Friday, November 28, 2014

அறுசுவை(சமஸ்) - திருச்சி பெரிய கடைவீதி கையேந்தி பவன் !!

திருச்சி.... நான் பிறந்து வளர்ந்த ஊர், அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு இடமும் எனக்கு அத்துப்படி என்று செருக்கோடு அலைந்த என்னை, திரு.சமஸ் அவர்கள் இந்த பெரிய கடைவீதி கையேந்தி பவன் மூலம் இந்த ஊர் நிறைய அதிசயங்களையும், ஆச்சர்யத்தையும் கொண்டு உள்ளது என்று தலையை தட்டி சொல்லி இருக்கிறது எனலாம் !! கையேந்தி பவன், திருச்சியில் மாணவனாக திரிந்தபோது கைக்கு கிடைக்கும் காசில் இங்குதான் சாப்பிட முடியும், இதனால் இந்த கடைகள் மீது பெரும் காதலே உண்டு. காலேஜ் படிக்கும்போது கும்பலாய் போய் காலியாக இருக்கும் கையேந்தி பவனில் உட்கார்ந்துக்கொண்டு மாஸ்டரை ஆள் ஆளுக்கு ஒரு அயிட்டம் சொல்லி தலையை கிறுகிறுக்க வைப்போம் !
 

மெயின்கார்ட்கேட்........ இந்த இடம்தான் திருச்சியின் மிக பெரிய ஷாப்பிங் தெரு, ஒரு குட்டி சென்னை ரெங்கநாதன் தெரு எனலாம், இதன் பக்கத்தில் இருக்கும் ஸ்கூல் ஒன்றில்தான் நான் ஆறாம் வகுப்பில் இருந்து படித்து வந்தேன் என்பதால் இந்த இடத்தின் சந்து பொந்து எல்லாம் அத்துப்படி. இங்கு இருக்கும் பெரிய கடை வீதி என்பது மலைகோட்டையில் இருந்து காந்தி மார்க்கெட் வரை இருக்கும், இங்கு பகல் நேரத்தில் எதிலும், யார் மீதும் இடித்து கொள்ளாமல் செல்வது என்பது மிகவும் கடினம் ! இங்கு இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பார்கள், இங்கு கடைகள் சுமார் பத்து மணிக்கு அடைக்கப்படும். வேலை முடிந்து பசியோடு இருப்பவர்களுக்கு அன்னலட்சுமிதான் இந்த கையேந்தி பவன்கள் !! இரவில் இந்த இடத்தை பார்ப்பவர்கள், பகலில் இங்கேயா நடந்தோம் என்று ஆச்சர்யபடுவது உறுதி, அத்தனை அமைதியாக இருக்கிறது !





 
நான் இந்த முறை சென்று இருந்தபோது, இந்த முறை இங்குதான் சாப்பிடவேண்டும் என்று சுமார் பத்து மணி வரை காத்திருந்தேன். மலைகோட்டை பக்கத்தில் இறக்கிவிட்டவுடன் கையில் பட்ட முதல் கையேந்தி பவனில் இருந்து சுட சுட வெண்ணிறத்தில் இட்லி ஆவி பறக்க எடுத்துக்கொண்டு இருந்தனர், அவர்க்கு ஒரு ஊத்தப்பம், இவருக்கு ஒரு பொடி தோசை என்று கத்தி கொண்டு இருக்க எனக்கு இருந்த பசியில் அந்த இட்லி அண்டானை தூக்கி கொண்டு ஓடி விடலாமா என்று தோன்றியது. சமஸ் அவர்கள் இந்த பெரிய கடை வீதியில் ஏகப்பட்ட விதமான உணவுகள் இருப்பதாக சொல்லி இருந்ததால், ஒரே கடையில் வயிற்றை ரொப்ப கூடாது என்று மனதில் முடிவு எடுத்து இருந்தேன்..... நாங்கெல்லாம் யாரு, திருப்பதி லட்டையே சிறிசா இருக்குதுன்னு சொல்றவைங்க இல்ல :-)


