Monday, October 13, 2014

உலகமகாசுவை - செம செம செம….காரமான சிக்கன் !!

"ரொம்ப காரமா இருக்குமா......" நான் எழுதும் பதிவை படித்துவிட்டு சில சமயங்களில் எனக்கு போன் செய்து கேட்கும் கேள்வி இது ! ஒவ்வொரு முறையும் காரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுப்படும், அதனால் இந்த கேள்விக்கு பதில் சொல்வது கடினம் என்பதனை விளக்குவேன். எந்த ஊருக்கும் செல்லும்போதும் உங்க ஊரில் காரமான உணவு எது என்று கேட்டு உண்டு பார்ப்பேன், அது மட்டும் அல்ல ஆந்திரா செல்லும்போது மிளகாய் காரம் என்று கூடுதலாக இரண்டு மிளகாய் போட்டு சிக்கன் வேண்டும் என்று கேட்பேன். அந்த சிக்கனை நான் ருசித்து சாப்பிடும்போது, எனது அருகில் இருக்கும் நண்பர்கள் ஐயோ காரம் என்று பதறி ஓட, நான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பேன். இப்படி காரம் என்பதில் ஆள் ஆளுக்கு வித்யாசப்படும் என்று இருந்தாலும் உலகத்திலேயே காரமான ஒன்றை ஒரு முறையேனும் சுவைத்து விட வேண்டும் என்று விரும்பினேன்...... சென்ற மாதத்தில் அமெரிக்கா செல்லும் போது காரமா இங்க என்ன கிடைக்கும் என்று கேட்க நண்பர் ஒருவர் "வாங்க பாஸ்..... சாலெஞ்ச் எடுக்கலாம் " என்று என்னை கூட்டிக்கொண்டு சென்றார்........ நாக்கு செத்துடுச்சு போங்க !!   


அமெரிக்காவில் சிக்கன் விங்க்ஸ் என்பது மிக பிரபலம். அதில் பப்பலொ விங்க்ஸ் என்பது ஒரு விதமான சாஸ் ஊற்றி செய்வது, அதை சாப்பிடும்போது உங்களுக்கு சாதரணமாகவே கமறல் எடுக்கும். நண்பருடன் கொஞ்சம் காரமா சாப்பிடலாம் என்று கேட்டபோது எவ்வளவு காரமா என்றார், நானோ ரொம்பவே காரமா என்று சிரித்து கொண்டே சொன்னேன். என்னை அமெரிக்காவின் பிரபலமான பப்பலொ வைல்ட் விங்க்ஸ் என்னும் ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றார். சிறிது பீர் ஆர்டர் செய்துவிட்டு சாபிடுவதற்கு என்று சிக்கன் விங்க்ஸ் சொல்லலாம் என்று கேட்டபோது எவ்வளவு காரம் வேண்டும் என்றனர். நான் முழித்த முழியை பார்த்துவிட்டு அந்த உணவகத்தில் வெவ்வேறு காரத்தில் சாஸ் இருப்பதாகவும் நாம் வேண்டும் விதத்தில் அதை சிக்கன் விங்க்ஸ்ல் போட்டு வறுத்து கொடுப்பதாகவும் சொன்னார்கள்.


மேலே இருக்கும் படத்தில் இடது புறத்தில் மேலே இருப்பது என்பது காரம் இல்லாதது, கீழே வர வர காரத்தின் அளவு கூடும். எது வேண்டும் என்று கேட்க நாமதான் ஆந்திராவின் மிளகாயையே உண்டவராயிற்றே என்று இருப்பதிலேயே மிக மிக காரம் என்று சொல்லப்பட்ட ஒன்றை செலக்ட் செய்ய, அதில் ஆறு சிக்கன் விங்க்ஸ்யை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அன்று சாப்பிடும் எல்லாமே ப்ரீ என்று சொல்ல, நான் வேகமாக தலையை ஆட்டினேன்...... இதை பார்த்து பதறி போன நண்பர் என்னிடம் டேய் அப்படியே நேரே ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்க போறியா என்று அதட்டி முதலில் தாய் கறி என்னும் இடத்தில இருந்து ஆரம்பிப்போம் என்றார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று அப்புறம்தான் தெரிந்தது...... காப்பாதிட்டியே நண்பா !


