Monday, December 15, 2014

அறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை

சென்ற வாரத்தில் சென்னை சென்று இருந்தேன், அங்கு ஒரு நல்ல ஹோட்டல் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்தபோதே கேபிள் சங்கர் அவர்களின் சாப்பாட்டு கடை பகுதியும் யாபகத்திற்கு வந்தது. அவரின் சாப்பாட்டு கடை பகுதிக்கு பெரிய ரசிகன் நான், உடனே அவரின் வலைத்தளம் சென்று ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்க இந்த சீனா பாய் இட்லி கடை பற்றிய விவரம் வந்தவுடன் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே இந்த இடத்தில் சென்று கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய, என்னுடன் திரு. KRP செந்தில், கோவை ஆவி, மெட்ராஸ் பவன் சிவக்குமார் அவர்கள் எல்லோரும் சென்றோம். கேபிள் அவர்கள் ஒரு சாப்பாட்டு ரசிகர், இந்த இடத்தில் சாப்பிட்ட பின்புதான் ஜன்ம விமோசனம் அடைந்தேன் எனலாம்.... ஒரு ரசிகராக அவரின் பதிவுகளை படிப்பதற்கும், படித்ததை அனுபவித்து பார்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. ஆனால், படித்ததை இங்கு எழுத வரும்போது கை தந்தியடிக்கிறது...... அவரின் அளவுக்கு ரசித்து எழுத முடியுமா என்ன ?


சென்னையில் சௌகார்பேட் ஏரியா எனும்போதே, "அரே பாய், என்ன பண்ணுது...", ஜிப்பாவும் தலையில் தொப்பியும் போட்ட சேட், முக்காடு போட்ட பெண்கள் என்றெல்லாம்தான் யாபகம் வரும், அது எதுவும் இல்லாமல் அதுவும் ஒரு சென்னையின் பகுதியை போலவே இருந்தது. இங்கு உள்ளே கார் எடுத்து போவது உசிதம் அல்ல, பைக்கில் சென்றால் பார்க் செய்யலாம் இல்லையென்றால் காரை ஹை கோர்ட் பக்கம் நிறுத்திவிட்டு ஆட்டோ பிடித்து செல்லவும் ! சீனா பாய் கடை எங்கே என்று கேட்க கூச்சம் இருந்தது, அதுவும் ஆட்டோகாரரிடம் கேட்க எங்களை வித்யாசமாக பார்த்தார். அங்க இட்லி நல்லா இருக்கும் சார் என்று சொல்ல அவர் வேறு ஒரு கடைக்கு அழைத்து சென்று இங்க அதை விட நன்றாக இருக்கும் என்றார், அவரிடம் போராடி NSC போஸ் சாலையில் பார்த்துக்கொண்டே வர ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறதே என்று பார்க்க...... சீனா பாய் கடை !!
 
 
மிக சிறிய கடை, நீங்கள் அந்த கூட்டத்தை பிளந்துக்கொண்டு உள்ளே நுழைவதற்கே சிறிது நேரம் ஆகும். நல்ல பசி நேரத்தில் சென்றால் அந்த கூட்டத்தில் இருக்கும்போதே வாசனை இம்சை செய்யும் ! ஒரு வழியாக ஆளுக்கு ஒரு ப்ளேட் இட்லி, ஒரு ப்ளேட் தோசை என்று கேட்டோம்......... கடையில் இருவர் மட்டுமே, ஒருவர் தோசை சுட, இன்னொருவர் இட்லி சுடுகிறார். இட்லி மிகவுமே சிறியது, ஒரு தட்டில் சிறிய இட்லிகளை விறு விறுவென்று எடுத்து போட்டு விட்டு, மாவை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி இட்லி தட்டில் போட ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல பார்க்கிறோம். ஒரு எட்டு இட்லியை வாழை இலை போட்ட தட்டில் வைத்துக்கொண்டு இருக்கும்போதே நிற்கும் பலர் "எனக்கு குடு, இங்க குடு" என்று முந்துக்கின்றனர்....... இட்லியை வைத்து விட்டு ரெண்டு கரண்டி நெய்யை ஊற்றி, அதன் மேலே மிளகாய் பொடியும், இட்லி பொடியும் கலந்த ஒரு பொடியை மேலே தூவி, அதனோடு கொஞ்சம் கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி கலந்து கொடுக்கின்றார்.





