Tuesday, December 9, 2014

ஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் ! (பகுதி - 1)

வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூரோ சென்று வந்தால், வீட்டிற்க்கு வந்தவுடன் இரவு பாயை போட்டு கைலி கட்டிக்கொண்டு தூங்கினால்தான் ஒரு சந்தோசமே...... என்னதான் மெத்தைகள் விதம் விதமாக வந்தாலும், பஞ்சு தலையணை வந்தாலும், ஜமுக்காளம் என்று இருந்தாலும் இன்றும் அந்த பாயை விரித்து கைகளை தலையின் பின்னே கட்டிக்கொண்டு படுத்தால் இருக்கும் சுகமே தனிதானே ! பாய் என்றால் நமது நினைவுக்கு வருவது பத்தமடை, எல்லோரையும் போன்று நானும்..... பத்தமடை பாய் தெரியுமா, அதுல படுத்தா என்ன சுகமா இருக்கும் தெரியுமா, அதுல படுத்தா உடம்பு சூடேறாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன், எங்களது வீட்டில் இருக்கும் பாய் போலதான் பத்தமடை பாய் இருக்கும் என்றும் இதுவரை எண்ணிக்கொண்டு இருந்தேன், ஆனால் இந்த பயணத்தில்தான் பத்தமடை ஏன் பாயிர்க்கு பிரபலம், அதன் சிறப்பம்சம் என்ன, அது மற்ற இடத்தில் கிடைக்கும் பாயை விட ஏன் சிறப்பு, அதற்க்கு கிடைத்த விருதுகள், அதை ஏன் மக்கள் விரும்புகின்றனர், பாய் எத்தனை வகை இருக்கிறது, அதன் பயன் என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது. வாருங்களேன், அந்த பாயில் கொஞ்சம் காலாட்டிக்கொண்டே பேசலாம் !!


பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் இந்த பத்தமடை. இன்றைய ஹை வே வந்த பிறகு பறக்கும் வண்டிகளுக்கு இந்த சிறிய ஊரையும், அதன் சிறப்பையும் சொல்லும் எந்த ஒரு அமைப்பும் இல்லாததால் இந்த ஊரை கடக்கும் ஏராளமான வாகனங்களுக்கு தெரியாது இங்குதான் உலக புகழ் பெற்ற பாய் உற்பத்தி செய்யப்படுகிறது என்று. இங்கு செய்யப்பட்ட பாயை ரஷ்ய ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும், விக்டோரியா மகாராணியும் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்..... ஒரு சிறிய ஊர், பெரிய பெருமைகளுக்கு சொந்தம் !

 
 
 
பாய் என்பதை நாம் எல்லோரும் இதுவரை படுப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் என்று மட்டுமே நினைத்து வருகிறோம், ஆனால் அது நமது உடம்பை பாதுகாக்கும் ஒரு வழி என்பது உங்களுக்கு தெரியுமா ? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான உடம்பு உபாதைகள் கொண்டு இருக்கின்றார், அதை நீக்குவதற்கு நாம் தூங்கும் படுக்கை கூட உதவி செய்யும் தெரியுமா ? படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
 •  கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
 •  கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
 •  பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
 •  ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
 •  மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
 •  தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
 •  பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
 •  இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
 •  மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
 •  இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்
இன்று நாம் பாய் என்பதை நமது உடல் நலம் பார்த்து வாங்குகிறோமா என்ன ?

 

வெறும் புல்லுதானே என்று ஒதுக்கும் அல்லது மிதிக்கும் உங்களுக்கு தெரியுமா இந்த உலகில் சுமார் 10,000 புல் வகைகள் இருக்கின்றன என்று, அது மட்டும் இல்லை இதுதான் உலகின் ஐந்தாவது இடத்தில்  இருக்கும் அதிகமான தாவர இனம் ! இந்த தாவர இனத்தில் இருப்பதுதான் நாணல் (Reed) எனப்படுவது. நாணல் என்பது தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில்தான் வளரும், இதனால் இயற்கையிலேயே நாணலில் குளிர்ச்சி அதிகம். இந்த நாணலில் ஒரு வகைதான் கோரை என்பது (இப்போது தெரிகிறதா, நாம் ஏன் இதை நாணல் பாய் என்று சொல்லாமல், கோரை பாய் என்கிறோம் என்று !!). அதனை பற்றி இன்னும் சற்று தெரிந்து கொள்வோமே......

