Friday, November 28, 2014

அறுசுவை(சமஸ்) - திருச்சி பெரிய கடைவீதி கையேந்தி பவன் !!

திருச்சி.... நான் பிறந்து வளர்ந்த ஊர், அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு இடமும் எனக்கு அத்துப்படி என்று செருக்கோடு அலைந்த என்னை, திரு.சமஸ் அவர்கள் இந்த பெரிய கடைவீதி கையேந்தி பவன் மூலம் இந்த ஊர் நிறைய அதிசயங்களையும், ஆச்சர்யத்தையும் கொண்டு உள்ளது என்று தலையை தட்டி சொல்லி இருக்கிறது எனலாம் !! கையேந்தி பவன், திருச்சியில் மாணவனாக திரிந்தபோது கைக்கு கிடைக்கும் காசில் இங்குதான் சாப்பிட முடியும், இதனால் இந்த கடைகள் மீது பெரும் காதலே உண்டு. காலேஜ் படிக்கும்போது கும்பலாய் போய் காலியாக இருக்கும் கையேந்தி பவனில் உட்கார்ந்துக்கொண்டு மாஸ்டரை ஆள் ஆளுக்கு ஒரு அயிட்டம் சொல்லி தலையை கிறுகிறுக்க வைப்போம் !
 

மெயின்கார்ட்கேட்........ இந்த இடம்தான் திருச்சியின் மிக பெரிய ஷாப்பிங் தெரு, ஒரு குட்டி சென்னை ரெங்கநாதன் தெரு எனலாம், இதன் பக்கத்தில் இருக்கும் ஸ்கூல் ஒன்றில்தான் நான் ஆறாம் வகுப்பில் இருந்து படித்து வந்தேன் என்பதால் இந்த இடத்தின் சந்து பொந்து எல்லாம் அத்துப்படி. இங்கு இருக்கும் பெரிய கடை வீதி என்பது மலைகோட்டையில் இருந்து காந்தி மார்க்கெட் வரை இருக்கும், இங்கு பகல் நேரத்தில் எதிலும், யார் மீதும் இடித்து கொள்ளாமல் செல்வது என்பது மிகவும் கடினம் ! இங்கு இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பார்கள், இங்கு கடைகள் சுமார் பத்து மணிக்கு அடைக்கப்படும். வேலை முடிந்து பசியோடு இருப்பவர்களுக்கு அன்னலட்சுமிதான் இந்த கையேந்தி பவன்கள் !! இரவில் இந்த இடத்தை பார்ப்பவர்கள், பகலில் இங்கேயா நடந்தோம் என்று ஆச்சர்யபடுவது உறுதி, அத்தனை அமைதியாக இருக்கிறது !

 
நான் இந்த முறை சென்று இருந்தபோது, இந்த முறை இங்குதான் சாப்பிடவேண்டும் என்று சுமார் பத்து மணி வரை காத்திருந்தேன். மலைகோட்டை பக்கத்தில் இறக்கிவிட்டவுடன் கையில் பட்ட முதல் கையேந்தி பவனில் இருந்து சுட சுட வெண்ணிறத்தில் இட்லி ஆவி பறக்க எடுத்துக்கொண்டு இருந்தனர், அவர்க்கு ஒரு ஊத்தப்பம், இவருக்கு ஒரு பொடி தோசை என்று கத்தி கொண்டு இருக்க எனக்கு இருந்த பசியில் அந்த இட்லி அண்டானை தூக்கி கொண்டு ஓடி விடலாமா என்று தோன்றியது. சமஸ் அவர்கள் இந்த பெரிய கடை வீதியில் ஏகப்பட்ட விதமான உணவுகள் இருப்பதாக சொல்லி இருந்ததால், ஒரே கடையில் வயிற்றை ரொப்ப கூடாது என்று மனதில் முடிவு எடுத்து இருந்தேன்..... நாங்கெல்லாம் யாரு, திருப்பதி லட்டையே சிறிசா இருக்குதுன்னு சொல்றவைங்க இல்ல :-)


