Thursday, December 18, 2014

ஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் ! (பகுதி - 2)

பத்தமடை பாய் (பகுதி-1) படித்துவிட்டு நிறைய பேர் பாய் என்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டனர், அதே ஆச்சர்யத்துடன் வாருங்கள் இங்கு பாய் செய்வதை பார்க்கலாம் !! சென்ற முறை கோரை புற்களை கீறி மெலிதாக ஆக்குவதை பார்த்தோம், இந்த முறை மேலும் அதிசயமான தகவல்கள் உடன் பயணிப்போம் வாருங்கள். அதற்க்கு முன் எத்தனை வகை பாய் இருக்கிறது தெரியுமா ? கோரை பாயை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ? பாய் வாங்கி கொடுத்தால் ஒருத்தரை ஆச்சர்யபடுத்த முடியுமா ? பாய் என்றாலே ஏழைகள் உபயோகிக்கும் ஒன்று என்பதனை உடைத்து பட்டு பாய் தயாரித்த ஊர் பத்தமடை என்பது தெரியுமா ? இன்னும் நிறைய நிறைய கேள்விகள் இருக்கின்றன...... ஒவ்வொன்றும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் !!



சென்ற வாரத்தில் பகுதி - 1 படித்த நிறைய பேர், கோரையின் மருத்துவ குணம் பற்றி கூறினீர்கள், இதுவரை நான் கோரையை பார்த்த பார்வை வேறு இன்று அதை ஆச்சர்யமாக பார்க்கிறேன், இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றனர்..... எழுத நிறைய விஷயம் இருக்கிறது !! கோரை புற்கள் என்று கூறினாலும், அது பல பல வகைகள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் வயல் வெளிகளிலும், ஆற்று பகுதிகளிலும் காணும் வகைகள் என்று குடைக்கோரை இனம் (சைபிரஸ் இரியா), பூங்கோரை (ஃபிம் பிரிஸ்டைலிஸ் மிலேசியே), கை கீச்சி கோரை (ஸ்க்ரிபஸ் மாரிடீமஸ்) மற்றும் ஊதா நிற கோரைப் புல் (சைபிரஸ் ரோடான்டஸ்) என்று கூறலாம். கோரைக்கு எப்போதும் தண்ணீர் நிற்க வேண்டும். மேலும், தண்ணீர் பாய்ச்சலையும், காய்ச்சலையும் தாங்கக்கூடியது கோரை. எவ்வளவு தண்ணீர் நின்றாலும் தாங்குவதுடன், தண்ணீ ரின்றி வறண்டு போனாலும் தாங்கக் கூடியது கோரை. ஆடு, மாடுகள் மேயாது. திருடு போகாது, எந்த பருவத்திலும் சாகுபடி மேற் கொள்ளலாம். ஒருமுறை கோரை சாகுபடி செய்துவிட்டால் 10, 15 ஆண்டுகள் வரை அதனை வைத்து வருவாய் ஈட்டலாம். முதல் முறை சாகுபடியின் போதும் மட்டும் நடவுக்கென கணிசமான தொகையை செலவிடு வதுடன், உரம் வைத்தல், களையெடுப்பு ஆகியவற்றை மேற் கொள்ள வேண்டும். அறுவடைக்காக 10 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒரு கட்டு கோரை ரூ.900 முதல் ரூ.1,200 வரை விலை போகிறது. ஒரு கட்டில் 25 முதல் 30 கிலோ வரை கோரை இருக்கும். ஒரு ஏக்கரில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். அதன்பின் களை எடுப்பது, உரம் வைப்பது ஆகிய பணிகளை மட்டும் மேற்கொண்டால் 6 மாதங்களுக்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து அறுவடை செய்து கொள்வார்கள். என்ன மலைத்து விட்டீர்களா..... இன்னுமும் இருக்கிறது !! 

 

முதலில் ஆற்றங்கரையோரம் உள்ள கோரைபுற்கள் அறுக்கப்படுகிறது. கோரைபுற்கள் அவற்றின் உயரத்திற்கு ஏற்றார்போல் தரம் பிரிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்பு கையினால் மட்டுமே தரம் பிரித்து வந்தனர். ஆனால் தற்போது இதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன். (முக்கியமான விஷயம்.... இதில் இளம் கோரை, முற்றின கோரை என்று இருக்கிறது. பத்தமடையில் இளம் கோரையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். முற்றின கோரைகள் உடம்புக்கு சூடு !!) அவ்வாறு உயரத்திற்கு ஏற்றார்போல் தரம் பிரிக்கப்பட்ட கோரைப்புற்கள் நீரினால் சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் இதற்கென தயாரிக்கப்பட்ட கத்தியால் புற்கள் இரண்டாக கீரப்படுகிறது .இரண்டு கைபிடி அளவுள்ள கோரைப்புற்கள் முதலில் கயிற்றால் கட்டப்படுகின்றன . இவ்வாறு கட்டப்பட்ட 6  பகுதிகள் கொண்டவற்றை 1 கட்டு என கணக்கிடப்படுகிறது. 1 கெட்டு கோரைபுற்களை கொண்டு 20 பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு கட்டு கோரை புற்கள் கடந்தாண்டு, 480 ரூபாய் இருந்தது, இந்த ஜனவரி மாதம், ஒரு கட்டு கோரை விலை ரூ.1,200 எட்டியது (தண்ணீர் பஞ்சத்தை பொறுத்து விலை ஏறும்)...... இப்படியே சென்றால் எதிர்காலத்தில் கோரை பாயில் படுப்பதுதான் ஸ்டேடஸ் என்று ஆகிவிடும் போலும் !