கொஞ்சம் காலாற நடப்போம் என்று அந்த கடையை தாண்டி நடக்க வலது புறம் கட்டு சாதம் இருந்தது, இன்னொரு இடத்தில் பானி பூரி கடை, அடுத்து வந்தது பல பல இட்லி கடைகளும் அங்கு சூடாக ஆவி பறக்க போடப்பட்ட தோசைகளும், சிறிது தூரத்தில் குஸ்கா போடு என்று குரல், அதையும் தாண்டி நடக்க நாட்டு கோழியும் பரோட்டாவும் இருக்கு வாங்க என்றனர், அதையும் தாண்டி இன்னும் வேற ஏதாவது இருக்கா என்று தேடி நடக்க என்னை தூரத்தில் இருந்தே கவனித்து வந்த வாழைபழ வண்டி வியாபாரி, சார் சாப்பிட்டு செரிக்காம நடக்கரீன்களா வாங்க நம்ம கடையில் ஒரு பழம் வாங்கி சாப்பிடுங்க எல்லாம் செரிச்சிடும் என்று கடுப்பேற்றினார், ஏற்க்கனவே இன்னும் தள்ளி போய் சாப்பிடலாம் என்று தள்ளி தள்ளி வந்து சிறு குடலை பெரும் குடல் மசாலா போட்டு தின்று கொண்டு இருந்தது, இதற்க்கு மேலும் பொறுத்தால் அவ்வளவுதான் என்று யோசிக்க ஒரு வண்டியில் இருந்து சார், வாங்க சூடா இட்லி இருக்கு என்று சொல்ல....... ரெண்டு இட்லி என்று சொல்ல, அவரோ ஒரு தட்டில் எடுத்து போட்டு என்னிடம் நீட்டி விட்டு, சட்னியை ஒரு கரண்டியில் எடுத்து திரும்பி பார்க்க, அங்கே வெறும் தட்டு மட்டுமே இருந்தது..... பின்னே, சட்னி வரும் வரைக்கும் யாரு வெயிட் பண்றது, வேலையை பாருங்க பாசு !!


அடுத்து ரெண்டு இட்லிக்கு சட்னியோடு சாப்பிட்டு விட்டு, அடுத்து என்ன சொல்வது என்று யோசிக்கும் கணத்தில், தோசை கல்லில் நெய் தோசை, ஆனியன் தோசை, தக்காளி தோசை, பொடி தோசை, அடை, ஊத்தப்பம் என்று ஓடி கொண்டு இருக்க ஒரு சாதா தோசை சொல்லிவிட்டு இந்த முறை சட்னியோடு தின்றேன் !! ஒரு சில பெரிய ஹோட்டல்களுக்கு சென்றால் தோசையை உஜாலா கொண்டு வெளுத்தது போன்று கொடுப்பார்கள், அவர்களுடன் அண்ணே மறந்து போய் வெள்ளை இட்லியை கொஞ்சம் பெரிசா நைசா போட்டு கொண்டு வந்துட்டீங்க, நான் தோசைதான் சொன்னேன் என்று சொல்லி தோசையை அந்த கலரில் வாங்க வேண்டி இருக்கும். இங்கு பெரிய கடை வீதிகளில் தோசையை போடும்போதே இங்கே வாசனை தூக்குகிறது, உதாரணமாக பக்கத்தில் ஒருவர் நெய் தோசை என்று சொல்லிவிட்டு அவருக்கு வந்தபோது நான் சாதா தோசை சாப்பிட்டாலும் மூக்கில் நெய் வாசனை சென்று நெய் தோசை சாப்பிட்ட எபக்ட்...... நாக்கில் ஒரு டேஸ்ட், மூக்கில் ஒரு டேஸ்ட் !!