முதலில் வந்த "தாய் கறி" சிக்கனை எடுத்து வாயில் வைக்க நல்ல வெட கோழியின் கை பகுதியை அருமையாக வறுத்து அதில் மேலே ஆந்திராவின் பச்சை மிளகாயை கொஞ்சமாக போட்டு அதில் மஞ்சளும் கடுகும் போட்டு வறுத்து தருவதை போன்ற சுவையுடன் வந்தது........ நான் வேகமாக ருசித்து சாப்பிடுவதை பார்த்து அடுத்த லெவெலுக்கு போகலாம் என்று இரண்டு படி தாவி "மேங்கோ ஹபநீரோ" என்னும் சுவையை ஆர்டர் செய்தார். இந்த முறை ஆந்திரா மிளகாயையும், சில்லி பவுடரையும் சேர்த்து போட்டு இருந்தது போல கொஞ்சம் காரம் ஜாஸ்தியாக இருந்தது. ஒரு சிக்கன் துண்டை சாப்பிடதர்க்கே உதட்டில் இருந்து உள் வயிறு வரை சற்று எரிய ஆரம்பித்தது. இருந்தாலும் என்னை பார்த்துக்கொண்டு இருந்த நண்பருக்கும், அழகான நங்கைக்கும் வடிவேலு போன்று ஒரு புன்னகையை வீசி இதுதானா உங்க பவுசு என்று சொல்ல..... இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் போல என்று நண்பர் நினைத்தாலும், முதலில் இவனுக்கு ஒரு டெஸ்ட் வைத்து பார்ப்போம் என்று அந்த நங்கையிடம் ஒரே ஒரு சிக்கன் துண்டு மட்டும் அந்த "பிளேசிங்" எனப்படும் இருப்பதிலேயே மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக காரமான அந்த சாஸ் போட்டு ஒன்றை கேட்க, அவர் அப்படியெல்லாம் முடியாது என்று சொல்ல, முடிவில் பால் போன்ற எனது முகத்தை பார்த்துவிட்டு ஓகே என்றார் !!



முடிவில் அது வந்தே விட்டது..... அட அந்த "பிளேசிங்" சாஸ் கோழி துண்டைதான் சொல்கிறேன் ! சில சமயங்களில் சில உணவுகள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும், ஆனால் வாயில் வைக்க அது வேலையை காட்டும் அதுதான் இது !! கொஞ்சம் கெத்து காட்டி இருந்ததால் இந்த ஒரு துண்டை அப்படியே நாக்கில் படாமல் வேண்டுமானால் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தபோது நண்பர் போட்டோ எடுக்க ரெடி ஆனார், என்ன இது சின்னபிள்ளைதனம் என்று கேட்க உங்க ரியாக்சன் பார்க்கணும்...... ம்ம்ம்ம்ம் ஆரம்பிங்க என்றார் ! முதலில் அந்த கோழி துண்டை கையில் எடுத்து மதுரை முனியாண்டியையும், ஒத்தை பனைமர முனியையும், காவல் தெய்வத்தையும், இதர பிற தெய்வங்களையும் மனதினுள்ளே வணங்கிவிட்டு வெளியே சிரிப்புடன் அந்த துண்டை கடித்தேன்.............