இப்போது கோரை புற்கள் ரெடி, பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் பாய் விலை குறைவு, ஆனால் கலர் பாய்கள் விலை அதிகம், இதற்க்கு அதை பின்னும் முறையே காரணம்.பெரும்பாலான பாய்களில் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வண்ணம் தீட்டும் சாயம் ஒரு கிலோ சுமார் 800 முதல், 900 ரூபாய்க்கு விற்கிறது, இது  பிரத்தியோகமாக மும்பையிலிருந்து வண்ணப் பொடிகள் வரவழைக்கப்படுகிறது. அதை சாயம் பூச இப்போது  மிகப்பெரிய அடுப்பு அமைத்து அவற்றின் மீது இருப்பு உலோகத்தினால் ஆன பாத்திரத்தை வைத்து அதில் நீரை நிரப்புகின்றனர். பின்பு தேவைப்படும் வண்ணப்பொடியை அதில் தேவைகேற்ப கலக்குகின்றனர். தொடர்ந்து உலர்த்தப்பட்ட கோரை புற்களை கொதிக்கின்ற நீரில் மூழ்கடிக்கின்றனர். குறிப்பிட்ட சில மணி நேரத்தில் மூழ்கடிக்கப்பட்ட கோரைபுற்கள் வெளியே எடுக்கப்பட்டு அவைகள் சூரிய ஒளியில் காயவைக்கப்படுகிறது. பின்னர் சுமார் 1 மணி நேரத்தில் தேவைப்பட்ட வண்ணமாக புற்கள் மாறிவிடுகின்றன். பின்பு புற்களின் 2 ஓரபக்கங்களும் இயந்திரத்தின் மூலம் அல்லது ஆட்களின் மூலம் வெட்டப்பட்டு சமப்படுத்தப்படுகிறது.
 


இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்..... எல்லா இடத்திலும்தான் பாய் செய்கிறார்கள், அது என்ன பத்தமடையில் மட்டும் ஸ்பெஷல் என்று ? பத்தமடை பாய் இரு வகையில் ஸ்பெஷல்........ ஒன்று, கோரையை மிக மிக மெலிதாக அறுத்து எடுத்து கைகளிலேயே பாய் முடைகிறார்கள், இன்று மெசின் எல்லாம் வந்தாலும் பத்தமடையில் கையில் மட்டுமே செய்கிறார்கள். இரண்டு, இங்கு பாயின் இரண்டு புறமும் கோரை குத்தாமல் இருக்க பட்டு கொண்டு தைக்கிறார்கள், வேறு எங்கும் இது போன்று இல்லை (இன்று பாயின் விலையை கருத்தில் கொண்டு கேட்டு கொண்டால் மட்டுமே அப்படி செய்கிறார்கள்). கலர் கலர் கோரைகள் இப்போது ரெடி..... அடுத்து பாய் முடைவது. தரை மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் மூன்று நான்கு கட்டை கழிகளையும், நான்கைந்து சிறு குச்சிகளையும் பயன்படுத்தி தறி அமைத்துக்கொள்கிறார்கள். தரையில் குத்துக் காலிட்டுக் குனிந்தவாறே, நாள் முழுவதும் கோரையைப் பின்னுகிறார்கள். மூன்று நாள் கழுத்து வலிக்கப் பின்னி முடித்தால், உங்களுக்கு ஒரு பத்தமடை பாய் கிடைக்கும், அவர்களுக்கு  350  கூலி கிடைக்கும் ! ஒரு பாய் செய்ய முதலில் நூலை ஒழுங்கான முறையில் இடம் விட்டு கோர்க்க வேண்டும், கீழே இருக்கும் படத்தை பார்த்தால் ஒரு செவ்வக வடிவ கட்டை இருக்கும், அதில் நமது சீப்பு போன்று இடைவெளி இருக்கும் இதில் நூலை சரியான வகையில் கோர்க்க வேண்டும்....... நினைத்து பாருங்கள் எவ்வளவு சிரமம் என்று !





