Monday, December 29, 2014

சந்தித்த கேள்விகள்...... 2014 !!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... ஒவ்வொரு கேள்விகளும், அதற்க்கான விடைகளும் நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்து செல்கின்றன. என்னுடைய பதிவுகளை படிக்கும் பலரும் என்னை சந்திக்கும்போதோ, அல்லது தொடர்ப்பு கொள்ளும்போதோ கேட்க்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். இதில் சில கேள்விகள் எப்போதும் நான் எதிர்கொள்பவை.......... பதிவுகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து இது என்னை தொடர்ந்து வருகிறது, இதனால் நான் எதிர்கொண்ட கேள்விகளை தொகுத்து அதற்க்கான விடைகளை அளித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கேள்விகள், நீங்கள் என்னை கேட்க்க நினைத்து இருந்தால்.... இதோ விடை !!




எப்படி பதிவு எழுத ஆரம்பிச்சீங்க ?

பதிவுலகம் என்று இருப்பது தெரிந்ததே 2011ம் ஆண்டுதான், சினிமா பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ஆனந்த விகடன் விமர்சனம் பார்த்துவிட்டு செல்லும் ஒரு சராசரி மனிதன் நான், சில நேரங்களில் விகடனில் விமர்சனம் வருவதற்கு இரண்டு வாரங்கள் கூட ஆகும். அப்போது போர் அடிக்கும்போது நன்றாக இருக்கும் என்று நினைத்து சென்ற படங்கள் மரண மொக்கையாக இருக்கும். இதனால், விமர்சனம் படித்துவிட்டே போகவேண்டும் என்று நினைத்து கூகிள் கொண்டு தேடி பார்க்க, திரு.கேபிள் சங்கர் அவர்களது தளம் கண்ணில் பட்டது. அவரது விமர்சனம் பிடித்து இருந்தது, சாப்பாட்டு கடை வாயில் எச்சில் வரவழைத்தது, கொத்து பரோட்டா, சினிமா வியாபாரம் என்று சுவாரசியமாக இருக்க, பின்னர் பதிவுகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். 24-ஜூன்-2012 அன்று ஆபீசில் அதிகம் வேலை இல்லை, அப்போது பதிவுகள் எப்படி எழுதுவது என்று படித்து பார்த்து, ஒரு "கன்னி" முயற்சியில் ஆரம்பித்ததுதான்............ கடல் பயணங்கள் ! இன்று நான் படித்து சுவைத்து அனுபவித்த பதிவர்களை பார்ப்பதிலும், ஒரு அளவிற்கு என்னுடைய பதிவுகள் அவர்களுக்கு தெரிந்தும் இருப்பது எனது சிறிய வெற்றி எனலாம் !



நீங்கள் மிகவும் ரசித்து எழுதும் பதிவு எது ? எதனால் அது உங்களுக்கு பிடிக்கும் ?

பொதுவாக சொல்வதென்றால், நான் ரசிக்காத எதையும் பதிவாக எழுதுவதில்லை இதனால் எனது எல்லா பதிவுகளுமே எனக்கு பிடித்தது எனலாம். உண்மையாக சொல்வதென்றால்...... ஊர் ஸ்பெஷல், அறுசுவை(சமஸ்), சிறுபிள்ளையாவோம், சாகச பயணம் ஆகிய பகுதிகள் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. இந்த பகுதிகளுக்காக நான் தேடி செல்லும்போது என்னை நானே மறக்கிறேன், நான் அதிகம் தெரிந்து கொள்கிறேன், எனது கர்வம் அழிகிறது என்பதனால் எனக்கு இது பிடித்தது என்று சொல்லலாம்.



சிறுபிள்ளையாவோம் பகுதியில் டென்ட் கொட்டகை, மட்டை ஊறுகாய் என்று சுவைப்பதெல்லாம் இந்த வயசுக்கு தேவையா ? உங்களது அலுவலகத்தில் இருப்பவர்கள் இதை பார்த்தால் சிரிக்க மாட்டார்களா ?