கொஞ்சம் காலாற நடப்போம் என்று அந்த கடையை தாண்டி நடக்க வலது புறம் கட்டு சாதம் இருந்தது, இன்னொரு இடத்தில் பானி பூரி கடை, அடுத்து வந்தது பல பல இட்லி கடைகளும் அங்கு சூடாக ஆவி பறக்க போடப்பட்ட தோசைகளும், சிறிது தூரத்தில் குஸ்கா போடு என்று குரல், அதையும் தாண்டி நடக்க நாட்டு கோழியும் பரோட்டாவும் இருக்கு வாங்க என்றனர், அதையும் தாண்டி இன்னும் வேற ஏதாவது இருக்கா என்று தேடி நடக்க என்னை தூரத்தில் இருந்தே கவனித்து வந்த வாழைபழ வண்டி வியாபாரி, சார் சாப்பிட்டு செரிக்காம நடக்கரீன்களா வாங்க நம்ம கடையில் ஒரு பழம் வாங்கி சாப்பிடுங்க எல்லாம் செரிச்சிடும் என்று கடுப்பேற்றினார், ஏற்க்கனவே இன்னும் தள்ளி போய் சாப்பிடலாம் என்று தள்ளி தள்ளி வந்து சிறு குடலை பெரும் குடல் மசாலா போட்டு தின்று கொண்டு இருந்தது, இதற்க்கு மேலும் பொறுத்தால் அவ்வளவுதான் என்று யோசிக்க ஒரு வண்டியில் இருந்து சார், வாங்க சூடா இட்லி இருக்கு என்று சொல்ல....... ரெண்டு இட்லி என்று சொல்ல, அவரோ ஒரு தட்டில் எடுத்து போட்டு என்னிடம் நீட்டி விட்டு, சட்னியை ஒரு கரண்டியில் எடுத்து திரும்பி பார்க்க, அங்கே வெறும் தட்டு மட்டுமே இருந்தது..... பின்னே, சட்னி வரும் வரைக்கும் யாரு வெயிட் பண்றது, வேலையை பாருங்க பாசு !!


அடுத்து ரெண்டு இட்லிக்கு சட்னியோடு சாப்பிட்டு விட்டு, அடுத்து என்ன சொல்வது என்று யோசிக்கும் கணத்தில், தோசை கல்லில் நெய் தோசை, ஆனியன் தோசை, தக்காளி தோசை, பொடி தோசை, அடை, ஊத்தப்பம் என்று ஓடி கொண்டு இருக்க ஒரு சாதா தோசை சொல்லிவிட்டு இந்த முறை சட்னியோடு தின்றேன் !! ஒரு சில பெரிய ஹோட்டல்களுக்கு சென்றால் தோசையை உஜாலா கொண்டு வெளுத்தது போன்று கொடுப்பார்கள், அவர்களுடன் அண்ணே மறந்து போய் வெள்ளை இட்லியை கொஞ்சம் பெரிசா நைசா போட்டு கொண்டு வந்துட்டீங்க, நான் தோசைதான் சொன்னேன் என்று சொல்லி தோசையை அந்த கலரில் வாங்க வேண்டி இருக்கும். இங்கு பெரிய கடை வீதிகளில் தோசையை போடும்போதே இங்கே வாசனை தூக்குகிறது, உதாரணமாக பக்கத்தில் ஒருவர் நெய் தோசை என்று சொல்லிவிட்டு அவருக்கு வந்தபோது நான் சாதா தோசை சாப்பிட்டாலும் மூக்கில் நெய் வாசனை சென்று நெய் தோசை சாப்பிட்ட எபக்ட்...... நாக்கில் ஒரு டேஸ்ட், மூக்கில் ஒரு டேஸ்ட் !!