 இப்படி நூல் கோர்த்து முடித்த  பின்பு, பாய் டிசைன் ஒரு முறை பார்த்து கொள்கின்றனர், பின்னர் சர சரவென்று ஒரு ஒரு கோரையாக எடுத்து நூலின் இடையில் வைத்து அடுத்த பகுதிக்கு தள்ளுகின்றனர், பின்னர் ஒரு கம்பு கொண்டு அதை டைட் செய்கின்றனர்......... கிட்டத்தட்ட ஒரு வேஷ்டியை கைகளினால் நெய்வது போல !! சரி..... ஒரு பாயின் அளவு என்ன....... 42 இன்ச் அகலம், 6 அடி நீளம் ! உங்களது கைகளை அகல ஏசுநாதர் போல விரித்தால் ஒரு மனிதன் 42 இன்ச் அகலம் வருவான் (ஒரு சாதாரண மனிதன் கணக்கு), இதனால் நீங்கள் பாயின் நடுவில் படுத்து ஒருக்களித்து கைகளை நீட்டினால் அந்த கைகள் பாயின் வெளியே செல்லாது, அது போலவே நீளமும் ஒரு மனிதன் சுமார் ஆறு அடி வரை இருப்பதால் அது பாயின் நீளம். இன்று பாய் என்பது படுப்பதற்கு மட்டும் இல்லாமல் உட்கார, தொழுக, கால் மிதியடி போன்று என்று பல விதங்களுக்கும் பயன்படுவதால் அவரவர் அதன் நீள அகலத்தை கூட்டி குறைத்து இதை அறிவதில்லை !! 




 
ஒரு பாய் செய்வதற்கு சுமார் 3 நாட்கள் ஆகும், அதுவும் அதில் வேலைபாடுகள், பெயர் எல்லாம் செய்ய இன்னும் கூடுதல் நாள் ஆகும். ஒவ்வொரு வேலைபாடுமே இங்கு கைகளால் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதை கவனிக்கவும். கை வேலைபாடுகள் நிறைந்த இந்த பாய் முடிவடைந்தவுடன் நூலை முடிவில் முடிந்து, பின்னர் இரு பக்கமும் வெட்டி அதை சமன் செய்கின்றனர். இதன் பின்னர் தையல் மெசின் கொண்டு துணியை இரு பக்கமும் தைக்க உலக புகழ் பெற்ற பத்தமடை பாய் ரெடி !! இன்று திருமண வீடுகளில் போம் மெத்தை கொடுப்பதை கௌரவமாக நினைக்கும் பலருக்கும் தெரியாது இந்த பத்தமடை பாய் எந்த அளவு கலை வேலைபாடுடனும், என்று எடுத்து பார்த்தாலும் நினைவு கொள்ளும் வகையில் உங்களது பெயர் பொரித்தும், உடலுக்கு நன்மை செய்யும் வண்ணமும் இருக்கும் என்பது, ஒரு கலாசார மாற்றம் இந்த பாயை வெறும் பெயரளவில் இனி வரும் காலங்களில் வைத்து விடுமோ என்ற அச்சத்துடன் ஒரு முறை அதை தடவி பார்த்தேன் !! ஒரு சாதா டிசைன் கொண்ட பத்தமடை பாய் சுமார் 1500 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது, அதில் வேலைபாடு அதிகரிக்க அதிகரிக்க சில பாய் சுமார் 12000 ரூபாய் கூட ஆகிறது !!





 
பாயை, வெறும் படுக்கை விரிப்பு போல் மட்டுமே நாம் காண்கிறோம், ஆனால் அதில் கூடை, டேபிள் மேல் வைக்கும் மேட் என்று விதம் விதமாக செய்கின்றனர் இங்கு. பாய் மட்டும் அல்ல, இது போன்ற அழகு பொருட்களுக்கும் கோரை புற்கள் உதவுகின்றன....... வெறும் புல்தானே என்று இனி சொல்ல முடியுமா என்ன ?!
 

 


பத்தமடை பாய் விற்கும் கடையின் விலாசம்.....

பத்தமடை பாய் செய்து அவார்ட் பெற்றவரின் விலாசம் !
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, tamilnadu, district, pathamadai, pathu madai, Paai, Pai, Sleeping mat, Pattu Pai, Silk mat, Craft, Pattamadai, Mat weaving, National award winning craft

11 comments:

  1. என் திருமணத்துக்கு எங்கள் பெயர் போட்டு ப.பா கொடுத்தார்ர்கள்.

    என் மனைவி பிறந்த ஊர்!

    ReplyDelete
  2. ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் சுவர், தரை எல்லாம் பாய்களால் அலங்கரித்து அறையில் வெப்பநிலையை சமப்படுத்துகின்றனர்..

    ReplyDelete
  3. வணக்கம்
    தேடலுக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கரூர் பக்கம் செல்லும் போது கோரைகள் விளைவதை பார்த்ததுண்டு! பத்தமடை பாய் தயாராகும் விதத்தை விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. மூன்று நாட்கள் - சிரமமான நுட்பமான வேலைப்பாடு... எததனை தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  6. கலைநயம் இல்லாத கோரைபாய்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம்.புதுமையான தகவல்கள் .

    ReplyDelete
  7. அருமையான பதிவு பாய்கள் இத்தனை வகைகள்

    ReplyDelete
  8. விற்பனைக்கு தேவை கிடைக்குமா

    ReplyDelete
  9. கல்யாணத்திற்க்கு ஒரு பாய் தேவை. பெயர் போட்டு எவ்வளவு? போடாமல் எவ்வளவு. நடுத்தரம் போதும்.

    ReplyDelete