Friday, October 10, 2014

சிறுபிள்ளையாவோம் - டென்ட் கொட்டகை !!

எப்போதுமே சிறு வயது பிராயம் என்பது நாம் எல்லோரும் ரசிக்கும் ஒன்று, மீண்டும் அந்த பருவத்திற்கு செல்ல மாட்டோமா என்று ஏங்கும் ஒன்று. முகபுத்தகம், நேரில் என்று எல்லோருமே "சின்ன வயசுல அந்த பட்டாம்பூச்சி பிடிப்போமே, பணியாரம் சாபிடுவோமே..... " என்றெல்லாம் சொல்லிவிட்டு அது எல்லாம் அந்த காலம், எவ்வளவு சந்தோசமான விஷயம் அது என்றெல்லாம் சொல்லும்போது, அப்படியென்றால் அதை ஏன் இப்போது செய்து பார்க்க கூடாது என்று கேள்வி எழும்...... அதை முயற்சி செய்து பார்த்தபோது அவ்வளவு சந்தோசம், அதையே இங்கே உங்களுடன் பகிர்கிறேன். சிறு வயதில் சினிமா என்பது எவ்வளவு மகிழ்ச்சி, அதிலும் இந்த டென்ட் கொட்டகையினுள் மணலை குவித்து படம் பார்ப்பது எவ்வளவு சந்தோசம் ! அதை முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது, ஆனால் தேட தொடங்கியபோது நிறைய ஏமாற்றம்...... ஆம் எங்கும் டென்ட் கொட்டகை என்பது இல்லை !




சிறு வயதில் மண்ணை குவித்து, அதில் எச்சில் துப்பி, மீண்டும் மண்ணை குவித்து படம் பார்த்துக்கொண்டு இருப்போம், படம் முடியும்போது அப்படியே படுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருப்போம்.... அதில் ஒரு சுகம் இல்லையா ?! ஒரு டென்ட் கொட்டகையில் படம் பார்த்தே ஆக வேண்டும் என்று வெறியுடன் பெங்களுருவின் கிராம பகுதியில் தேடி தேடி அலைந்தேன். பிடுதி பிலிம் சிட்டியில் டென்ட் கொட்டகை போன்றே அமைத்து இருக்கின்றார்கள் என்றபோது அங்கு சென்று பார்த்தபோதும் அது செட் போன்று தெரிந்ததே அன்றி உண்மையான அனுபவமாக இல்லை. நிறைய நண்பர்கள், தியேட்டர்காரர்கள் எல்லோரிடமும் பேசியபோதும் எல்லோரும் அது எல்லாம் அந்த காலம், இப்போது எல்லாம் அதில் படம் போட்டா யார் பார்ப்பா என்றனர், ஆனால் என்னுள்ளே ஒரு நம்பிக்கை இருந்தது...... கண்டிப்பாக இந்தியாவின் ஒரு மூலையில் டென்ட் கொட்டகை இருக்கும், அது எங்கு இருந்தாலும் சென்று பார்க்க வேண்டும் என்று. நெட்டில் தேடி கொண்டு இருந்தபோது ஒரு நாள் மதுரையில் லக்ஷ்மி திரைஅரங்கம் என்று உண்டு அது டென்ட் கொட்டகை என்று போட்டு இருந்தது, ஆனால் அதிகமான தகவல் இல்லை. பின்னர், மதுரையில் லக்ஷ்மி திரைஅரங்கம் எங்கெல்லாம் உள்ளது என்று தேடி, திருப்பரங்குன்றம் பகுதியில் ஒன்று உண்டு என்று தெரிந்தது...... ஆனாலும் யாரிடம் கேட்டும் அது டென்ட் கொட்டகையா என்று தெரியவில்லை என்றனர்.







அதை தேடி சென்றேன், திருப்பரங்குன்றம் சென்று யாரிடம் கேட்டாலும் வழி சொன்னார்கள். கிரிவல பாதையில் லக்ஷ்மி தியேட்டர் என்று போட்டு "வேங்கை" பட போஸ்டர் இருந்தது. ரோட்டில் இருந்து பார்க்கும்போது மரத்திற்கு இடையில் அது ஒரு சாதாரணமான தியேட்டர் போன்றே இருந்தது. மதிய வெயிலில் உள்ளே நுழைந்து டிக்கெட் கவுன்ட்டர் தேடினால் ஆண்களுக்கு தரை டிக்கெட் 10 ரூபாய், சீட்டு 15 ரூபாய், பெண்களுக்கு 5 ரூபாய் என்று போட்டு இருந்தது. கதவு திறந்து இருந்தது கண்டு உள்ளே நுழைய மனம் ஆனந்தத்தில் குதித்தது....... டென்ட் கொட்டகை !!