அடுத்து இன்னொரு இடத்தில் பரோட்டா, கொஞ்சமே கொஞ்சம் குஸ்கா என்றெல்லாம் சாப்பிட்டு விட்டு நிமிர்த்து பார்த்தால், பசியோடு இருந்தபோது கவனிக்க மறந்தது இப்போது பளிச்சென்று தெரிந்தது...... எல்லா கடைகளும் மூடி இருக்க இந்த ஸ்வீட் கடைகள் மட்டுமே அந்த நேரத்தில் திறந்து இருந்தது, கவனித்து பார்த்தால் இந்த கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஸ்வீட் வாங்கி மென்று கொண்டு இருக்கிறார்கள்....... நீ ரசிகன்டா, நீ தமிழன்டா !! அதுக்கப்புறம் பால் சாப்பிடணுமே, எல்லோரது வீட்டிலும் வெறும் வயிற்றோடு (?!) படுக்க கூடாது என்று சிறு வயதில் இருந்து சொல்லி இருப்பதாலும், நைட் பால் சாப்பிட்டு படுத்தால்தான் வெள்ளையாவோம் என்று சொல்லி வைத்ததாலும் (என்ன, உங்க வீட்டில் அப்படி சொல்லலையா....... குழந்தை பாஸ் நீங்க !) அடுத்து செல்வது பால் சாப்பிட, அங்கு ஏற்கனவே சாப்பிட்டு மூளை உறங்கி கொண்டு இருக்கும்போது என்ன பால் வேணும்...... மிளகு பால், மஞ்சள் பால், கற்கண்டு பால், கருப்பட்டி பால், ஆடையோடு பால், ஆடை இல்லாமல் பால், பாதாம் பால், பிஸ்தா பால் என்று ஒரு வளர்ந்த குழந்தையை குழப்புகின்றனர். ஒரு பாதாம் பால் என்று நான் எதிரில் இருந்த ஒரு கடையில் சொன்னேன்....... ஒரு டம்பளரில் மஞ்சளான பாலை ஊற்றி, அதன் மேலே பாதாம் ஆடையை கொஞ்சம் போட்டு, மேலே முந்திரி, பாதாம் தூவி, அதன் மேலே கொஞ்சம் சக்கரை போட்டு சாப்பிட..... இப்போ புரியுது, எங்க அம்மா ஏன் எப்போதும் தூங்க போகும் முன் பால் சாப்பிட சொன்னாங்கன்னு !!




எல்லாம் முடிந்து இந்த முறை நடக்க முடியாமல் நடந்து செல்ல, அதே பழ வண்டிக்காரர் மீண்டும் கூப்பிட அவரது வியாபாரத்தை கெடுக்க மனம் இல்லாமல்..... அப்புறம், என்ன பழம் இருக்கு என்று கேட்க, அவரோ ரஸ்தாளி, பூவன், எலக்கி, பச்சை, மலை, நாட்டு பழம் என்று அடுக்க, இந்த திருச்சிகாரங்க எவ்வளவு ரசனையா சாப்பிடறாங்க பாரேன் என்று தோன்றுவதை தவிர்க்க முடியாமல், இருப்பதிலேயே சின்ன பழம் ஒன்றை வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்து உருண்டு போவதா, நடந்து போவதா என்று குழப்பத்துடன் யோசித்து கொண்டு இருக்கும்போது ஒரு குரல் கேட்க்கிறது....... சார், முந்திரி கேக், குல்பி ஐஸ் இருக்கு சாப்பிடறீங்களா.......... டேய், வேண்டாம்டா.... அழுதுடுவேன் !!
 

 
 
 Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, arusuvai samas, writer samas, trichy, tiruchirapalli, tricrapoly, periya kadai veethi, periya kadai street, kaiyenthi bhavan, amazing food, variety

Tuesday, November 18, 2014

அறுசுவை - அற்புதமான, அதிசுவையான பன் உணவகம் !!

"அறுசுவை"..... இந்த பகுதிக்கு நிறைய பேர் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எனது நண்பன் ஐசக் ஆனந்த் லண்டனில் இருந்து நீ திண்டுக்கல்லில் இருக்கிறாயா, அங்கு இருக்கும் சுவையான சாப்பாட்டை எழுது என்று கண்டிப்பான அன்புடன் சொல்ல, அதை மறுக்க முடியாமல் அவனுக்காக சென்றது இந்த உணவகம் !! பன்..... டீ கடைகளில் எப்போதாவது அதை எடுத்து டீயில் தொட்டு தின்பதோடு சரி, மிகவும் அரிதாக வீட்டில் ஜாம் தொட்டு சாப்பிட்டதுண்டு, அதை தவிர மிகவும் சுவையாக அதை விதம் விதமாக சாப்பிடலாம் என்று இன்றுதான் தெரிந்துக்கொண்டேன் !



