Thursday, October 16, 2014

உயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்

உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் உயரமான கட்டிடம் எது என்று தேடி பார்த்து அதில் இருந்து அந்த நகரத்தை பார்ப்பது என்பது எனக்கு சந்தோசம் தரும் ! இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உயரமான கட்டிடங்களை பார்த்து இருந்தாலும், உலகின் மிக உயரமான கட்டிடம் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது, அதை நிறைவேற்றி வைப்பது போல சென்ற முறை துபாய் சென்று இருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததில் இருந்து காரின் வெளியே அந்த கட்டிடம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன், சில நிமிடத்தில் அந்த கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தவுடன் மனதில் அவ்வளவு ஆனந்தம் ! அந்த பாலைவன நகரத்தில் வானை தொடுவது போல அந்த வெயிலுக்கு மின்னி கொண்டு இருந்தது அந்த உலகத்தின் மிக உயரமான கட்டிடம்......... புர்ஜ் கலீபா !!

உயரம் தொட்டாச்சு…… இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கு !


துபாய் செல்ல போகிறேன் என்று தெரிந்தபோதே இங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன், அதனால் இங்கு இருந்தே அதன் உயரமான தளத்திற்கு செல்வதற்கு புக் செய்ய முயன்றேன். அதற்கென்றே அட் தி டாப் (At the top) என்ற தளம் இருக்கிறது, அதில் என்று செல்கிறோம், என்ன நேரத்திற்கு என்று தேடினால் நீங்கள் இங்கு இருந்தே புக் செய்து விடலாம். பொதுவாக சூரிய அஸ்தமனத்தை அந்த உயரத்தில் இருந்து பார்ப்பது கண் கொள்ளா காட்சி, இதனால் நான்கு மணியில் இருந்து சுமார் ஏழு மணி வரை எல்லா டிக்கெட்களும் முன்னரே பலரும் புக் செய்து விடுவார்கள். நீங்கள் அங்கு சென்றும் டிக்கெட் வாங்கலாம் ஆனால் கொஞ்சம் பணம் ஜாஸ்தி ஆகும், உங்களுக்கு முன்னர் நிறைய பேர் டிக்கெட் வாங்க நின்று கொண்டு இருப்பார்கள் !! ஒரு ஆளுக்கு 125 திர்கம் (சுமார் 2000 ரூபாய்) ஆகும் !

இந்த டிக்கெட் கிடைக்க நான் தலைகீழாய் நின்னேன் !!

வானம் தொடலாம் வாருங்கள் !
நான் முன்னரே பதிவு செய்தபடியால், அங்கு சென்று ஒரு மெசினில் எனது பேப்பரை காட்டியவுடன் அது டிக்கெட் கொடுத்தது, அதை நுழைவு வாயிலில் காண்பித்து நேரம் உறுதி செய்தவுடன் (நீங்கள் உங்களது டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே உள்ளே செல்ல அனுப்பி வைக்கின்றனர்.) உங்களை உள்ளே அனுப்புகின்றனர். அங்கு அந்த புர்ஜ் கலீபாவின் கண்ணாடி மாடல் ஒன்றை வைத்து இருக்கின்றனர், விளக்கு வெளிச்சத்தில் மின்னுகிறது. அதை சுற்றி தொடு திரை கொண்டு அந்த கட்டிடத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் பலரும் அதை தொட முயல்வதும், செக்யூரிட்டி வந்து சத்தம் போடுவதும் என்று போகிறது. அங்கு நிற்கும் ஒவ்வொரு தருணமும் நாம் உலகின் மிக உயரமான கட்டிடத்தை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது.




புர்ஜ் கலீபா (Burj Khalifa) என்ற இந்த கட்டிடம் சுமார் 829.8மீட்டர் (2,722 அடி) உயரம் கொண்டது. இதுவே இன்றைய உலகத்தின் மனிதன் கட்டிய மிக பெரிய கட்டிடம் என்று பெயர் கொண்டது. செப்டம்பர் 2004இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் உள்ளே 30000 வீடுகளும், ஒன்பது ஹோட்டல்களும் எண்ணத்ற்ற அலுவலகங்களும் இயங்குகிறது. இதை கட்டும்போது உலகத்தில் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்தது இதனால் துபாய் நகரத்தில் கட்டிடங்கள் கட்டும் பணி பாதிக்கப்பட்டது, இந்த கட்டிடம் துபாய் நகரத்திற்கு ஒரு பெயரை பெற்று தரும் என்று துபாய் மன்னர் பண உதவி கேட்டு அபு தாபி மன்னரை தொடர்ப்பு கொண்டதாகவும்,  அவர் பண உதவி செய்து இந்த கட்டிடத்தை முடிக்க உதவியதால் அந்த நாட்டின் முன்னால் ஆண்ட மன்னர் பெயரான புர்ஜ் கலீபா அவர்களின் பெயர் இந்த கட்டிடத்திற்கு சூட்டப்பட்டதாகவும் தகவல்.




