Monday, November 10, 2014

மறக்க முடியா பயணம் - மணிமுத்தாறு அருவி !!

அருவி..... இந்த பெயரை சொன்னவுடனே அந்த குளிர்ந்த தண்ணீரும், ஆர்ப்பரிக்கும் அந்த ஓசையும், திகட்ட திகட்ட குளித்த அனுபவமும் நமது கண் முன்னே தோன்றும்தானே ! தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவ்வளவு ஒண்ணும் பெரிசா இல்லை என்று தோன்றுவது, பக்கத்தில் சென்றவுடன் அதன் பிரம்மாண்டத்தை காண்பிக்கும். அருவியை நோக்கி செல்லும் பயணம் என்பது எங்குமே சற்று சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அங்கு சென்று வந்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதிதான் ! இந்த முறை அருவியில் சென்று குளிக்க வேண்டும் என்று நினைத்தபோது மணிமுத்தாறு சென்றால் என்ன என்று தோன்றியது...... பயணம் தொடங்கியது !!




வீட்டில் குழாயை திருப்பி விட்டு ஒரு மக்கில் தண்ணி எடுத்து தலையில் விட்டு உடம்பு சிலிர்ப்பதுதான் இந்த காலம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால் ஷவரை திருப்பி விட்டு மெதுவாக நனைவோம், இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் பெய்யும் மழையில் நனைவோம்..... இதில் தண்ணீரில் உடம்பை நனைப்பது என்பது பரம சுகம் அல்லவா ! அருவி என்பது மலையில் இருந்து வரும் தண்ணீரில் இருக்கிறது, அதை தேடி செல்வது என்பதே ஒரு சாகசம். இந்த மணிமுத்தாறு அருவியை தேடி செல்வது என்பதில் ஒரு த்ரில் பயணமே இருக்கிறது ! திருநெல்வேலியில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அருவி, சுமார் ஒன்றரை மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.





கல்லிடைகுறிச்சியை நெருங்கும்போது இடது புறத்தில் மணிமுத்தாறு செல்லும் வழி என்று ஒன்று வருகிறது, அதில் திரும்பி செல்ல ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும் இந்த மேடு பள்ளமான சாலையில் வேகமாக செல்ல முடியாது என்று. மெது மெதுவாக நீங்கள் செல்லும்போது ஒரு இடத்தில் மணிமுத்தாறு உங்களை வரவேற்கிறது என்று போர்டு வரும்போது அருவி வந்துவிட்டது என்று நினைத்தால் அவ்வளவுதான்...... அதுதான் ஆரம்பமே, அதில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது அருவி !! முதலில் ஒரு செக்போஸ்ட் வருகிறது, வண்டி, ஆள், கேமரா என்று எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தவேண்டும்.... அதிகம் இல்லை வண்டிக்கு ஐம்பது ரூபாய், ஆளுக்கு 10 ரூபாய் என்று. அங்கு இருந்துதான் பயணமே தொடங்கும்......


வலது புறம் மணிமுத்தாறு அணை காய்ந்து கிடக்க, இடது புறம் முழுவதும் காட்டு செடிகளும் மரங்களும்..... ரோடு என்பது பெயரளவுக்குதான் ! குதித்து குதித்து அந்த ஒற்றை ரோட்டில் எதிர் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு செல்வது என்பதே ஒரு கலை, அதிலும் எதிரில் வரும் வாகனங்களில் குளித்து முடித்துவிட்டு தலையில் ஈரத்துடன் வரும் பெண்களும், ஆண்களும் பார்ப்பது ஒரு சந்தோசமே ! ஒரு இடத்தில் வரிசையாக கார், வேன் அணிவகுத்து நிற்க தூரத்தில் அருவி விழும் ஓசை கேட்க்கிறது.... மனம் நாம் இறங்குவதற்கு முன் சென்று அருவியில் குளிக்க ஆரம்பித்து விடுகிறது.





வண்டியை நிறுத்தி செருப்பை எல்லாம் வண்டியில் போட்டு விட்டு, துண்டு எடுத்துக்கொண்டு செல்வதற்குள் சுமார் பத்து குரங்காவது நம்மை சூழ்ந்துகொண்டு தின்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று அதிகாரமாக கண்களில் கேட்க்கிறது, அதை மீறி கொஞ்சம் நடக்க ஒரு இடத்தில் சிறிய பாலம் அங்கு இருந்து பார்த்தால் அருவி மிக சிறியதாக கண்களுக்கு தெரிகிறது ! அருவியில் இடது பக்கம் ஆண்களும், வலது பக்கம் பெண்களும் குளிக்க என்று ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். செல்லும் வழி அருமையாக இருக்கிறது, நெருங்கி சென்று அருவியில் சிறிது தண்ணீரை எடுத்து உடம்புக்கு ஊற்ற உதறல் எடுக்கிறது.... இந்த தண்ணியிலா குளிக்க வேண்டும், ரொம்பவே சில்லென்று இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே நமது கூட வரும் ஆட்கள் சட்டென்று அருவியின் உள்ளே செல்ல, அடுத்து நாமும் நமது வீரத்தை காட்டும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம்...... சில நொடிகள்தான், பின்னர் அருவியில் இருந்து வெளியே வர மனமே வருவதில்லை.








அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஒரு பாறையை தள்ளும் விசையுடன் வருகிறது. மெதுவாக உள்ளே தலையை நுழைக்க அந்த தண்ணீர் தலையில், தோளில் என்று தாளம் போட ஆரம்பிக்கிறது, ஜதியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு ஜுகல்பந்தி அங்கே அரங்கேறுகிறது. சிலர் அந்த அருவியின் முன்னே ஒரு சிலையாய் அந்த தண்ணீரை பல பல நிமிடங்கள் தாங்கி அப்படியே உட்கார்ந்து விடுகின்றனர். ஒரு அருவியில் குளிப்பது என்பது என்ன ஒரு ஆனந்தம் தெரியுமா, குழாயில் தண்ணியை திருப்பி விட்டு காக்காய் குளியல் போடும் நாம் இந்த அருவிக்கு வந்த பின்னர் சுமார் ஒரு மணி நேரமாவது இந்த உடம்பை ஊற வைக்கிறோம். ஒரு தருணத்தில் போதும் என்று வெளியே வந்து துவட்ட ஆரம்பித்த பின்னர், இன்னும் கொஞ்சம் நேரம் குளித்து விடுவோமே என்று நினைத்து மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறோம் !!



ஒரு வழியாக குளித்து விட்டு மேலே ஏறி வர, வயிற்றில் சிறிது பட்டாம் பூச்சி பறக்கிறது. பசி வயிற்றை கிள்ள அங்கே ஓரத்தில் ஒருவர் சூடான டீயும், சாப்பிட வெங்காய பஜ்ஜியும் சூடாக வைத்து இருக்கிறார். இங்கு அதிகபட்சமாக கிடைப்பதே இதுதான்.... பசியில் சிலர் மூணு டீ, அஞ்சு பஜ்ஜி என்று வெளுத்து வாங்குகின்றனர். மெதுவாக உடம்பில் வேர்வை அரும்ப ஆரம்பிக்க மீண்டும் அருவியை திரும்பி பார்க்கிறோம்....... ம்ம்ம்ம் ஆரம்பிக்கலாமா !!

Labels : Suresh Kumar, Kadalpayanangal, Marakka mudiya payanam, memorable journey, manimutharu dam, falls, manimuthaaru, amazing water falls, enjoy the falls

21 comments:

  1. குளித்துக் கொண்டே இருக்கலாம்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்... உண்மைதான் அருவியில் குளியல் என்பதே சுகம்தானே !









      நன்றி தனபாலன் சார்... உண்மைதான் அருவியில் குளியல் என்பதே சுகம்தானே !







      நன்றி தனபாலன் சார்... உண்மைதான் அருவியில் குளியல் என்பதே சுகம்தானே !


      Delete
  2. நண்பா....அடுத்த முறை குற்றாலம் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவி (கேரளா) சென்று வரவும்.........அதுவும் மறக்க முடியாத இனிமையான அனுபவம் தரும்....

    மேலதிக தகவல்களுக்கு http://www.kutralamlive.com/index.php/info/falls/kumbavurutti-falls

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவக்குமார்..... நல்ல தகவல், குறித்துக்கொண்டே, விரைவில் பயணிப்போம் !

      Delete
  3. கேமிராவுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று சொல்லவில்லையே...

    குளியல் அனுபவ வர்ணனை ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. கமெராவிற்கு இருபது ரூபாய் வாங்கியதாக நியாபகம்...... கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் இது ஸ்ரீராம் ! நன்றி, வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  4. அண்ணாச்சி! நம்ப ஊர் பக்கம் வந்துட்டு போயிருக்கீங்க போலருக்கே! கல்லிடைகுறிச்சிதான் நம்ப ஊர்! :)

    ReplyDelete
    Replies
    1. தக்குடு சார்.... இது எனக்கு தெரியாமல் போச்சே, கல்லிடைகுறிச்சி அப்பளம் செய்முறையை பார்த்தேன், விரைவில் எழுதுகிறேன். நன்றி, வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  5. Yeterday Dinamalar Publish an article about you, very Interesting.,

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தினமலர் மூலம் உங்களையும் நண்பராய் அடைந்தேன் !

      Delete
  6. வணக்கம்
    அண்ணா

    பதிவை படித்தவுடன் நானும் அதில் குளித்தது போல ஒரு உணர்வுதான் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்....... அருவியில் குளியல் என்பது அனுபவிக்க வேண்டிய ஒன்று ! விரைவில் வாருங்களேன்.....

      Delete
  7. அருவிக் குளியல் எப்போதும் சுகம்தான்! ரசனையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் !! ஒவ்வொரு துளியும் நம்மை சொர்கத்திற்கு கொண்டு செல்கிறது என்று சொல்லலாம் !

      Delete
  8. மணி முத்தாறு அருகிவில் நானும் குளித்து மகிழ்ந்திருக்கிறேன் நண்பரே
    பழைய நினைவுகள் இனிமையாய் வலம் வருகின்றன
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார் ! உங்களை பதிவர் திருவிழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி !! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !

      Delete
  9. Replies
    1. தமிழ் மணத்தில் வாக்கு அளித்தமைக்கு நன்றி ஜெயக்குமார் சார் !

      Delete
  10. நன்றி ஜெகதீஷ்.... அருவி அறிமுகம் செய்துவிட்டேன், எப்போது பயணம் !

    ReplyDelete
  11. படங்கள் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கின்றன.... கவனிக்கவும்...

    அருமையான ஆனந்தக் குளியல்.. அடிக்கடி திரைப்படங்களில் பார்க்கும் இடம் போலத் தெரிகிறது....

    ReplyDelete
  12. நெல்லை மாவடத்தைச் சேர்ந்த எனக்கே அங்கு போக சநசந்தர்ப்பம் கிடைக்கவில்லை . நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது . நன்றி .

    ReplyDelete