 
 
நெய் ஊற்றி இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா ? நெய்க்கு இட்லி தொட்டு சாப்பிடுவது வேறு, இட்லிக்கு நெய்யை தொட்டு சாப்பிடுவது வேறு என்பது உங்களுக்கு தெரியுமா ??  வித்யாசம் புரியலையா...... சிறிய இட்லி துண்டை எடுத்து கரண்டி அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதற்கும், பெரிய இட்லி துண்டை எடுத்து ஸ்பூன் அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதுதான் வித்யாசம் !! இப்போது கிடைக்கும் நெய் என்பது எல்லாம் ரெடிமேட், வீட்டில் அம்மா வெண்ணையை உருக்கி காய்ச்சுவார், அப்போது வீடே வெண்ணை வாசத்தில் மிதக்க ஆரம்பிக்கும், அது உருகி நெய் பதத்திற்கு வரும்போது முருங்கை கீரையை கிள்ளி உள்ளே போடுவார், இப்போது அந்த கீரை கொஞ்சம் கொஞ்சமாக பொசுங்கி நெய்யோடு ஒரு வாசம் வரும் பாருங்கள்..... அட அட அட, அந்த வாசனையே போதுமே ! இன்றைக்கு நெய் பாட்டிலை திறந்தே வைத்து இருந்தாலும் அல்லது உருக்குனாலும் வாசனை வருவதில்லை. அப்படி வீட்டிலேயே செய்த நெய்யை சாப்பிடும் நேரத்தில் கொஞ்சம் உருக்கி, அது சிறிது தீய்ந்து போய் ஒரு வாசனை வரும், அப்போது சூடாக மெத் மெத்தென இட்லி செய்து தட்டில் வைத்து, அதன் மேலே நெய்யை ஊற்றுவார் அம்மா, அப்போது தட்டை காட்டி இட்லி மேல மட்டும்தானா இங்க கொஞ்சம் ஊற்றும்மா என்று தட்டை காண்பிக்க.... ஊரான் வீட்டு நெய், என் பொண்டாட்டி கை என்னும் பழமொழியை அப்படியே எங்க வீட்டு நெய், எங்க அம்மா கை என்று மாற்றும்படியாக இரண்டு கரண்டியை அப்படியே எடுத்து தட்டில் ஊற்றுவார் (அப்போது ஏதாவது தீயும் வாசனை வந்தால், அது பக்கத்தில் உட்கார்ந்து டயட் என்று இரண்டு இட்லி மட்டும் வைத்து இருக்கும் அப்பாவாக இருக்கும் !), அப்போது ஏற்க்கனவே இட்லி நெய்யை உள் வாங்கி இருக்க, இப்போது தட்டில் மிதக்கும் நெய்யை தொட்டு அப்படியே வாயில் போட..... யார் சொன்னது சக்கரை போட்டு இருந்தால் மட்டுமே ருசிக்கும் என்று !! அதன் மீது கொஞ்சம் இட்லி பொடியும் தூவி சாபிடுங்களேன், சட்னி எல்லாம் வேண்டவே வேண்டாம் !!
 

 
நாம் அடுத்து பார்க்க வேண்டியது ஊத்தப்பம், அதுவும் வெங்காய ஊத்தப்பம் ! கொஞ்சமே புளித்த மாவு எடுத்து, அதை நன்றாக சூடான கல்லில் ஊற்றும்போது வரும் அந்த நிலவின் ஓட்டைகளை பார்த்து இருக்கின்றீர்களா ? ஒவ்வொரு ஊதாப்பதிற்கும் இந்த ஓட்டைகள் தனி தன்மையுடன் இருக்கும், இதை ரசித்து இருகிறீர்களா. அது கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக்கொண்டு வரும்போது வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை எல்லாம் கலந்த அந்த கலவையை ஒரு கை பிடி அள்ளி அந்த ஊத்தாப்பத்தின் மேல் போட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, அதிகம் வெங்காயம் இருந்தால் ஊத்தப்பத்தின் சுவை தெரியாது இதனால் அளவோடு இருக்க வேண்டும். இப்போது அதன் மேல் இங்கு இரண்டு கரண்டி (ஸ்பூன் இல்லை சார், கரண்டியேதான் !!) நெய் விட இப்போது ஒரு வாசனை வருகிறது..... நாடி, நரம்பு, நாக்கு இன்னும் பிற சமாச்சாரங்களையும் தூண்டி விட்டு சாமி ஆட வைக்கிறது ! இப்போது ஊத்தப்பம் சிறிது முறுகலாக ஆரம்பிக்க, அதன் மேலே இட்லி பொடியை தூவ, கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறம் என்று சொல்வார்களே அது வரும். அடுத்து ஊத்தாப்பத்தை திருப்பி போடுவது, அதை செய்ய ஒரு தனி கலை வேண்டும்...... திருப்பி போடும்போது ஒரு சத்தம் "சொய்ங்...." என்று, அது எவ்வளவு இனிமையான இசை தெரியுமா. நாரத கான சபாவில் பாடும் பாடகர்களின் பின்னே ஒரு ஊத்தப்பதை திருப்பி போடுங்களேன், அவர்களது வாய் எச்சிலில் கண்டிப்பாக குழற ஆரம்பிக்கும் அப்படியான ஓசை அது. திருப்பி போட்ட ஊத்தப்பதில் இருந்து இப்போது வெங்காயம் கருகும் வாசனை இன்னும் ருசியை தூண்டும்....... இப்போது அது தட்டிற்கு வர, கடவுள் இறங்கி நான் வரம் கொடுக்க ரெடி என்று இப்போது சொன்னால், கொஞ்சம் பொறுங்களேன் என்றுதானே சொல்ல தோன்றும் !!



