Monday, December 22, 2014

அறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா !!

திண்டுக்கல் என்றால் பிரியாணி நகரம் என்றாகிவிட்டது, ஆனால் அதையும் தாண்டி சுவையான உணவுகள் இங்கு இருக்கின்றன என்பது சில நேரங்களில் நமக்கு தெரிவதில்லை. திண்டுக்கல் நகரத்தில் ஒரு சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும்போது டிராபிக் ஜாம், வீதி வரை வண்டியை நிறுத்தி இருந்தார்கள். வண்டியில் இருந்தவர்கள் எல்லாம் கத்த, டிரைவரோ இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது, அவனவன் முட்டை பாயா சாப்பிடாம எப்படி நகருவான் என்று சொல்ல நான் கொஞ்சம் வெளியே வந்து பார்க்க ஒரு சிறிய கடையில் அவ்வளவு கும்பல்...... எனது நாக்கு இப்போது என்னை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தது !! நம்ம திண்டுக்கல் தனபாலன் சார் இதை பற்றி சொல்லவே இல்லையே ?!





 
தூரத்தில் இருந்து பார்த்தால், பெயர் பலகை எதுவும் இல்லாமல் ஒரு கடை. அந்த தெருவில் பர்னிச்சர் கடைகள்தான் அதிகம், அங்கு வித்யாசமாக இருந்தது இந்த கடை. ஊருக்கு புதியவர்கள் தூரத்தில் இருந்து பார்த்தால் அது தள்ளு வண்டியில் பஜ்ஜி, போண்டா விற்கும் கடை அவ்வளவே. நெருங்கி சென்று பார்க்க எனக்கு ஒரு முட்டை பாயா என்று ஒவ்வொருவரும் கேட்க, நாமும் ஒன்று சொன்னோம். அப்படியே உள்ளே எட்டி பார்க்க, ஒருவர் சமோசா மடித்துக்கொண்டு இருக்க, இன்னொருவர் வெள்ளையாய் ஒன்றை வாளியில் எடுத்து போட்டுக்கொண்டு இருந்தார், உற்று கவனித்ததில் அது முட்டை என்று புரிந்தது. இவ்வளவு முட்டை உரிக்கும் அளவுக்கு இருந்தால் கண்டிப்பாக இங்கு முட்டை பாயா அவ்வளவு நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இது போன்று இன்னும் நான்கு வாளி முட்டை உள்ளே இருக்கிறது என்று தெரியவந்தபோது அந்த கும்பலில் முட்டை பாயா கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை அதிகரிக்கிறது.
 

 
 
 
அது என்ன முட்டை பாயா என்று எட்டி பார்க்க, கர கர மொரு மொறுவென்ற வெங்காய பக்கோடா ஒரு சிறிய பிளேட்டில் போடுகின்றார். இந்த வெங்காய பஜ்ஜியை பற்றி சொல்லியே ஆக வேண்டும் இங்கு, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, பிரட் போண்டா, முட்டை போண்டா என்று இருக்கும் எல்லா வகைகளுக்கும் இந்த கடலை மாவுதான் வேண்டும், இதில் எதை எடுத்து உண்டாலும் மிகவும் மிருதுவாக இருக்கும்..... கவனித்து இருக்கின்றீர்களா ? ஆனால், இந்த வெங்காய பக்கோடா மட்டும் எடுத்துக்கொண்டால் அவ்வளவு மொரு மொறுவென்று இருக்கும், நல்ல பெரிய வெங்காயத்தை எடுத்து அந்த பஜ்ஜி மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணையில் போட அது பொன்னிறத்துக்கு வந்து தட்டில் எடுத்து போட்ட பின்பு கவனித்து பாருங்கள், ஒவ்வொன்றும் ஒரு ஒரு வடிவத்தில் இருக்கும், ஆனால் நான் மேலே சொன்ன பஜ்ஜி வகைகளில் இருக்காது. இதனாலேயே, இந்த வெங்காய பக்கோடாவில் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டால் எல்லாம் வேறு வேறு வடிவத்தில் இருக்க சாப்பிட சுவாரசியம் கூடும். அதுவும் இந்த வெங்காய பக்கோடாவில் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் வெங்காயம் எல்லாம் மொரு மொறுவென்று இருக்க, அதை கடித்து சாப்பிடும்போது நறுக் மொறுக் என்று இருக்க அடுத்த கடியில் இந்த வெங்காய பக்கோடா அவ்வளவு மிருதுவாக இருக்கும்......... அட போதும், அடுத்ததுக்கு போவோம் வாருங்கள் !!
 
 
 
இந்த வெங்காய பக்கோடாவை தட்டில் போட்டு, மேலே முட்டையை சிறிதாக நறுக்கி போடுகிறார். அதன் மீது பட்டாணியில் செய்த பாயாவை கொஞ்சம் சூடாக ஊற்றுகிறார். இந்த பாயாவில் நல்ல ருசி, பொதுவாகவே மசாலா பூரி கடைகளில் மேலே ஊற்றும் மசாலா போன்று இருக்கிறது, அதன் பக்குவம் என்பதே வேறு. பட்டாணி அல்லது சுண்டல் என்பது நல்ல மிருதுவான பதத்தில் இருக்க வேண்டும், எப்போதுமே மசாலா என்பது கொதித்துக்கொண்டு இருக்க தேவைக்கு ஏற்ப சுண்டலை சேர்த்து பரிமாறினால்தான் அந்த மசாலாவின் சுவை நன்றாக இருக்கும், பலரும் சுண்டலை மசாலாவில் கொதிக்க வைக்கின்றனர், இதில் அந்த சுண்டலும் மசாலா வாசனை அடிக்கும். இங்கு அது போல் எல்லாம் இல்லாமல் இந்த பாயா அற்ப்புதமாக இருக்கிறது. இதன் மீது துருவிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட் தூவலை தூவி கொடுக்க நாக்கில் காவிரி ஓட ஆரம்பிக்கிறது !
 