திண்டுகல்லில், பஸ் ஸ்டான்ட் அருகில் ஹோட்டல் ஆனந்த் இன்டர்நேஷனல் என்று இருக்கிறது, அதன் எதிரில் தூரத்தில் இருந்து பார்க்கும்போது மிக சிறிய டீ கடை என்றே தோன்றும், சிறிது உற்று பார்த்தால் மட்டுமே அது சுவையான சிநாக்ஸ் செய்யும் இடம் என்று தெரியும். உள்ளே நுழையும்போதே மெனு வித்யாசமாக இருக்கிறதே என்று தோன்றும்..... எல்லாவற்றிலும் பன் என்று ஒரு சொல் இருக்கும். உங்களது புருவம் அப்போது மெலிதாக வியப்பில் வளையும்...... அடுத்து என்ன சொல்வது என்ற போராட்டம் ஆரம்பமாகும் !!

 

நாங்கள் கொஞ்சம் காரமாக சாப்பிடலாமே என்று ஒரு மசாலா பன், ஒரு பன் மஞ்சூரியன் என்று சொன்னோம். எங்களது முன்னே இருந்த கண்ணாடி கூண்டில் ஒரு பக்கம் நாம் டீ கடைகளில் பார்க்கும் வெறும் பன், கொஞ்சம் தள்ளி தட்டில் அரிசி, நூடில்ஸ், பாஸ்தா... அடுத்த பக்கம் பல வகை மசாலா என்று இருந்தது. ஆர்டர் எடுத்தவுடன் ஒரு பன் எப்படி சுவையாக மாறுகிறது என்று பார்க்க முடிந்தது. சட சடன்னு அவர் வெங்காயம், பட்டாணி என்று ஒரு தோசைகல்லில் போட்டு மசாலா போட்டு வதக்கும்போதே அவருக்கு இந்த விஷயத்தில் எவ்வளவு அனுபவம் என்று புரிகிறது, அந்த மசாலா வாசனை இங்கே நமக்கு எச்சிலை ஊற வைக்கிறது. அந்த வதக்கிய மசாலாவை பன்னை இரண்டாக பிளந்து அதன் நடுவே வைத்து தர........ வாய் ஆவென்று திறந்தது, ஆச்சர்யத்திலும் பசியிலும் !!




ஒரு வாய் எடுத்து வைக்கும்போதே அட இவ்வளவு நாள் இந்த விஷயம் தெரியாம போச்சே என்று தோன்றுகிறது. வெது வெதுப்பான பன் ஒரு வாய் கடிக்கும்போதே கொஞ்சம் மசாலா காரம் எல்லாம் சேர்ந்து இவ்வளவு சுவையாக செய்ய முடியுமா என்று தோன்றுவதை உங்களால் தவிர்க்க முடியாது. அடுத்து சொன்ன பன் மஞ்சுரியன் வந்தவுடன் இன்னும் இன்னும் ஆச்சர்யம் ஆரம்பம் ஆகிறது, பொதுவாக மஞ்சுரியன் என்றாலே சிக்கன், காளான் அல்லது கோபி என்று தோன்றும், ஆனால் ஒரு பன்னை சிறிது சிறிதாக பியித்து வெங்காயம், மசாலா, மஞ்சுரியன் மசாலா எல்லாம் சேர்த்து கொடுக்கும்போது அட என்று தோன்றுகிறது !! அடுத்து என்ன சொல்லலாம் என்று மெனுவை பார்க்க, வயிறு இங்க இடம் இல்லை பாஸ் என்று கெஞ்ச ஆரம்பிக்கிறது :-)

 
பஞ்ச் லைன் :

சுவை - பன் என்பதை இவ்வளவு சுவை வகைகளாக செய்ய முடியும் என்று இங்கே தெரிந்தும், சுவைத்தும் கொள்ளலாம்

அமைப்பு - சிறிய உணவகம்,  நிம்மதியாக நண்பர்களுடன் செல்ல ஒரு இடம் !
 