மூலிகையின் பெயர் -: கோரை.
தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.
தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.
பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.
வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut sedge, red nut sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை என இரு வகையுண்டு.
வளரியல்பு -: கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது.
மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

 
 இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும். (நன்றி : மூலிகை வளம் தளம் )
 


 
கோரை புற்களை கொண்டு பாய் தயாரிக்கின்றனர், அது மட்டுமே மருத்துவ குணம் கொண்டதா என்றால் இல்லை..... அந்த காலத்தில் அதை நெய்வதற்கு இருந்த நூல் கூட மருத்துவ குணம் கொண்டது தெரியுமா ? ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் 'தரஸ்கு' (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும். இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள். இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார். கற்றாழை (Aloë): பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இதன் பலன்களை விளக்க வேண்டும் என்றால் பதிவு நீளமாகிவிடும், மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்...... கற்றாழையின் நன்மைகள் ! இன்று கற்றாழையின் நாறு இல்லாமல், நூல் கொண்டு பாய் முடிகிறார்கள் !!
 

 

பத்தமடை என்னும் ஊரையும், பாய் எத்தனை வகை என்றும், கோரையை ஏன் பாய் பின்னுவதற்கு உபயோக்கிறோம் என்றும், பாய் செய்ய கற்றாழையின் நாரை ஏன் உபயோகிக்கிறோம் என்றும்   பார்த்தாகிவிட்டது, அடுத்து பார்க்க வேண்டியது எப்படி செய்கிறார்கள் என்பதைத்தான். பொதுவாக இந்த கோரைகளை தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து கொண்டு வருகிறார்கள், இந்த தண்ணீருக்கு சில மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் அதனால் இந்த கோரையில் செய்யப்படும் பாய்களில் படுத்தால் நோய் தீருவதால் இது அந்த காலத்தில் பிரபலமானதாக சொல்கின்றனர். பிரபலமான பாய் தயாரிக்கும் ஊர் என்பதால் பெரிய கற்பனையோடு சென்றால் அங்கு காலியான சாலை எங்களை வரவேற்றது..... ஊருக்குள் கேட்டு, கேட்டு செல்ல அங்கு சொசைட்டி ஒன்று இருந்தது, அங்கு பாய் தயாரிப்பாளர்கள் பதிவு செய்துக்கொண்டு, ஆர்டர் கிடைக்கும்போது செய்து கொடுக்கின்றனர்.இந்த பாய் செய்யும் கோரை புற்கள் மிக மெலிதாக வெட்டி எடுக்கப்படுகின்றன. நமது வீட்டில் இருக்கும் பாயை எடுத்துப்பார்த்தால் கோரை என்பது தடியாக இருக்கும், ஆனால் இங்கு கோரையை அவ்வளவு நைசாக வெட்டி எடுக்கின்றனர், அதுதான் இந்த ஊரின் சிறப்பும், பாயின் சிறப்பும். வெட்டி எடுக்கப்பட்ட கோரையில் இருந்து அந்த தண்ணீர் குளிர்ச்சி நன்றாக இருக்கும் என்கின்றனர். இந்த கோரைகளை வாங்கி வந்து ஊற வைத்து, அதை பிரித்து எடுக்கின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு மெலிதாக கோரைகளை பிரிக்கின்றனரோ அவ்வளவு அதிகம் விலை !!

சாதாரண பாய்.... நமது வீட்டில் இதுதான் இருக்கும் !

