Wednesday, October 8, 2014

அறுசுவை (சமஸ்) - டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, மன்னார்குடி

அல்வா.....  எந்த ஊருக்கு சென்றாலும், அல்வாவை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். பொதுவாக அல்வா எனும்போது சிகப்பாய் முந்திரி பருப்பை மேலே தூவி, அதுவும் சில முந்திரி பருப்பு நெய்யில் வறுத்து சிகப்பாய் இருக்கும், அதை வெட்டி எடுக்கும்போதே இங்கே நாக்கில் ஒரு காவிரி ஓடும். அதன் பின்னர் முதல் முதலாய் திருநெல்வேலி அல்வாவை பார்த்தபோது அது கைகளில் நிற்காமல் வளைந்து நெளிந்து ஓடுவதும், ஒரு வாய் போட்டவுடன் நாக்கில் பிசு பிசுக்காமல் அப்படியே உள்ளே செல்வது என்று தனி சுவை. இதில் மன்னார்குடியில் கிடைக்கும் வகை என்பது இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது எனலாம் !! சமஸ் அவர்களின் எழுத்துக்களை படித்துவிட்டு பேரிச்சை அல்வாவில் அப்படி என்ன தனி சுவை இருக்க  போகிறது என்று நினைத்துதான் மன்னார்குடி சென்றேன்....... ஆனால் அதில்தான் சுவையே இருக்கிறது !!

சமஸ் அவர்கள் எழுதிய மன்னார்குடி பேரிச்சை அல்வா பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்...... அல்வா !


மன்னார்குடி, தஞ்சாவூரில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஊர். வழியெங்கும் பச்சை வயல்கள் போர்வை  போத்தியது போல சிலு சிலுவென்று காற்றுடன் மன்னார்குடி சென்று சேரும்போதே வயிற்றில் பசி வரும். மன்னார்குடியில் இருக்கும் பந்தலடியில், ராஜ வீதியில் யாரிடம் கேட்டாலும் டெல்லி ஸ்வீட்ஸ் எங்கு இருக்கிறது என்று கேட்டால் சொல்கிறார்கள், கொஞ்சம் பார்வையில் "அல்வா சாப்பிட போறீங்களா என்ற பொறாமையோடு". அந்த கடைவீதியில் பிரபலமான டெல்லி ஸ்வீட்ஸ் கடையை பெரிய பெரிய போர்டு, அசத்தும் விளக்குகள் என்றெல்லாம் எண்ணி சென்றால் உள்ளேன் ஐயா என்று சொல்லும் கடைசி பெஞ்ச் மாணவன் போல, ஒரு சிறிய கடை எந்த ஆடம்பரமும் இல்லாமல் இருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது எல்லா ஸ்வீட்ஸ் கடையை போல் இருந்தாலும் அங்கு கைகளில் ஏந்தி சாப்பிட்டு கொண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ஏதோவொன்று ஸ்பெஷல் என்று தோன்றும் !


 