 
ஆவி பறக்க அது நமது கைகளுக்கு வரும்போதே சிறுபிள்ளையின் சந்தோசத்தோடு வாங்குகிறோம், முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வெங்காய பக்கோடாவின் மொறு மொறுப்பும், அந்த பாயவின் சுவையும் அசதுக்கிறது. அடுத்த முறை இப்போது முட்டை கொஞ்சம், வெங்காய பக்கோடா கொஞ்சம் என்று மொரு மொறுப்பும், மிருதுவும் சேர்ந்து அசதுக்கிறது. நடு நடுவே வெங்காயத்தின் சுவையும், கேரட்டின் சுவையும் என்று அவ்வப்போது வந்து போகிறது. முதலில் ஆரம்பிக்கும் இப்படிப்பட்ட சுவை, சிறிது நேரத்தில் அந்த மசாலாவில் வெங்காய பக்கோடா நன்கு ஊற நமக்கு நல்ல வெங்காய சாம்பாரில் ஊறிய மெதுவடை போன்று தெரிகிறது. இன்னும் கொஞ்சம் பாயா ஊத்துங்க என்று கேட்டு வாங்கி இந்த முறை சாப்பிடும்போது இதுவா வெங்காய பக்கோடா, இவ்வளவு மிருதுவா இருக்கே என்று ஆச்சர்யபடுதுகிறது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்கிறது, வண்டியை ரோட்டில் நிறுத்த இடம் இல்லாமல் ஆட்கள் குவிகிறார்கள், எல்லோரும் கேட்கும் ஒரே விஷயம் "இன்னும் கொஞ்சம் பாயா ஊத்துங்க என்பதுதான். சிலர் முட்டை போடாமல், சிலர் வடையில் கொஞ்சம் பாயா போட்டு என்று அவரவருக்கு வேண்டியவாறு சாப்பிடுகின்றனர் !
 
 
பஞ்ச் லைன் :

சுவை - முட்டை பாயாவின் சுவை மிகவும் ருசி, வித்யாசமும் கூட ! மற்றபடி இங்கு கிடைக்கும் எல்லா வகையான பஜ்ஜி, போண்டாவிலும் அந்த பாயாவை ஊற்றி சாப்பிடலாம் !

அமைப்பு - சிறிய உணவகம்,  கையேந்திதான் சாப்பிட வேண்டும் ! இரு சக்கர வண்டி என்றால் எதிரிலேயோ அல்லது அருகில் எங்கேயாவது பார்க் செய்து கொள்ளலாம், நான்கு சக்கர வண்டி என்றால் இடம் கிடையாது..... பார்கிங் என்பது இங்கே சற்று பிரச்சனைதான் !
 
பணம் - ஒரு ப்ளேட் இருபது ரூபாய் கொடுத்ததாக யாபகம் !
 
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் ! கூட்டத்தில் நீங்கள் வரும்போதே குறித்து வைத்துக்கொண்டு என்ன கும்பலாய் இருந்தாலும் கூப்பிட்டு கொடுக்கிறார்கள் !

நேரம் - மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை.
 
அட்ரஸ் : 

திண்டுக்கல் கைலாஷ் ரெடிமேட் அல்லது நியூ வாசவி தங்க மாளிகை அடுத்த சாலை, KOH ரோடு என்கிறார்கள், இங்குதான் பர்னிச்சர் கடைகள் அதிகம் இருக்கிறது.

திண்டுக்கல் பெரியாஸ்பத்திரியில் இருந்து மார்க்கெட் செல்லும் ரோட்டில் இருக்கிறது.
 
 
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Dindigul, Muttai Paya, Best Snacks, Evening snacks, Dindigul famous snacks, best food, tasty 

12 comments:

  1. டிடிக்கு இது தெரியாதோ!

    கவரும் படங்கள்!

    ReplyDelete
  2. அட போதும், அடுத்ததுக்கு போவோம் வாருங்கள் !! நாக்கில் காவிரி ஓட ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  3. வணக்கம்
    டிடி ஏரியாவில் இப்படி ஒரு கடையா... தேடலுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நாக்கில் காவிரி ஓட ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  5. DD kku தெரியாதா? மறந்திருக்கலாம்.. திண்டுக்கல் போனால் கண்டிப்பாக இந்த பாயாவை சாப்பிடவேண்டும்.. நன்றி ...

    ReplyDelete
  6. பார்க்கும் போதே சுவை தெரிகிறது....

    ReplyDelete
  7. திண்டுக்கல் என்றால்
    பிரியாணி மட்டும் இல்லை இனி
    பாயாவும் நினைவுக்கு வரும்
    படங்க்களுடன் பதிவு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஆகா படிக்கப் படிக்க சுவைக்கத் தோன்றுகிறது
    நன்றி நண்பரே
    திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களை அலைபேசியில் அழைப்போமா.
    ஒரு முட்டை பாயா பார்சல் அனுப்பச் செர்ல்லுவோம்

    ReplyDelete
  9. அடடா...! இது தெரியாமல் போச்சே...! இதோ கிளம்பிட்டேன்...!

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலிக்கே அல்வாவா....
      திருப்பதிக்கே லட்டா...

      இந்த வரிசையில் இப்போது டிடிக்கே முட்டை பாயாவா சேர்ந்து விட்டதே!

      :))))))))))))

      Delete
  10. சுரேஷ் தம்பி!
    சைவ முட்டைகள் கிடைக்குமா?

    ReplyDelete
  11. டிடிக்கே முட்டை பாயா! :)

    நடத்துங்க!

    ReplyDelete