பத்தமடை பாய், எப்படி மெலிதாக இருக்கிறது பாருங்கள்......
 சரி, கோரைகளை பிரித்தாகிவிட்டது அடுத்து..... சில கோரைகளை கலர் செய்ய வேண்டும், பாய் செய்வதற்கு நூல் தயார் செய்ய வேண்டும், பாய் டிசைன் எப்படி வர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும், பாய் முடைவதற்க்கு இடத்தையும், தறியையும் தயார் செய்ய வேண்டும், பாய் செய்ய பட்டு தயாரிக்க வேண்டும்........ சரி, அதை அடுத்த வாரம் பார்ப்போமா ?!
 
கொஞ்சம் அடுத்த வாரம் வரை பொறுங்களேன்..... இன்னும் நிறைய விஷயம் இருக்கு !!
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District special, Pathamadai, Pattu Pai, Paai, Pattumadai, sleeping mat, korai, reed, world famous, mat

13 comments:

 1. பத்தமடை பாய் பற்றிய தகவல்களுக்கு நன்றி. அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஓவ்வொரு பொருளைப் பற்றியும் குறிப்பிடும்போதும் அவற்றின் விலை விவரத்தைத் தந்தால் நன்றாக இருக்கும்
  த.ம.1.

  ReplyDelete
 2. வணக்கம் ஜி ! ! பதிவுகள் அனைத்தும் சூப்பர்....நன்னாயிட்டு உண்டு.......பகுத் அச்சா...சால பாக உந்தி....

  நானும் திருநெல்வேலிகாரன் தான்....பத்தமடை இருக்கும் அதேதாலுகாவைச் சார்ந்தவன் தான்.... நானே அறியாத பல தகவல்களை தந்துள்ளீர் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம்
  தங்களின் தேடலுக்கு முதலில் வாழ்த்துக்கள்
  அறிய முடியாத விடங்கள் பலவற்றை அறிந்துன் பகிர்வுக்கு நன்றி
  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. விளக்கங்கள் அசர வைக்கிறது...

  ReplyDelete
 5. சிறப்பாகச் சமைக்கும் விதமும்
  அழகுறப் பரிமாறும் விதமும்
  சிறப்பாகக் கொடுக்கும் மனமும்
  ஒருவருக்கே அமைவது அபூர்வம்
  ஆண்டவன் தங்களுக்கு அதை அளவின்றி
  அருளி இருக்கிறான்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஆகா
  தேடலில் மறு உரு தாங்கள்தான் நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மிக அருமையான விளக்கங்களுடன் பத்தமடை பாய் தகவல்கள் சிறப்பு! நேரில் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது பதிவு! நன்றி!

  ReplyDelete
 8. நம்ம திருநெல்வேலிக்கு போயிருக்கீங்க என்னையும் அழைத்து இருந்தால் இரண்டு பாய்கள் வீட்டிற்கு வாங்கி வந்திருப்பேன் நீங்களாச்சும் அனுப்பி இருக்கலாம் வாங்கி!!

  ReplyDelete
 9. அருமையான தகவல்கள். அடுத்த் பகுதிக்கான காத்திருப்புடன் நானும்......

  ReplyDelete
 10. எங்க ஊருல இருந்து 20 km தூரத்துல தான் இருக்கு.எனக்கே அந்த ஊரு சினிமா பாட்டு மூலமா தா தெரிஞ்சுச்சு.பத்தமடையை தாண்டும் போது இந்த ஊரதான் பாடலா படிச்சுருக்கங்களான்னு ஆச்சர்யமா இருந்துச்சு.அவ்ளோ சின்ன ஊரு.

  ReplyDelete
 11. விலை என்ன ? குழந்தையை படுக்க வைக்க சிறிய அளவு பாய் கிடைக்குமா நாம் கோவையில் வசிக்கிறேன் .

  ReplyDelete
 12. சிறப்பான தகவல்கள். எளிய மொழியில்

  ReplyDelete