Wednesday, October 29, 2014

ஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)

தமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு கொண்டே இருந்தனர். முன்பெல்லாம் ஒரு அருவியில் ஆர்பரித்து வரும் தண்ணீரை பார்க்கவும், அனுபவிக்கவும் குற்றாலம் செல்வார்கள் இப்போது எல்லாம் பார்டர் கடைக்கு போய்விட்டு அப்படியே குற்றாலம் வருகிறார்கள்......... டிரெண்டு மாறிடுச்சு !! குற்றாலத்தில் நன்கு குளித்துவிட்டு வரும்போதே நன்கு பசிக்க ஆரம்பிக்கும், சிலர் வீட்டில் இருந்து குடும்பத்துடன் ஒரு சமையல்காரரையும் கூட்டிக்கொண்டு வந்து விடுவார்கள், வீடு பிடித்து தங்கி குளித்து, சாப்பிட்டு, மீண்டும் குளித்து என்றே மூன்று நாட்கள் ஓட்டுவார்கள்,  இப்படி பசியோடு வருபவர்களுக்கு ஒரு அருமையான உணவகம் இருந்தால் அங்கு கும்பலுக்கு கேட்கவா வேண்டும் !! நான் இந்த முறை திருநெல்வேலி வரை சென்று இருந்தபோது மதியம் எங்கு சாப்பிடலாம் என்று கேட்க, திருநெல்வேலியில் நிறைய கடை சொல்லிக்கொண்டு இருந்தபோது, இங்க இருந்து ஒரு ரெண்டு மணி நேரம் சென்றால் பார்டர் கடை என்றவுடன்....... அதுக்கென்ன போய்டுவோம் என்றேன் !! இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது....... :-) குற்றாலம் அருவிக்கு செல்லும் ரோட்டில், இடது பக்கம் அருவி என்றால், வலது பக்கம் ரோடு எடுத்து ஒரு பதினைந்து நிமிடம் சென்றால் வருகிறது "பார்டர் ரஹ்மத் பரோட்டா கடை". கடையை நெருங்கும்போதே அங்கங்கே பார்க் செய்யப்பட்டு இருக்கும் கார் எல்லாம் சொல்லிவிடும் இங்கு என்னவோ இருக்கு என்று. ரோட்டின் மீது ஒரு கடை இருந்தாலும், கொஞ்சம் உள்ளே தள்ளி ஒரு கடை உண்டு, பார்கிங் வசதியோடு ! நாங்கள் கடைக்கு உள்ளே நுழைந்து இடம் பார்த்து உட்காருவதர்க்கே ஒரு இருபது நிமிடம் ஆகிறது..... உட்கார்ந்தவுடன் ஒருவர் வந்து இலை வைத்து பரோட்டா, பிரியாணி என்ன வேண்டும் என்று கேட்க, ஆளுக்கு ரெண்டு பரோட்டா என்று கேட்க, கொண்டு வரேன் என்று சென்றார் !  பரோட்டா, பிரியாணி மட்டும்தானா என்று பார்வையை சுழட்ட கண்ணில் பட்டது மெனு போர்டு !! மொத்தமே பதினைந்து வகைதான் அதில்தான் இத்தனை சுவை ! ஒரு இலையை போட்டு உட்கார்ந்து இருக்க சுற்றிலும் பார்க்க எல்லா இடத்திலும் குற்றாலத்தில் குளித்து முடித்து ஈர தலையுடன் வந்த முகங்களே.... உண்மையை சொல்வதென்றால் அங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு விதமான ஆர்வத்திலேயே இருந்தது தெரிந்தது. சில பசங்க குடித்துவிட்டு உள்ளே வர முயல அவர்களை அனுமதிக்கவில்லை ! இடம் ஒரு அஸ்பெஸ்டாஸ் கொட்டகை அதன் கீழே பேன் போட்டு புகை மூட்டமோடு பரோட்டாவை எதிர் நோக்கி காத்திருந்தேன் !வெகு நேர காத்திருப்புக்கு பின், ஒரு அலுமினிய அண்டாவில் சிறிய பரோட்டாக்களை எடுத்து வந்து நமக்கு முன்னே வைக்கின்றனர். உங்களுக்கு எவ்வளவு என்று சொல்லி எடுத்து எடுத்து வைக்க நாங்கள் அடுத்து சைடு டிஷ் என்ன வேண்டும் என்று சொல்வதற்குள் அவர் சென்றுவிட்டார்..... என்ன சர்விஸ் இது என்று எரிச்சல் எடுக்க, எனது நண்பர் கண்களால் கூல் என்றார் ! இப்போது பரோட்டாவை பார்க்க, இவ்வளவு கூட்டம் வருதே பரோட்டாவை கொஞ்சம் பெரிசா போடலாமே என்று நினைத்துக் கொண்டே எங்களுக்கு முன்னே இருந்த சால்னாவை எடுத்து கொஞ்சம் போட்டு கொண்டோம். பரோட்டாவை எப்போதாவது நிதானமாக பார்த்து இருக்கிறீர்களா ? வெள்ளை வெளேரென்று மாவை அடித்து பரோட்டாவாய் போட்டு அதை கல்லில் இருந்து இறக்கும்போது ஒரு பொன்னிறத்தில் அங்கும் இங்கு கொஞ்சம் கருகியும், சில இடங்களில் பிரவுன் நிறத்திலும் என்று வெண்மைக்கும் கருப்புக்கும் இடையில் எத்தனை நிறம் உண்டோ அது எல்லாம் ஒரு பரோட்டாவில் இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ?! இட்லிக்கு எந்த வகை சட்னி உண்டாலும் சூடாக இருந்தால் உள்ளே இறங்கும், ஆனால் பரோட்டாவிற்கு மட்டும் அந்த தேங்காயை அரைத்து போட்ட அந்த காரமான குருமா இருந்தால் மட்டுமே ஊற வைத்து உள்ளே இறக்க முடியும் இல்லையா ?! ஒரு பரோட்டா - சால்னா என்பது இணைபிரியாத தம்பதிகள் போல, இருவரும் மனம் ஒத்து இருந்தால் மட்டுமே ருசிக்கும். சில இடங்களில் கற்கள் போன்ற பரோட்டாவும், மனதை மயக்கும் சால்னா கிடைக்கும்..... சில இடங்களில் மிருதுவான ருசியான பரோட்டாவும், வாயில் வைத்தால் வாந்தி வரும் சால்னாவும் கிடைக்கும்......... இங்கு பார்டர் பரோட்டா கடையில் மட்டுமே, அந்த அருமையான காம்பினேசன் கிடைத்தது எனலாம்..... பூ போன்ற பொன்னிறமான பரோட்டாவும், நல்ல காரமான சால்னாவும். ஒரு கரண்டி எடுத்து அந்த பரோட்டாவின் மீது ஊற்றி ஒரு ஓரத்தில் இருந்த பரோட்டாவை பியித்து வாயில் வைக்க அந்த பசிக்கு தேவாமிர்தம்தான் !!