பணம் - கொஞ்சம் கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனாலும் சுவையும் அந்த உணவக அமைப்பும் ஓகே என்று என்ன வைக்கிறது ! (பன் விலையை வைத்து பார்த்தால் ஜாஸ்தி என்று தோன்றும் )
 
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் !
 
அட்ரஸ் : 
 
திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் அருகில், ஆனந்த் இன்டர்நேஷனல் ஹோட்டல் என்று யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள், அதன் எதிரிலேயே கடை.
 
 
மெனு கார்டு :
 
இது கொஞ்சம்தானாம், இன்னும் பன்னீர் வகைகள் என்று அதிகமாக சேர்க்க போகிறாராம் !
 

 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Bun, Bread, amazing food, creative food, bread omblette, tea, tasty, dindigul, opposite to Hotel Anand International, Bun boy foods 

Wednesday, November 12, 2014

ஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா !!

நாகூர்….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நாகூர் ஹனீபா !! இன்றும் குழந்தைக்கு ஏதேனும் ஒன்றென்றால் மந்திரித்து விடுங்கள் என்று சொல்வதும், நாம் தர்காவின் வாசலுக்கு செல்ல தொழுகை முடிந்து வரும் முஸ்லிம் பெருமக்கள்  நலம் பெற ப்ராதிப்பதும் என்று, எந்த  மதமாக இருந்தாலும் அன்புடன் செய்வதை பார்த்திருக்கிறேன். இதற்க்கு மீறி எனக்கு நாகூரை பற்றி எதுவும் தெரியாது, ஆனால் இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தின் போது இந்த ஊரின் சிறப்பையும், தர்காவின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் எந்த அளவுக்கு இந்த ஊர் சிறப்புடன் இருந்தது என்பது பற்றியும், நமது முஸ்லிம் அன்பர்களின் தொன்மை மற்றும் கலாசாரம் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள உதவியது. தர்கா சென்று வந்ததையும், நான் அங்கு பார்த்ததையும் எழுதலாம், ஆனால் இந்த பதிவின் மூலம் இஸ்லாம் மதம் பற்றியும், அதன் பிரிவுகள், தர்காவின் ஆரம்ப வரலாறு, தர்காவிற்க்கும் மசூதிக்கும் இருக்கும் வேறுபாடு, மினார்கள் என்று சற்று ஆழ்ந்து பயணிப்போமே…… இதன் மூலம் இன்னும் ஆழ்ந்து நாம் இந்த நாகூர் ஆண்டவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் !
(இந்த பதிவை பல தளத்தில் கிடைத்த தகவல்களை வைத்தும், நான் புரிந்து கொண்டதை வைத்தும் எழுதியுள்ளேன், இந்த பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் முஸ்லிம் நண்பர்கள் திருத்தலாமே, இது இஸ்லாத்தை பற்றியும், காலாசாரத்தை பற்றியும் மேலும் தெரிந்துக்கொள்ள உதவும் !!)

