Wednesday, October 15, 2014

ஊரும் ருசியும் - ஆற்காடு மக்கன் பேடா !!

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரியமான ஒரு உணவு இருக்கும், எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அந்த உணவு மாறவே மாறாது. பொதுவாக ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு சுற்றும்போது எல்லாம் அந்த பகுதிகளில் இருக்கும் ஊரில் எதுவாவது ஸ்பெஷல் உணவு இருக்குமா என்று கேட்டு பார்ப்பது வழக்கம், ஆனாலும் அதை ஊர் ஸ்பெஷல் பகுதிகளில் எழுத முடியாது என்பதால் ஆரம்பித்தது இந்த "ஊரும் ருசியும்"பகுதி ! இந்த முறை நான் சென்றது ஆற்காடு !சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் சுமார் இரண்டரை மணி நேர தூரத்தில் இருக்கிறது ஆற்காடு. இந்த பெயரை சொன்னாலே நமது நினைவுக்கு வருவது நவாப்கள் ! ஆற்காடு நவாப்புகள் (Arcot Nawab) என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கருநாடக நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். அவர்களது விருந்தில் முக்கியமான ஒரு இனிப்புதான் இந்த மக்கன் பேடா !!


ஆற்காட்டில் எங்கு சென்றால் சுவையான மக்கன் பேடா கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது S.கண்ணன் ஸ்வீட் லேன்ட் அல்லது செட்டியார் கடை என்கின்றனர். ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தூரத்தில் இருக்கிறது இந்த கடை, உள்ளே நுழைந்து இந்த மக்கன் பேடா என்று கேட்க ஒரு சிறிய சட்டியை திறந்து காண்பிக்க அங்கே பிரவுன் கலரில் மிதந்து கொண்டு இருந்தது மக்கன் பேடா !! முதலில் இதை பார்க்கும்போது அட குலோப் ஜாமூன் என்று தோன்றினாலும், இது அதன் அக்கா என்று புரிவது ஒரு வாய் எடுத்து வைக்கும்போதுதான் !
கொழுக்கட்டை சாப்பிட்டு இருக்கிறீர்களா, மேலே வெள்ளையாய் இருக்கும் அதை ஒரு கடி கடிக்கும்போது உள்ளே இருக்கும் பூரணம் அலாதி சுவையை கொடுக்குமே.... அது போலவே இந்த மக்கன் பேடாவிலும் உள்ளே பாதாம் பருப்பு போட்டு இருப்பார்கள், முதலில் தேன் போன்ற சுவையான அந்த சக்கரை பாகில் இருந்து ஒரு மக்கன் பேடாவை எடுத்து ஒரு சிறிய தட்டில் வைத்து கொடுக்க, ஸ்பூனை கொண்டு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க அப்படியே கரைகிறது ! பொதுவாக குலோப் ஜாமூன் செய்யும்போது சில நேரங்களில் உதிர்ந்து விடும், சில நேரங்களில் கல் போன்று இருக்கும்..... இந்த மக்கன் பேடாவில் வெளிப்புறம் கல் போன்று சற்று கடினமாக இருந்தாலும், உள்ளே அத்தனை மென்மை. இன்னும் கொஞ்சம் என்று கொஞ்சம் எடுக்கும்போது வாயில் பாதாம் பருப்பு மாட்டுகிறது, அது அந்த பேடாவின் சுவையோடு சேரும்போது..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ருசியோ ருசி !தேவையான பொருட்கள்:
 • மைதா – 1 கப்
 • சர்க்கரை இல்லாத கோவா – 150 கிராம்
 • வெண்ணெய் (அ) வனஸ்பதி – 1 டேபிள் ஸ்பூன்
 • சமையல் சோடா – சிறிதளவு
 • கெட்டித்தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
 • எண்ணெய் – பொரித்தெடுக்க
பூரணம்:
 • பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • முலாம்பழ விதை – 1 டேபிள் ஸ்பூன்
 • சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • சர்க்கரைப் பாகு செய்ய:
 • சர்க்கரை – 1 1/2 கப்
 • தண்ணீர் – 1 கப்

செய்முறை:
1. சமையல் சோடாவுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல் வரும் வரை தேய்க்கவும்.
2. இதை சலித்த மைதாவுடன் சேர்த்து ரொட்டி துகள்கள் போல் வரும் வரை விரல் நுனியால் பிசறி விடவும். இத்துடன் உதிர்த்த கோவா, தயிர் சேர்த்து மென்மையான மாவாகப் பிசைந்து கொள்ளவும். தேவையானால் பிசையும் போது சிறிது பால் சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
3.பூரணத்திற்கான அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
4.பிசுபிசுப்பான பதத்திற்குச் சர்க்கரைப் பாகைத் தயாரித்துக் கொள்ளவும்.
5. பெரிய சைஸ் குலோப் ஜாமூன் போல மாவிலிருந்து உருண்டைகளைத் தயாரித்துக் கொள்ளவும்.
6. கப் போன்று ஒவ்வொரு உருண்டையையும் தயாரித்துக் கொண்டு, உள்ளே சிறிதளவு பூரணமாக தயாரித்த பருப்பு வகைகளை வைக்கவும்.
7.உருண்டையை நன்கு மூடி லேசாக தட்டி தட்டையாக்கி நடுத்தர சூட்டில் எண்ணெய் (அ) நெய்யில் சிவக்கப் பொரித்தெடுக்கவும் சூடான சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.
8. சில மணி நேரங்கள் கழித்து பரிமாறவும்.
அடுத்த முறை ஆற்காடு பக்கம் செல்லும்போது மறக்காமல் மக்கன் பேடா வாங்கி சாப்பிட மறக்காதீர்கள், அந்த சுவையுடனே உங்களது பயணம் இன்னும் இனிதாக அமையும் என்பது உறுதி !!

Labels : Suresh, Kadalpayanangal, Oorum Rusiyum, Oor special, District special food, Arcot, Makkan Beda, Makan beda, Sweet shop in Arcot, Arcot special, Arcot best sweet

9 comments:

 1. தீபாவளி சிறப்பு போல ஸ்வீட்ஸ் ... அருமை

  ReplyDelete
 2. நீர்தான் மனுஷன்!!! என்ன ரசனை எழுத்திலும் அனுபவத்திலும்

  ReplyDelete
 3. அருமை.

  நான் இதை பால்கோவாவுக்கு உறவு என்றுதான் நினைத்திருந்தேன்.

  கொஞ்சம் மாறுபடும் போல.

  ReplyDelete
 4. நாவில் சுவை ஊறுகிறது! சுவைத்துவிடுவோம்! நன்றி!

  ReplyDelete
 5. நாவில் சுவை ஊறுகிறது! சுவைத்துவிடுவோம்! நன்றி!

  ReplyDelete
 6. வணக்கம்
  வித்தியாசமான உணவு முறைகள்...பகிர்வுக்கு நன்றி..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. இதுக்காகவே ஆற்காடு பக்கம் போகணும்னு தோணுது! :)

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 8. ithu yenga area.............

  ReplyDelete
 9. தூள் தலைவா... Continue

  ReplyDelete