அடுத்து இன்னொரு இடத்தில் பரோட்டா, கொஞ்சமே கொஞ்சம் குஸ்கா என்றெல்லாம் சாப்பிட்டு விட்டு நிமிர்த்து பார்த்தால், பசியோடு இருந்தபோது கவனிக்க மறந்தது இப்போது பளிச்சென்று தெரிந்தது...... எல்லா கடைகளும் மூடி இருக்க இந்த ஸ்வீட் கடைகள் மட்டுமே அந்த நேரத்தில் திறந்து இருந்தது, கவனித்து பார்த்தால் இந்த கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஸ்வீட் வாங்கி மென்று கொண்டு இருக்கிறார்கள்....... நீ ரசிகன்டா, நீ தமிழன்டா !! அதுக்கப்புறம் பால் சாப்பிடணுமே, எல்லோரது வீட்டிலும் வெறும் வயிற்றோடு (?!) படுக்க கூடாது என்று சிறு வயதில் இருந்து சொல்லி இருப்பதாலும், நைட் பால் சாப்பிட்டு படுத்தால்தான் வெள்ளையாவோம் என்று சொல்லி வைத்ததாலும் (என்ன, உங்க வீட்டில் அப்படி சொல்லலையா....... குழந்தை பாஸ் நீங்க !) அடுத்து செல்வது பால் சாப்பிட, அங்கு ஏற்கனவே சாப்பிட்டு மூளை உறங்கி கொண்டு இருக்கும்போது என்ன பால் வேணும்...... மிளகு பால், மஞ்சள் பால், கற்கண்டு பால், கருப்பட்டி பால், ஆடையோடு பால், ஆடை இல்லாமல் பால், பாதாம் பால், பிஸ்தா பால் என்று ஒரு வளர்ந்த குழந்தையை குழப்புகின்றனர். ஒரு பாதாம் பால் என்று நான் எதிரில் இருந்த ஒரு கடையில் சொன்னேன்....... ஒரு டம்பளரில் மஞ்சளான பாலை ஊற்றி, அதன் மேலே பாதாம் ஆடையை கொஞ்சம் போட்டு, மேலே முந்திரி, பாதாம் தூவி, அதன் மேலே கொஞ்சம் சக்கரை போட்டு சாப்பிட..... இப்போ புரியுது, எங்க அம்மா ஏன் எப்போதும் தூங்க போகும் முன் பால் சாப்பிட சொன்னாங்கன்னு !!
எல்லாம் முடிந்து இந்த முறை நடக்க முடியாமல் நடந்து செல்ல, அதே பழ வண்டிக்காரர் மீண்டும் கூப்பிட அவரது வியாபாரத்தை கெடுக்க மனம் இல்லாமல்..... அப்புறம், என்ன பழம் இருக்கு என்று கேட்க, அவரோ ரஸ்தாளி, பூவன், எலக்கி, பச்சை, மலை, நாட்டு பழம் என்று அடுக்க, இந்த திருச்சிகாரங்க எவ்வளவு ரசனையா சாப்பிடறாங்க பாரேன் என்று தோன்றுவதை தவிர்க்க முடியாமல், இருப்பதிலேயே சின்ன பழம் ஒன்றை வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்து உருண்டு போவதா, நடந்து போவதா என்று குழப்பத்துடன் யோசித்து கொண்டு இருக்கும்போது ஒரு குரல் கேட்க்கிறது....... சார், முந்திரி கேக், குல்பி ஐஸ் இருக்கு சாப்பிடறீங்களா.......... டேய், வேண்டாம்டா.... அழுதுடுவேன் !!
 

 
 
 Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, arusuvai samas, writer samas, trichy, tiruchirapalli, tricrapoly, periya kadai veethi, periya kadai street, kaiyenthi bhavan, amazing food, variety

17 comments:

 1. ம்ம்ம்ம்... சுவையோ சுவைதான்!

  நான் திருச்சியில் இது வரை சாப்பிட்டதே இல்லை. இரண்டு முறை வந்து இரண்டு முறையும் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததால் இந்த வாய்ப்பே ஏற்படவில்லை!

  ReplyDelete
 2. ந்தத் தடவை ஸ்ரீரங்கம் சென்ற போது மெயின் கார்ட் கேட்டைக் கண்டுக்காம வந்ததுக்குப் பெரிய தண்டனையாக இந்தப் பதிவைப் படிதேன். இந்த வயதில் ஒத்துக்குமா தெரியாது .நீங்க சாப்பிட்டது எனக்குத் திருப்தி.அசத்தலான பதிவு.

  ReplyDelete
 3. அருமை சுரேஷ் , திருச்சி போகும்போது ஒரு புடி புடிச்சுர வேண்டியது தான் ....

  ReplyDelete
 4. அருமையான மற்றும் கோர்வையான பதிவு. அந்த பாதம் பால்காரர் வண்டியில் Half Milk என்பதற்கு பதில் Off Milk என்று எழுதி இருப்பார், நாங்களும் சுத்துவோம்ல திருச்சியை !!!! ஒரு தினசரி வாழ்க்கை நடைமுறையை இவ்வளவு அழகாக எழுதுவதற்கு உங்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்

  ReplyDelete
 5. அடுத்த முறை திருச்சி செல்லும்பொழுது
  இந்த கடைகளுக்கும் சென்றுவிடவேண்டியதுதான்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 6. திருச்சியிலே நிறைய விஷயம் இருக்கு போலிருக்கே! ஒரு வாரம் டூர் போட்டுட வேண்டியதுதான்! மலைக்கோட்டை பக்கம் வந்தாலும் இந்த கடைவீதிக்கு சென்றேனா என்ற நினைவில்லை!

  ReplyDelete
 7. அருமையான பதிவு. பலமுறை இந்த பெரியகடை வீதியில் சுற்றியிருந்தாலும், ஏனோ இரவு நேரங்களில் இங்கே போனதில்லை. அடுத்த திருச்சி பயணத்தின் போது சென்றுவிட வேண்டியது தான்.....

  ReplyDelete
 8. "நீ ரசிகன்டா!"
  :.))))- I agree!