கொஞ்சம் கொஞ்சமாக அந்த பரோட்டா சால்னாவில் ஊற ஊற அதன் சுவை மும்மடங்கு அதிகரிக்கிறது. சாப்பிட்டு கொண்டு இருக்கும்போதே ஒரு சட்டியில் நன்கு மசாலா தடவி பிரை செய்த காடை வந்தது ஒரு அலுமினிய சட்டியில். யாருக்கு வேண்டும் என்று கேட்டு கேட்டு வைக்கின்றார். நன்கு மசாலா தடவி, அதில் வெங்காயமும் பெப்பரும் போட்டு வந்த அந்த காடையை அந்த பரோட்டாவை கொஞ்சம் தொட்டு சாப்பிட ஒரு ததிங்கினதோம் ஆரம்பம் ஆகிறது. நிறைய பேர் அப்போதுதான் பேன்டையும், கைலியையும் லூஸ் செய்து கொள்ள ஆரம்பிக்கின்றனர் ! கொஞ்சம் கொஞ்சமாக அந்த காடையை அதன் இளம் எலும்போடு கடித்து சாப்பிட சாப்பிட இங்கே அந்த வெயிலுக்கு ஒரு குற்றாலம் பெருக ஆரம்பிக்கிறது !
இங்கு சாப்பிடும்போது முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, முதலில் சில உணவு வகைகள் வரும்போது சடசடவென்று வாங்கி போட்டு வயிற்றை ரொப்பி கொள்ள கூடாது என்பதைத்தான். இதன் பின்னர் வறுத்த கோழியை வெங்காயம், பெப்பர் ஜாஸ்தியாக போட்டு தோசைகல்லில் பிரட்டி கொண்டு வருவார்கள், வேணுமா வேணுமா என்று கேட்டு இலையில் வைக்கிறார்கள், இந்த முறை பரோட்டாவிற்கு சால்னா ஊற்றிக்கொள்ளமலேயே அந்த சிக்கனோடு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட இன்னும் ஐந்து பரோட்டா காலி. இதை நாங்கள் சாபிடும்போதே அருகில் இருந்த நண்பர், கொஞ்சமாய் சாப்பிடுங்க அடுத்து இன்னொரு அயிட்டம் வரும் அதை கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்....... நாங்கள் அவரை பாவமாய் பார்த்தோம் !