 


இப்படி நெய் விளையாடும் இட்லி, வெங்காய ஊத்தாப்பம் மட்டுமே கிடைக்கிறது இங்கு. முக்கியமாக இட்லி சாப்பிட்டு விட்டு இன்னும் வேண்டும் என்று கண்டிப்பாக நீங்கள் சாப்பிடுவீர்கள். நல்ல பசியான நேரத்தில் இங்கு சென்றால் ஒரு கட்டு கட்டுவது உறுதி !
 
நண்பர் திரு.KRP செந்தில் ருசிக்கும் காட்சி........ நன்றி சார் !
 
பஞ்ச் லைன் :

சுவை - இட்லி, நெய், ஆனியன் ஊத்தப்பம்.... அலாதி சுவை ! கண்டிப்பாக சென்னைவாசிகள் மிஸ் செய்ய கூடாதது !

அமைப்பு - சிறிய உணவகம்,  கையேந்திதான் சாப்பிட வேண்டும் ! இரு சக்கர வண்டி என்றால் எதிரிலேயோ அல்லது அருகில் எங்கேயாவது பார்க் செய்து கொள்ளலாம், நான்கு சக்கர வண்டி என்றால் இடம் கிடையாது..... ஹை கோர்ட் அருகே எங்கேனும் பார்க் செய்துவிட்டு, ஒரு ஆட்டோ பிடித்து (சுமார் 40 ரூபாய்) வரவேண்டும் !
 
பணம் - ஒரு பிளேட் இட்லி (8 இட்லிகள்) அல்லது இரண்டு ஆனியன் ஊத்தப்பம் என்பது நாற்பது ரூபாய் !
 
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் ! கூட்டத்தில் நீங்கள் வரும்போதே குறித்து வைத்துக்கொண்டு என்ன கும்பலாய் இருந்தாலும் கூப்பிட்டு கொடுக்கிறார்கள் !

நேரம் - மாலை 6:30 மணி முதல் இரவு 11 மணி வரை.
 
அட்ரஸ் : 





Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Seena Bhai tiffin center, amazing idly, idli, cable sankar, Chennai, sowkarpet idli, Idly with Ghee, Onion Othappam, best food 

8 comments:

  1. சூப்பர், நான் மிஸ் பண்ணிட்டேன்... இன்னொரு நாள் போறேன்....

    ReplyDelete
  2. சாப்பாட்டு கடை பெரிய ரசிகன் நான் படிப்பதற்கும், படித்ததை அனுபவித்து பார்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது ஒரு தனி கலை வேண்டும்......
    வித்யாசம் புரியலையா கொஞ்சம் பொறுங்களேன்
    இட்லி நெய்யை உள் வாங்கி இருக்க, கரண்டியேதான் !!
    வாசனை இம்சை செய்யும்
    ஊதாப்பதிற்கும் இந்த ஓட்டைகள் தனி தன்மையுடன் இருக்கும், இதை ரசித்து இருகிறீர்களா.
    "சொய்ங்...." என்று, அது எவ்வளவு இனிமையான இசை தெரியுமா.
    ஒரு கட்டு கட்டுவது உறுதி !
    அட அட அட,

    டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வாயிலேயே வண்டி ஒட்டிக்கொண்டு

    Lunch Time over. நியாயமாரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெ !!

    ReplyDelete
  3. நல்ல சாப்பாட்டு ராமனுங்கய்யா. நமக்குப் போக முடியாதுங்கறதால வயித்தெரிச்சல்ல சொன்னது.

    ReplyDelete
  4. யப்பா...!

    நெய் வாசனை இங்கே வருகிறது...!

    ReplyDelete
  5. செம்மையா எழுதியிருக்கீங்க..:)

    ReplyDelete