  ReplyDelete
 9. சுவையான முறுகலான மினி அடையை மறந்திட்டிங்களே அண்ணாத்தே......................

  ReplyDelete
 10. மாதத்தில் இரண்டு முறை திருச்சி பயணம் கண்டிப்பாக இருக்கும்.இந்த முறை கண்டிப்பாக ஒருநாளாவது இரவு தங்கி பெரியகடைவீதி கையேந்திபவன்களை ஒரு கை பார்த்துவிடவேண்டியதுதான்.

  ReplyDelete
 11. வணக்கம்,

  தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை. இன்னும் திருச்சியில் பல உணவுகள் இருக்குது. திருச்சி ஜங்சன் அருகில் ராஜா அசைவ உணவகம் இருக்குது. அதில் பிரியாணி நல்ல சுவையாக இருக்கும். மேலும் உறையூரில் உளுத்தங்கஞ்சி மிக மிக சுவையாக இருக்கும். இப்போது கிடைக்கிறதா என தெரியவில்லை. தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 12. நன்றாகவே ருசித்து சொன்னீர்கள். நானும் ரசித்து படித்தேன். நான் மாணவனாக இருந்த காலத்தில் சினிமா தியேட்டர்களில் இரவுக் காட்சி முடிய ஒருமணி ஆகிவிடும். படம் பார்த்துவிட்டு திரும்பும்போது பெரியகடைவீதி வழியாகத்தான் திரும்புவோம். வழியெல்லாம் டிபன் கடைகள். அப்போது மூங்கில் குழாயில் செய்யப்பட்ட அரிசி புட்டு வியாபாரம் சுடச்சுட நெய்யுடன் நடக்கும்.
  த.ம..4

  ReplyDelete
 13. ஸ்ரீகாந்த்November 29, 2014 at 10:45 AM

  வணக்கம். சாரதாஸ் பக்கத்தில ஒரு கையேந்தி பவன் ( ஸ்ரீ ரங்கம் மாமாஸ் குரூப்) உண்டு. இப்ப இருக்கானு தெரியல. நீங்க அதை பத்தி ஒன்னும் எழுதலையே.


  Make Money at : http://bit.ly/copy_win

  ReplyDelete
 14. திருச்சி பெரியகடை வீதில ஸ்ரீரங்கத்துகாரர் ஒருத்தர் விதவிதமா சாதம் செய்து கொண்டு வருவார். மாங்கா சாதம், கல்கண்டு சாதம், கருவேப்பிலை சாதம், சாம்பார் சாதம் தேங்கா சாதம், தக்காளி சாதம் அப்படின்னு தள்ளுவண்டில கொண்டுவருவார். நான் திருச்சி ல காமாட்சி பிரிண்டர்ஸ் ல வேலை பாக்கும் போது நானும் ஓனரும் பெரிய கடை வீதி வந்து சாப்பிடுவோம். நன்றி பழைய ஞாபகங்களை நினைவூட்டியதற்கு

  ReplyDelete
 15. கஷ்டப்பட்டு உடல் எடையை குறைக்க படாத பாடுப்பட்டு சாப்பாட்டை குறைத்து ஒருவழியா ஒல்லியா இந்தியா வந்தால்... இப்படி நாக்கு எச்சிலூறும்படி பதிவும் போட்டோவும் போட்டு கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இந்த ரீதியில் சாப்பிட்டு மீண்டும் 8 கிலோ வெயிட் கூடி தான் ஊருக்கு திரும்ப வேண்டி இருக்கு. அந்த அளவுக்கு ரசனையா எழுதி இருக்கீங்கப்பா... இட்லிக்கு சட்னி வரும் வரை வெயிட் பண்ணாம கபளீகரம் பண்ணிட்டு வாழைப்பழக்காரரை சங்கடப்படுத்தாம இருப்பதிலேயே சின்ன வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு, நிஜமா சொல்லுங்க சாப்பிட வயிற்றில் இடம் இருந்ததா என்ன? :) அதுக்கப்புறம் முந்திரி கேக், குல்ஃபி ஐஸ்... நல்லவேளை அதையும் சாப்பிட்டிருந்தா கண்டிப்பா நடந்து இல்ல உருண்டு தான் வீட்டுக்கு போய் சேர்ந்திருக்கவேண்டும் :) அருமையான பகிர்வு சார்.. நானும் கொஞ்ச நாளா உங்க பதிவுகளை வாசித்துக்கொண்டு இருக்கிறேன். பிரமாதமா எழுதறீங்க... தொடருங்க. அன்பு வாழ்த்துகள் !

  ReplyDelete