Tuesday, December 2, 2014

சிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் !

சிறுவயதில் ஒரு சிறு கோலி குண்டு கிடைத்தாலும் நாளெல்லாம் குதிபோடும் மனசு இன்று எது கிடைத்தாலும் சந்தோசம் கொள்வதில்லை, இன்னும் இன்னும் வேண்டும் என்று யோசிக்கிறோம். மீண்டும் நாம் சாப்பிட்டு, பார்த்த, அனுபவித்த அந்த கணங்களை இன்று வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதே இந்த "சிறுபிள்ளையாவோம்" பகுதியின் நோக்கம்.... உங்களுக்கும் தெரிந்த விவரங்களை பகிருங்களேன் ! சிறுவயதில் அப்பா சாப்பிட உட்காரும்போது, அம்மா கையில் இருபது காசு கொடுத்து அப்பாவுக்கு மட்டை ஊறுகாய் ஒன்னு வாங்கிட்டு ஓடியாடா என்பார், அதை கேட்டதும் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வாயிலேயே வண்டி ஒட்டிக்கொண்டு கடைக்கு சென்று வாங்கி வருவேன் ! வெகு நாட்களாக வாங்கி தந்தாலும், முதல் முறை அதை சுவைத்த அனுபவத்தை தந்தது இன்றைய அனுபவம் !!


இருபது வருடங்களுக்கு முன்பு எல்லாம் அம்மா வீட்டில் செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்து இருப்பார், இல்லையென்றால் கடையில் இப்படி மட்டையாக கிடைக்கும். இன்று போல, பாட்டில், பாட்டிலாக வாங்கி அடுக்கி கொள்வதில்லை. மட்டை...... இது காய்ந்த தாமரை இலையோ இல்லை மந்தாரை இலையாகவொ இருக்கும். அதை சுற்றி அந்த ஊறுகா கம்பனியின் பெயர்..... அன்று பத்து காசுக்கு கிடைக்கும், அம்மா கொடுத்ததில் மீதி எதுவும் வந்தால் அதை நொறுக்கு தீனியாக வாங்கி தின்றுக்கொண்டே வந்து அந்த ஊறுகாய் மட்டையை கொடுப்போம் !



அந்த இலையை மடிக்கும் விதத்தை கவனித்து இருக்கிறீர்களா, கையில்தான் மடித்து இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு ஊறுகாய் பாக்கெட்டும் ஒன்று போல இருக்கும். கொஞ்சம் பிரிக்க ஆரம்பிக்கும் போதே அந்த வாசனை உங்களது நாசியினை தூண்டும்.இன்றைய ஊறுகாய் பாட்டிலில் எண்ணையும் மிதந்துக்கொண்டு இருக்கும், இதனால் ஊறுகாய் கொஞ்சம் எடுத்து வைக்கும்போதே தட்டில் ஓடும்..... ஆனால் இந்த வகை ஊறுகாய்களில் எண்ணை என்பது பெயரளவுக்குதான், ஊறுகாய் என்பது கெட்டியாக இருக்கும்.  சிறு சிறு துண்டுகளாக நார்தங்காயும் அல்லது எலுமிச்சை பலமும் போட்டு, அதில் காரப்பொடியும் உப்பும் தூவி, மஞ்சளும் புளியும் சேர்த்து, கடுகும் எண்ணையும் கொண்டு தாளித்து அது ஊற வைத்து இப்படி வரும்போது....... ம்ம்ம்ம் நாக்கு ஊறுது போங்க !!

  



ஊறுகாய் சாப்பிடுவது ஒரு கலை என்று இங்கு யாருக்காவது தெரியுமா ? ஆள் காட்டி விரலால் பட்டும் படாமல் தொட்டு, நுனி நாக்கில் வைத்து அதன் சுவை கொஞ்சம் கொஞ்சமாக பரவி மூளைக்கு உரைக்கும்போது, எச்சில் எல்லாம் ஒன்று சேர்ந்து வாய்க்குள் நயாகரா அருவியை உண்டு பண்ண, சட்டென்று ஒரு வாய் சாதத்தை வாயில் வைத்து பின்னர் சாதத்தின் சுவையும், ஊறுகாயின் சுவையும் என்று மாறி மாறி வரும்போது...... அன்றைய உணவு இவ்வளவு சுவையா என்று தோன்றாமலா இருக்கும் ! இன்னும் சிலர், ஊறுகாயை தொட்டு சாதத்தின் நடுவே வைத்து பின்னர் ஒரு வாய் எடுத்து வைப்பார்கள், சிலர் சாதத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ஊறுகாயை கொஞ்சமாக அதன் மேலே வைத்து சாப்பிடுவார்கள்...... இப்படி பலரும் வித்யாசமாக சாப்பிட, நான் ஒரே ஒருவர் மட்டும் சாப்பிடுவதை இன்றும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறேன், எனது பழைய கம்பெனியில் திரு.செந்தில்குமார் கந்தன் என்பவர் இருந்தார், என்னுடைய பாஸ் எனலாம்..... மதியம் சாப்பிடும்போது மோர் வைத்து இருக்க, அவர் ஒரு டம்பளர் எடுத்துக்கொண்டு வந்து அதில் ஊறுகாயை போட்டு கலக்கி எடுத்து அந்த மோரை குடித்தார் !! ஆண்டவா...... இன்னும் எப்படி எல்லாம் ஊறுகாயை சாப்பிடனும் சொல்லுங்க நியாயமாரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெரெ !! 