நாகூர் என்பது நாகபட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர், இது தஞ்சாவூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஒன்றரை மணி நேர பயணம் ! நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. நாகூர் ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன. 
தர்காவின் தெரு வழியே நடந்து செல்ல, பார்க்கும் அனைவரும் ஒரு புன்னகை புரிவது மனதை லேசாக்குகிறது. தர்காவை அதன் மினார்களை கொண்டே அடையாளம் கொண்டு சென்றோம். முதன் முதலாக தர்கா வந்து இருக்கிறோம், அதன் உள்ளே மாற்று மதத்தினர் நுழையலாமா என்று தயக்கம் இருக்க, அதை பார்த்த ஒருவர் எங்களிடம் வந்து தாராளமாக உள்ளே செல்லலாம் என்கின்றனர். வந்த நோக்கம் எது என்று கேட்டு அவர் எங்களை முன்னே வழி நடத்தி சென்றார். இடது புறம் தூரத்தில் கால், கைகளை கழுவும் இடம் இருந்தது சுத்தப்படுதிக்கொண்டு மீண்டும் வர அவர் தள வரலாறை சொல்லி நாகூர் ஆண்டவரின் இடத்திற்கு வழி சொல்லி அழைத்து சென்றார். உள்ளே நுழைய தயக்கம் இருந்ததை ஒரு புன்னகையுடன் பார்த்து, அனைவரும் இங்கே சமம் என்று அழைத்தார். அந்த இடத்தின் உள்ளே நுழையும் முன் ஒரு இடத்தில் மயிலிறகால் மந்தரித்து ஒரு ஒருவராய் உள்ளே அனுப்புகின்றனர். பின்னர் அங்கும் எங்களுக்கு திரு-குர்-ஆன் ஓதி மந்திரித்து அந்த தளத்திற்கு விருப்பமுடன் நன்கொடை எழுதியபின் சிறிது நேரம் அங்கே கண்களை மூடி உட்கார்ந்து இருக்க மனதில் ஒரு அமைதி பரவியது.
கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். 19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டு வந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.



இசுலாம் (இஸ்லாம் இந்த ஒலிக்கோப்பு பற்றி الإسلامஅரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும். இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்). முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.




இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன. சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும். 

தர்கா என்பது சூபி பெருமக்களின் சமாதி ஆகும், இங்கு மக்கள் வந்து அவர்களது சமாதிகளை வணங்கி / பார்த்து செல்கிறார்கள்.   பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப்  பெயரான  மஸ்ஜித்  என்பதையும் பயன்படுத்துகிறார்கள்.  முசுலிம் மக்கள்  தொழுகைக்காக  ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். 

 
மினார் என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான பள்ளிவாசல்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை.  மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் முஸ்லீம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும்  ஒலிபெருக்கிகள்  பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலி பெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன.

 குவிமாடம் (dome) என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. அது ஏன் குவி மாடம் அமைப்பு என்று கேட்பவர்களுக்கு அறிவியல் விளக்கம் வேண்டும்…… பொதுவாக வெப்பம் அல்லது குளிர் அதிகம் இருக்கும் நாட்டில், மக்கள் அதிகம் கூடும் கட்டிடங்களில் இந்த குவிமாட அமைப்பை நீங்கள் காணலாம் (அரண்மனை, மசூதி, கோர்ட், சர்ச், கோவில்கள்). வெப்பம் அதிகம் இருக்கும்போது அது மேலே ஆவியாகி செல்லும், அது எந்த அளவுக்கு மேலே செல்கிறதோ, அந்த அளவுக்கு அந்த அறை குளிர்ச்சியாக இருக்கும், இதனால் அறிஞர்கள் மசூதியில் மக்கள் தொழுகையை நன்கு செய்வதற்கு இந்த அமைப்பை தேர்வு செய்தனர் எனலாம்.


நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள். நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது. இந்த கப்பல் வணிகமும், முஸ்லிம் மக்களின் ஆளுமையும் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும்…. நாகூர் வணிகமும், மக்களும்.









நாகூரை பற்றியும், நாகூர் ஆண்டவரை பற்றியும், தர்காவினை பற்றியும் விரிவாக கண்டோம், இதில் நாகூருக்கு பெருமை சேர்த்த இன்னொருவர் திரு. நாகூர் ஹனீபா. சிறுவனாக இருந்தபோது இந்த கணீர் குரலில் இவர் பாடும்..... "என் மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா....." என்ற பாடல் மனதில் பதிந்த ஒன்று. பக்தியுடன் ஒரு பாடினால் அது எந்த அளவுக்கு ஒருவரின் மனதை கவரும் என்பதற்கு இவரது பாடல் ஒரு உதாரணம் எனலாம். நாகூர் ஆண்டவரை பற்றி இவர் பாடிய நிறைய பாடல்கள் இந்த ஊர் உள்ளவரையும் நம்மிடத்தில் நிலைத்து நிற்கும் எனலாம்.... கீழே அந்த பாடலின் யூ-டியூப் காணொளி உங்களுக்காக !