இதன் உச்சிக்கு செல்ல லிப்ட் முன் காத்திருந்தோம். லிப்ட் ஓபன் ஆகி உள்ளே செல்ல நல்ல இருட்டு, அது இயங்க ஆரம்பித்தபோது LED விளக்கில் லிப்ட் முழுவதும் மிதமான வெளிச்சமும் அந்த கட்டிடத்தின் வரலாறும் சொல்கிறார்கள், வெறும் 60 நொடியில் அது 124வது தளத்திற்கு சென்று விடுகிறது. இந்த தளத்தில்தான் டூரிஸ்ட் எல்லோரும் வெளி அழகை பார்க்க முடியும். வெளியே வரும்போதே எல்லோரது முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி....... வெளியே கின்னஸ் சாதனையான உலகின் மிக உயரமான கட்டிடம் என்பதை பிரேம் செய்து மாட்டி இருக்கின்றனர், நான் 452 மீட்டர் உயரத்தில் இருக்கிறேன் என்று அங்கு எழுதி இருக்கிறார்கள். ஒரு ஜன்னலின் ஓரம் சென்று எட்டி பார்க்க துபாய் அவ்வளவு அழகாக இருக்கிறது.



பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இருந்து மேலே கொண்டு போனால் கட்டிடங்கள் மறைந்து ஒரு நேரத்தில் பாலைவனம் தெரிய ஆரம்பிக்கிறது. வெறும் மணல் மேடாய் இருந்த இந்த நகரம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமே, மனிதன் நினைத்தால் எதுவும் முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் !! கண்ணாடியின் உள்ளே இருந்து நான் இந்த நகரத்தை ரசித்தாலும் ஒரு இடத்தில் சிறிய இடத்தில் நீங்கள் வெளியே சென்று அந்த உயரத்தில் காற்றை சுவாசிக்கலாம். நான் வெளியே சென்று அந்த நகரத்தின் பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டு இருந்தபோது அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடித்தது !!



சூரிய அஸ்தமனம்……. உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து !
ஈர பதம் இல்லாத காற்றில் ஸ்டாடிக் கரண்ட் என்பது உருவாவதால், நீங்கள் அங்கு இருக்கும் பொழுதில் அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. அங்கு இருந்து கட்டிடத்தின் மீதி உயரத்தை பார்க்கும்போது ஆச்சர்யம்தான். இந்த கட்டிடம் கட்ட எவ்வளவு சிரமபட்டிருப்பார்கள் என்று தோன்றியது. மீண்டும் மீண்டும் அந்த நகரத்தை ரசித்துவிட்டு கீழே வந்து டாக்ஸி பிடித்து ஹோட்டல் செல்லும் வழியில் அந்த கட்டிடம் தொலை தூரத்தில் தெரிந்தது……. இந்த முறை அதை பார்க்கும்போது இன்னும் இன்னும் காதலோடு பார்க்கிறேன் !!





Labels : Suresh, Kadalpayanangal, Uyaram thoduvom, Burj Khalifa, Tallest tower in the world, man made tallest tower, touch the sky, visit at the top, Dubai attractions, Dubai

9 comments:

  1. வணக்கம்
    தங்களின் பயண அனுபவத்தில் இரசித்த இடத்தைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் அழகாகஉள்ளது பகிர்வுக்கு நனறி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது//////// செம திரிலிங் தான்

    அந்தி நேரத்து புர்ஜ் கலிபா புகைப்படம் அருமை .....

    உலகம் சுற்ற வாழ்த்துகள்

    ReplyDelete
  3. Hello Suresh,

    Additional and prestigious info for page visitors here.
    you know a Thamizhian constructed this building!!! (even then time world tallest building - the twin towers of malaysia, Petronas was also built by same group). Eversendai constructions, Mr. Nathan is the one who constructed this building, a very reputed name in construction field. Be proud of it.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான அனுபவம்! கூட வந்து பார்த்தது போல ஓர் நினைவை ஏற்படுத்திய பதிவு! நன்றி!

    ReplyDelete
  5. அருமையான அனுபவம் சுரேஷ். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. pathivai rasichom sir. nangalum ungaludan vantha oru anupavam.

    ReplyDelete
  7. சென்னை பற்றி இது மாதிரி பதிவு இட்ட நல்ல இருக்கும்.சென்னையில் சிறந்த உணவங்கள் பட்டியல் கொடுத்தல் இன்னும் உதவியாக இருக்கும்

    ReplyDelete