படம் மாலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்கும் மட்டும்தான். உள்ளே நுழைந்து அந்த மண்ணில் நடந்து சென்று ஒரு இடத்தில் மண்ணை குவித்து, மேடாக்கி அதன் மேலே அமர்ந்து திரையை பார்த்தேன்..... என்ன ஒரு ஆனந்தம் தெரியுமா. ஆண்களுக்கு வலது புறம் பெண்களுக்கு இடது புறம் என்று பிரித்து ஒரு சிறிய சுவர் மட்டுமே இருக்கிறது. குடும்பமாய் வந்தவர்களும், காதலிப்பவர்களும் அந்த காலத்தில் இந்த சுவர் ஓரமாய் உட்கார்த்துக்கொண்டு வாங்கும் முறுக்கு, வடையை பகிர்ந்து கொள்வதை பார்த்து இருக்கிறேன். அந்த மணலில் பாக்கு பொட்டலங்களும், பீடியும், பிளாஸ்டிக் குப்பைகளும் என்று நிரம்பி இருந்தது. திரைக்கு அருகில் சென்று தொட்டு பார்த்து மகிழ்ந்தேன் !




 பெஞ்ச் டிக்கெட் எனும்போது அதில் டீ கடை பெஞ்ச் போன்றும், சேர் அமைப்பு போன்றும் இரண்டு வகை இருந்தது. அதிலும் உட்கார்ந்து பார்த்தேன். அப்போது படம் போடும் அந்த ஓட்டையை எட்டி பார்த்தபோது அங்கு படம் ஓட்டும் ஆள் உறங்கி கொண்டு இருந்தார். அந்த ஓட்டையின் வழியே பார்த்துக்கொண்டு இருக்க, சத்தம் கேட்டு எழுந்து விசாரித்தார். எனது ஆர்வத்தை பார்த்த அவர், உள்ள வாங்க என்றவுடன் முதன் முதலில் படம் ஓட்டும் அந்த கால இயந்திரத்தை பார்க்க போகிறேன் என்ற ஆவலில் இதயம் வேகமாக துடித்தது.




உள்ளே நுழைந்து என்னை அறிமுகபடுதிக்கொண்டு பேச ஆரம்பிக்க, அன்றைய வேங்கை படத்தின் ரீல்களை எடுத்து சுற்ற ஆரம்பித்தார். ஒரு ரீல் ஓடி முடித்தவுடன் கடைசி காட்சிகள்தான் இருக்கும், அதை மீண்டும் இப்படி ஓட்டி முதல் காட்சிக்கு ரெடி செய்வார்களாம், ரீலை சரியாக சுற்றவில்லை என்றால் படத்தின் போது சரியாக தெரியாதாம். படம் போடும் அந்த மெசின் இரண்டு உள்ளது, அது பம்பாயில் இருந்து கொண்டு வரப்பட்டதாம். இன்று அந்த கம்பெனி இல்லை என்றும் மெசினில் கோளாறு என்றால் லோக்கல் ஆட்களை கொண்டே சரிப்படுத்தி வருவதாகவும் சொன்னார். அந்த ரீல் ஓடி முடித்தவுடன் அதை ஆசை தீர கைகளில் ஏந்தி பார்த்தேன். என்ன இருந்தாலும் ஒரு சிறு பிள்ளையின் மகிழ்ச்சிதானே !



 



அன்றைய நாளில் இருந்து நான் படம் பார்க்க முடியாவிட்டாலும், அடுத்த முறை அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அங்கு சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தபோது பிலிம் பட சுருள்கள் நிறைய இருந்தது, ஒன்றை கைகளில் ஏந்தி பார்க்க பார்க்க சிறு வயதில் ரஜினி பட பிலிம் கிடைக்க பட்ட பாடு நினைவுக்கு வந்தது. அதை இரண்டு பிஸ்கட், 20 வேறு பட பிலிம் என்று பண்ட மாற்றுக்கு வாங்கினேன் அன்று. ஒரு பிலிமை எடுத்து வெளிச்சத்தில் பார்க்க பார்க்க என்ன ஒரு ஆனந்தம் தெரியுமா !!