 

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District special, Nagore, Nagoor, Dharga, Nagore andavar, Islam, Haneefa, Pallivasal, Muslim famous prayer place

Monday, November 10, 2014

மறக்க முடியா பயணம் - மணிமுத்தாறு அருவி !!

அருவி..... இந்த பெயரை சொன்னவுடனே அந்த குளிர்ந்த தண்ணீரும், ஆர்ப்பரிக்கும் அந்த ஓசையும், திகட்ட திகட்ட குளித்த அனுபவமும் நமது கண் முன்னே தோன்றும்தானே ! தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவ்வளவு ஒண்ணும் பெரிசா இல்லை என்று தோன்றுவது, பக்கத்தில் சென்றவுடன் அதன் பிரம்மாண்டத்தை காண்பிக்கும். அருவியை நோக்கி செல்லும் பயணம் என்பது எங்குமே சற்று சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அங்கு சென்று வந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதிதான் ! இந்த முறை அருவியில் சென்று குளிக்க வேண்டும் என்று நினைத்தபோது மணிமுத்தாறு சென்றால் என்ன என்று தோன்றியது...... பயணம் தொடங்கியது !!




வீட்டில் குழாயை திருப்பி விட்டு ஒரு மக்கில் தண்ணி எடுத்து தலையில் விட்டு உடம்பு சிலிர்ப்பதுதான் இந்த காலம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால் ஷவரை திருப்பி விட்டு மெதுவாக நனைவோம், இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் பெய்யும் மழையில் நனைவோம்..... இதில் தண்ணீரில் உடம்பை நனைப்பது என்பது பரம சுகம் அல்லவா ! அருவி என்பது மலையில் இருந்து வரும் தண்ணீரில் இருக்கிறது, அதை தேடி செல்வது என்பதே ஒரு சாகசம். இந்த மணிமுத்தாறு அருவியை தேடி செல்வது என்பதில் ஒரு த்ரில் பயணமே இருக்கிறது ! திருநெல்வேலியில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அருவி, சுமார் ஒன்றரை மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.





கல்லிடைகுறிச்சியை நெருங்கும்போது இடது புறத்தில் மணிமுத்தாறு செல்லும் வழி என்று ஒன்று வருகிறது, அதில் திரும்பி செல்ல ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும் இந்த மேடு பள்ளமான சாலையில் வேகமாக செல்ல முடியாது என்று. மெது மெதுவாக நீங்கள் செல்லும்போது ஒரு இடத்தில் மணிமுத்தாறு உங்களை வரவேற்கிறது என்று போர்டு வரும்போது அருவி வந்துவிட்டது என்று நினைத்தால் அவ்வளவுதான்...... அதுதான் ஆரம்பமே, அதில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது அருவி !! முதலில் ஒரு செக்போஸ்ட் வருகிறது, வண்டி, ஆள், கேமரா என்று எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தவேண்டும்.... அதிகம் இல்லை வண்டிக்கு ஐம்பது ரூபாய், ஆளுக்கு 10 ரூபாய் என்று. அங்கு இருந்துதான் பயணமே தொடங்கும்......


வலது புறம் மணிமுத்தாறு அணை காய்ந்து கிடக்க, இடது புறம் முழுவதும் காட்டு செடிகளும் மரங்களும்..... ரோடு என்பது பெயரளவுக்குதான் ! குதித்து குதித்து அந்த ஒற்றை ரோட்டில் எதிர் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு செல்வது என்பதே ஒரு கலை, அதிலும் எதிரில் வரும் வாகனங்களில் குளித்து முடித்துவிட்டு தலையில் ஈரத்துடன் வரும் பெண்களும், ஆண்களும் பார்ப்பது ஒரு சந்தோசமே ! ஒரு இடத்தில் வரிசையாக கார், வேன் அணிவகுத்து நிற்க தூரத்தில் அருவி விழும் ஓசை கேட்க்கிறது.... மனம் நாம் இறங்குவதற்கு முன் சென்று அருவியில் குளிக்க ஆரம்பித்து விடுகிறது.