முதலில் சிறிது காரமாய் இருந்தது போல தெரிந்தாலும், பின்னர் நாக்கினில் ஒரு அக்னி பரவ ஆரம்பித்தது, கண்களில் தண்ணீர் வழிய ஆரம்பித்தது, அடுத்து வயிற்றினுள் ஒரு பந்து உருண்டது போல இருந்தது, தூரத்தில் இறந்து போன என் பாட்டி தெரிய ஆரம்பித்தார், சட்டைக்குள் ஒரு குற்றாலம் பெருக ஆரம்பித்தது....... இதை எல்லாம் நான் உணர்ந்தது வெறும் இரண்டு நொடியினுள் ! அடுத்து அதே வேகத்தில் முன்னால் இருந்த பீரை அப்படியே சாப்பிட்டேன், அதன் பின்னும் காரம் அடங்காமல் அருகினில் இருந்த ஐஸ் வாட்டரை குடித்தேன், இதை எல்லாம் கவனித்த நண்பர் இன்னும் ஒரு பீர் ஆர்டர் செய்ய அதையும் குடித்த பிறகு கொஞ்சமே கொஞ்சம் நிதானத்திற்கு வந்தேன். என்ன நடந்தது என்று தெரிய சிறிது நேரம் பிடித்தது......... சத்தியமாக, இப்படி ஒரு காரத்தை எனது வாழ்வினில் இதுவரை சாப்பிடவில்லை !


என்னை பார்த்து பார்த்து சிரித்த நண்பர், என்ன ஆந்திரா காரமா என்று கேட்க இது உலக மகா காரம்டா சாமி என்று கையெடுத்து கும்பிட்டேன். இதுவரையில் காரம் என்றால் இவ்வளவு என்ற வரைமுறை இருந்ததையெல்லாம் தகர்த்து எரிந்துவிட்டது "பிளேசிங்" !! சரி ஆறு சாப்பிட்டா இன்னைக்கு பில் பே பண்ண வேண்டாம், முயற்சி செய்யேன் என்று சொல்ல நான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட ரெடி ஆனேன் ! சரி, அடுத்து வேற என்ன சாப்பிடலாம் என்று கேட்க நானோ..... "ஆணியே புடுங்க வேண்டாம் !" என்று சொல்ல, அவர் எனக்கு யாபகார்தமாக நான் இதற்க்கு முன் சாப்பிட்ட "தாய் கறி" மற்றும் "மேங்கோ ஹபநீரோ" ஒன்றும் வாங்கி கொடுத்தார்..... "பிளேசிங்" சாஸ் வேண்டும் என்றால் வாங்கி கொள் என்று கூற நான் அவ்வளவு வேகமாக தலையை ஆட்டினேன் வேண்டாம் என்று !!


Labels : Suresh, Kadalpayanangal, Spicy chicken, Buffalo wild wings, US, Chicken wings, The spiciest, Feel the burn, burning, chicken, Texas, ulagamagaasuvai, world taste

10 comments:

  1. Super. சுரேஷ்..அபிநயங்களும் உங்கள் முகத்தில் காண்கிறேன்... :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்....... நவரசத்தையும் பிலிஞ்சிட்டென் இல்லை ?! வாங்களேன் நீங்களும் ட்ரை செய்யுங்கள்.

      Delete
  2. வணக்கம்
    அண்ணா.

    அறியாத விடயத்தை தங்களின் பதிவு வழி அறிந்தேன்.. பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன், உங்களது வார்த்தைகள் உற்சாகம் அளிக்கின்றன. உங்களது தளத்தில் எப்படி என்னை இணைத்துக்கொள்வது, உங்களது பதிவுக்கு ஒவ்வொரு நாளும் தங்களது தளத்திற்கு வருகிறேன், ஆனால் வேறு எப்படியாவது உங்களது கவிதைகளை பிரசுரிதவுடன் படிக்க முடியுமா ?

      Delete
  3. காரத்தில் கூட அளவு வைத்து ஏற்றுகிறார்களா... அட!

    உங்கள் முக பாவங்கள் சூப்பர். படம் எடுத்த உங்கள் நண்பர் வாழ்க! :))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், நம்ம ஊரில் இப்படி ஏதேனும் இருக்கிறதா ?!

      Delete
  4. படிக்க படிக்க காரமா இருந்துச்சு..

    ReplyDelete
  5. உங்க கார வர்ணனையை கேட்டாலே எனக்கு சிலிர்க்கிறது :)

    பதிவர் விழாவில் நீங்கள் சுட்டுத் தள்ளிய போட்டோக்களை எடுத்து விடுங்களேன் ,சுரேஷ் ஜி ?
    த ம 2

    ReplyDelete