உடம்புக்குதானே வயதாகிறது, மனதுக்கு இல்லையே ! உண்மையை சொல்லுங்கள் உங்களது வாழ்க்கையில் எந்த பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் எதை சொல்வீர்கள்...... மனதில் கவலை இல்லாமல் அலைந்த அந்த சிறு பிராயதைதானே. இன்று லட்சம் கொடுத்து கார் வாங்கினாலும் வராத அந்த சந்தோசம், அன்று ஒரு புளிப்பு மிட்டாய்க்கே வந்ததா இல்லையா ? இந்த பகுதிகள் எழுத நான் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, உள்மனதில் இருக்கும் ஆசைகள் வடிவம் எடுக்கின்றன எனலாம்.

அலுவலகம் என்பது நான் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது, நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்த்து அல்ல. எனது வாழ்வில் அலுவலகம் ஒரு பகுதி, ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது அல்லவா. அது மட்டும் இல்லாமல்..... நான் எனக்காக வாழ்கிறேன், அடுத்தவரை அதற்காக இம்சிப்பதில்லை. இன்று வரை, எனது பதிவுகளை அலுவலகத்தில் எல்லோருமே ரசிக்கிறார்கள், யாருமே குறை சொன்னதில்லை......... எல்லோரும் நண்பர்களே !!




எப்படி ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு இவ்வளவு விஷயம் சேகரிக்கிறீர்கள் ? இதனால் உங்களுக்கு லாபம் என்ன ?

லாப நஷ்டம் பார்த்து சில விஷயங்களை செய்ய முடியாது, குழந்தையை வளர்க்கும்போது அதில் என்ன லாபம் வரும் என்றா யோசிக்கிறோம் ! இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி என்பது எனது மனதுக்கு நெருக்கமானது, தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்துக்கொண்டு இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும்போது பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, வாழ்க்கையை பற்றிய புரிதல் கிடைக்கிறது. முக்கியமாக இதுவரை ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்த ராஜபாளையம் நாய், பத்தமடை பாய், ஊத்துக்குளி வெண்ணை என்று பல விஷயங்களை அது ஏன் பிரபலம் அந்த ஊர்களுக்கு, அது எப்படி உருவாகிறது / செய்யப்படுகிறது என்பதனை எனது அனைத்து சக்திகளையும் திரட்டி செய்கிறேன், இது கண்டிப்பாக ஆவணபடுத்தப்பட வேண்டிய விஷயங்கள்......... அதில் எனது சிறிய பங்களிப்பு அவ்வளவே ! இது இன்று வெகு சிலராலேயே படிக்கப்படுகின்றது என்பது வருத்தம் தந்தாலும், ஒரு நாள் இது எல்லோராலும் விரும்பி படிக்கப்படும்....... நம்பிக்கை இருக்கிறது, அதுதானே வாழ்க்கை !!



ஊர் ஸ்பெஷல் பகுதி போட்டோ பார்த்தால் எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிடுகிறீர்கள் போலும் ? நிஜமாகவா அல்லது வெறும் போஸ் ?மட்டுமா ?!

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு செல்லும் போது நான் அங்கு வெறும் போட்டோ மட்டும் எடுத்துக்கொள்வதில்லை, அவர்களோடு பேசுகிறேன், அவர்களின் தொழிலை சுமார் ஒரு மணி நேரமேனும் செய்கிறேன், அவர்களோடு சாப்பிடுகிறேன். இது என்னை உலகத்தை உணர வைக்கிறது.... பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்துக்கொண்டு உலகத்தில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று இருந்தவனை, இப்படி செல்லும் பயணங்கள் அவர்களின் வாழ்க்கையை உணர வைக்கிறது, அது எல்லாவற்றையும் நான் எழுதுவதில்லை. உதாரணமாக சொல்வதென்றால், சுமார் 1000 ரூபாய் கந்து வட்டி வாங்கி கஷ்டப்பட்ட ஒரு முதியவருக்கு அதை திருப்பி செலுத்த அவர் என்னை கைகூப்பி தொழுத கண்ணீர், சேற்றில் நடந்து நாற்று நடும்போது குத்திய அந்த நெருஞ்சி முள், விருதுநகர் பரோட்டாவிற்கு மாவு பிசைந்தது, குமாரபாளையம் லுங்கி செய்யும் இடத்தில் பேசிய எல்லோருக்கும் காதில் இருந்த பிரச்சனை (காது குத்தும் அந்த மெசின் ஓசை), சின்னாளபட்டி சேலை அயன் செய்தபோது அந்த அயன் பாக்ஸ் தூக்கிய தோளின் வலி, மானாமதுரையில் மண் பானை செய்ய கூன் போட்டு உட்கார்ந்த அந்த தருணம், பவானி ஜமுக்காளம் செய்ய அந்த குழியினுள் உட்கார்ந்த அந்த வலி,  நாச்சியார் கோவில் குத்துவிளக்கு செய்யும்போது அங்கு இருந்த தூசி, கும்பகோணம் வெற்றிலை செடியில் வெற்றிலை பறிக்க ஏறியது (இறங்கி காலில் அடி வாங்கியது), சிவகாசி வெடி பார்க்க அவர்களுடன் தூக்கு வாளியில் சோறு கட்டிக்கொண்டு சென்றது, நாமக்கல் கோழி முட்டையை பிரசவிக்கும் கோழியின் வலி உணர்ந்த அந்த தருணம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பதிவிலும் எனது உழைப்பும், வலியும் இருக்கிறது......... அது வெறும் போட்டோ போஸ் இல்லை என்பது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.