இப்போது படங்கள் எல்லாமே டிஜிடலில் வருகிறதே அப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சர்யபடுதியது. ஒரு ஓரத்தில் இருந்த சிறிய ரூமை காட்டி அது டிஜிட்டல் சினிமா சாதனம் என்றபோது ஆச்சயபடாமல் இருக்க முடியுமா, டென்ட் கொட்டகையில் டிஜிடல் சினிமா..... என்ன ஒரு சாதனை !



 இந்த காலத்தில் டென்ட் கொட்டகை எல்லாம் கிடையாது என்று சொல்லும் அன்பர்கள், சுமார் 47 வருடங்களாக இயங்கி வரும் இங்கு வந்து பாருங்கள், பின்னர் தெரியும் அந்த மகிழ்ச்சி. இந்த காலத்திலும் கூட்டம் வருமா என்று கேட்டதற்கு என்னை மேலே கீழே பார்த்து சாயங்காலம் வந்து பாருங்கள் உங்களுக்கே புரியும், நிறைய பேர் நின்னுகிட்டு எல்லாம் படம் பார்ப்பாங்க தெரியுமா என்றார்......ம்ம்ம்ம்ம்ம் என்னைய போலவே சிறுபிள்ளை ஆவதற்கு போட்டி நிறைய இருக்கு போல. பதிவர் சந்திப்புக்கு மதுரை வரும் நண்பர்களே, ஒரு படம் பார்ப்போமா டென்ட் கொட்டகையில் ?!

Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Sirupillai, Child, Childhood, Memories, Tent kottagai, village cinema, village theatre, talkies, takkies, Madurai, Thirupparagundram, Lakshmi talkies, Lakshmi theatre, tharai ticket, old method of cinema

14 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    எங்களை பழைய கால நினைவுக்கு கொண்டு போய் விட்டீர்கள் படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு நன்றி.த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரூபன் ! இதை கண்டுபிடிக்க நிறைய கஷ்டப்பட்டாலும் இன்று உங்களது கருத்தை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது !

      Delete
  2. ரசிகர் பாஸ் நீங்க.... அசத்தல்.

    அடுத்தமுறை மதுரை செல்லும்போது பார்த்து விடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், நீங்களும் பதிவர் திருவிழாவிற்கு வருகிறீர்களா இல்லையா ?

      Delete
    2. இல்லை. வரவில்லை! :)))

      Delete
  3. Super Suresh, great effort, thanks

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம், சென்னையில் குரோம்பேட்டையில் ஒன்று இது போல இருந்தது ஆனால் இன்று இருக்கிறதா என்று தெரியவில்லை !

      Delete
  4. " இந்த காலத்தில் டென்ட் கொட்டகை எல்லாம் கிடையாது என்று சொல்லும் அன்பர்கள், சுமார் 47 வருடங்களாக இயங்கி வரும் இங்கு வந்து பாருங்கள், பின்னர் தெரியும் அந்த மகிழ்ச்சி. இந்த காலத்திலும் கூட்டம் வருமா என்று கேட்டதற்கு என்னை மேலே கீழே பார்த்து சாயங்காலம் வந்து பாருங்கள் உங்களுக்கே புரியும், நிறைய பேர் நின்னுகிட்டு எல்லாம் படம் பார்ப்பாங்க தெரியுமா என்றார்......ம்ம்ம்ம்ம்ம் என்னைய போலவே சிறுபிள்ளை ஆவதற்கு போட்டி நிறைய இருக்கு போல. பதிவர் சந்திப்புக்கு மதுரை வரும் நண்பர்களே, ஒரு படம் பார்ப்போமா டென்ட் கொட்டகையில் ?! "

    நிச்சயம் சென்று பார்ப்போம்.

    அழகான படங்கள்.அருமையான பகிர்வு. உவகைக்கும், ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துபாய் ராஜா, என்னதான் நாம் பெரிய தியேட்டரில் சினிமா பார்த்தாலும் இந்த டென்ட் கொட்டகை என்பது ஆச்சர்யமும், சந்தோசமும்தானே !!

      Delete
  5. super ...marakka mudiytha ninaivugali meetedukkuthu....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  6. thala kalakkittingka enakkum antha aarvam ippothum undu

    ReplyDelete
  7. பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகப் படுத்திமைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  8. MIKKA NANDRI MANATHIL ULLA ASASIKALAI SONNATHARKU........
    ENJOY YOUR LIFE THIS WAY ONLY (YARKKUM KIDIKADU)

    ReplyDelete