அடுத்து ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு வந்ததை எங்களால் பார்க்க மட்டுமே முடிந்தது, அவ்வளவு புல். இதுவரையில் எந்த குழம்பு / சால்னா நன்றாக இருக்கிறது என்று வழித்து வழித்து குடித்தோமோ அந்த சால்னாவில் நன்றாக ஊறப்போட்ட நாட்டு கோழியை தோசைகல்லில் போட்டு, வெங்காயமும் காரப்பொடி மற்றும் பெப்பர் போட்டு வறுத்து எடுத்து வந்து இருந்தார்கள்....... வயிற்றில் இடம் இல்லாமல் இருந்தாலும், அந்த சால்னாவில் போட்ட நாட்டு கோழி என்றதும் கொஞ்சமே கொஞ்சம் என்று எல்லோரும் எடுத்துக்கொண்டோம். உண்மையை சொன்னால், இதை முதலில் கொண்டு வந்து இருந்தால் இது மட்டுமே போதும் என்று சொல்லி இருப்போம் போலும். நல்ல மிருதுவாக, காரத்துடன் இருந்த நாட்டுக்கோழி ஒரு பீஸ் எடுத்து வாயில் வைக்கவும் அமுதமாய் கரைந்தது, அதுவும் பரோட்டாவுடன் சாப்பிட அந்த காரத்துடன் இன்னும் நன்றாக இருந்தது !! நீங்கள் செல்லும் போது இதற்க்கு கண்டிப்பாக இடம் நிறைய வைக்கவும் !! சொல்ல மறந்திட்டேனே..... நாங்கள் பாவமாய் பார்த்த நண்பர் இரண்டு சிக்கன் வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.முடிவில் எல்லாமும் சாப்பிட்டு விட்டு வேர்க்க விறுவிறுக்க பணத்தை கொடுத்துவிட்டு வெளியில் வர, கண்டிப்பாக நீங்கள் இன்னொரு முறை குற்றாலம் சென்று குளித்தால் மட்டுமே அந்த கசகசப்பு தீரும் ! ஒரு அருவியில் நன்றாக குளித்து விட்டு வரும்போது இப்படி ஒரு நல்ல உணவு கிடைத்தால் வேறு என்ன வேண்டும் ?!Labels : Suresh Kumar, Kadalpayanangal, Border kadai, Border Rahmath, Pranoor, Kutraalam, Kutralam, best parotta, Naattu Koli, Country chicken, Biriyani, best food, oorum rusiyum, Arusuvai

45 comments:

 1. நானும் குற்றாலம் போகையில் இந்தக் கடையில்
  சாப்பிட்டிருக்கிறேன் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன்
  இப்பதிவைப் படிக்கமுடிந்தது
  படங்களுடன் விவரிப்பு மிக மிக அற்புதம்
  வேறொருவர் இதுபோல் செய்ய வாய்ப்பேயில்லை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார், ஒரு முறை நாம் சேர்ந்து செல்வோமா ?

   Delete
 2. Replies
  1. நன்றி மாயவரத்தான், ஒரு வார்த்தையிலேயே நீங்கள் எவ்வளவு ரசித்து இருக்கிறீர்கள் என்று தெரிந்தது !

   Delete
 3. ஏதோ Exhibition ride போன மாதிரி இல்ல இருக்கு. ஊடு கட்டி அடிக்கிறது கேள்விப்பட்டு இருக்கேன், நீங்க அருவி கட்டி இல்ல அடிகிறீங்க. யாருப்பா அடுத்த reporter கூப்புடுப்பா, இவர பத்தி இன்னொரு article எழுது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, பாபு என்ன இப்படி சொல்லிடீங்க. ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்...... நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 4. படிச்சவுடன் பசி அதிகமாயிடுச்சு

  ReplyDelete
  Replies
  1. அப்போ சாருக்கு ரெண்டு பரோட்டா வையுங்க..... :-) நன்றி ரவி !

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அப்படியே வர்ற வழியில் தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் எதிர்ல இருக்கிற தோசை கார்னர் கடைக்கும் போயிட்டு வாங்க பாஸ்

  ReplyDelete
  Replies
  1. ஐயோ மிஸ் செய்துட்டேனே... விடுங்க குறிச்சு வைச்சுகிட்டேன், அடுத்த முறை சென்று வருகிறேன். நன்றி !

   Delete
 7. சார் நான் வெஜிடேரியன்.. ம்ம் என்ன பண்றது?

  ReplyDelete
  Replies
  1. Venkat non vegku maaridunga.. Namba suresh sir kooda jolly a hotels polaam

   Delete
  2. வெங்கட், சிவா சொல்றது சரிதான்.... விடுங்க குற்றாலத்தில் நல்ல வெஜிடேரியன் ஹோட்டல் சொல்றேன் விரைவில் ! நன்றி !

   Delete
 8. இரண்டு மாதங்களுக்கு முன் குற்றாலம் சென்று வந்தேன் சிலர் என்னிடம் பார்டர் கடையை மிஸ் பண்ணிட்டேங்களேன்னாங்க... உங்க பதிவை படித்தவுடன் இப்போதே சாப்பிடணும் போல இருக்கு..... அடுத்த முறை கண்டிப்பாய் சாப்பிட்டிட வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. நன்றி எழில் மேடம்...... நீங்க இப்போ மலை மலையா ட்ரெக்கிங் போறீங்க, பொறாமையா இருக்கு போங்க !

   Delete
 9. சுரேஷ் உங்க பதிவ பார்த்தவுடன் பசி எடுக்குது . அருமை போங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரேம், விரைவில் குற்றாலம் சென்று குளிக்காமல் பார்டர் கடை மட்டும் செல்ல வாழ்த்துக்கள் !

   Delete
 10. அடுத்த முறை குற்றாலம் போகும் போது இந்தக் கடைக்கு அவசியம் செல்வேன்.
  தங்களை மதுரையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது நண்பரே
  தங்களின் பயணங்கள் தொடரட்டும்
  விரைவில் சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயக்குமார் சார், எனக்கும் மதுரையில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களது புத்தக வெளியீடு திரு.இந்திரா சவுந்தராஜன் அவர்களது கைகளால் நடந்தது மகிழ்ச்சி !

   Delete
 11. Our father in heaven, lead me not into temptation while I am dieting!!! :)

  ReplyDelete
  Replies
  1. Thanks Peepin, break your diet please...... it is worth tasting it :-)

   Delete
 12. நம்மூருக்கு வந்து போயிருக்கீக ! ! என்னோட அலுவலகம் பிரானூர் பார்டரில் ரஹ்மத் ஹோட்டலில் இருந்து 200 மீ தூரத்தில் குற்றாலம் செல்லும் சாலையில் இருக்கிறது. முன்பே தெரிந்து இருந்தால் சந்தித்து இருக்கலாம். நாட்டுக்கோழி வறுவலும், காடை வறுவலும் ஃபேமஸ். பிரியாணி சுமார்தான்... குற்றாலம் பாண்டியன் ஹோட்டல் பிரியாணி சூப்பராக இருக்கும். நம்ம கேபிளார் பாண்டியன் ஹோட்டல் பற்றி எழுதியுள்ளார்....

  ReplyDelete
  Replies
  1. Tenkasi to melagaram திருப்பத்தில் , (before yaanai palam in chittaru ) , (opposite to police beet) - super dosai kadai irukku. only evening. special for dosai and rasa vadai - dont miss it. ponchandar - is it still there ?

   Delete
  2. நன்றி பொன்சந்தர், நிஜமாகவே உங்களை பார்க்க முடியாமல் மிஸ் செய்துவிட்டேன். தங்களது போன் நம்பர் கொடுங்களேன் பேசுவோம்....... நீங்கள் கொடுத்து வைத்தவர், அவ்வளவு அருகில் அலுவலகம் !

   Delete
  3. Thanks Friend for the dosai shop address..... will try it !

   Delete
 13. Super article suresh - Proud about my native place.

  ReplyDelete
  Replies
  1. Thanks Periasamy, really it was a wonderful place !

   Delete
 14. அடுத்த மாதம் ஊருக்குப் போகிறேன்... நல்லா கவனிச்சிட்டு வரேன்.... :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன்..... சென்று வந்து எழுதுங்களேன் !

   Delete
 15. Replies
  1. ஒரு வார்த்தையில் உங்களது உற்சாகத்தை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள், நன்றி வெங்கட் சார் !

   Delete
 16. Replies
  1. Thanks Siva for visiting my blog and your comments !

   Delete
 17. ஒரு முறை ருசித்துள்ளேன்....
  stay Tasty 👌

  ReplyDelete
 18. Mouthwatering taste reading your blog. .. I only ate parotta here... I missed other items you wrote...

  ReplyDelete
  Replies
  1. Thanks Vino for your comments, I think you have to try this and you will never forget it !

   Delete
 19. Friend, on reading this my mouth is watering non stoppable,very nice,

  ReplyDelete
 20. இரண்டு நாட்களுக்கு முன்புதான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன். படித்தவுடன் பார்டர் கடை செல்லும் ஆவல் தொற்றிக்கொண்டது. நேற்று ராஜபாளையம் சென்றபோது பார்டர்கடை என்ற பெயரில் ஒரு போலி கடை பார்த்தேன். அப்போதும் அந்த ஆவல் பெருகியது. வீடடுக்கு வந்து தினமலரை புரட்டினால் அதிலும் நீங்கள்!!! நண்பர்களுடன் உணவு சுற்றுலா செல்லும் ஆலோசனை போய்க்கொண்டிருக்கிறது

  ReplyDelete
 21. Shhhhu appaaa nakkil yetchil voorgiradu nanba great

  ReplyDelete
 22. அருமை, அருமை உங்கள் பதிவு, உங்கள் பதிவை படித்துவிட்டு போய் இரண்டு நாட்களில் 4 தடவை சாப்பிட்டேன்.

  உரிமையாளர்களிடமும் உங்கள் பதிவை குறிப்பிட்டு, லிங்கும் கொடுத்துவிட்டு வந்தேன்.

  அனைத்தும் மிக நன்றாக இருந்தன. அருமையான உரிமையாளர்கள், புகைபடங்கள் நிறைய எடுத்துவந்தேன்.

  மிக ரசித்து நுனுக்கமாக எழுதியதால், புரோட்டோ குறைத்து, எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட முடிந்தது.

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 23. நான் ஸ்ரீ லங்கா வில் பத்திரிக்கை ஆசிரியராக இருந்து தற்போது யு கே யில் வாழ்கின்றேன்.உங்களின் ஆர்வம்,தேடல், அயராத முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.உங்களின் தொடர்பை விரும்புகின்றேன்.இங்கிலாந்துக்கு வந்தால் இன்ஷா அல்லாஹ் நான் உங்களுக்கு உதவி செய்வேன்.தொடர்பில் இருங்கள்.

  ReplyDelete
 24. நாங்களும் அங்கு சென்று சுவைத்த அனுபவம்நெஞ்சில்நிழலாக...

  ReplyDelete
 25. அன்று நீங்கள் அனுபவித்ததை இன்று நாங்கள் அனுபவித்தோம். பிரமாதம்... அந்த அனுபவம் இங்கே கொடுத்துள்ளேன். http://rayilpayanam.blogspot.in/2017/09/blog-post_2.html

  ReplyDelete