நல்ல சாப்பாட்டு ராமனா இருக்கீங்க... எப்படி இப்படி சாப்பிட முடியுது ? உங்க உடம்பை பார்த்தாலே தெரியுது, குறைங்க...... பார்த்து எதாவது வியாதி வந்துட போகுது ?

இந்த கேள்விக்கு பதில் சொல்லி, சொல்லி அலுத்துவிட்டேன் எனலாம். சாப்பிடுவதற்கும், ருசிப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது, ஒரு உணவு நன்றாக இருக்கிறது என்பதற்காக இரண்டு அல்லது மூன்று வாங்கி உண்பதற்கும், அந்த ஒரு உணவையே ஒவ்வொரு பருக்கையையும் ருசித்து உண்பதற்கும் வித்யாசம் உண்டு. நான் பதிவுலக நண்பர்களுடன் சாப்பிட செல்லும்போது எப்போதும்  அட,என்ன அவ்வளவுதானா.... நான் நிறைய சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன் என்பார்கள், அது எனது உருவத்தை பார்த்து என்றாலும் அது ஜீன் சம்மந்தபட்டது, எனது தந்தை தாத்தா எல்லோரும் அப்படி இருந்து விட்டதால் நானும் அப்படியே. நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என்பதை இதன் மூலம் உரக்க சொல்லி கொள்கிறேன், எனது ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கும் நண்பர்களாகிய நீங்கள் இருக்கும்போது வருத்தம் எதற்கு !



எப்படி இப்படிப்பட்ட பயணங்களுக்கு நேரம் கிடைக்கிறது ?

எல்லோரும் தவறாமல் என்னை கேட்க்கும் கேள்வி இது ! சிறு வயதில் இருந்தே, ஒரு தேடலுடன் ஓடிக்கொண்டு இருப்பேன், அதைதான் இப்போதும் செய்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த கேள்வியை படிக்கும்போதெல்லாம், மனதில் பதிந்த இந்த செய்தியைத்தான் நினைத்துக்கொள்வேன்....... கமல் படபிடிப்பில் இருந்த போது, அங்கு ஸ்டில்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த போட்டோகிராபரிடம் எனக்கு இன்னைக்கு எடுத்த போட்டோவில் கொஞ்சம் பிரிண்ட் போட்டு தர முடியுமா என்றாராம், அவரும் சரி என்று விட்டு அடுத்த நாளில் அது முடியவில்லை, அதற்க்கு அடுத்த நாளும் முடியவில்லை.... பின்னர் கமலை பார்த்தாலே ஒளிந்து ஓட ஆரம்பித்தார், ஒரு நாள் கமல் அவரை அழைத்து நான் போட்டோ கேட்டேனே என்ன ஆச்சு என்று கேட்க்க, போட்டோகிராபர் தன்னிடம் டைம் இல்லை என்று சொல்ல, கமலோ நினைச்சு பாருங்கள், நான் படம் நடிக்கிறேன், அடுத்த படத்தின் கதையை கேட்க்கிறேன், விழாக்களுக்கு செல்கிறேன், வீட்டிற்க்கு நேரம் ஒதுக்குகிறேன், போன் அட்டெண்ட் செய்கிறேன், இலக்கியவாதிகளை சென்று பார்க்கிறேன் இது எல்லாமே உங்களை போன்று எனக்கும் இருக்கும் 24 மணி நேரத்தில்தானே, என்று கேட்க........ நான் நினைத்து பார்த்தேன், அவரே இவ்வளவு செய்யும்போது நான் கொஞ்சமாவது எனது நேரத்தை பயனுள்ளதாக செய்ய வேண்டாமா ?! நேரம் இல்லை என்பது ஒரு சாக்குதானே தவிர உண்மை இல்லை !



அது சரி, எப்படி பதிவுகள் எழுத நேரம் கிடைக்கிறது ? எங்களுக்கெல்லாம் நேரமே இல்லாமல் கஷ்டப்படுகிறோம் !

உங்களை போலவே நானும் நேரமில்லை என்று ஒரு காலத்தில் குறைபட்டு கொண்டவன்தான். அது போலவே, உங்களை போல குழந்தையை ஸ்கூல் சென்று விட்டு விட்டு, வீட்டிற்க்கு காய் வாங்கி கொடுத்து, பேங்க் - கேஸ் -ஆதார் கார்டு என்று அலைந்து வாங்குவது, வீட்டில் வேலை செய்யாத பொருளை தூக்கிக்கொண்டு ரிப்பேர் செய்ய ஆள் தேடுவது, டிராபிக் ஜாமில் சிக்கி, கம்பெனி சென்று நேரம் காலம் கிடைக்காமல் உழைப்பது, திரும்பி வந்து குழந்தைகளுடன் விளையாடுவது, குடும்பத்தினரை வெளியில் கூட்டி செல்வது, பணத்தேவை, துரோகம், பார்ட்டி, சந்தோசம், நல்ல மனிதர்களின் சிநேகம், கிரெடிட் கார்டு தேவையா என்னும் தொல்லைகள், சில நொடி மென்சோகங்கள், கூத்தாடும் மனது என்று நானும் ஒரு மனிதன்தான் !! இதற்க்கு இடையில்தான் உங்களை சந்தோசப்படுத்தும் பதிவுகள் எழுதுவது, அதற்க்கான பயணம் மேற்கொள்வது, சிறுபிள்ளையாகி கோன் ஐஸ் தின்பது, புதிதாக என்ன டெக்னாலஜி வந்துள்ளது என்று பார்ப்பது, பேஸ்புக் சென்று அப்டேட் செய்வது, நண்பர்களின் பதிவுகளை படித்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுவது, புதிய நண்பர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது, புத்தகங்கள் படிப்பது, படம் பார்ப்பது, புது முயற்சிகள் யோசிப்பது, எனக்கு பிடித்த பாடல்கள் கேட்பது, இயற்கையை ரசிப்பது, உடற்பயிற்சி என்று நேரம் ஒதுக்கி கொள்கிறேன் ! ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் உங்களுக்கு என்று ஒரு மணி நேரம் இல்லாமலா போய்விடும்....... யோசித்து பாருங்கள், உங்களிடம் ஒருவர் நீங்கள்தான் அவரின் படத்தின் ஹீரோ ஆனால் சிக்ஸ் பேக் வேண்டும் என்றால் அன்றே ஜிம்மில் பழியாய் கிடக்க மாட்டீர்கள், எங்கிருந்து திடீரென்று வருகுது அந்த நேரம் !! உங்களுக்கு பிடித்ததை செய்ய நினைத்தால், நேரம் உங்களது முன் வந்து நிற்காதா என்ன ?!



அது என்ன எல்லா பதிவிலும் உங்களது புகைப்படங்கள், கண்ணு பட்டுவிட போகிறது ?

நான் பதிவு ஆரம்பிக்கும் முன்பு பல பதிவுகளை படித்து வந்தேன், அதில் பல பதிவுகள் எங்கோ ஒரு இடத்தில் இருந்து சுட்டு இங்கு போடப்பட்டு இருக்கும், அல்லது அந்த பதிவுகளை படித்தவுடன் அவர் அதை அனுபவித்துதான் எழுதி இருக்கிறாரா என்று தோன்றும். எப்போதுமே ஒரு விஷயத்தை நீங்கள் அனுபவித்து விட்டு, பின்னர் எழுதினால் அதில் இருக்கும் நம்பகத்தன்மையும், படிப்பவர்க்கு வரும் ஒரு பீலிங்ம் நன்றாக இருக்கும் என்பது நான் படித்த பதிவுகளில் இருந்து கற்ற உண்மை. நான் பதிவு எழுத ஆரம்பிக்கும்போது அந்த விஷயத்தை நான் உண்மையிலேயே முயன்று பார்த்துவிட்டுதான் எழுதுகிறேன் என்று நிரூபிக்க எனது புகைப்படத்தை அதனோடு போட்டேன், இன்று அதுவே பழக்கம் ஆகி விட்டது. நானும் உங்களைபோல் ஒருவன்தான், கையேந்தி பவனில் இருந்து ஸ்டார் ஹோட்டல் வரை சாப்பிடுகிறேன், இருந்தும் என்னிடம் பேசியவர்களுக்கு தெரியும்...... நான் எவ்வளவு எளிமையானவன் என்று, இதனால் கண்ணு பட்டுவிட போகிறது என்பதை விட என்னை விரும்புபவர்கள் அதிகம் இருக்கலாமே !



இவ்வளவு பயணம் செய்யும் உங்களை வீட்டில் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ? திட்டுக்கள் எல்லாம் கிடையாதா ?!
 
உண்மையை சொல்வதானால், எனக்கு கிடைத்த மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என்பது வரம் என்பேன். எனது துணைவியார் முதலில் என்ன இது என்று நினைத்தாலும் நான் இந்த பதிவிற்காக படும் கஷ்டம் அவர் மட்டுமே அறிவார். நான் எடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தி, என் சிறுகுழந்தைதனத்தை ரசித்து என்னுடன் பயணிக்கும் இவருக்கு என்றுமே நான் கடமைபட்டுள்ளேன்....... நன்றி என்ற வார்த்தை மிகவும் சிறியது, என்னுடைய காதலை எப்படி வெளிபடுதினாலும் அது சிறிதாகத்தான் இருக்கும்.

வீட்டில் நான் எழுதும் பதிவுகளை வைத்து நடக்கும் சுவாரசியங்கள் அநேகம், உதாரணமாக..... ஒரு முறை வீட்டில் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடுங்கள் என்று சொல்ல, நான் சிறிது நேரம் ஆகும் என்று சொன்னேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, நானே எடுத்து போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன், சாப்பிடும்போது புத்தகம் படித்துக்கொண்டு இருந்தேன், முடித்து விட்டு செல்ல எனது தந்தை வந்து சாப்பிட்டு பார்த்தவர் "ஐயோ, சாப்பாட்டில் உப்பே இல்லை"என்று சொல்ல எனது மனைவி வந்து சுவைத்து பார்த்துவிட்டு "இந்த மனுஷனுக்கு விவஸ்தையே இல்லை, ஊரெல்லாம் போய் சாப்பிட்டு வந்து அங்க உப்பு ஜாஸ்தி, இங்க காரம் கம்மின்னு எழுத வேண்டியது, ஆனால் வீட்டு சாப்பாட்டில் என்ன நல்லா இல்லைன்னு சொல்ல தெரியலை. இவரு எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாங்க, அவங்களை நாலு வார்த்தை கேட்கறேன் நானு..... "என்று சுமார் கால் மணி நேரம் அர்ச்சனை !! வீட்டுக்கு வீடு வாசப்படி !



இந்த பதிவுலகில் கிடைத்த மிக பெரிய சந்தோசம் என்று எதை சொல்வீர்கள் ?

யாரோ ஒருவர் போன் செய்து நான் உங்க பதிவை விரும்பி படிக்கிறேன், நல்லா எழுதறீங்க என்று சொல்லும்போது எங்களை இணைத்த இந்த பதிவுலகத்தைதான் நினைத்து பார்ப்பேன். ஒரு புத்தகத்தில் என்னுடைய எழுத்துக்கள் வருவது என்பது வேறு, இந்த பதிவுலகம் என்பது வேறு. ஒரு விஷயத்தை தேடி பார்க்கும் ஆர்வம் இருப்பவர்கள் இந்த பதிவுகளை பற்றி அறிந்து படிக்க ஆரம்பிக்கின்றனர், ஆகவே இங்கு உருவாகும் நட்பு என்பது ஆத்மார்த்தம் ஆனது என்பது எனது கருத்து !

இன்று உலகின் எந்த மூலைக்கு சென்று நான் வந்திருக்கிறேன் என்றாலும், என்னை பார்க்க, எனது பதிவுகளை விரும்பி படித்த நண்பர்களை சந்திக்க முடிகிறது. இவர்கள் எல்லோரும் எதையும் எதிர் பார்க்காமல் வருபவர்கள். பார்க்கும்போது இந்தாங்க கோவில் பிரசாதம், உங்களுக்கு பிடிக்குமே என்று வாங்கி வந்தேன், எங்க வீட்டிற்க்கு சாப்பிட வரணும், நானே செய்தது இந்தாங்க, நான் எழுதிய புத்தகம், உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா, வரப்ப ஒரு போன் பண்ணுங்க ப்ளீஸ், இந்தாங்க உங்க குழந்தைக்கு என்று அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ளும் நட்பு என்பது ஒரு வரம், அதை இந்த பதிவுலகம் தந்து இருக்கிறது என்பதே எனது மிக பெரிய சந்தோசம் !!

அது போலவே இன்றைய பதிவுலகத்தில் பதிவர்கள் பலரும் நல்ல தோழமையுடன் இருக்கின்றார்கள். நான் மிகவும் விரும்பும் பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் அவர்களை முதலில் சந்தித்தபோது தாங்கள் பெரிய பதிவர்கள் என்ற பந்தா எதுவும் இல்லாமல் மிகவும் நட்புடன் பழகுகின்றனர். பலரும் பதிவுகளை பாராட்டி போன் செய்து பேசுகின்றோம். அன்றைய காலம் போல் ஈகோ என்பது இல்லாமல் பழகும் விஷயம் ஒரு ஹிமாலய சந்தோசம் !!
 


அப்போ, இந்த பதிவுலகில் சந்தித்த வருத்தங்கள் ஏதாவது ?

ஒரு ஊருக்கு செல்கிறோம், அதுவும் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு விஷயம் சேகரிக்க செல்கிறேன் என்றால் என்னுடைய நேரத்தை, பணத்தை செலவழித்து செல்கிறேன். சில நேரங்களில் அந்த ஊரில் இருக்கும் நண்பர்கள் (பதிவை படிக்கும் நண்பர்கள் அல்லது எனது பால்ய கால நண்பர்கள்) சிலரிடம் அந்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கொஞ்சம் உதவ முடியுமா என்று கேட்க்க, வாங்க பார்த்துக்கலாம் என்பார்கள். பல முறை பேசி, உறுதி செய்தபின் அங்கு சென்று போன் செய்ய ஒன்று போனை எடுக்க மாட்டார்கள், இல்லையென்றால் கடைசி நேரத்தில் முடியவில்லை என்று சாக்கு சொல்வார்கள். இதை குறை சொல்ல முடியாது, அவர்கள் சொல்லி வைத்த இடத்தில் என்ன நடந்ததோ, ஆனால் அங்கு இருக்கும்போது சந்திக்க கூட வரமாட்டார்கள். அவர்களின் ஊருக்கு, அவரின் அழைப்பை ஏற்று சென்று அவர்கள் சந்திக்க வராமல் சென்ற சம்பவங்கள் நிறையவே உண்டு !! அது மட்டும் அல்ல, அப்படி நடு தெருவில் தவிக்க விட்ட நண்பர்கள் பின்னர் போன் செய்து வருத்தம் தெரிவித்ததில்லை என்பது மிகவும் காயப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் !



2015ம் பதிவுலகில் கனவு அல்லது நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்பது என்ன ?

அது மிகவும் நீளமானது....... ஆனால் அது நிறைவேற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது !

  • பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு டூர் செல்ல வேண்டும் 
  • எல்லா பதிவர்களின் சிறந்த படைப்பை கொண்டு ஒரு புத்தகம் வர வேண்டும் 
  • அடுத்த பதிவர் திருவிழாவில் எல்லா பதிவர்களையும் சந்தித்து பேச வேண்டும் 
  • என்னுடைய பதிவுகளை புத்தகமாக வெளியிட வேண்டும் 
  • இன்று எல்லா பதிவர்களின் தொடர்ப்பு எண், விலாசம், அவரின் புகைப்படம் என்று இருக்கும் ஒரு இடம் என்பது இல்லை, அதற்க்கு ஒரு முயற்சி எடுக்க வேண்டும் 
  • புத்தக திருவிழாவிற்கு செல்ல வேண்டும் 
  • ஒரு அமைதியான வயல் வெளியின் நடுவே ஒரு நாள் தங்க வேண்டும் 
  • நான் விரும்பும் பதிவர்களின் வீடுகளுக்கு சென்று பேச வேண்டும் 
  • ஒரு டிவி பேட்டி கொடுக்க வேண்டும் !
இப்படி நிறைய நிறைய ஆசைகள் ! பார்ப்போம், இது நிறைவேறுகிறதா என்று :-)

 
இந்த ஆண்டு பதிவர் திருவிழா சென்றது, அங்கு நிறைய பதிவர்களை பார்த்தது, புதிய நண்பர்கள் கிடைத்தது என்று சந்தோசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், பதிவுகளும் நிறைய படித்தேன். சிலரது பதிவை படித்து நிறைய சந்தோசமும் ஆச்சர்யமும் பட்டிருக்கிறேன். இனி வரும் ஆண்டும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும், இன்னும் நிறைய நண்பர்களையும், புதிய வாய்ப்புகளையும் அமைய பெற வேண்டும். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Labels : Suresh, Kadalpayanangal, Others, Questions faced, Questions, Answers, 2014, The questions I faced, New year, What you want to ask, ask me

28 comments:

  1. இதற்கான உங்கள் உழைப்பு மிகவும் அற்புதம் சாரே..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. /// உடம்புக்குதானே வயதாகிறது, மனதுக்கு இல்லையே ! /// - உங்களின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம்... வாழ்த்துக்கள்...

    நீண்ட ஆசைகள் நிறைவேறும்...!

    ReplyDelete
  3. Super. உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்


    ReplyDelete
  4. //ஐயோ, சாப்பாட்டில் உப்பே இல்லை"என்று சொல்ல எனது மனைவி வந்து சுவைத்து பார்த்துவிட்டு// முன்னொரு காலத்தில் பதார்த்தங்களில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன், இப்போது அப்படியெல்லாம் செய்வதே இல்லை :-)

    உங்களிடம் பேசியதில் புரிந்து கொண்ட பல கேள்விகளுக்கான விளக்கங்கள்... நீங்கள் இன்னும் பல உயரங்கள் தொட வேண்டும் சார் :-) தொடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...

    ReplyDelete
  5. அயராத உழைப்பு. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். ரசிகர் நீங்கள். ரசிக்கத் தெரிவதோடு பகிரவும் தெரிகிறது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அலுவலகம் என்பது நான் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது, நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்த்து அல்ல. எனது வாழ்வில் அலுவலகம் ஒரு பகுதி, ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது அல்லவா. அது மட்டும் இல்லாமல்..... நான் எனக்காக வாழ்கிறேன்

    ///சபாஷ்... என் இனமடா நீ.

    ReplyDelete
  7. கேள்வி பதில் வடிவில் உங்களைப்பற்றியும் பதிவுகள் உருவான விதம் பற்றியும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி! புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் நிறைவேற பிரார்த்திக்கின்றேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமை சுரேஷ்.... வாழ்த்துக்கள். நிறைய விடயங்களை அறிந்து கொள்கிறோம் . நன்றி..

    ReplyDelete
  9. ///சுமார் 1000 ரூபாய் கந்து வட்டி வாங்கி கஷ்டப்பட்ட ஒரு முதியவருக்கு அதை திருப்பி செலுத்த அவர் என்னை கைகூப்பி தொழுத கண்ணீர், ///---
    இக்கண்ணீருக்கு ஈடு இணை ஏது?
    வாழ்த்துக்கள் நண்பரே
    புத்தாண்டு மேலும் பல புதிய உறவுகளை வழங்கட்டும்
    தங்களின் பயணமும் தொடரட்டும்
    மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. புத்தாண்டிலும் உங்கள் பணி தொய்வில்லாமல் தொடரட்டும் நண்பரே..............................