வண்டியை நிறுத்தி செருப்பை எல்லாம் வண்டியில் போட்டு விட்டு, துண்டு எடுத்துக்கொண்டு செல்வதற்குள் சுமார் பத்து குரங்காவது நம்மை சூழ்ந்துகொண்டு தின்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று அதிகாரமாக கண்களில் கேட்க்கிறது, அதை மீறி கொஞ்சம் நடக்க ஒரு இடத்தில் சிறிய பாலம் அங்கு இருந்து பார்த்தால் அருவி மிக சிறியதாக கண்களுக்கு தெரிகிறது ! அருவியில் இடது பக்கம் ஆண்களும், வலது பக்கம் பெண்களும் குளிக்க என்று ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். செல்லும் வழி அருமையாக இருக்கிறது, நெருங்கி சென்று அருவியில் சிறிது தண்ணீரை எடுத்து உடம்புக்கு ஊற்ற உதறல் எடுக்கிறது.... இந்த தண்ணியிலா குளிக்க வேண்டும், ரொம்பவே சில்லென்று இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே நமது கூட வரும் ஆட்கள் சட்டென்று அருவியின் உள்ளே செல்ல, அடுத்து நாமும் நமது வீரத்தை காட்டும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம்...... சில நொடிகள்தான், பின்னர் அருவியில் இருந்து வெளியே வர மனமே வருவதில்லை.








அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஒரு பாறையை தள்ளும் விசையுடன் வருகிறது. மெதுவாக உள்ளே தலையை நுழைக்க அந்த தண்ணீர் தலையில், தோளில் என்று தாளம் போட ஆரம்பிக்கிறது, ஜதியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு ஜுகல்பந்தி அங்கே அரங்கேறுகிறது. சிலர் அந்த அருவியின் முன்னே ஒரு சிலையாய் அந்த தண்ணீரை பல பல நிமிடங்கள் தாங்கி அப்படியே உட்கார்ந்து விடுகின்றனர். ஒரு அருவியில் குளிப்பது என்பது என்ன ஒரு ஆனந்தம் தெரியுமா, குழாயில் தண்ணியை திருப்பி விட்டு காக்காய் குளியல் போடும் நாம் இந்த அருவிக்கு வந்த பின்னர் சுமார் ஒரு மணி நேரமாவது இந்த உடம்பை ஊற வைக்கிறோம். ஒரு தருணத்தில் போதும் என்று வெளியே வந்து துவட்ட ஆரம்பித்த பின்னர், இன்னும் கொஞ்சம் நேரம் குளித்து விடுவோமே என்று நினைத்து மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறோம் !!



ஒரு வழியாக குளித்து விட்டு மேலே ஏறி வர, வயிற்றில் சிறிது பட்டாம் பூச்சி பறக்கிறது. பசி வயிற்றை கிள்ள அங்கே ஓரத்தில் ஒருவர் சூடான டீயும், சாப்பிட வெங்காய பஜ்ஜியும் சூடாக வைத்து இருக்கிறார். இங்கு அதிகபட்சமாக கிடைப்பதே இதுதான்.... பசியில் சிலர் மூணு டீ, அஞ்சு பஜ்ஜி என்று வெளுத்து வாங்குகின்றனர். மெதுவாக உடம்பில் வேர்வை அரும்ப ஆரம்பிக்க மீண்டும் அருவியை திரும்பி பார்க்கிறோம்....... ம்ம்ம்ம் ஆரம்பிக்கலாமா !!

Labels : Suresh Kumar, Kadalpayanangal, Marakka mudiya payanam, memorable journey, manimutharu dam, falls, manimuthaaru, amazing water falls, enjoy the falls