்த தொழிற்சாலை பார்டர் ரஹ்மத் ஹோட்டலில் இருந்து 2 கீ.மீ தூரத்தில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் பொன்சந்தர்.... உங்களை பார்க்க தவறி விட்டேன் நெருங்கி வந்தும் !!நன்றி !

      Delete
  3. நிறைய விவரங்கள் சேகரித்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்... இந்த தகவல்கள் யாருக்கேனும் உபயோகபடலாமே. உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது கண்டும் மகிழ்கிறேன் !

      Delete
  4. மஞ்சள் சந்தைப்படுத்தலின் அனைத்து பக்கங்களையும் கவர் செய்திருக்கிறீர்கள்! உங்கள் தேடலுக்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்தில் இன்னும் பல சுவாரஷ்யங்களை படிக்க ஆவலாயுள்ளோம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிதி..... உங்களது உற்சாகம் கொடுக்கும் கருத்துக்கள் இன்னும் இது போல எழுத தூண்டுகிறது !

      Delete
  5. நிறைய பயனுள்ள தகவலுடன் சிறப்பான கட்டுரை! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ், இனி மஞ்சளை பார்க்கும்போது எனது நினைப்பு வருமா ?

      Delete
  6. எத்தனை தகவல்கள்.....

    அனைத்தையும் சேகரித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார், இந்த பதிவர் திருவிழாவில் உங்களை எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் !

      Delete
  7. அரிய பல தகவல்கள் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது . பாராட்டுக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீனிவாசன், தங்களது வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete