Thursday, October 9, 2014

ஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் !!

தேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன ? சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர் பார்க்கணுமே, நாலு யானை உயரம், அவ்வளவு பிரம்மாண்டம் என்றெல்லாம் சொல்வார்கள், நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை நிறைய பேர் சொல்லி கேள்விதான் என்று மண்டையை சொரிவார்கள், அந்த ரகம்தான் நானும். திருவாரூர் தேர் பார்த்து இருக்கீங்களா என்றால் என்னுடைய சரக்கையும் சேர்த்து எடுத்து விடுவேன், ஆனால் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு அதை தேடி சென்றபோது எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள் தெரியுமா ?! எதற்க்காக கடவுளை தேரில் எடுத்து வருகின்றனர், வேறு வாகனங்கள் இல்லையா, திருவாரூர் தேரின் சிறப்பம்சம் என்ன, அப்படி என்ன ஆச்சர்யம் அதில், இன்றைய அதன் நிலை என்ன....... என்றெல்லாம் மனதில் எழுந்த கேள்விகளுடன் தொடங்கிய எனது பயணம் முடிவில் தமிழர்களின் கலாசாரத்தின் மேல் மதிப்பையும், மரியாதையையும் கொண்டு வந்தது ! வாருங்களேன், தேர் ஏறி சென்று திருவாரூர் சென்று வருவோம் !!


திருவாரூர் தேரின் முன்பு...... தேர் அந்த கொட்டகையின் உள்ளே இருக்கிறது !
தஞ்சாவூரில் இருந்து 62 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாரூர். இதன் புகழை பற்றி சொல்வதென்றால் இது சோழர்களின் ஐந்து தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்று, முதலாம் குலோத்துங்க சோழன் இங்குதான் ஆட்சி செய்தான். சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜா, முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் இது ! திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இதன் பெயர் காரணம் தெரிய வேண்டும் என்றால்...... திருவாரூர் = திரு+ஆரூர் . திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது. திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம் என்பது...... திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.


தமிழில் "தேர்" என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் "இரதம்" என்று அழைக்கப்படுகிறது. தேர் என்ற சொல் தமிழில் "உயர்ந்த" என்ற பொருளைக் குறிக்கும். இரும்பினால் ஆக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும், பரியங்க இருக்கையுடையதும், தாமே தூக்கி அசையத்தக்க படிகளையுடையதும், நடுவமைந்த இருக்கையில் அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாகனையுடையதும், அம்பு, வாள் முதலிய போர்க்கருவிகளையுடையதுமான நடுவிடத்தையுடையதும், விரும்பியதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகுமிக்கதும் சிறந்த குதிரைகளையுடையதுமானது "தேர்" என்றும் , பல சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு, முதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது "இரதம்" என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. "இரதம்" என்ற சொல்லிற்குப் புணர்ச்சி, தேர், பல், சாறு, அன்னரசம், சுவை, இனிமை, வாயூறு நீர், வண்டு, பாதரசம், இரசலிங்கம், பாவனை, அரைஞாண், மாமரம், கால், உடல், வஞ்சி மரம், வாகனம், எழுதுவகை, அனுராகம், நீர், வலி, நஞ்சு, இத்தி, ஏழுவகைத் தாதுக்களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட்களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. தேர் என்பது "உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பையும், பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்" என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர். 'ஆழி' என்பது சக்கரமாகும். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை.

ஆழித்தேர் முன்பு..... கடல்பயணங்கள் !!

சக்கரமே இவ்வளவு பெரிசு என்றால், தேரின் உயரத்தை கணக்கு பண்ணுங்களேன் !

இப்போது தேரின் சக்கரங்களின் நிலைமை !
ஊர் பெருமை, தேர் என்றால் என்ன, திருவாரூர் தேர் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள், ஆனால் ஏன் தேரில் இறைவனை வலம் வர செய்ய வேண்டும் ? இறைவனின் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக்கிற இடம். மூலஸ்தானம் அல்லது கரு- அறை என்று சொல்லுவார்கள். கர்ப்பகிரஹம் என்கிற பெயராலும் அழைப்பர். மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்) தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. தேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உபபீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால்   அமைந்திருப்பதால் "கோயிலின் மறுவடிவம்" என்றும், "நகரும் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது.  இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது.தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கக்கப்பட்டிருக்கும். தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மானசாரமும், விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. மானசாரம் தேரின் அமைப்பு முறையையும், அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரையறை செய்கின்றது. விட்டுணு தத்துவ சம்கிருதை "இரத நிர்மாணப்படலம்" முழுவதும் தேர் செய்யும் நியதிகளை விளக்குகிறது. தேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
எப்படி இருந்த நான்......

இப்படி ஆகி........


இப்போ இப்படி ஆகிட்டேன்.......!!

தேரில் இன்று இவ்வளவுதான் மிச்சம் !

இறைவன் திருவீதி உலா வரும் வாகனமாகத் திகழும் தேர், சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றன. மானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது.[4] தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.[2]

இது வேறு தேரின் மாதிரி தோற்றம்......

1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது. பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது. இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. நான் சென்று இருந்தபோது தேரின் அச்சு முறிந்து இருந்ததால் தேரை ஒரு இடத்தில நிறுத்தி கொட்டகை கட்டி இருந்தனர், அதன் சக்கரங்கள் தியாகராஜா கோவிலின் எதிரில் வைக்கப்பட்டு இருந்தது. யாரை கேட்டாலும் அது பல வருடங்களாக அப்படி இருக்கிறது என்ற செய்திதான் தெரிந்தது, கடைசியாக அது எப்போது ஓடியது என்றால் ஐந்து வருடம், பத்து வருடம் என்கிறார்கள் !! புது தேர் செய்வதற்கு இந்து அறநிலைய துறை பணம் ஒதுக்கி உள்ளதாகவும், விரைவில் (?!) அது வரும் என்கிறார்கள் !

திருவாரூரில் தேர் திருவிழா என்பது ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் நடைபெறும். தேர் திருவிழாவின் நோக்கம் என்பது என்ன தெரியுமா ? கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தினர். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின் போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம் பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலையிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். தேர்த்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் வேண்டிக்கொள்வர். இந்நிகழ்ச்சி "தேர்த்தடம் பார்த்தல்" என்று அழைக்கப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது தேர் நிற்கும் இடத்திலிருந்து கோயிலின் பிரகாரத்தைச் சுற்றித் தொடங்கிய இடத்திற்கே வருதலை "நிலைக்கு வருதல்" என்பர். தேர்த் திருவிழா சிறப்பாக நடத்தி முடிப்பது பெரியசெயலாகும். இவ்வாறு தேர் பழைய இடத்திற்கு வராத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஊருக்குத் தீங்கு ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர். 1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.  இன்று அந்த தேர் சும்மா நிற்கிறது....... தேர் திருவிழாவிற்கு என்ன செய்கிறார்களோ ?! விரைவில் இது "ஒரு காலத்தில் திருவாரூர் தேர்......." என்ற பட்டியலில் சேர்வதற்கு முன் சென்று பார்த்து விடுங்கள் !!


Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District Special, Thiruvarur, Thiruvaaroor, Thiruvaroor, Temple car, Biggest temple car, Ther, car, Thiruvarur ther

13 comments:

 1. எத்தனை எத்தனை விவரங்கள்... அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம், இது போன்ற பயணங்களை செய்தாலே மனதுக்கு சந்தோசமே. தோசை பற்றிய உங்களது பதிவு எனக்கு ஒரு புதிய தேடலை தந்தது, விரைவில் எதிர்பாருங்கள்......

   Delete
  2. ஆர்வமாக இருக்கிறேன்.

   Delete
 2. பிரமிக்க வைக்கும் தகவல்கள்!

  உங்கள் உழைப்புக்கு, இனிய பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம், இந்த செய்திகள் எல்லாம் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் உதவும் என்று நம்புகிறேன்.

   Delete
 3. அடுத்த வருடம் மதுரை சித்திரை மாத தேர் திருவிழாவை தவறவிடாதீர்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சிவக்குமார், ஆம் மதுரையை பற்றி எழுத நிறையவே இருக்கின்றதே ! கண்டிப்பாக தவற விடமாட்டேன்.

   Delete
 4. Replies
  1. ஆழி என்றால் கடல். மேலும் இந்த கட்டுரை பல கட்டு கதைகளின் தொகுப்பு. உண்மை ஆராய்ச்சி இல்லவே இல்லை.

   Delete