    ReplyDelete
  11. பொறாமையாக இருக்கிறது... உங்களை பார்த்து..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //இன்று எல்லா பதிவர்களின் தொடர்ப்பு எண், விலாசம், அவரின் புகைப்படம் என்று இருக்கும் ஒரு இடம் என்பது இல்லை, அதற்க்கு ஒரு முயற்சி எடுக்க வேண்டும்//

    சீனியர்... இந்த ஒன்றை மட்டுமாவது கட்டாயம் செய்துவிடுங்கள்... பலருக்கு பயன்படும்... :) cheers...

    ReplyDelete
  13. switzerlan vanthal thodarbu kollungal 0791271023

    ReplyDelete
  14. நேர மேலாண்மை என்பதை உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன என்பது கண்கூடாகத் தெரிகிறது.

    நீங்கள் இந்த வருடத்தில் எதிர்பார்ப்பது நிறைவேற என்னாலான முயற்சிகளையும் மேற்கொள்கிறேன். அதற்கான வேலைகளைத் தொடங்கும் முன் என்னையும் அழையுங்கள்....

    ReplyDelete
  15. எல்லா ஆசைகளும் இந்த ஆண்டில்
    நிச்சயம் நிறைவேறி விடும்

    தளர்ச்சியற்ற முயற்சி இருக்கையில்
    நினைத்ததெல்லாம் நடந்து தானே ஆகவேண்டும்

    ஆண்டவனும் அருள்வதற்கு அவர்களைத் தேடித்தானே
    அலைந்து கொண்டிருக்கிறான்

    மனம் திறந்த அற்புதமான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. உங்கள் பதிவை படிக்கும் போதெல்லாம், எனக்கும் இந்த சந்தேகங்கள் எல்லாம் வரும்... எல்லாத்தையும் மொத்தமாய் தீர்த்து வைத்து விட்டீர்கள்!

    உங்கள் கனவுகளெல்லாம் நினைவாக கூடியவை தான்.... வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  17. மனம் திறந்த பதில்கள்...சென்னை பதிவர் சந்திப்பில் ஜீவா தான் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. இருப்பினும் மானசீகமான நட்பை இணைய வலை தந்திருக்கிறது, பிணைக்கிறது வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  18. ரொம்பப்பிடிச்சிருக்கு சுரேஷ்.

    மனசில் கள்ளம் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கீங்க. பாராட்டுகள்!

    மனம் போல எல்லாம்நடக்கட்டும்!

    ReplyDelete
  19. உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  20. என்னை போல் இன்னொருவர் :)

    ReplyDelete
  21. அருமையான பதிவு. நேர்மையான பதில்கள்.. வலைப்[பதிவுகளை மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வலைப்பூக்களுக்கு அர்த்தம் சேர்க்கின்றீர்கள். வாழ்க உங்கள் பணி...

    ReplyDelete
  23. இப்படித்தான் ரசிக்கப்பழக வேண்டும்.
    அன்பா நிறைவா நிறைய எழுதுங்க.,
    வாழ்த்துக்களுடன்
    பாண்டியன்

    ReplyDelete
  24. love you bro , உங்கள் தேடல் பயணித்துக்கொண்டே இருக்கட்டும் , வாழ்த்துக்கள் தங்கள் எண்ணங்கள் ஈடேற. :)

    ReplyDelete
  25. முதலில் வாழ்த்துக்கள் அண்ணே!

    பதிவர் சந்திப்பில் பேசுகையில் கூட இவ்வளவு ஆழமா பேசவில்லை, அதற்கான நேரமும் அமையவில்லை! இன்று உங்களை பற்றியும் எண்ணங்களை பற்றியும் மிகச்சரியாய் புரிந்து கொண்டேன்!
    புத்தக வடிவில் வாசிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்! அதற்குண்டான வேலைகளை தொடங்குங்கள்!

    ReplyDelete
  26. பழைய காலத்தில் குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு குருபத்தினி சாப்பாட்டில் நெய்க்குப் பதிலாக சிறிது வேப்ப எண்ணெய்யைக் சேர்ந்து விடுவாராம். மாணவன் எப்பொழுது ஏன் இந்தச் சாப்பாடு கசப்பாக இருக்கிறது என்ற கேள்வியைக் கேட்கின்றாரோ அன்றே அவரின் கல்வி முடிவுக்கு வந்துவிடும் . எனக்கு இந்தச் சம்பவம் தான் ஞாபகத்திற்கு வருகிறது .

    ReplyDelete