 
கடையின் முன்னாலே, உங்களது மூக்கிற்கு கீழேயே அந்த பேரிச்சை அல்வாவை வைத்து இருக்கிறார்கள். கொஞ்சம் முன்னாடி செல்லும்போதே அந்த வாசனையில் என்ன வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை நீங்கள் கண்டிப்பாக மறந்து இந்த அல்வா கொஞ்சம் கொடுங்க என்று கேட்பது நிச்சயம். திருநெல்வேலி அல்வாவை போலவே பிரவுன் நிறத்தில் மேலே முந்திரி தூவி, நெய் வாசனை தூக்கலாக இருக்கிறது. ஆனால், உற்று பார்த்தால் உங்களுக்கு கொஞ்சம் வித்யாசம் தெரியும், மேலே பேரிச்சை தெரியும் !! நூறு கிராம் அல்வா என்று கேட்க உங்களது கண்களின் முன்னாலேயே ஒரு பேப்பர், அதன் மேலே வாழை இலை அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அல்வாவை மேலே வைக்கும்போது, ஸ்பூனில் இருந்து விலக மனம் இல்லாத அல்வாவை போலவே நமது மனமும் அதில் மாட்டி கொள்கிறது !அந்த இலையில் பிரதானமாக தக தகவென மின்னும் அல்வா உங்களது கண்களுக்கு கண்டிப்பாக விருந்துதான். அந்த அல்வாவில் நெய் சொட்ட சொட்ட இருக்கும்போது, அங்கங்கே பேரிச்சையை தேங்காய் போல துருவி துருவி போட்டு இருக்கிறார்கள். ஒரு வாய் எடுத்து வைக்கும்போது முதலில் தெரிவது அல்வாவின் சுவைதான், அதன் பின்னர் அங்கங்கே பேரிச்சை தட்டுபட ஆரம்பிக்கும்போது அல்வாவின் சுவை திடீரென்று இரட்டிப்பு ஆவது போல தோன்றுகிறது. சுவைக்கு சுவை சேர்க்க முடியுமா என்றால் கண்டிப்பாக இதை சொல்லலாம், அல்வாவே சுவைதான் அதில் இந்த பேரிச்சை அவ்வளவு சுவை. அடுத்த வாய் எடுத்து வைக்கும்போது, மீண்டும் நழுவி உள்ளே செல்கிறது...... பாதி அல்வா முடிந்தவுடன் தித்திப்பில் தடுமாறுகிறது உடம்பு, இருந்தும் பக்கத்தில் கொடுத்த கொஞ்சம் காரத்தை கொஞ்சம் போட்டுக்கொண்டு மீண்டும் அடுத்த பகுதியை சுவைக்க தொடங்குகின்றோம் !
 


அல்வாவில் இது ஒரு புதிய சுவை எனலாம். அல்வா பிரியர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது ! இதுவரை எங்கு சென்றாலும் அல்வாவை விரும்பி சாப்பிடும் நான் மலைத்து போகும் அளவுக்கு சுவைத்தது இதைதான். பேரிச்சை சுவையும், அல்வாவின் சுவையும் போட்டி போடுகிறது...... அடுத்த முறை மன்னார்குடி சென்றால் இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தது சுமார் ஒரு கிலோவாவது சாப்பிடுங்கள், ஜன்மம் சாபல்யம் அடையும் !!
 
 

 
 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Delli sweets, Delhi sweets, Alwa, Dates alwa, Perichai alwa, sweet alwa, mannargudi
 
 

15 comments:

 1. வணக்கம்
  அண்ணா.
  பாரத்தவுடன் வாய்ஊறுகிறது.... சுவையான உணவு பற்றிய அறிமுகம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன், உங்களது கவிதையும் இதே போன்ற சுவைதான் !

   Delete
 2. Super..tempting writing style!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சௌரி, நீங்கள் இதை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் !

   Delete
 3. நெஞ்சில் நிற்கும் சுவை ... சாப்பிடாதவர்கள் நரகத்திற்க்கு செல்வர்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. சாபம் ஏன் ஆனந்த்..... எல்லோரும் இன்புற்று இருக்கட்டுமே !

   Delete
 4. மன்னார்குடி செல்லும்போது விட்டு விட்டேன்!

  அதுசரி, மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா சாப்பிட்டிருக்கிறீர்களோ... ? ஆலாலசுந்தரர் நேரு விநாயகர் கோவில் அருகே, சக்தி சிவம் தியேட்டர் அருகே கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாவ், சுவையான தகவல், அடுத்த முறை முயற்சி செய்கிறேன். நன்றி ஸ்ரீராம் !

   Delete
 5. நானும் அல்வாப் பிரியன் தான்! வாய்ப்பு வரும்போது சாப்பிட்டு பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ், கண்டிப்பாக முயன்று பார்க்க வேண்டிய ஒன்று !

   Delete
 6. hi Come to salem and taste essence Dosa and write about it.

  ReplyDelete
  Replies
  1. Hi, Thanks for the info, but could you please provide me more information about that ?

   Delete
  2. In salem ammapet kichipalayam "Gounder kadai" you will get this dosa or almost all the hostels in ammapet you will get dosa but in gounder kadai it will good.

   Delete
 7. Where can get essence dosa in Salem
  kumar kannan

  ReplyDelete