இன்றைக்கு இந்த ஊறுகாய் எல்லாம் நகரங்களில் கிடைப்பதில்லை, எல்லாம் ஊறுகாய் பாட்டிலில்தான். இன்றைய தலைமுறை தேவைக்கு வாங்கி ருசியோடு சாப்பிடுவதை மிஸ் செய்கிறது ! ஒவ்வொரு முறையும் கடைக்கு நம்மை ஊறுகாய் பாக்கெட் வாங்க துரத்தி விடுவதையும், அப்போது கிடைக்கும் மிட்டாய்க்கும் என்று இருந்தது எல்லாம் கனவாகி வருகிறது. யோசித்து பாருங்கள், இன்று எதற்கு எல்லாம் நமது குழந்தைகளை வெளியில் கடைக்கு அனுப்புகிறோம் என்று ?! மட்டை ஊறுகாய் என்பது சாப்பிட்டு தூக்கி போட்டாலும் மக்கி விடும்...... இன்றைய ஊறுகாய் பாட்டில்களோ ?! எங்கேனும் செல்லும்போது மட்டை ஊறுகாய் கிடைத்தால், நுனி விரலில் தொட்டு நாக்கில் வைத்து பாருங்கள்....... எச்சில் வடியும், ஆனந்தமாய் சாப்பிட்டு கண்களை மூடி அந்த குழந்தை பருவத்தை அனுபவியுங்கள் !!



Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, child, childhood memories, memory, mattai orukai, oorukaai, pickle, pickles, amazing tasty, taste 

17 comments:

  1. எனது பள்ளி நாட்களில், பழைய சாதத்தில் தயிர் போட்டு பிசைந்து, அந்த (வாழை) மட்டை ஊறுகாய் தொட்டுக் கொண்டே சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. ருசி பார்க்கும்போது எடுதத உங்கள் ஆக்‌ஷன் படங்கள் பிரமாதம். இப்போது மட்டை ஊறுகாய் கிடைக்கிறதா? ஏனெனில் பெட்டிக் கடைகளில் எல்லோரும் பிளாஸ்டிக் பாக்கெட் ஊறுகாய்தான் வைத்து இருக்கிறார்கள்.
    த.ம.2

    ReplyDelete
  2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பாபாபா.......எச்சில் ஊறுதுங்க.....உங்க எழுத்தையும்.....போட்டோவையும் பார்த்து...அன்று மட்டையி கிடைத்த ருசி இன்று ப்ளாஸ்டிக் அடைத்து விற்கும் ஊறுகாயில் இல்லை.....

    ReplyDelete
  3. படிக்கும் போதே வாயில் எச்சில் ஊறுது.இது திண்டுக்கல்லில் இப்பவும் கிடைக்குது..

    ReplyDelete
  4. மட்டை ஊறுகாய் இப்போதும் டாஸ்மாக் கடைகளில் அல்லது அதற்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைகளில் கிடைக்கிறது. இது எப்படி எனக்குத்தெரியும் என்கிறீர்களா? அனுபவம்தான்.

    ReplyDelete
  5. நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  6. மற்ற பதிவுகளைவிட இப்பதிவில்
    தங்களின் படத்தினை மிகவும் ரசித்து வெளியிட்டுள்ளீர்கள் நண்பரே
    திண்டுக்கல்லில் இப்பொழுதும் இவ்வூருகாய் கிடைப்பது அதிசயம்தான்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. சப்புக் கொட்ட வச்சிட்டீங்களே சுரேஷ்!

    ReplyDelete
  8. படத்தை பார்த்த உடன் வாயில் வாட்டர்பால்ஸ் பொங்குதுங்க அண்ணா.அந்த உணர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  9. Visit : http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_61.html

    ReplyDelete
    Replies
    1. Dear DD sir, thank you so much for sharing the information. I am so happy to see my blog has been shared by Palani Kanthasamy sir…… I am one of the reader of his blog and happy to know that he is also reading my blog !!

      Delete
  10. ஊருகாய் பிரியர்கள் விரும்பி படிக்கும்படி பகிர்வும் பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும் விதமாக படமும் போட்டுவிட்டீர்கள்.

    ReplyDelete
  11. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_61.html

    ReplyDelete
  12. :)
    http://3.bp.blogspot.com/-bnxKM0nIaGA/VHp4cARyvyI/AAAAAAAAQ90/1QMRIg1sjiU/s1600/IMG_0752.JPG

    ReplyDelete
  13. அண்ணாச்சி! உங்களோட எந்த போஸ்ட் படிக்க வந்தாலும் வாய் நிறைய ஜொல்லோடதான் திரும்பி போகமுடியுது! வழக்கம் போல பெயர் 'ஜொல்'லும் பதிவு! :)

    ReplyDelete